Friday, November 25, 2022

 கடந்து  வந்த பாதை - விகடகவி 

நமது நிருபர் 


இன்று உங்கள் அன்புக்குரிய 'விகடகவி'  ஆறாம் ஆண்டில்  அடி எடுத்து வைக்கிறது  .

     குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
     இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
     நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
     மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
     பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே

என்னும் புறநானூற்று பாடல் வரிகளுக்கு ஏற்ப , கண் முன் வளர்ந்து வரும் மழலையின் வளர்ச்சியும் ,செயல்களும்  மனதுக்கு மகிழ்ச்சி தருவது போலவே , உங்கள் கண் முன் பிறந்து, தவழ்ந்து , பேசி ,சிரித்து தளர் நடையிடும் 'விகடகவி 'டிஜிட்டல் வீக்லியின் வளர்ச்சி  வாசகர்களின் மனதுக்கு பேருவகை தருவதல்லவா ?

இந்த ஆறாண்டு பயணத்தில் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்த்தல்  நெகிழ்வையும் , மகிழ்வையும் தருகிறது. அச்சு இதழ்கள் மெல்ல  மெல்ல வாசகர்களை இழந்து வரும் சூழலில்,தொடங்கிய சில மாதங்களில் இணைய இதழ்கள் மூடுவிழா நடத்துகையில், விகடகவி  இணைய இதழ் இலவச இதழாக முகிழ்ந்து ,வெற்றி நடை போடுவது சரித்திர சாதனை என்றே சொல்ல வேண்டும் 

29.11.2017 அன்று தான்  முதல் இதழ் இணையத்தில் வெளியானது.  ஆனந்த விகடன் இதழ் குழுமத்தில்  பல ஆண்டுகள் அனுபவம் மிக்க மதன்   சார், ராவ் சார் , சுபா வெங்கட் , சுதாங்கன் , மேப்ஸ், பாலஸ்வாமிநாதன்  ஜாசன் போன்ற  பெருமை மிக்க எழுத்தாளர்கள் ஒன்று கூடி இதழைத் தொடங்க  அதே குழுமத்தில் மாணவ நிருபர்களான ராஜேஷ் கண்ணா, ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி ராம், சதீஸ் அப்பு தாஸ்  இவர்களும் வேங்கட கிருஷ்ணன், ஸ்ரீதர்  வெங்கடேசன், ஆர்னிகா நாசர்  என்று பலரும் கை கோர்க்க  'விகடகவி 'பிறந்தது . நிர்வாகப் பொறுப்பு தினகரன் ஏற்றார்.  

திறமை மிக்க எழுத்தாளுமைகள், புகைப்பட கலைஞர்கள். ஓவியர் அரஸ்  என்று ஆர்வத்துடன் செயல்பட்டனர் . அரசியல் ,ஆன்மிகம் , கலை, இலக்கியம், சினிமா, தொலைக்காட்சி,   முகநூல், வாட்சப், ராசிபலன்  என்று புகுந்து விளையாடியது விகடகவி டீம் . சமூக பொறுப்புள்ள ஒரு நடுநிலை இணைய இதழாக இதை கொணர்வதில் எல்லாரும் முழு மூச்சுடன் செயல் படுகின்றனர். பின்னாட்களில் ஆரூர் சுந்தரசேகர் , தில்லைக்கரசி சம்பத் ,மரியா சிவானந்தம், பா. அய்யாசாமி மேலும் பல எழுத்தாளர்கள் இந்த குழுவில் இணைந்து  எழுதி மக்களின் வாசிப்பு சிறக்க ஒத்துழைக்கிறார்கள் .  

விகடகவியின் வெற்றிக்கு அதில் வெளிவந்த தொடர்கள் முக்கிய பங்காற்றின . மதனின் "ஹாய் மதன் ",  'வந்தார்கள் வென்றார்கள் ', ஹாய் டியர் மதன் , சுதாங்கனின் 'டேஞ்சர் தேசம், மகேந்திர பல்லவர் ' ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதியின் ,'பிரப ஞ்சமெங்கும் பெரியவா ' ராஜேஷ் கண்ணாவின் 'எங்க வாத்தியார் ,உலகை உலுக்கிய வழக்குகள் , வேங்கடகிருஷ்ணனின் ' வாசி ,நேசி, ருசி ,ரசி  . நேசித்த புத்தகங்கள் ,ஜாசனின் 'மாண்புமிகு மனிதர்கள்' ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதிய 'வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் நினைவுகள் " குமாரின் 'பட்டாம் பூச்சி பேசுகிறது " காவேரி மைந்தனின் 'காதல், உலகப் பொதுமறை' போன்ற தொடர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை . 

