Sunday, March 17, 2019

 ஒரு தாயின் மனக்குமுறல் 




இரவில் வாங்கிய சுதந்திரம் ,  பெண்களுக்கு மட்டும் தாமதமாகத் தான்  விடிந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடுக்களையில் நிறுத்தி  வைக்கப்பட்ட  பெண் சமூகம் , இப்போது ஒரு ஐம்பது ஆண்டு காலமாக தான் நல்ல காற்றை சுவாசிக்க , வீட்டை தாண்டி வெளியில் வந்துள்ளது .கல்வி, வேலை, சுய சார்பு என்பதெல்லாம்  பெண்ணுக்குமானது என்ற காலம் இப்போதுதான் பிறந்துள்ளது .

இந்த ஆனந்தத்தை நாம் முழுமையாக அனுபவிக்கிறோமா என்ன ? வீட்டில், வெளியிடங்களில் ,பணி இடத்தில் என்று பெண்ணுக்கு எதிராக  எத்தனை எத்தனை வன்முறைகள் , எத்தனை கொடுமைகள் . பெண்ணின் குரல்வளையை நசுக்கி , அவளின் குரலை அடக்கும் வன்மைகள் அவ்வப்போது இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது .

ஆனால் இப்போது நடந்தது வன்முறையின் உச்சம். 

பெண்ணைப் பெற்ற  வயிறுகள் பதறித் துடிக்கின்றன . ஆண்மகனைப் பெற்ற அம்மாக்கள்  நடுங்குகின்றனர். எப்பக்கம் திரும்பினாலும் , இந்த செய்திதான். செய்தித்தாள் தொலைக்காட்சி, முகநூல், வாட்ஸஅப் என்று ஊடகங்கள் இந்த செய்தியைப் பற்றி, இந்த செய்தியைப் பற்றி  மட்டுமே பேசுகின்றன.பொள்ளாச்சியில் நடந்த பயங்கர சம்பவங்கள்  தமிழகத்தை ,மட்டுமல்ல , இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. 

பெருங் குரலெடுத்து அழத் தோன்றுகிறது. 

இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட போது , என்னைப்  போலவே பலர் அதை பார்க்காமல் தவிர்த்தனர். "நம்பி வந்தேனே" "வலிக்குது அண்ணா " என்ற வரிகளில் முகநூல் பதிவுகளைப் பார்த்த போது , அந்த வீடியோக்கள் எத்தனை பெரிய வலியைத் தரும் என்று எண்ணி , அந்த வீடியோக்களைப் பார்க்காமலே தவிர்த்தவர்கள் பலர். எனில்,  பார்த்து தவித்தவர்கள் நிலையை என்னவென்று சொல்ல.

எங்கு தவறு நடந்தது ?  
பிறப்பிலா  ,வளர்ப்பிலா ,இல்லை சமூக சூழலா ?
எதனால் தவறு நடந்தது ? 
செல்போனா ? முகநூலா ? பெருகி வரும் நுகர்வு கலாச்சாரமா ?
யார் காரணம் ? 
பெற்றோரா , ஆசிரியரா , நண்பர்களா ? 
எதை மாற்ற வேண்டும் ?
குழந்தை வளர்ப்பையா ? கல்வி முறையையா ?  
எங்கிருந்து துவங்க வேண்டும் ? 
வீட்டிலா , பள்ளியிலா , வெளியிலா ??


இன்ன பிற வினாக்கள்  என் தலைக்குள் புகுந்து இம்சை செய்கிறது  எந்நாளும் இல்லாத  அழுத்தமும் , மன உளைச்சலும் , புகுந்து உறக்கம் தொலைக்க வைக்கிறது  .  

இந்த பாலியல் கொடுமைகள் நடத்தப்பட்ட இடம் சென்னை அல்லது மும்பை போன்ற பெருநகரமல்ல . சின்னப்பம்பாளையம் என்ற சிறிய கிராமம். பண்ணை வீடு என்றாலும் , அங்கு ஆண்களும் , பெண்களுமாய் வந்துப்  போவது   சுலபமாக  கிராமத்தவர் கண்ணில் பட்டிருக்குமே . எப்படி அமைதி காத்தனர் ? "எனக்கென்ன வந்தது ? எப்படியோ போகட்டும் என்ற விட்டேத்தி மனநிலை பெரு நகரங்களில் உரியது .இப்போது அந்த நோய் கிராமங்களுக்கும் பரவி விட்டதா " அல்லது அரசியல் செல்வாக்கு அத்தனை போரையும் ஊமையாக்கி  விட்டதா ? .மனித மனங்களில்  குற்ற உணர்ச்சி மரத்து போனதா ? தலைமுறைகளாக நம்  மண்ணில் ,கட்டிக் காத்த விழுமியங்கள் எங்கே ?


நினைக்கையில் நெஞ்சு நடுங்குகிறது . 

முகநூலில் வலை வீசி , கண்ணி வைத்து பிடித்து அவர்களை பண்ணை வீட்டில், வைத்து கற்பழித்து , அதை வீடியோவாக்கி மிரட்டி பணம் பறித்துள்ளனர் . ஐந்து பேர் மட்டும் இப்போது சிக்கி உள்ளனர். மற்றவர்கள் இன்னும் பிடிபடவில்லை ??

விடை தெரியாத கேள்விகளால் அலைக்கழிக்கப்படுகிறேன். 

ஆண்குழந்தைகளுக்கு மதிப்பிடுகளை , கண்ணியத்தை , பெண் என்பவள் போகப் பொருள் அல்ல என்பவற்றை கற்பிக்க தவறி  விட்டோம் என்றால் பெண் குழந்தைகளுக்கு இயல்பாக தோன்றும்  மனதில் எச்சரிக்கை உணர்வு எங்கே போனது ? உள் உணர்வு (instinct  ) எங்கோ தவறு நடக்கப் போகிறது என்று உணர்த்தவில்லையா .? 

"அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் "இல்லையா ?

ஒருவர் இல்லை இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ,  கல்லூரி மாணவிகள் மௌனமாக இருந்தது எப்படி ?  அத்தனை பேரில் ஒரு பெண் துணிச்சலாக வந்து உண்மை சொன்ன பின்புதானே , இந்த துர்ச்சம்பவம் வெளிச்சத்துக்கு வருகிறது ? 

அரசியல் அழுத்தங்களுக்கு இடம் தராமல் சி.பி.ஐ சரியான விதத்தில் விசாரணையை மேற்கொள்ளுமா ? தேர்தல் நெருங்கும் சமயத்தில் , இச்செய்தியின் முக்கியத்துவம் குறைந்து  சில நாட்களில் மறக்கடிக்கப் படுமா ? ஊடகங்கள்  நடுநிலையுடன் நடந்துக் கொள்ளுமா ? இன்று சென்னை, பொள்ளாச்சி, மதுரை போன்ற இடங்களில் நடந்த மனித சங்கிலி போராட்டங்கள் மக்கள் மத்தியில், பெண்கள் மத்தியில்,இளைஞர்கள் இடையில் விழிப்புணர்வை ஏற்படுத்துமா ? 

என்னைச்  சுற்றி கேள்விகளே நிறைந்துள்ளன . என் போலவே எல்லா பெண்களும் , இதயம் உள்ள ஆண்களும் கேள்விகளால் சூழப்பட்டு நிற்கிறோம். 

இது வேதனை , சொல்லில் அடங்கா சோகம், கையறு நிலை , வெட்கம் , அவமானம் !

என்னவானாலும் சரி, யாரையும் விட்டுடாதீங்க ! 

(விகடகவி : 16/3/2019)









 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...