கருகும் இளந்தளிர்கள்
இந்த வாரம் ஊடகங்களில் துக்கம் சுமந்து வந்த செய்தி ஒன்று நம்மைக் கலங்க வைத்தது. நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து மதிப்பெண் குறைந்தது என்று இதுவரை மூன்று இளம் மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டு தம் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர் . அனைவரையும் நிலைகுலைய வைத்த இந்த தற்கொலைச் செய்திகள் அதிர்வினை ஏற்படுத்தி உள்ளது .
நீட் (NEET National Eligibility and Entrance Examination ) எனப்படும் இத்தேர்வு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கான தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு. கடந்த மூன்று ஆண்டுகளாக இளநிலை மருத்துவம் , முது நிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர விரும்புபவர்கள் அனைவரும் எழுத வேண்டிய கட்டாயத் தேர்வு. தேசிய அளவில் நடத்தப்படுவதால் அதிக கடினமாக இருப்பதாக ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் கருத்து.
இந்த மருத்துவ சேர்க்கை மாநில அளவில் இருந்த போது ,+2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது ,மருத்துவக் கனவுகள் கொண்ட மாணவர்கள் எளிதாக மருத்துவக்கல்லூரிகளில் இடம் பிடித்தனர் . கடின உழைப்பைக் கொடுத்த கிராமப்புற மாணவர்களும் மருத்துவர்கள் ஆனார்கள் . இதற்கும் முந்திய காலம் ஒன்று இருந்தது .மருத்துவம், பொறியியல் சேர விரும்பும் மாணவர்கள் ,மாநில அளவில் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டி இருந்தது . என்ற இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது . TNPCEE (Tamil Nadu Professional Courses Entrance Examination ) என்ற இந்த நுழைவுத்தேர்வு 100 மதிப்பெண் , +2 மதிப்பெண் உடன் சேர்ந்து ரேங்க் போடப்படும் . இதைத்தவிர சிபிஎஸ்சி AIPMT (All India Pre-Medical/Pre-Dental Entrance ) ஒரு நுழைவுத் தேர்வையும் நடத்தி வந்தது . தனியார் கல்லூரிகள் தங்கள் பங்குக்கு நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தன.
2006 வரை இருந்த இந்த முறை மக்களின் எதிர்ப்பைப் பெற்றது . கிராமப்புற மாணவர்கள்+2 வில் சிறப்பான மதிப்பெண் பெற்று இருந்தாலும் , இந்த மாநில நுழைவுத் தேர்வில் மதிப்பெண் குறைய அவர்கள் மருத்துவராகும் வாய்ப்புகள் குறைந்தன. நகர்ப்புற மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற கோச்சிங் வகுப்புகளில் சேர , அவற்றை நடத்தும் நிலையங்கள் பணத்தைக் கொள்ளையடித்தன . இந்நிலையில் பா .ம.கா தலைவர் ராமதாஸ் போராட்டங்கள் நடத்தியும் , வழக்கு நடத்தியும் இந்த நுழைவுத் தேர்வு 2006 ஆண்டு முதல் ரத்தானது . +2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டும் முறை நடைமுறைக்கு வந்தது .
இப்போது 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு , மாணவர்களை பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கி உள்ளது. மிக கடின உழைப்பை கொடுத்துதான் மாணவர்கள் +2 வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் . மீண்டும் ஒரு நுழைவுத் தேர்வு , அதுவும் சிபிஎஸ்சி தரத்தில் நடத்தும் இந்த தேர்வு துவங்கியதில் இருந்து பல குளறுபடிகள் , கெடுபிடிகள் .
முதலில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி யில் மட்டுமே விடை தரலாம் என்று இருந்த இந்த தேர்வு இப்போது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுதலாம் என்ற விதி தளர்வு மட்டுமே உள்ளது. மற்றபடி இந்த தேர்வு தரும் அழுத்தங்கள் அப்படியே உள்ளது. 180 கேள்விகள் , ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் .தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படுகிறது . 720 மதிப்பெண்ணுக்கு இவ்ரகள் எழுத வேண்டி உள்ளது . இந்த ஆண்டு முதன்முறையாகத் தேசிய தேர்வாணைய முகமை (National Testing Agency) நடத்தியது. நாடு முழுவதும் 14.10 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். அதில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்..
இந்த தேர்வு ஆரம்பித்த போது முதல் பலி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்த அனிதா. இவர் பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தவர் . சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக சிரமப்பட்டு படித்து பிளஸ் டூவிலும் அதிக மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில் 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.அனிதாவின் மரணம் தமிழ் மண்ணில் பேரிடியாக இருந்தது .பொது மக்கள், மாணவர்கள், எதிர் கட்சிகள் எல்லோருமே இந்த தேர்வுக்கு தடை விதிக்க போராடினார்கள்.
வழக்குகள் போடப்பட்டன . ஆனால் நீட் புறந்தள்ள முடியாத சுமையாக மாணவர்கள் தலையில் வைக்கப்பட்டுள்ளது .முதுநிலை மருத்துவம் படிக்க விரும்பும் மருத்துவர்களும் இதன் பிடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை .
ஒவ்வொரு ஆண்டும், தற்கொலைகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது . இந்த ஆண்டு முடிவு வெளிவந்த அன்றே மதிப்பெண் குறைந்ததற்காக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஷியா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதே காரணத்துக்காக திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கியிருக்கும் இந்த இரண்டு சோகச் சம்பவங்களிலிருந்தும் மீள்வதற்குள், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆண்டுக்கு ஆண்டு உயிர்ப் பலிகளை காவு வாங்கும் இந்த நுழைவுத் தேர்வு , கோச்சிங் சென்டர்களின் முதலாளிகளை கொழிக்க வைத்து அவர்களின் பேராசைக்குத் தீனி போடுகிறது . இந்த தேர்வின் நேர்மறை , எதிர்மறை விளைவுகளை சீர்தூக்கி , இந்த தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். மாநிலங்கள் அதிகாரத்தில் , மருத்துவ சேர்க்கை பொறுப்பைத் தர வேண்டும்
தொடரும் தற்கொலைகள் பெரும் கவலையைத் தருகிறது . பெற்றோர் , ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவப்படிப்பு என்பது ஒரு இலக்குதான். அதை அடைய இயலவில்லை என்றால் எல்லாமே முடிந்துப் போவதில்லை என்று இளந் தலைமுறைக்குப் புரிய வைக்க வேண்டும். எல்லாவற்றையும் விட வாழ்க்கை பெரிது என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் , வலைத்தளங்கள் , ஊடகங்கள் ஒன்று சேர்ந்து இந்த விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட வேண்டும். இது உடனடியாக செய்ய வேண்டிய சமூகக் கடமை, அவசியம் மட்டுமல்ல , அவசரமும் கூட .
இந்த வார விகடகவி இணைய இதழில் என் கட்டுரை