இலக்கியத் தொடர்களான 'ஒலிக்கும் சிலம்பு ,அருந்தவச் செல்வி, குறுந்தொகை துளிகள் இவற்றுடன் 'அரசியல் வானில் அரசிகள், புவியை அசைத்த தத்துவங்கள் , பயணத் தொடர்களும்  மரியா சிவானந்தம் பங்களிப்பில் வெளி வந்து பாராட்டுக்களைப் பெற்றவை. இனிக்கும் இஸ்லாம், ஒலிக்கும் சிலம்பு இரண்டும் புத்தகங்களாக வெளி வந்தவை .ஆன்மிக எழுத்தாளர் ஆரூர் சுந்தரேசன் அவர்களின் அளப்பரிய பங்களிப்பில், சிவபக்திக்கு வித்திட்ட நாயன்மார்கள், ஆரோக்கியம் நம் கையில் போன்ற தொடர்களுடன்  ,தற்போது எழுதி வரும், "பாரதத்தின் மலைக்கோவில்கள்    உள்ளிட்ட தொடர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தவை .

சிறப்பு கட்டுரைகள் வீடியோக்கள், வீடியோ பேட்டிகள் ராமின் ஸ்பெஷாலிட்டி.அவ்வப்போது நம்மை ஹாங்காங் சுற்றி காட்டுவார் ராம். அரசியல் களமோ ,சமூக அவலமோ அதிரடி கருத்துக்களை ஆணித்தரமாக எழுதுவது 'தில்லைக்கரசி சம்பத்தின் சிறப்பு . வீடியோக்கள், புகைப்படங்கள் மேப்சின் கைவண்ணத்தில் விகடகவியை மிளிர வைத்தன. சதிஷ் அப்புதாஸ் நம்மை வாரா வாரம்  ஊட்டிக்கு அழைத்துச் செல்வார் தன் எழுத்துக்களால் . 

விகடகவி குழுவில் எழுதும் அனைவருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் எழுதுகிறார்கள். கவிதை,   சிறுகதை ,பேட்டி கட்டுரைகள் எல்லாமே தனித்துவத்துடன் எழுதப்படுகின்றன . 

விகடகவியில் எழுதுவது பெருமைக்குரிய சங்கதி . நம் ஆன்மிக எழுத்தாளர் ஆரூர் சுந்தரசேகரின் அனுபவத்தைக் கேளுங்கள் .


"நான் 02 அக்டோபர் 2018 அன்று டி .வி.எஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் சில ஆன்மிக மாத இதழ்களில் ஆன்மிக கட்டுரைகள் எழுதி வந்தேன் . அந்த சமயத்தில் எனது சித்தப்பா ஆரூர் சுப்பிரமணியன் 'விகடகவி ' என்னும் டிஜிட்டல்  வார இதழில்  16-4-2019 இதழ் பக்தி ஸ்பெஷல் என வெளிவருகிறது .நீ அதற்கு ஆன்மிக கட்டுரை எழுதி அனுப்பு என்று வற்புறுத்தினார். விகடகவியில் ஆனந்த விகடனில் இருந்த மதன் சார் ,ராவ் சார் ,சுபா மேடம் போன்ற ஜாம்பவான்கள் இருந்ததால் எனக்கு சிறிது அச்சம் இருந்தது .எனது தந்தை 'உனக்கு தெரிந்ததை எழுதி அனுப்பு என்று ஊக்கப்படுத்தனார்.

எனக்குள் ஒரு  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மகான் திருக்கச்சி நம்பிகளிடம் நேரில் பேசிய பெருமாள் என்ற சிறு கட்டுரை மூலம் சிறு மழலையாக அடி எடுத்து வைத்தேன் . இன்று விகடகவி ஆறாவது வருடத்தில் என்னையும் விகடகவியின் குடும்ப உறுப்பினராக்கி ,'ஆரூரார் என்ற அந்தஸ்து கொடுத்து ஆன்மிக கட்டுரைகள் எழுதும் அளவுக்கு என்னை வளர்த்த விகடகவி குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"

ஆரூராரின் அனுபவத்தைப்  போலவே இங்கு உள்ள ஒவ்வொருவரும் தம் அனுபவத்தை சொல்லக் கூடும் . 

பாதையோ நெடிது ,பயணம் இனிது . 

ஐந்தாண்டு கதைகளை ஒரு வாரத்தில் பேசி விட முடியாது .

-பயணம் தொடரும் 



நான் 02 அக்டோபர் 2018 அன்று டி.வி.எஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு 1பெற்ற பின் சில ஆன்மிக மாத இதழ்களில் ஒரு சில ஆன்மீக கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனது சித்தப்பா ஆரூர் சுப்பிரமணியன்விகடகவி என்கின்ற டிஜிட்டல் வார இதழில் 16.04 2019 இதழ்பக்தி ஸ்பெஷல்என வருகின்றது. நீ அதில் ஆன்மீக கட்டுரை எழுதி அனுப்புஎன வற்புறுத்தினார். விகடகவியில், ஆனந்தவிகடனில் இருந்த மதன், ராவ், சுபா, ஜாசன் போன்ற ஜாம்பவான்கள் இருந்ததால் எனக்குச் சிறிது அச்சம் இருந்தது, எனது தந்தைஉனக்குத் தெரிந்ததை எழுதி அனுப்புஎன ஊக்கப்படுத்தினார்

