Tuesday, December 20, 2022

திருச்சபையில் தீந்தமிழ்  

மரியா சிவானந்தம் 


இறை வழிபாடும்  மொழியும் ஒன்றுடன் ஒன்றாக பின்னி பிணைந்தவை. இறைவன் மொழிகளுக்கு அப்பாற்பட்டவன். ஓர் ஆன்மா எழுப்பும்  குரல் இறைவனின்  செவிகளைச் சென்றடைய மொழி தேவை இல்லைதான் .ஆனால் மக்கள் ஒன்று கூடி பிராத்திக்கும் போது அவர்களுக்கு புரியும் மொழியில் வழிபாடு  செய்வதே உன்னதம். இன்னும் நம் கோவில்களில் தமிழில் வழிபாடு செய்வதா அல்லது சமஸ்கிருதத்தில்  வழிபாடு செய்வதா என்ற சர்ச்சை நம்மூரில் ஓடிக் கொண்டு இருப்பதை நாம் அறிவோம்.


கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திருவழிபாட்டு மொழி பற்றிய  விவாதம் பல்லாண்டுகளாகவே இருந்து வந்தது. குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பல நூறு ஆண்டுகளாக திருப்பலி பூசை லத்தின் மொழியில் இருந்தது என்றும் சுமார் ஐம்பது ஆண்டுகளாத்தான்  தமிழ் மற்றும் பிராந்திய மொழிகளில்  என்று சொன்னால் நம்புவீர்களா? தற்காலத்தில்  தூய தமிழில் வழிபாடு மற்றும் ஜெபங்கள் நடத்தப்படுகின்றன. 


நான் பிறந்து வளர்ந்த சிற்றூரில்,  சிறு வயதில்  சர்ச்சில்  பூசையில் எல்லா ஜெபங்களும் லத்தினில் தான் இருந்தது. பாதிரியார் ஜெபிக்கும் போது ,மக்கள் பதில் மொழி சொல்வதும் வழக்கம்.  அதிகம் படிக்காத எளிய மக்களும் ,பெண்களும் லத்தின்  மொழியில் பதில் உரைப்பதை பார்த்திருக்கிறேன்.  

பீடத்தை நோக்கி நின்றுக் கொண்டே பாதிரியார் திருப்பலி நிறைவேற்ற, மக்கள் பொருள் புரியாத மொழியில் பதில் சொல்வார்கள்.  "தாந்தும் ஏர்கோ சாக்ரமெந்தோ " என்ற லத்தின்  பாடலை  பின்னாளில் "மாண்புயர் இவ்வருள்  சாதனத்தை"என்று மொழி பெயர்த்தனர்.வழிபாட்டின் இறுதியில் சொல்லும் 'தேயோ கிராசியஸ்' என்னும் தொடர்  தமிழ் படுத்தப்பட 'இறைவனுக்கு நன்றி'  என்றானது. இவை சின்ன எடுத்துக்காட்டுகளே. ஒரு அகண்ட  வெளியில் இறைவனும், மனிதனும்  சொற்களின்றி  தவிப்பது போல் இருந்தது அக்கால வழிப்பாடு  .

1962 ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற வாடிகன் சங்கம், மக்களை மேலும்   இறைவனிடம் நெருக்கமாக்க மொழி அவசியம் என்பதை உணர்ந்து அவரவர் தாய் மொழியில் வழிபாட்டை  நடத்த அனுமதி அளித்தது. தேவாலயங்களில் இருந்து லத்தின் பிரியா விடை பெற்றுக் கொண்டது. 

அதன் பின் நிகழ்ந்ததெல்லாம் அற்புதம். தமிழ் மொழியில் பூசை ஜெபங்கள், பதிலுரைகள் எழுதப்பட்டன. விவிலியம் நல்ல தமிழில் எழுதப்பட்டது.அழகான இசைப்பாடல்கள் உருவாகின.  

செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி நான் பாடிடுவேன் இறைவா 

என் சிந்தனையில் நீ இருந்து வாழ எழுந்தருள்வாய்  தலைவா 

போன்ற அழகான பாடல்கள் உயிர் பெற்றன 

  ஆனால் அன்றாட ஜெபங்களில்  மட்டும் வடமொழி   கலந்தே இருந்தது  . சில நூறு ஆண்டுகளுக்கு முன்   வடமொழி கலந்த தமிழில் எழுதப்பட்டு ,ஜெபிக்கப்பட்ட தமிழ் ஜெபங்கள் எவ்வித மாறுதலுக்கும் உட்படுத்தப்படாமல் இருந்தன . 

