எழுத்தாளர் , கவிஞர், வசன கர்த்தா ,வளரும் இயக்குனர் திரு நந்தன் ஸ்ரீதரனின் அண்மையில் வெளிவந்த “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு .பற்றிய சிறு அலசல் .
“உள்ளிருந்து கொதிக்கும் சொற்கள்” என்னும் முதல் சிறுகதையில் துவங்கி “வேசி மகனில்” முடியும் ஒன்பது சிறுகதைகள் நந்தலாலாவில் வரிசையாய் வெவ்வேறு கருப் பொருளில் அமைந்துள்ளன .
ஒன்பது கதைகளையும் , அவற்றில் உலா வரும் கதைமாந்தர்களையும் உள்வாங்கிக் கொண்டால் , நீங்கள் உறக்கம் தொலைப்பது உறுதி.
ஆசிரியர் தன முன்னுரையில்,” நீங்கள் இக்கதைகளில் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் ரத்தமும் , சதையுமாக இருந்த அல்லது இருக்கிற மனிதர்கள் “ என்ற கூறுவதால் , இவ்வுண்மைக் கதைகளில் உள்ள நிஜம் நம்மை சுடும் .
ஒரு மகனின் தவிப்பு, ஒரு தந்தையின் ஆங்காரம், ஒரு எழுத்தாளனின் கோபம், ஒரு தாயின் வேதனை, ஒரு காதலின் நிராகரிப்பு , ஒரு கலைஞனின் அவமானம் , ஒரு மறுதலிப்பின் துயரம் ... என ஒவ்வொரு கதையும் தன்னுள் புதைத்திருக்கும் ஒரு உணர்ச்சி களஞ்சியம் .
ஒரே புள்ளியில் துவங்கும் கதைகளென மூன்று கதைகளைச் சொல்லலாம். “எனது அறையில் ஒரு உடும்பு இருக்கிறது,”“செத்து செத்து விளையாடுபவன்,”“பதினான்கு முத்தங்கள்” மூன்றும் சமதளத்தில் இயங்கும் கதைகள்.
ஒரு படைப்பாளி தன்னைத்தானே நிறுவிக் கொள்ளும் காலக் கட்டத்தில் சந்திக்கும் அவமதிப்பு ,இவையே அக்கதைகளின் அடிநாதம் .
உடும்பு இருக்கும் அறையில்”இருக்கும் படைப்பாளி ஒரு வளரும் வசனகர்த்தா . அவரின் உழைப்பைச் சுரண்டும் பெர்னார்ட்ஷா தமிழ் ஊடகத் துறையின் பல முகங்களில் ஒரு முகம் .
அந்த படைப்பாளியின் பசியை உணர வைக்கும் சொல்லாடல்கள் அற்புதம் என்னும் சொல்லுக்கும் மேலே. !
“.....பசியெனும் சிங்கப்பல் கொண்ட யானை தன கூரிய நகத்தால் என் தலையை வருடியபடி இருந்தது ...”
“....பசியை உணர்வதும் , இடும் பிச்சையை பிச்சை என தெரியாமலே இடுவதும் பெரியோர் குணம். ....”
இந்த கதையின் இறுதியில் தன பணியை உதறி விட்டு வெளியேறும் இளைஞர் சொல்வார் ..” என் மனதுக்குள் ஒரு புலி இருந்தது .. ரொம்ப தன்மானமுள்ள புலி .. எனது புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. “
BRAVO நந்தன்.!!. இந்த இடத்தில் உங்களின் கையொப்பம் பார்த்தேன்.
“ செத்து செத்து விளயாடுபவன் “சற்றே அங்கத சுவை கொண்ட கதை. கதை நெடுக ஈஸ்வரனைப் பற்றி ஒரு கருத்து நம் மனதில் உறவாக்கி வைத்துக் கொள்கையில் இறுதியில் வரும் ட்விஸ்ட் எதிர்பாராதது ..
தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஒரு மிரட்சியிலும் , பதட்டத்திலும் வைத்திருக்கும் பலர் உண்மையில் உள்ளுக்குள் மிரண்டவர்கள் , உடைந்தவர்கள் என்பதை உணர்ந்துக் கொண்ட கதை .
“பதினான்கு முத்தங்கள்”.. மேலே சொன்ன இரண்டு கதையைப் போன்ற கருவைக் கொண்டதுதான். இக்கதையில் வரும் படைப்பாளியும் வாய்ப்பு தேடி அலைகிறார்., “பற்றிக் கொள்ள ஒரு நூலேனும் தென்படாதா?” என்ற ஆவலுடன் இருக்கையில் , ஒரு ஏணியே அவர் முன் நீட்டப் படுகிறது. ..