எனக்குள் ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “மகான் திருக்க்கச்சி நம்பிகளிடம் நேரில் பேசிய பெருமாள்என்ற சிறு கட்டுரை மூலம் விகடகவியில் சிறு மழலையாக அடி எடுத்து வைத்தேன். இன்று விகடகவி ஐந்தாவது வருடத்தில் தொடர்ந்து என்னையும் விகடகவி குடும்ப உறுப்பினராக்கி, “ஆரூரார்என்ற அந்தஸ்து கொடுத்து ஆன்மீக கட்டுரைகள் எழுதும் அளவிற்கு என்னை வளர்த்த விகடகவி குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்


Thursday, November 24, 2022

 ஆரூர்தாஸ் -நினைவலைகள் 

மரியா சிவானந்தம் 

அந்நாட்களில் வீதிகள் ஒலி மிகுந்தவையாகவே இருந்தன ..

"மனோகரா ,பொறுத்தது போதும் பொங்கி எழு "என்று கண்ணாம்பா குமுறிக் கொண்டிருக்க ,

"     வரி ,வட்டி ,கிஸ்தி ..யாரைக் கேட்கிறாய் வட்டி ? எதற்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி ? என்று   வீரபாண்டியன் கட்டபொம்மன் குரலில் சிவாஜி உறுமிக் கொண்டு இருப்பார் .

தொலைக்காட்சியின்  ஆதிக்கம் தொடங்கும் முன்பு ,கிராமங்களில்,  திருவிழா ,தேர் , மணவிழா எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலி பெருக்கியின் தன்னாட்சி செலுத்தியது  . காலை முதல் இரவு வெகு நேரம் தாண்டிய பின்பும்  ஒலிபெருக்கிகள் முழங்கிக் கொண்டே இருக்கும்.

 இனிமையான திரைப்பாடல்களும் , வலிமையான  வசனங்களும் சினிமாவில் கோலோச்சிய காலம் அது . புகழ் பெற்ற படங்களின் வசனங்களை சவுண்ட் சர்வீஸ் காரர் போட்டு விடுவார் .  பாடல்களும், உரையாடல்களும்  நம் செவி வழி புகுந்து நினைவில் நிற்கும் .

மனோகரா , வீரபாண்டிய கட்டபொம்மன் ,திருவிளையாடல் ,சரஸ்வதி சபதம் போன்ற ரெக்கார்டுகளைப் போலவே ஒரு  வசன ரெக்கார்ட் எண்பதுகளின் துவக்கத்தில் நம் தெருக்களில்  முழங்கியது .அது "விதி" 'திரைப்படம் . சுஜாதாவும் ,ஜெய்சங்கரும் கோர்ட்டில் மோதிக் கொள்ளும் வசனங்களுக்காகவே ஓடிய படம் அது. புகழ் பெற்ற அந்த வசனங்களை எழுதியவர் பழம் பெரும் திரை வசன கர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் . சமீபத்தில் மறைந்த  அவரது உங்களுடன் நினைவலைகளை பகிர்ந்துக் கொள்கிறோம் 


தமிழ் மணக்கும்  திருவாரூர் மண்ணில் தோன்றி புகழ்    வளர்த்தவர்  இருவர் , ஒருவர் நெஞ்சுக்கு நீதி சொல்லி குறளோவியம் தீட்டி தமிழன்னைக்குச் செம்மொழி சிறப்பினை அளித்த டாக்டர் கலைஞர், மற்றவர் திரைத்தமிழைச்  செம்மைப் படுத்தி , தமிழின் பெருமைக்கு பெருமை சேர்த்த  நம் "பாசமலர்' ஆரூர்தாஸ் . ஆம் பாசமலர் திரைப்படம் ஆரூர்தாஸை புகழேணியில் ஏற்றி வைத்த படம் .

யேசுதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்டவர். 1931 ஆம் ஆண்டு பிறந்து 91 ஆண்டுகள் வாழ்ந்தவர். இவர் தந்தை சந்தியாகு ,தாய் ஆரோக்கியமேரி. கரந்தையில் தமிழ்ப்புலவர் பெற்ற இந்த தமிழ்க்கடல் . மிக இள வயதில் ஆரூர்தாஸ் என்ற பெயருடன்  சினிமாவில்  நுழைந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் திரைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். 