இப்போது நான்கு ஆண்டுகளாக இந்த அன்றாட ஜெபங்களில் இருந்த  வடமொழிச் சொற்களுக்கு பதிலாக தூய   தமிழ் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன.அதே போல் பூசை ஜெபங்களிலும் இந்த மொழி மறுமலர்ச்சி நுழைந்தது.  இப்போது எல்லா இடங்களிலும் சம்ஸ்கிருத சொற்கள் நீக்கப்பட்டுள்ளன .

ஜெபம்-மன்றாட்டு, சர்வேஸ்வரன்-இறைவன், மகிமை-மாட்சிமை, பிதா, சுதன்-தந்தை,மகன் , அர்ச்சியசிஷ்ட  மரியாயே-புனித மரியே ஜெபிப்போமாக -மன்றாடுவோமாக என்று  வடமொழி சொற்கள் நல்ல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. திருச்சபை என்று காலங்களாய் வழங்கி வந்த சொல் இன்று  திரு அவையாகி விட்டது . 

கிறிஸ்துவ கீதங்கள் மனதை உருக்கும் மகத்துவம் கொண்டவை. முதல் முதலாக அந்த கீர்த்தனைகளை இயற்றிய பண்டிதர்கள் அந்நாள் வழக்கப்படி வடமொழி கலந்தே எழுதினார்கள் . இனிமை நிறைந்த அப்பாடல்கள் இன்றும் பல சபையினரால் பாடப்பட்டு வருகின்றன .

சர்வ லோகாதிபா நமஸ்காரம் 

சர்வ சிருஷ்டிகனே  நமஸ்காரம் 

தரை, கடல், உயிர் வான் சகலமும் படைத்த 

தயாபர பிதாவே நமஸ்காரம் 

1864 ஆம் ஆண்டு, வேதமாணிக்கம் என்பவரால் எழுதப்பட்டு இன்றும் பாடப்பட்டு வரும் பாடல். இந்த பாடல் போலவே பல பாடல்கள் வடமொழி கலந்து எழுதப்பட்டன. நூறாண்டுகள் கடந்தும் இன்றும் மக்கள் நினைவில் இருந்து நீங்காத பாடல்களில் இதுவும் ஒன்று . 

இப்போது தேவாலயங்களில் பாடப்படும் பாடல்களில் ஒன்று இது.  

தமிழால் உன் புகழ் பாடி ,தேவா நான் தினம் வாழ 

வருவாயே திருநாயகா ,வரம் தருவாயே உருவானவா 

எனைச் சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது 

துணையாகி எனை ஆள்பவா 

மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு 

குணமாக்க வருவாயப்பா ,

எனை உனதாக்கி அருள்வாயாப்பா .


இறைவனை மொழி என்னும் சட்டகத்தில் அடைக்க முடியாது. எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன்.   மனிதனோ வரையறைக்குள் உட்பட்டவன். அவன் சிற்றறிவின் வழியாக இறைவனை எட்ட முயல்கையில் மொழி ஒரு கருவியாகிறது . அக்கருவி அவன் மனதுக்கு உகந்த தாய்  மொழியாகும் போது கூடுதல் நிறைவும், மகிழ்வும் பிறக்கிறது . 

தமிழ்  மொழி பக்தி இலக்கியங்களின் தங்கச் சுரங்கம். திருவாசமும், தேவாரமும் , திவ்ய பிரபந்தமும் ,திருப்பாவையும் ,சீறாப்புராணமும் , இரட்சணிய யாத்ரீகமும் பிறந்த மண் இது. இறைவனை மதம் என்னும் கட்டமைப்புக்குள் புகுத்தாமல் , தமிழ்  பக்தி இலக்கியங்களில் உள்ள நல்ல பாடல்களை தேவாலயங்களில் பாடும் நாள் வர வேண்டும். திருஅவைக்குள் தீந்தமிழ் ஓங்கி ஒலிக்க வேண்டும் . 

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 


  


Friday, December 2, 2022

 விகடகவி  கடந்து  வந்த பாதை -2 - 

மரிய சிவானந்தம் 


"புதைந்த விதை நான் 

முளைத்து விட்டேன் 

பூக்கும் பூக்களால் 

நன்றி சொல்வேன் -  

விகடகவி இதழ் -24/01/2018 

பிருந்தா சாரதியின் குறுகிய , அழகிய கவிதை நினைவில் எழுகிறது. சிறு விதையாய் மண்ணில் விழுந்து , புதைந்து ,சிறு செடியாக இலை தளிர்த்து பூக்கள் பூக்கும் இந்த கவிதை 'விகடகவிக்கும் ' பொருந்தும் . 

