Friday, April 12, 2024

 நம் வாழ்வு, நம் கையில் 

மரியா சிவானந்தம் .

சில  நேரங்களில்  கட்டுரை டைப் செய்யத் தொடங்கும் போதே கைகள் நடுங்கும் .உள்ளுக்குள் ஒரு உதறல் ஓடும். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று இதயம் தவிக்கும். வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பம் ஒரு கருமேகம் போல நிழலிடும் . 

இந்த வாரம் புதன் கிழமை சென்னையில் நிகழ்ந்த விபத்து ஒன்று அத்தகைய உணர்வினை இப்போது தருகிறது. சென்னை குரோம்பேட்டை  ரயில் நிலையத்தில் , செல்போனில் பேசிக் கொண்டே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற  போது  வேகமாக வந்த 'தின்சுகியா' எக்ஸ்பிரஸில் அடிபட்டு ,அங்கேயே இறந்தனர்.

22 வயது பிரணவ், அவர் நண்பர் சதிஷ்,,40 வயது  இருவரும் ஐடி துறையில் பணி புரிபவர்கள். விபத்து நடந்த போது , இருவரும் காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு பேசிக் கொண்டே வந்திருக்கிறார்கள் ரயில்பாதையைக் கடக்க ரயில் நிலையத்தில் இருக்கும் மேம்பாலத்தில் ஏறி செல்லாமல், தண்டவாளத்தைக் கடந்து இருக்கிறார்கள். ஒரு கணத்தில் அநியாயமாக இரண்டு இளைஞர்களின் உயிர் பறந்து விட்டது . 

இதில் பிரணவ் , சமீப காலத்தில் ஊடகத்தில் பேசப்பட்ட ஒரு பெயர் .பெப்ரவரி முழுவதும்  'நீயா நானா ' நிகழ்ச்சி உணவுப் ஸ்பெஷலை நடத்தியது. அப்போது 'தோசை  ஸ்பெஷலில் பிரணீதா என்னும் பெண் ,'என் தம்பி பிரணவ்வுக்கு அம்மா தோசையை சுட்டுப் போட்டுக் கொண்டே இருப்பார்கள் 'என்று பேசிய போது அவள் அம்மா ,"ஆமா ,என் மகன் தோசை நன்றாக சாப்பிடுவான் . நான் போதுமா என்று கேட்காமல் தோசை சுட்டு போட்டு கொண்டே இருப்பான் .25 தோசை கூட சாப்பிடுவான் .இதில் என்ன இருக்கிறது " என்றார் பெருமை பொங்க. 

அதன்பின் யூடுயுபர்கள்  பிரணவ் மற்றும் மற்றும் அவர் அம்மாவின் நேர்க்காணலை எடுத்து இணையத்தில் வெளியிட  அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பல வித கருத்துக்கள் வெளி வந்தன. இப்படி ஒரு பரிதாப மரணம் அவருக்கு வந்ததைக் கேள்விப்பட்டு மக்கள் பெரிதும் வருந்தினர். எல்லாம்  'கண் திருஷ்டி ' அதனால் தான் இப்படி ஆனது என்று சொல்கிறார்கள். அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ , ஒரு இளம் பிள்ளை மிகச் சிறிய வயதில் மரித்த கொடுமை , எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத சோகம். 

பிரணவ் போன்ற இளைஞர்கள் மட்டுமல்ல , பெண்கள் வயது முதிர்ந்தவர்கள் ஹெட் போனில் பேசிக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் சாலையில் நடப்பதையும் ,வாகனம் ஒட்டிச் செல்வதையும் அன்றாடம் காண்கிறோம். போக்குவரத்து விதிகளை மீறி எதிர்பாராத விபத்தில் உயிர் இழப்பதையும் கேள்விப்படுகையில் நம் இதயம்  அந்த முகம் தெரியாதவருக்காக வேதனை அடைகிறோம் .

 மேலும், ரயில் நிலையங்களில் தண்டவாளத்தைக் கடக்க, அடுத்த நடைமேடைக்கு செல்லவும் மேம்பாலங்கள் உள்ளன. கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அதில் ஏறிச் சென்றால் , பாதுகாப்பாக இருக்கலாம்.  பெரிய ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் அல்லது லிப்ட் வசதியும் உள்ளது . அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள தயங்க வேண்டாம்.  