ஆயிரம் படங்கள்  அவற்றுள் நிறைய படங்கள் வெள்ளிவிழா படங்கள், நூறு நாட்கள் ஓடிய படங்கள் .சின்னப்பா  தேவரின் "வாழவைத்த தெய்வம் ' இவர் வசனம் எழுதி முதலாக வெளி வந்த படம், எனினும் நிறைய மொழி மாற்று படங்களுக்கு வசன உதவி செய்துள்ளார் .தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராக இருந்தவர் சின்னப்பா தேவரின் அறிமுகத்தால் வசனகர்த்தா ஆனார்,

பாசமலர் படத்துக்கு வசனம் எழுத ஜெமினியும் , சாவித்திரியும்  ஆரூர்தாஸை சிவாஜியிடம் அறிமுகம் செய்து வைத்தனர் .மிகவும் இளைஞனாக இருக்கும் ஆரூர்தாஸின் மேல் சிவாஜிக்கு நம்பிக்கை வரவில்லை . அதை அறிந்த ஆரூர்தாஸ் 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும் 'என்று குறளையும் மடல் பெரிது தாழை ,மகிழினிது கந்தம்' என்னும் மூதுரை பாடலையும் எடுத்துக்காட்டி பேச , சிவாஜி பெரிதும் வியந்து ."இவனிடம் என்னவோ இருக்குடா ,ஒரு பாசமலர் இல்லை, பத்து பாசமலர்களை எழுதுவான்டா " என்று மனம் நிறைந்து பேசினார். அதன் பின் தொய்வே இல்லாத திரைவாழ்க்கை ஆரூரருக்கு அமைந்தது .

அவரே ஒருமுறை அளித்த நேர்க்காணலில் கூறியது போல 

"1959-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அன்றைய சினிமா வானின் மிகச் சிறந்த இரு துருவங்களாகத் திகழ்ந்த, என்றைக்கும் ஈடு இணையற்ற `மக்கள் திலகம்', `நடிகர் திலகம்' இருவரையும் ஒரே சமயத்தில் என் முதுகில் சுமந்துகொண்டு முதல் குதிரையாக ஓடி, அன்னையின் அருளால் வெற்றிமேல் வெற்றி பெற்றேன்" என்பது போல  அவர்  . திரைப் பயணம் வெற்றி பயணமாகவே அமைந்தது . 

பாசமலர் மட்டுமன்றி , பார்த்தால் பசி தீரும் ,பார் மகளே பார் , புதிய பறவை, தெய்வமகன்  என்று பல படங்கள் இன்றும் ஆரூர்தாஸின் புகழைச் சொல்லிக் கொண்டே இருக்கும் . தாய் சொல்லைத் தட்டாதே ,வேட்டைக்காரன் போன்ற படங்கள் எம்ஜிஆருக்காக எழுதிய படங்கள் . பின்னர் ஜெயசங்கர் , ரவிச்சந்திரன், முத்துராமன் , கமல் ,ரஜினி என்று தொடர்ந்து எல்லா கதாநாயகர்களுக்காகவும் இவரது பேனா ஓய்வின்றி இயங்கியது . ஆரூர் தாஸ்.உதவி இயக்குனராக ,பாடலாசிரியராகவும் சில படங்கள் பணியாற்றி உள்ளார் .

தொடர்ந்த உழைப்பு இவருக்கு விருதுகளைக் குவித்தது .தன் திருவாரூர் பள்ளியின் சீனியரான   'கலைஞர் ' முதல்வராக இருந்த போது அவர் கரத்தால் கலைமாமணி விருது பெற்றவர் ஆரூர்தாஸ் .அறிஞர் அண்ணா விருது', கலை வித்தகர் பட்டத்துடன் கூடிய ஐந்து சவரன் பொற்பதக்கப் பரிசு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 80-வது பிறந்த நாளில் ‘சிவாஜி விருது'டன் கூடிய 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு' எனப் பல பரிசுகளும் விருதுகளும் பெற்று கௌரவிக்கப்பட்டார் 


அண்ணா , கலைஞர் ,இளங்கோவன்  போன்ற தமிழ் வித்தகர்கள் தன் எழுத்துக்களால் மாயாஜாலம்  செய்த தமிழ்த்திரையில் அவர்களைத் தொடர்ந்து  தன் வசனங்களால் பெரும் ,புகழும் பெற்றவர். பாசமலரில் சிவாஜி பேசும் வசனம் ஆரூர்தாஸின் தமிழின் பெருமைக்கு எடுத்துக்காட்டு 

``பொது நலம்... எது பொதுநலம்? பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா? புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது, நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா? காட்டிலே குழி பறிப்பது யானை ஓய்வு எடுப்பதற்கா? கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா? அல்ல... இதெல்லாம் `பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும்' என்ற பேய் வெறி! அந்த வெறிதான் உனக்கும்”.



இறவாப்புகழ்     கொண்ட படங்கள் இவர் பெயரை என்றும் சொல்லிக் கொண்டே இருக்கும் , தமிழ்த் திரை உலகம் இருக்கும் வரை, தமிழ் மொழி வாழும் வரை         


