Saturday, February 16, 2019


செங்குருதி பூசிக் கொண்ட  ஸ்ரீநகர்


மரியா சிவானந்தம்




பூமியின் சுவர்க்கம் , கிழக்கு நாடுகளின் வெனிஸ். இயற்கையின் தாய் மாடி என்றெல்லாம் புகழப்படும் காஷ்மீரின் கோடைத் தலைநகரான ஸ்ரீநகர் நேற்று , செங்குருதியை தன் முகத்தில் பூசிக் கொண்டு கோர முகம் காட்டுகிறது . தீவிர வாதத்தின் நீண்ட நகங்கள் , பிராண்டி விட , எங்கும் ரத்தக்களரியாக இருக்கிறது .

காதலர்கள் ரோஜாக்களைப் பரிமாறிக் கொள்ளும் காதலர் தினம் , ஸ்ரீநகரில் மிக  கொடுமையாய்  விடிந்துள்ளது. துணை ராணுவ வீரர்கள் (para military forces ) எனப்படும் மத்திய ஆயுதப்படை போலீசார் தங்கள் விடுமுறையை முடித்து விட்டு ஜம்முவில் இருந்து 78 பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவரகள் பாதுகாப்பு வாகனங்கள் முன்னும் , பின்னும் சென்றுக் கொண்டிருந்தன .  

அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் வரிசையாக அணிவகுத்துச்  சென்று கொண்டிருந்தன.  ஸ்ரீநகரிலிருந்து சுமார் 30 கி .மீ தூரத்தில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். 

 அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.

தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறிப்போய் விழுந்தனர். இந்த பயங்கரத் தாக்குதலில் 44 வீரர்கள் உயிர் இழந்துள்ளனர் .  நாற்பதுக்கும் மேற்பட்ட  போலீசார்  படுகாயம் அடைத்துள்ளனர். தாக்குதல் நடந்த  இடம் போர்க்களம் போல காட்சி அளித்தது .மனித உடலின் பாகங்கள் அங்கங்கே சிதறிஇருக்கிறது .செய்தி அறிந்து  பாதுகாப்புப் படையினர் , தடயவியல் நிபுணர்கள் , வெடிகுண்டு செயலிழக்க செய்யும் குழுவினர் என்று எல்லோரும் விரைந்து சென்று அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.நிவாரணப் பணிகள் இன்னும் நடந்துக்க கொண்டிருக்கிறது 


இது நிச்சயமாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல். இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது , எனப்படும் தீவிர வாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்ளது . சமீப காலத்தில் நடந்த தாக்குதல்களில் இதுவே மிக கொடுமையானது  . பேருந்தில் மோதிய கார் தற்கொலைப் படை தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. இந்த விபத்துக்குப் பின் ,அந்த பேரூந்துகளைப் பார்வையிட துப்பாக்கி குண்டுகள் குறி வைத்து துளைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

காஸ்மீரில் இப்போது கவர்னர் ஆட்சி நடக்கிறது. தாக்குதலுக்கு ஆளான  .சிஆர்பிஎப் எனப்படும்  மத்திய ஆயுதப்படை போலீசார்   24 மணி நேரமும் விழிப்பாக இருந்து செயல்படுபவர்கள் . இராணுவத்துக்கு இணையான பயிற்சியும் ,திறமையும் பெற்றவர்கள் .உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் , இப்படை  இந்தியாவின் மிகப் பெரிய காவல் படை . சட்டம் ,ஒழுங்கு காக்கவும் , தேர்தல் நேரங்களிலும் இயற்கை பேரிடர் காலங்களிலும் இந்த துணை ராணுவம் செயலாற்றி நாடு மக்களைக் காக்கும் சீரிய பணி ஆற்றி வருகிறது . இத்தகைய வீரர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை என்றால் எளிய இந்தியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக அல்லவா இருக்கிறது ? 350கி.கி அளவிலான வெடிமருந்தை ஏற்றுக் கொண்டு வந்த ,எப்படி பாதுகாப்பு ,கண்காணிப்பிலிருந்து தப்பியது ?

பிரதமர், குடியரசுத்தலைவர், முதல் அத்தனை தலைவர்களும் ஆறுதல் சொல்வதும் , நிவரணம் அறிவிப்பதுமான சடங்குகளை செவ்வனே செய்கிறர்கள். ஆனால் , தந்தையை , மகனை ,கணவனை, அண்ணனை இழந்த உறவுகளுக்கு என்ன பதில் சொல்ல  முடியும். ? 

அரசும்,விழித்துக் கொண்டு அரசு இயந்திரங்களை முடுக்கி விட வேண்டும், தீவிர வாத அமைப்புகளைஇரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும் .  மேல் பூச்சு  களிம்புகள் பயனற்று போகும் போது ,அறுவை சிகிச்சை அல்லவா நடத்த வேண்டும். 

இப்போது தேவை ஒரு ஆபரேஷன் , விரைவில், வெகு விரைவில்.! 

  
(விகடகவி 16-2-2019 இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை )
  












 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...