ஆனால் நீட்டிய கரங்களுக்கு உரியவளின் துரோகம் நெஞ்சில் அறைய, அந்த வாய்ப்பை உதறி விட்டு கம்பீரமாக வெளியேறுகிறார். ..
“சின்னத் தனங்களின் கடவுள்” ஒரு “குடி”மகனின் சலம்பல்....இது ஒரு சுய வரலாற்றுக் கதை... மனம் திறந்த ஒரு Confession ,
கோபம்கோபமா வருகிறது. உடன் நெகிழவும் வைக்கிறது
. அதிலும் அந்த “அம்மா “ .அவன் :மனைவி: இருவரும் அதிர வைக்கிறார்கள் . மகனுக்காக பாத யாத்திரை சென்று ,மனம் புழுங்கி இறக்கிறாள் தாய். மண் சோறு சாப்பிட்டு , கோவில் கோவிலாக ஏறி இறங்கும் மனைவி , எதுவும் மாறாமல், இவனும் திருந்தாமல் போகவே எரிந்துப் போகிறாள் .
கதை முடிகையில் அத்தனை கோபம் பீறிட்டு வருகிறது.
அப்பன் மீது, அம்மா மீது, அந்த குடிகாரன் மீது.. .சமுகத்தின் மீது எதுவும் செய்யாத இந்த அரசுகள் மீது ..
“நந்தலாலா”வின் கதை நாயகி “அகல்யா “ கற்றல் குறைபாடு கொண்ட பெண் . சுற்றி இருப்பவரின் ஏளனத்துக்கும், பரிகாசத்துக்கும் ஆளாகுபவள்.
முதலில் கதையைப் படிக்கத் துவங்கும் போது “நிழல் நிஜமாகிறது “ திரைப்பட நாயகி ஷோபா நினைவுக்கு வந்தார். வீட்டு வேலைச் செய்யும் எளிய பெண் என்ற போதும் தன்னை ஒரு அரசியாக மனதில் பாவித்து வாழும் பாத்திரப் படைப்பு
நமது .அகல்யாவும் அவளைப் போலவே.
இவள் கையில் வைத்துள்ள மானசீக மந்திரக்கோலைக் கொண்டு பூக்காரப் பாட்டிக்கு கூடை நிறைய தங்கக் காசுகள் பரிசளிக்கிறாள் .பணி முடித்து வீடு திரும்பும் பெண்ணிற்கு , இரவுச் சமையல் தயாராக வைக்கிறாள் ..ரேஷன் கடையை சரியாக நிர்வாகம் செய்கிறாள் .எல்லாம் கறபனையில் தான்.
ஆனால் நிஜத்தில் எல்லாம் தலைகீழ்.
மனித வாழ்வின் சூட்சுமங்கள் அறியா பேதைப் பெண் அகல்யா
பயந்து உணர்ச்சிவசப்படுகையில் தானாகவே மூத்திரம் போகும் அளவில் , பலவீனமான மனதும், உடலையும் கொண்டவள். உறவுகளால் ஒதுக்கப்படும் ஒரு “டிஸ்லெக்சிக்’ பெண்ணை இதை விட உருக்கமாக காட்சிபடுத்த முடியாது.
அகல்யா கதா பாத்திரத்தைப் போல தொகுப்பில் வரும் இன்னொரு பெண் தேவமலர் . நந்தன் படைக்கும் பெண்கள் எல்லோரும் கருணையும், அன்பும் ததும்பும் மனம் கொண்டவர்களாகவே இருப்பது தனிச்சிறப்பு. (இந்நூலில் வரும் பெண்களைப் பற்றி மட்டுமே தனியாக எழுத வேண்டும் ..)
எப்போதும் புன்னகை அணிந்துக் கொண்ட , பசியின் கோரப் பிடுங்கலைப் புரிந்துக் கொண்ட , கருணை வழியும் தேவமலர் தேவதைகளின் சாயலையுடைவளாகவே தெரிகிறாள். “தேவமலர்அக்காவும் பெர்ட்ரான்ட் ரசல் அண்ணாவும்”கதை சொல்லப்படும் களமும், இதன் மொழியும் மிக உயர்வாக , சரளமாக இருக்கிறது. இக்கதையை நான் ஏற்கனவே முகநூலில் படித்த போதே அறிந்தேன் ,இதில் வரும் பாத்திரங்கள் எல்லோரும் நிஜம் என்பது.