--------------------


வெள்ளி விழா கண்ட வசனகர்த்தா!
திரையுலகில் வெள்ளிவிழா கொண்டாடிய கதை,வசனகர்த்தாக்கள் வெகு சிலரே! அன்றும், இன்றும், என்றும் புகழேணியில் இருக்கிறார் வசனகர்த்தா ஆருர்தாஸ்.அவரது வெற்றியின் பின்னணி என்ன? அவரே சொல்கிறார்.
‘வாழ வைத்த தெய்வம்’ படம்தான் அதற்கு முன்னா. சில எழுதியிருக்கிறேன். சென்னைக்கு வந்தபோது வசனகர்த்தாவாக மாறியது என் வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத நிகழ்ச்சி. தேவர் அவர்களை வசனம் எழுதும் விஷயமாக குத்தாலத்தில் சந்தித்துப் பேசினேன். அக் கம்பெனிக்கு என்னை சிபாரிசு செய்ததே ஜெமினி கணேசன் தான். தேவர் என்னை கோவைக்கு அழைத்துப் போய், ஆர்.எச்.ஆர்.ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்து வசனம் எழுதச் சொன்னார். அது தேவரின் நாலாவது படம். படத்தில் என்.வி.சுப்பையாவும், டி.எஸ்.முத்தையாவும் ஆடு புலி ஆட்டம் ஆடும் காட்சி, அதற்காக நான் எழுதிய முதல் வசனம் :
‘வெற்றி, வெற்றி. இந்த நாலாவது ஆட்டத்திலும் எனக்குத்தான் வெற்றி’ செண்டிமெண்ட்டாக இந்த வசனம் ரொம்பப் பொருத்தமாக அமைந்தது என்று தேவர் என்னை பாராட்டினார்.’
நீங்கள் வசனம் எழுதிய படங்களில் பெரிதும் திருப்தியளித்தது எது?
பாசமலர் சிவாஜி, ஜெமினி, சாவித்ரி போன்ற தலைசிறந்த நட்சத்திரங்கள் நடித்த படம் அது. வலுவான கதை அதன் ஜீவநாடி. பசுமையாக வசனங்கள் அமைய வேண்டும் என்று நான் பாடுபட்டு எழுதினேன். தவிர, ‘தெய்வ மகன்’ படத்தில் அந்த மூன்றுக்கும் ஏற்றபடி வசனம் எழுத நேர்ந்தது. சிவாஜிக்கும் மூன்று ரோல்கள். அவருக்குப் பெருமை தேடித் தந்த படங்களில் அதுவும் ஒன்று. எம்.ஜி.ஆர். உணர்ச்சிகளைக் கொட்டி நடித்த, ‘பெற்றால்தான் பிள்ளையா?’ ’தாய் சொல்லைத் தட்டாதே’ இரண்டும் எனக்குப் பிடித்த படங்கள்.
மற்றவர்கள் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது?
சமீபத்தில் ‘சங்கராபரணம்’ படத்தை மூன்று முறை பார்த்து ரசித்தேன். இன்னும் பலமுறை பார்க்கப் போகிறேன். அப்படம் வேற்று மொழியில் இருந்தாலும் பேசுகிற வசனம் என்னவென்று நமக்கும் புரிகிறது. இது கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் டைரக்டரின் வெற்றி.
உங்கள் வசனத்தைப் பெரிதும் விரும்பும் கலைஞர்கள் யார்?
நடிகர்களில் ஜெமினி. அவர்தான் என்னைத் திரையுலகில் புகுத்திவிட்டவரே. டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரும் நானும் ஒருவருக்கொருவர் விசிறிகள். என் வசனத்தில் அவருக்கு அலாதி நம்பிக்கையும், பிரியமும் உண்டு.
ஒரு படத்துக்கு வசனம் எழுத எவ்வளவு நாட்கள் ஆகும்?
அது கதையைப் பொறுத்தது. ஒரு வாரமும் ஆகலாம். ஒரு மாதமும் பிடிக்கலாம். படப்பிடிப்பின் ஷெட்யூல்களுக்கு ஏற்றபடி பகுதிப் பகுதியாகவும் எழுதுவேன். ஒரே சமயத்திலும் எழுதி முடிப்பேன்.
வசனங்களை எங்கே எழுதுவீர்கள்?
பெரும்பாலும் வீட்டில்தான். சில கம்பெனிகளில் ஓட்டலில் ரூம் போடுவார்கள். ஏவி.எம்.படங்களுக்கு வசனம் எழுத எனக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள கெஸ்ட் ஹவுசில் ‘ரூம்’ போட்டுக் கொடுப்பார்கள். அமைதியான இடம். எஸ்.பி.முத்துராமன் அப்போது உதவி டைரக்டர். நானும் அவரும் படத்துக்குப் படம் காட்சிகளை விவாதித்து ஒரு வாரம், பத்து நாட்கள் அங்கேயே தங்கி, வசனம் எழுதுவோம்.
எழுதும்போது மூட் தேவையா?
எனக்குத் தேவையில்லை. ஆனால் வசனம் எழுதும் போது எனக்கு அடிக்கடி தலைவலி வரும். அப்போது சற்று ஓய்வெடுப்பேன். தினமும் பகல் சாப்பாட்டுக்குப் பின் எனக்கு ஒரு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். ராணுவ முறையில் செயல்பட்ட தேவர் கூட பகலில் நான் தூங்கி ஓய்வெடுக்க விட்டுவிடுவார்.
எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் செண்டிமெண்டாக ஏதாவது எழுதுவீர்களா?
வேளாங்கண்ணி மாதாவை நினைவிலிருத்தி பேப்பரில் ‘மாதா துணை’ என்று எழுதிவிட்டே நான் செய்யக் காரணகர்த்தாவாக இருந்தவர் திரு. தஞ்சை ராமையாதாஸ் தான்! அவர் கடவுளை நினைத்து ‘அவன் துணை’ என்று எழுதிவிட்டே வசனம் எழுதுவார். அந்த இன்ஸ்பிரேஷன் தான் எனக்கு….
நீங்கள் வசனத்தை ரசித்துப் பார்த்த வேறு படங்கள் ஏதாவது?
தப்புத்தாளங்களில் கே.பாலசந்தரின் வசனம் எழுதியிருந்த முறை என்னைப் பெரிதும் கவர்ந்தது. மற்றொரு மறக்க முடியாத படம் ‘பெக்கட்’ ஆங்கிலப் படம். கதை, வசனம், நடிப்பு எல்லாமே கவர்ந்தது.
நீங்கள் எழுதிய வசனத்தை ரசித்து நடித்த நடிகர் யார்?
நடிகர் திலகம் தான். ‘பட்டாக்கத்தி பைரவன்’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் நூறு பக்க வசனம் எழுதினேன். அப்புறம் நானே அதை ஐம்பது பக்கமாக்கினேன். அந்தப் படத்துக்கு அத்தனை வசனமும் தேவை.
அந்த வசனம் பூராவும் நடிகர் திலகம் சிவாஜி ரசித்து ரசித்துக் கேட்டு நின்று கொண்டே பேசினார். மறக்க முடியாத