மது அருந்தி வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குவதைப் போலவே , செல்போனில் பேசிக் கொண்டு செல்பவர்கள் விபத்தில் சிக்குவதும் வழக்கமாகி விட்டது. செல்போனில் பேசிக் கொண்டுநடப்பது அல்லது வாகனம் ஓட்டுவது  போக்குவரத்து விதிகளுக்கு முரண் ஆனது.  ஆனால் இதை நடைமுறைப் படுத்துவது காவல்துறைக்கு சுலபமான காரியமாக இல்லை.

இவ்வித விபத்துக்கள் அவர்களைச் சார்ந்தோருக்கும் ,பெற்றவர்களுக்கும் பெரும் இழப்பைத் தருகிறது .தன் மகனைப் பற்றி பெருமிதமாக பேசிய அந்த நீயா நானா தாயின் முகமும் ,பிரணவ்வின் முகமும் நம் கண்முன் இருக்கிறது.  அந்த தாய்  இந்த சோகத்தை தன் வாழ்நாளில் மறக்க  முடியாது .இதில் இருந்து அவர்  மீண்டு வர வேண்டும் என்பதே நம் பிராத்தனையாக இருக்கிறது .

மனித உயிர் விலை மதிப்பற்றது. ஒருவர் தன் ஆயுளை   எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது. கவனக் குறைவால் அநியாயமாக உயிர் இழப்பதைத் தவிர்க்க வேண்டும் . இந்த அவசர யுகத்தில்  பொறுமை , நிதானம் இவை எல்லா வயதினருக்கும் உரித்தான பண்புகளாக இருக்க வேண்டும்.  "உன் வாழ்வு உன் கையில்" என்ற வாசகம் அவ்வளவு பொருள் பொதிந்தாக இருக்கிறது . கவனமாக இருந்து இழப்பினைத் தவிர்ப்போம் . 


 

Tuesday, April 2, 2024

தன்னம்பிக்கைக்கு ஒரு வெற்றிக்குமரன் 

மரியா சிவானந்தம் 

"It is better to light a candle than curse the darkness"  (Chinese proverb)

இருளைப் பழிப்பதை விட ஒரு தீபத்தை ஏற்றுவது சிறந்தது என்னும் இந்த  பொன்மொழியை நாம் பல முறை கேட்டிருப்போம். 

நம்மிடம் உள்ள குறைபாடுகளை, நமது வாழ்க்கைச் சூழலில் உள்ள குறைகளை ஒரு பூதக்கண்ணாடி கொண்டு பன்மடங்கு பெருக்கிப் பார்த்து புலம்புவது மனித இயல்பு. ஆனால் தன் குறைகளைப் பொருட்படுத்தாது , அந்த தடைகளையே படிகளாக்கி  தன்னை மேம்படுத்திக் கொள்வது மட்டுமன்றி , சமூகத்தையும் உயர்த்தும் வல்லமை மிக்கவர் சிலரே  .

அத்தகைய மகத்தான மனிதருள்  ஒருவர் ஆசிரியர் ஜெயக்குமார்.  பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி  ஆன இவரின் சாதனைகள் நம்மை பிரமிக்க வைத்து, அவரை வணங்க வைக்கிறது. 

வேலூர் சேர்க்காட்டை சேர்ந்த பா .ஜெயக்குமார், பா.வெற்றிகுமரன் என்ற பெயர் மாற்றம் செய்து கொண்டவர்.  புதுமைகள் புகுத்தும்  ஆசிரியராக, எழுத்தாளராக, பேச்சாளராக, யூட்யூப்  நிர்வாகியாக பன்முகத் திறன் கொண்டு இயங்கி வருகிறார். ஜெயக்குமார், வெற்றிக்குமரனாக உருமாற்றம் அடைந்த   நெடுங்கதையின் சுருக்கம் இது . 

 பள்ளிப் படிப்பில் ஈடுபடும் போதே கண் நரம்பில் ஏற்பட்ட பிரச்சனையால் பார்வை இழந்தார்.ஆயினும் குறையாத ஆர்வத்துடன் படித்து , அவர் படித்த பொதுப் பள்ளியில்   பள்ளி இறுதி ஆண்டில் முதல் மாணவனாக தேர்வு பெற்றவர். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை (தமிழ்)   தங்கப்பதக்கத்துடன் முடித்தார் .

 இளங்கலை கல்வியியல் முடித்தவுடன் 2006 ஆம் ஆண்டு அரக்கோணம் வளர்புரம் அரசுப்பள்ளியில் தமிழாசிரியாக பணி நியமனம் பெற்றார் .தற்போது பள்ளி கொண்டா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிகிறார். 17 ஆண்டுகளாக ஆசிரியராக சிறந்த சேவை ஆற்றி வருகிறார். இடையில் அஞ்சல் வழியாக ,தமிழ்,பொருளாதாரம் இரண்டிலும் முதுகலை கல்வியை முடித்துள்ளார்.