‘சும்மா டைம்பாசுக்காக தான் லவ் பண்ற மாதிரி நடிச்சேன “ என்று போலீஸ் ஸ்டேஷனில் பல்டி அடிக்கும் ரசல் ,அப்படியேநம் முன் தலைக் குப்புற விழுந்து விட தன் வாழ்வை அழகாக மாற்றி அமைத்துக் கொள்ளும் தேவமலர் உயர்ந்து நிற்கிறார். “ஒவ்வொரு அக்காவிலும் அம்மா இருக்கத்தான் செய்கிறாள் “முரளி..!
“ வேசிமகன் “, “தோற்றவளின் சொற்கள் “ இரண்டு கதைகளும் ஒரு கோட்டில் பயணிக்கின்றன
இரண்டுமே இதயத்தை இறுக்கிப் பிழியும் கதைகள் . இரண்டு கதைகளிலும் வெடித்துச் சிதறும் கோபம், இந்த இழி நிலைக்குத் தள்ளும் மனிதர்களை , அவர்கள் நிறைந்த சமூகத்தினை எதுவும் செய்ய இயலா இயலாமை.,மனம் பிறழ்ந்த பெண்ணையும் விட்டு வைக்கா கேவலமான வன்மை போன்ற அவலங்களை அடித்து நொறுக்குகிறார். .
கிளைகளை முறித்து என்ன பயன்.. ? இங்கு வேரில் அல்லவா விஷம் இருக்கிறது ?
இறுதியாக முதல் கதை .(Saving the best for the last என்ற வழக்கப் படி ..) உள்ளே இருந்து கொதிக்கும் சொற்கள் ..!
செண்பகப் பாண்டியன் என்னும் அப்பாவின் கதை..போன தலைமுறை அல்ல ,, அதற்கும் முன் தலைமுறையில்தான் இத்தகு மூர்க்கமும் ,ஜாதிய ஆணவமும் , ஆர்பரிப்பும் கொண்ட தந்தை இருக்க கூடும்.
இன்று இருக்கும் தந்தைகளும் , இவர்களின் தந்தைகளும் , குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துக் கொண்டவர்கள் அல்லது அவ்வுலகில் இயல்பாக,இணக்கத்துடன் தம்மைப் பொருத்திக் கொண்டவர்கள்.
ஆனால் செண்பகப் பாண்டியன் அப்படியல்ல. மகனை, மருமகளை பேரப் பிள்ளைகளை வார்த்தைகளால் வதைப்பவர். எதையும் , எவரையும் சந்தேக கண் கொண்டு பார்ப்பவர். மாறி வரும் காலம் , மற்றும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றி கொள்ள இயலாதவர்.
ஆனால் இந்த தணலும் , தணியும் நேரம் வருகிறது.
அப்போது அவர் மேல் கோபம் நீங்கி , பரிதாபமும் , கழிவிரக்கமும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
நூல் முழுதும் சின்ன சின்ன பாத்திரங்கள் நம்மை ஈர்க்கிறார்கள் , மனம் முழுதும் பொங்கும் அன்பும், ஈரமும் கொண்ட தனித்துவம் மிக்க பல கதாபாத்திரங்கள் நம் நெஞ்சில் அமர்ந்து விடுகிறார்கள்
.மருத்துவமனையில் மகன் செண்பகராமனை வணங்கும் வட இந்தியப்பெண்.,செண்பகராமனின் ஆக்ரோஷத்தைத் தணிக்கும் வெள்ளையம்மாள் , அவளின் மகன்கள், பதினோரு மணி பகலில் மீன்குழம்பும் , சுடுசோறுமாக பசியாற்றும் ரவியின் மனைவி,தாய்மையின் வடிவாக தெய்வமக்கா ,டிஸ்லெக்சியா பெண்ணை தாய் தாங்கும் அகல்யாவின் தந்தை , மனநலம் குறைந்த பெண்ணிற்குப் பிரசவம் பார்க்கும் சரசக்கா , காருண்யமும் , சுயநலமும் சேர்ந்து உருவான முரளி .. என்று பல பாத்திரங்கள் உலா வருகிறார்கள்.
“When you read a short story, you come out a little more, aware and a little more in love with the world around you.”என்கிறார் George Saunders.
இக்கதைகளும் , நம் சூழலை விட்டு வெளிவரவும் , உணர்ந்துக் கொள்ளவும் ,நம்மைச் சூழ்ந்த இவ்வுலகை, இதன் மனிதர்களை மென்மேலும் நேசிக்கவும் கற்றுத்தருகிறது.
அவ்வளவில் , நந்தனின் “நந்தலாலா “மிகப் பெரிய வெற்றியாய் அமைந்து விட்டது.
இனிய பிறந்த நாளில் அன்பு வாழ்த்துக்கள் நந்தன் ஸ்ரீதரன்.
மரியா சிவானந்தம்