காலமும், விதியும் இணைந்து என் கரங்களைப் பிடித்து, கரந்தை தமிழ்க் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, சென்னை கோடம்பாக்கத்திற்குக் கூட்டி வந்து 1953-ல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் மாற்றுமொழியிலிருந்து தமிழாக்கம் செய்வது ஆகிய கலைகளில் கை தேர்ந்தவராகவும், புகழ்பெற்றவராகவும் விளங்கிய `அமரகவி’ தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராகச் சேர்த்து வைத்தது.

அப்போது எனக்கு வயது 22. என் மாதச் சம்பளம் ஐந்து பத்து ரூபாய் நோட்டுகள்! என் ஆரம்பத் திரைப்பட ஆசான் ஆன அவர்தான் என்னை ‘ஆரூர்தாஸ்’ என்று அழைக்க ஆரம்பித்து, அவருடைய ஆசீர்வாதத்தினால் அதுவே நிலைத்து வெளிச்சம் பெற்று விளங்குகின்றது. 




பொது நலம்... எது பொதுநலம்? பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா? புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது, நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா? காட்டிலே குழி பறிப்பது யானை ஓய்வு எடுப்பதற்கா? கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா? அல்ல... இதெல்லாம் `பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும்' என்ற பேய் வெறி! அந்த வெறிதான் உனக்கும்”.

Thursday, November 3, 2022

 திறக்கப்பட்ட  சன்னல்கள்  

மரியா சிவானந்தம் 


பளபளக்கும் வெயில் நேரத்தில் அந்த வீட்டின் பின்கதவு திறக்கப் படுகிறது . மரங்கள் அடர்ந்த புழக்கடைக்கு  அவ்வீட்டின் பெண்மணி  வருகிறார்.  கதவு திறக்கும்  சப்தம்  கேட்டு பக்கத்து வீட்டின் பின் கதவும் திறக்கப்பட, இரு பெண்மணிகளும் ஆவலுடன் ஒருவரை ஒருவர் பார்த்து  உசாவிக் கொள்கிறார்கள் .

"என்ன கமலாக்கா, வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சதா , இன்று என்ன சமையல் ? "

"எங்கே இவ்வளவு சீக்கிரம் முடியுது விமலாக்கா ?" என்று அலுத்துக் கொள்ளும்  கமலாக்கா    "இன்னிக்கு முருங்கைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு காரக்கறி, புடலங்காய் கூட்டு செஞ்சு தக்காளி ரசம் வச்சேன்" என்று    தன் வீட்டு  அன்றைய சமையலை  விலாவரியாய் விவரிப்பார், சற்றே பெருமை பூக்க . 

இம்மாதிரி அன்றடம் நிகழும் காட்சிகள் இன்று இல்லவே இல்லை. பூட்டிய  கேட்டும் , இரட்டைத் தாழிட்ட  முன் , பின் கதவுகளும் இன்று  அக்கம் பக்கத்து வீட்டவரிடம் இருந்து நம்மைப் பிரித்து வைத்துள்ளன. இன்று பக்கத்து வீட்டில் வசிப்பவரைப் பார்த்து பேச நேரமில்லை என்பது ஒரு புறம் இருக்க,  பார்க்கும் நேரத்திலும்  புன்னகையைப் பரிமாறிக் கொள்ள நாம் தயாரில்லை .

