தன்னம்பிக்கைக்கு ஒரு வெற்றிக்குமரன்
மரியா சிவானந்தம்
"It is better to light a candle than curse the darkness" (Chinese proverb)
இருளைப் பழிப்பதை விட ஒரு தீபத்தை ஏற்றுவது சிறந்தது என்னும் இந்த பொன்மொழியை நாம் பல முறை கேட்டிருப்போம்.
நம்மிடம் உள்ள குறைபாடுகளை, நமது வாழ்க்கைச் சூழலில் உள்ள குறைகளை ஒரு பூதக்கண்ணாடி கொண்டு பன்மடங்கு பெருக்கிப் பார்த்து புலம்புவது மனித இயல்பு. ஆனால் தன் குறைகளைப் பொருட்படுத்தாது , அந்த தடைகளையே படிகளாக்கி தன்னை மேம்படுத்திக் கொள்வது மட்டுமன்றி , சமூகத்தையும் உயர்த்தும் வல்லமை மிக்கவர் சிலரே .
அத்தகைய மகத்தான மனிதருள் ஒருவர் ஆசிரியர் ஜெயக்குமார். பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி ஆன இவரின் சாதனைகள் நம்மை பிரமிக்க வைத்து, அவரை வணங்க வைக்கிறது.
வேலூர் சேர்க்காட்டை சேர்ந்த பா .ஜெயக்குமார், பா.வெற்றிகுமரன் என்ற பெயர் மாற்றம் செய்து கொண்டவர். புதுமைகள் புகுத்தும் ஆசிரியராக, எழுத்தாளராக, பேச்சாளராக, யூட்யூப் நிர்வாகியாக பன்முகத் திறன் கொண்டு இயங்கி வருகிறார். ஜெயக்குமார், வெற்றிக்குமரனாக உருமாற்றம் அடைந்த நெடுங்கதையின் சுருக்கம் இது .
பள்ளிப் படிப்பில் ஈடுபடும் போதே கண் நரம்பில் ஏற்பட்ட பிரச்சனையால் பார்வை இழந்தார்.ஆயினும் குறையாத ஆர்வத்துடன் படித்து , அவர் படித்த பொதுப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டில் முதல் மாணவனாக தேர்வு பெற்றவர். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை (தமிழ்) தங்கப்பதக்கத்துடன் முடித்தார் .
இளங்கலை கல்வியியல் முடித்தவுடன் 2006 ஆம் ஆண்டு அரக்கோணம் வளர்புரம் அரசுப்பள்ளியில் தமிழாசிரியாக பணி நியமனம் பெற்றார் .தற்போது பள்ளி கொண்டா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிகிறார். 17 ஆண்டுகளாக ஆசிரியராக சிறந்த சேவை ஆற்றி வருகிறார். இடையில் அஞ்சல் வழியாக ,தமிழ்,பொருளாதாரம் இரண்டிலும் முதுகலை கல்வியை முடித்துள்ளார்.
வெற்றிக்குமரனை நம் விகடகவி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
இனி அவருடன் ..
சொல்லுங்கள் வெற்றிக் குமாரன், உங்கள் வகுப்புகளை எப்படி மாணவர்கள் ரசிக்கும் விதத்தில் மாற்றி அமைத்துள்ளீர்கள் ?
நான் பாடம் எடுக்கச் செல்லும் போது ,அதற்கு ஏற்ற வகையில் வேடம் புனைந்து செல்வேன். பாரதியார், திருவள்ளுவர் , நேரு, பெரியார் என்று அந்த வகுப்புக்கு தகுந்த விதத்தில் செல்வதால் , மாணவர்கள் கூடுதல் ஆர்வத்துடன் கவனிப்பார்கள். நாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை அவர்கள் சுலபமாக மனதில் உள்வாங்கி கொள்கிறார்கள் .
எவ்வாறு உங்கள் ஆசிரியப்பணியை திறம்பட செய்கிறீர்கள்? ஒரு பேச்சாளராக , எழுத்தாளராக இயங்குவது சிரமம் இல்லையா ?
என் மாணவர்கள் ,ஆசிரிய நண்பர்கள் எல்லோருமே உதவி செய்கிறார்கள். திருத்தங்கள் செய்ய அவர்கள் உதவி தேவைப்படுகிறது . என் மனைவி முதற்கொண்டு என் அம்மா, தமிழாசிரியை ஆன என் அக்கா ,என் மகன் , என் மகள் வரை எல்லோருமே எனக்கு உதவி செய்வார்கள் .எனக்கு படித்துக் காட்டுவது , கவியரங்கம் ,பட்டிமன்றம் என்று சொற்பொழிவுக்கு தயாரிக்க உதவி செய்வது , போக்குவரத்துக்கு துணை வருவது என்று உதவி செய்வதால் என்னால் எல்லா துறைகளிலும் பிரகாசிக்க முடிகிறது.
உங்கள் எழுத்துக்களைப் பற்றி சொல்லுங்கள்
"அன்பு நதி, விடியல் வெளிச்சம் ,குரங்கும் குருவியும், வசந்தம் வரும் வாடாதே, பாடி விளையாடு பாப்பா" ஆகிய நூல்களை எழுதி இருக்கிறேன். இவை குழந்தைகளுக்கான பாடல்கள். இவற்றுள் "விடியல் வெளிச்சம்" நூலுக்கு தமிழக அரசின் நூலக ஆணை பெறப்பட்டது. இலக்கியச் சோலை ,இலக்கியம் பேசுகிறது நிலா, ஏழைதாசன், புகழ்ச்செல்வி போன்ற இதழ்களில் என் படைப்புகள் வெளிவந்துள்ளன.
வெற்றிக்குமரன் எழுத்தாளர் மட்டுமல்ல , தலைச் சிறந்த பேச்சாளரும் ஆவர். மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஊட்டும் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். தவிர "அன்புநதி" யூடியூப் சேனல் மூலம் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார் .
இவரது தமிழ்த் தொண்டு பல விருதுகளையும் , சான்றிதழ்களையும் இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது .பல இலக்கிய அமைப்புகள் இவரைக் கௌரவித்து வருகின்றனர் . 'தமிழக தமிழறிஞர் பேரவை' 2019 ஆம் ஆண்டில் குமரனுக்கு கம்பர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய நூல் எழுதி வெளியிட வேண்டும் என்பது இவர் இன்றைய கனவு .
தன்னம்பிக்கையும் ,விடா முயற்சி ,கடின உழைப்பை இளம் தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும் என்பது இவரது நெடுநாள் கனவு .அதை செயல்படுத்த இவரை விட தகுதி மிக்கவர் யாருமில்லை என்பது நிஜம்.
உயர்ந்த இலக்குகளுடன், விதியை புறந்தள்ளும் வல்லமை படைத்த வெற்றிக்குமரனுக்கு விகடகவி சார்பில் நன்றியும், வாழ்த்தும் .
இது குமரனுக்கெனவே வள்ளுவர் எழுதி வைத்த குறள் :
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள் 620)
சாதனைகள் தொடரட்டும் !
.
No comments:
Post a Comment