மதன் சார் போன்ற பெருமகன்களின் மனதில் விழுந்த இந்த மின்னிதழ் தொடங்கும் எண்ணம், உரு பெற்று தழைத்து இந்த ஐந்தாண்டுகளில் பூத்துக்  குலுங்குகிறது .  

கவிதைகள், கதைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரைகள், காணொளி நேர்க்காணல்கள், தொடர்கள், ஆன்மிக கட்டுரைகள் என்று ஒரு "முழு பேக்கேஜ்"  போல விகடகவி துவக்கம் முதல் வடிவைக்கப்படுகிறது. 

இப்போதும் ஆசிரியர் குழு "ஜூம் மீட்டிங்" போட்டே ஒவ்வொரு வாரமும் எதை எழுத வேண்டும் என்ற தீர்மானித்து ,அதன்படியே ஒவ்வொருவரும்  எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  மூத்த பத்திரிக்கையாளர்கள் ஜாசன் ,மேப்ஸ், சுபா வெங்கட் , ராஜேஷ் கண்ணா, ராம் ஆகியோரின் திட்டமிடலும் ,வழி நடத்தலும் தொடர்கிறது. இதழ் ஆசிரியர் மதன் ,ராவ் அவர்களின் உற்சாக  வழிகாட்டுதலில் அட்டைப்படம் முதற்கொண்டு கவனம் எடுத்து தயாரிக்கப்படுகிறது.

கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கையில், வழியெங்கும் சிதறிக் கிடக்கும் வைரங்களும்  , அவற்றை பட்டைத் தீட்டி அளித்த  கரங்களும் நம்  கண் முன் தெரிகின்றன.  நவம்பர் 2017 முதல் 2018 ஆண்டு வரையான முதலாண்டு வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

விகடகவியின்  செறிவு நிறைந்த உள்ளடக்கத்துக்கு மேலும் மெருகூட்டிய தொடர்கள் ஏராளம். இதழ் தொடங்கிய முதலாண்டுக்குள் பல நல்ல தொடர்கள், மினி தொடர்களை  பிரபல எழுத்தாளர்கள் எழுதினார்கள்.  விகடகவி தொடங்கப்பட்டதன் நோக்கத்தைப் பற்றி மதன் அவர்கள் இலங்கை ஆதவன் வானொலிக்கு பேட்டி  தந்தார் . 

  'போலாம் ரைட்',என்ற தொடரை எழுதிய ஜி.கௌதம் கலீல் ஜிப்ரானின் கவிதைகளை மொழிபெயர்த்து தந்த தங்கேஷ், திரைத்துறை பிரபலங்களின் நினைவுகளை   பகிரும்  "திரும்பி பார்க்கிறேன்' என்னும் தொடரை தந்த க .பரத், "இனிக்கும் இஸ்லாம்" எழுதிய வி.எஸ்.முகமது அமீன், "நோயை எதிர்க்கும் யோகாசனம்"  என்று யோகம் கற்பித்த ஹாங்காங்  பூவேந்திரன், 'சங்கீத ஆலாபனை' எழுதிய மாயவரத்தான்  சந்திரசேகர் என்று பலர் இந்த ஆண்டில்  புகழ் மிக்க தொடர்களை எழுதினார்கள். ஹரிகி ,'வாருங்கள், இலக்கியப் பக்கம் 'என்ற தொடரையும்  மரியா சிவானந்தம் சிலப்பதிகாரத் தொடரையும் எழுதினார்கள் .சுதாங்கன் "நாடும் நடப்பும்" என்ற சம கால தொடரை எழுதி வந்தார் . 

தொலைக்காட்சி செய்திகளை பகிரும் 'சேனல் டாக் ' மெகா மாலினி கை வண்ணத்தில் வந்தது ."கோலிவுட் சிப்ஸ்" ,சினிமா செய்திகளை தாங்கி வந்தது . குறும்பும் , கருத்தும் மிக்க வாட்ஸ அப் துணுக்குகளை, "வாவ் வாட்ஸஅப்" வழங்கியது .பேஸ்புக்கின் 'முத்திரை முகங்கள்  'அறிமுகம் செய்து வைக்கப்பட்டது . 

"ரேணு ,ரம்யா, ராகினி" என்ற உரையாடல் ஒரு மினி டாக் ஷோ நாட்டு  நடப்புகளை பேசியது. .Anything and everything under the Sun என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தது .ஷெர்லக் என்ற இன்னுமொரு உரையாடல் அரசியல் நிகழ்வுகளை அள்ளி தந்தது .ஆதியோகி சிவா எழுதிய 'சுளீர் சொர்ணாக்கா 'பிரபலங்களின் கருத்துக்களுக்கு எதிர் கருத்தும்,கமெண்டும் கொடுத்தது . இவரின் மற்றுமொரு சிறந்த தொடர் மகாராஜா -மந்திரி  ஆகும். 