ஆனால்,  இன்றைய 'கமலாக்காக்கள்' இப்போது கதவுகளைப் பூட்டி விட்டாலும், சன்னல்களை திறந்து வைத்து விட்டனர். ஆமாம், இணையம் என்னும் சன்னலைத் திறந்து கமலாக்கா தன் வீட்டு  "இன்றைய சமையலை" வீடியோ பதிவாக்கி  யூடியூபில் உலவ விட்டு, அவ்வப்போது வரும் லைக்குகளை கவனிக்க ஆரம்பிக்கிறார். அதிக லைக்குகள் வர வர கமலாக்கா பிரபலம் ஆவதும், தனி வருவாயாக அவருக்கு காசு வருவதும் உப கதை .

2005 ஆம் ஆண்டில் பேபால் (PayPal) என்னும் நிறுவனத்தில் பணி புரிந்த மூன்று ஊழியர்களால் தொடங்கப்பட்ட யூடியூப் இன்று பல லட்சம் பேர் பங்கு பெறும்  இணைய தளமாகி விட்டது.  கதைகளைப் படிப்பதை விட காட்சிகளைப் பார்க்கவே மனித மனம் விரும்புகிறது என்னும் எளிய உளவியலின் அடிப்படையில் அமைந்தது யூடியூப். இந்தியாவில் இணையம்  துவக்கப்பட்ட காலங்களில் யாஹூ தளமே அதிகம் பார்க்கப்படும் இணையதளமாக முன்னணியில் இருந்தது. இப்போது முதல் இடத்தில் இருப்பது  கூகுள் என்றால், அதிரடியாக அடுத்த இடத்தைப் பிடித்திருப்பது யூடியூப்  தளம் தான் 

சினிமா, திரைப்பாடல்கள், நாடகம், இலக்கிய நிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்வுகள்,  சமையல், சின்னத்திரை என்று எல்லாமே யூடியூபில் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு மிகப்பெரிய தகவல் களஞ்சியம் யூடியூப்.  தவிர, நல்ல வருவாயை ஈட்டித் தரும் இடமாக இது அமைந்து விட்டது. முதலில் வெறுமே பார்வையாளர்களாக மட்டுமே  இங்கு    சென்றவர்கள் தனி சேனலை தொடங்கி புகழும், பணமும் பெற்று   வெற்றியாளர்களாக மாறியவர்கள் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. கதை, கட்டுரை, கவிதை என்று BLOG எழுதியவர்கள் கூட இன்று தன் வீட்டுக் குழந்தை  ஆடுவதை, பாடுவதை  விடீயோவாக எடுத்து  யூடியூபில் ஏற்றி VLOG படைக்கிறார்.   

ஒரு நல்ல கேமிரா, கொஞ்சம் எடிட்டிங்  தெரிந்த நண்பர் இருந்தால் போதும், ஒரு சேனலை துவக்கி விடலாம்.  கிருத்திகா என்ற இளம் பெண் tastee with Kiruththika என்ற சேனல் வைத்துள்ளார். ஒவ்வொரு ஓட்டலாக போய் , அங்கு சாப்பிட்டு , அந்த ஓட்டலில் விற்பனையாகும் உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்துகிறார். ஓட்டலுக்கு விளம்பரமும் ஆயிற்று,  இவர்களுக்கு வருமானமும் ஆயிற்று . உள்ளூர் மட்டுமல்ல, மலேசியா வரை சென்று வித விதமான உலக உணவுகளை நமக்கு விவரிக்கிறார். இவரைப் போல பலரும் இதை முழு நேர தொழிலாக வைத்துள்ளனர்.

சமீபத்தில் இர்பான் என்பவரும் இவரைப் போலவே ஒரு கடையை அறிமுகப்படுத்தினார். மறுநாள்  அங்கு சென்ற சுகாதாரத் துறையினர் அக்கடையில் கெட்டுப் போன இறைச்சியை கைப்பற்றினர், இர்பானின் விடியோக்கள் கொஞ்ச காலம் தடை செய்யப்பட்டன.  இந்த சம்பவம் இந்த வகை விடியோக்களின்  உண்மைத்  தன்மையை  சந்தேகப்பட வைத்தன .