 வெற்றிக்குமரனை  நம் விகடகவி வாசகர்களுக்கு  அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

இனி அவருடன் ..

சொல்லுங்கள் வெற்றிக் குமாரன், உங்கள் வகுப்புகளை எப்படி மாணவர்கள் ரசிக்கும் விதத்தில் மாற்றி  அமைத்துள்ளீர்கள் ?

நான் பாடம் எடுக்கச் செல்லும் போது ,அதற்கு ஏற்ற வகையில் வேடம் புனைந்து செல்வேன். பாரதியார், திருவள்ளுவர் , நேரு, பெரியார் என்று அந்த வகுப்புக்கு தகுந்த விதத்தில் செல்வதால் , மாணவர்கள் கூடுதல் ஆர்வத்துடன் கவனிப்பார்கள்.  நாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை அவர்கள்  சுலபமாக மனதில்  உள்வாங்கி கொள்கிறார்கள் .

எவ்வாறு உங்கள் ஆசிரியப்பணியை திறம்பட  செய்கிறீர்கள்? ஒரு பேச்சாளராக , எழுத்தாளராக இயங்குவது சிரமம் இல்லையா ?

என் மாணவர்கள் ,ஆசிரிய நண்பர்கள் எல்லோருமே உதவி செய்கிறார்கள். திருத்தங்கள் செய்ய அவர்கள் உதவி தேவைப்படுகிறது . என் மனைவி முதற்கொண்டு என்   அம்மா, தமிழாசிரியை ஆன என் அக்கா ,என் மகன் , என் மகள் வரை  எல்லோருமே எனக்கு உதவி செய்வார்கள் .எனக்கு படித்துக் காட்டுவது , கவியரங்கம் ,பட்டிமன்றம் என்று சொற்பொழிவுக்கு தயாரிக்க  உதவி செய்வது , போக்குவரத்துக்கு துணை வருவது என்று உதவி செய்வதால் என்னால் எல்லா துறைகளிலும் பிரகாசிக்க முடிகிறது. 

உங்கள் எழுத்துக்களைப் பற்றி சொல்லுங்கள் 

"அன்பு நதி, விடியல் வெளிச்சம் ,குரங்கும் குருவியும், வசந்தம் வரும் வாடாதே, பாடி விளையாடு பாப்பா"  ஆகிய  நூல்களை எழுதி இருக்கிறேன். இவை குழந்தைகளுக்கான பாடல்கள்.  இவற்றுள் "விடியல் வெளிச்சம்" நூலுக்கு தமிழக அரசின் நூலக ஆணை பெறப்பட்டது. இலக்கியச் சோலை ,இலக்கியம் பேசுகிறது நிலா, ஏழைதாசன், புகழ்ச்செல்வி போன்ற இதழ்களில் என் படைப்புகள் வெளிவந்துள்ளன. 

வெற்றிக்குமரன் எழுத்தாளர் மட்டுமல்ல , தலைச் சிறந்த பேச்சாளரும் ஆவர். மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஊட்டும் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். தவிர "அன்புநதி" யூடியூப் சேனல் மூலம் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார் .

இவரது தமிழ்த் தொண்டு பல விருதுகளையும் , சான்றிதழ்களையும் இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது .பல இலக்கிய அமைப்புகள் இவரைக் கௌரவித்து வருகின்றனர் . 'தமிழக தமிழறிஞர் பேரவை' 2019 ஆம் ஆண்டில்  குமரனுக்கு கம்பர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய நூல் எழுதி வெளியிட வேண்டும் என்பது இவர் இன்றைய கனவு .

தன்னம்பிக்கையும் ,விடா முயற்சி ,கடின உழைப்பை இளம் தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும் என்பது இவரது நெடுநாள் கனவு .அதை செயல்படுத்த இவரை விட தகுதி மிக்கவர் யாருமில்லை என்பது நிஜம்.

உயர்ந்த இலக்குகளுடன்,  விதியை புறந்தள்ளும் வல்லமை படைத்த வெற்றிக்குமரனுக்கு  விகடகவி சார்பில் நன்றியும், வாழ்த்தும் . 

இது குமரனுக்கெனவே  வள்ளுவர் எழுதி வைத்த குறள் :

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 

தாழாது உஞற்று பவர்  (குறள் 620)

சாதனைகள் தொடரட்டும் ! 

 . 






 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...