லாவண்யா ராம்கோபாலனின் 'பகவத் கீதை ' ஆடியோ தொடரும் இந்த காலத்தில் தான் வெளி வந்தது .   .பொன்ஸி , முத்ரா, கண்மணி மைந்தன் ஸ்ரீகாந்த் ,பொன்வண்ணன், நந்தன் ஸ்ரீதரன். கீதா கைலாசம் என்று பலரும் தம் படைப்புகளை விகடகவியில் விருந்தாக்கினார்கள். அனவைரும் ஒருங்கிணைந்து   இதழை அங்குலம் அங்குலமாக அலங்கரித்து தந்தனர். 

தேர்தல், திருவிழா, சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகள்  ,உலகச் செய்திகள், கலை, இலக்கியம், ஆன்மிகம்  என்று எல்லா துறை செய்திகளையும்  உடனுக்குடன் அதே வாரத்தில் ஆராய்ந்து கட்டுரைகள் ,சிறப்பிதழ்கள் என்று விகடகவி வழங்கி வருகிறது. ஒரு முழுமையான வார இதழுக்கான இலக்கணங்களை சற்றும் மீறாமல் தன் பயணத்தை தொடர்ந்து நடத்துகிறது . நாளிதழில் ஒரு சின்ன பத்தியில் வரும் செய்தியை , அதன் முக்கியத்துவத்தை அறிந்து அந்தச் செய்தியின் பின் புலத்தை ஆராய்ந்து நேர்க்காணலாக, காணொளியாக படைத்தனர் விகடகவியின் நிருபர்கள் .

எட்டுவழிச்சாலை, ஸ்டெர்லைட் ஒப்பந்தம், கமலின் மய்யம், ரஜனியின் அரசியல்  பிரவேசம் , மீ டூ ,குட்கா என அந்த ஆண்டின் "ஹாட் டாபிக்"குகளை  விகடகவி பிரித்து அலசியது.ஒரு சமூக பொறுப்பும் அக்கறையும் கொண்ட மின்னிதழாகவே விகடகவி அன்று முதல் இன்று வரை மிளிர்கிறது . 

எழுத்துலகில் தடம் படித்த பிரபலங்களுடன், புதிய எழுத்தாளர்களும் இந்த பயணத்தில், இந்த கால கட்டத்தில் இணைந்து, இணையாக பயணித்ததும் வரலாறு. அவர்கள் தம் எழுத்துத் திறமையை செம்மைப் படுத்திக்  கொண்டே , விகடகவியையும் மெருகேற்றி  வளர்த்தனர். இளம் கவிஞர்கள், கதாசிரியர்கள்  பலருக்கு முதல் மேடை அமைத்து தந்தது  விகடகவி. 

வாசகர்களின் ரசனைக்கேற்ப, புதிய பகுதிகளைச் சேர்த்து வடிவமைப்பதில் விகடகவி முன்னணியில் இருக்கிறது.  இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க தினமும் புதிய வாசகர்கள் சேர்ந்து விகடகவியைப்   படிப்பதை அறிய முடிக்கிறது. இளைஞர்கள், பெண்கள்மற்றும் சமுதாயத்தின் பல அடுக்குகளில் இருப்பவர்களுக்கும் ஏற்ற விதத்தில் நிறைய செய்திகளை வழங்குவதில் முனைப்புடன் செயல்படுகிறது விகடகவி டீம் .

புதிய வாசகர்கள் , மேலே குறிப்பிட்ட பழைய தொடர்கள், கட்டுரைகளைப் படிக்க விரும்பினால் , விகடகவி 'ஆப்'பை  தரவிறக்கம் செய்துக் கொண்டு படித்து இன்புறலாம் .

இன்னும் ஒரு கவிதை ,6-12.2017 விகடகவி இதழில் வெளி வந்தது இக்கவிதை. 

"வந்தவன் கேட்டான் 

என்னைத் தெரியுமா 

தெரியவில்லையே என்றேன் 

உன்னைத் தெரியுமா 

என்று கேட்டான் 

தெரியவில்லையே என்றேன் 

பின் என்னதான் தெரியும் 

என்றான் 

உன்னையும் ,என்னையும் தவிர 

வேறு எல்லாமும் தெரியும் என்றேன் "


(ரவி சுப்பிரமணியம் பகிர்ந்த நகுலனின் கவிதை )

-பயணம் தொடரும் 



 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...