நிற்க ,  'சமைத்துப் பார்' டைப் விடீயோக்கள் ஏகத்துக்கும் பெருகி விட்டன.  Village Cooking Channel, Village food factory போன்ற எளிய மக்கள் நடத்தும்  சேனல்கள்  அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கின.  கமலாக்கா போல பலர் தனி சேனல்கள் துவக்கி  வீட்டில் செய்யும் சிம்பிள் சமையலை  விடியோவாக்கி லைக்குகளை அள்ளுகிறார்கள். தவிர பயண வீடியோ, ஆன்மிகத்தலங்கள் சுற்றுலா, கிராமிய கோவில்கள், வழிபாடுகள், பட்டிமன்றங்கள் , இலக்கிய நிகழ்ச்சிகள்,   உணவுண்ணும் சவால் (food challenge), கவிதை முதல் கணினி வரை கற்றுத் தரும் சானல்கள்  என்று வித விதமாக சானல்கள் இருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் அதிகமாக கவனிக்கப்பட்டும், அதிகமாக வெறுப்பையும் சம்பாதித்த டிக் டாக் விடியோக்கள் ஒரு நல்ல நாளில்  தடை செய்யப்பட்டு முடிவுக்கு வந்தன. உடனே புற்றீசல் போல கிளம்பின இன்ஸ்டா ரீல்ஸ் எனப்படும் சிறிய காணொளிகள். 30 நொடிகளே ஓடும்  இந்த விடீயோக்களை எடுக்க நல்ல வெளிச்சமான இடமும், கைபேசி தாங்கியும் (Mobile stand) போதும். வீட்டின் அன்றாட நிகழ்வுகள், குழந்தைகளின்  மழலைக் குறும்பு , பாடல்களுக்கு நடன அசைவுகள் , டிக் டாக் போல உரையாடல்களுக்கு  வாயசைப்பு என்று அதிக சிரமம் இல்லாத, விடீயோக்கள் வெளி வந்தன.பிரபலங்கள் முதல் சாதாரணர் வரை இந்த விடீயோக்களில் தோன்றுவதை பெருமையாகவே கருதி வருகின்றனர்  .

மக்களிடையே இன்ஸ்டா காணொளிகளுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு விழித்துக் கொண்ட  யூடியூப் நிறுவனம்,  யூடியூப் ஷார்ட்ஸ்  (youtube shorts) என்னும் குறும்படங்களை அறிமுகப்படுத்தியது. ஒரு நிமிடம் வரை  ஓடும் விடீயோக்கள்  வெளி வர தொடங்கின. இன்ஸ்டா ரீல்ஸ் போல இல்லாமல், இந்த குறும் படங்களுக்கு கொஞ்சம் மெனக்கிட வேண்டும். பொருளும், உள்ளடக்கமும் (Theme and Content) தெளிவாக இருக்க வேண்டும் .  

இந்த யூடியூப்  காணொளிகளில் பேசப்படாத பொருள் இல்லை, Anything and everything under the Sun என்றே சொல்லலாம். ரோட்டோர பரோட்டா கடை முதல், ஐந்து நட்சத்திர ஓட்டல் பப்பே வரை, ஹோம் டூர் முதல் வேர்ல்டு டூர் வரை , இயற்கை மருத்துவம் முதல் இதய நோய் சிகிச்சை வரை, சந்துமுனை கடை முதல் சந்திர மண்டலம் வரை, மலிவு விலை சேலைக்கடை முதல் மலிவான பயில்வான் ரங்கநாதன் பேட்டி வரை தினமும் காணொலிகள் கொட்டிக் கொண்டு இருக்கின்றன.

 ட்ரெண்டிங் செய்திகளை ஒட்டி  விறுவிறுப்பான குறும் படங்கள், நேர்க்காணல்கள்  சுடச்சுட தயாராகி விடும், அது பொன்னியின் செல்வன் ஆனாலும் சரி, பக்கிங்காம் அரண்மனை அரசியின் மறைவானாலும் சரி. எப்போதும் விழிப்புடன் இயங்கி கொண்டே இருக்கும் படைப்பாளிகள் இங்கு நூறாயிரம் பேர் இருக்கிறார்கள். 

சில மலிவான, தனிமனித  வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்து லைக்குகளுக்காக  தயாரிக்கப்படும் காணொலிகள் தரம்  குறைந்தவையாக இருக்கின்றன, சில பிராங்க் (Prank videos) இதில் அடங்கும். மனித நேயம், சக மனிதரை மரியாதையுடன் நடத்துதல், சமூக விழிப்புணர்வு, இயற்கையைப் பாதுகாத்தல் , குடும்ப உறவுகளைப் போற்றுதல், நேர்மை  உயர்வைத் தரும் என்ற பொருள்களை உள்ளடக்கமாக கொண்ட காணொளிகள் உரத்த சிந்தனைகளை  உள்ளடக்கியது  என்றால்  குழந்தைகளின் மழலைக் குறும்புகளை படம்பிடிக்கும் காணொளிகளும், கோவில் தேவாலய வழிப்பாடு காணொளிகளும்  அழகியலின் உச்சம் . 

ஆயிரம் சன்னல்கள் திறக்க,  நமது அலைபேசிகள் நான்கு பக்கமும் சுழன்று சுழன்று பல்லாயிரம்  பொழுது போக்குகளை  நமக்கு அள்ளித் தரும் காணொலி யுகம் இது. சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை காணொலிகளில் கட்டுண்டு இருப்பதைக் காண்கிறோம் 

நமது கண்ணையும், மனதையும், நேரத்தையும்  கெடுக்காத வகையில் அவற்றை அனுபவிப்போம். தேவையற்ற எதையும்  மௌனமாக கடப்போம் . 

அதற்கான விசை நம் கைகளில் தான் இருக்கிறது .

 

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...