வெற்றித்திலகம் - ஸ்வாதி .மோகன்
மரியா சிவானந்தம்
கோடிக்கணக்கான ஆண்டுகளாக விரிந்து கிடக்கும் அண்டப் பெருவெளியின் அற்புதங்கள் மனிதனுக்கு அதிசயங்கள் கொட்டிக் கிடக்கும் சுரங்கமாகவே இருக்கிறது. வெற்றுக்கண்ணால் பார்த்தவர்கள், தொலைநோக்கியைக் கண்டு பிடித்த பின் வான்வெளியை மேலும் உற்றுநோக்க தொடங்கினார்கள் .அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர வளர விண்வெளித் துறை மென்மேலும் வளர்ந்தது . அமெரிக்கா ,பிரிட்டன் ,ரஷ்யா போன்ற நாடுகள் விண்வெளி பயண திட்டங்களை வகுத்து அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது .இந்தியாவும் வல்லரசுகளின் வரிசையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு ,சந்திரயான் போன்ற வெற்றிகரமான விண்வெளி கலங்களை அனுப்பி சாதனை செய்து வருகிறது
I don't think the human race will survive the next thousand years, unless we spread into space. There are too many accidents that can befall life on a single planet. But I'm an optimist.
We will reach out to the stars.
என்கிறார் ஸ்டிபன் ஹாக்கிங்ஸ் .அவரது கருத்துக்கேற்பஇந்த பூமியில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கம் , சூரிய குடும்பத்தின் வேறு கோள்களில் வாழக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறதா என்னும் ஆராய்ச்சியைத் தொடக்கி வைத்தது .அந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துக் கொண்டே இருக்கிறது .
இந்த ஆராய்ச்சியின் முதல் இலக்கு , சிவப்பு கிரகம் அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் . பூமியின் அளவில் பாதி அளவே இருக்கும் செவ்வாயில் ,பூமியைப் போலவே மேகங்கள், வானிலை அளவுகள், பனிக்கட்டி மூடிய சிகரங்கள் என உயிர் வாழ ஏதுவான நிலை இருப்பதாக நம்பப்பட்டு ,அதே அடிப்படையில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன .ரஷ்யா வைகிங், ஸ்புட்னிக் என்னும் விண் ஊர்திகளை செவ்வாய்க் கோளுக்கு அனுப்பியது .அமேரிக்கா மாரினர்களை அனுப்பியது . பல தோல்விகளுக்கு பின்1971 ஆம் ஆண்டு 1971 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாரினர்-9 செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து,வெற்றிகரமாக சுற்றி வருகிறது . 1973 ஆம் ஆண்டு ரஷ்யா தொடர்ந்து மார்ஸ்-1 , மார்ஸ் -2 என்று வரிசையாக அனுப்ப , மார்ஸ் -5, மார்ஸ் -6 இரண்டும் வெற்றி பெற்ற விண்வெளி திட்டங்களாக அமைந்தன
தொடர்ந்து இந்த ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன .ஜப்பானும் தன் பங்குக்கு ஒரு விண்வெளிக்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பி, தோல்வியைத் தழுவியது . 1996 ஆம் ஆண்டு, டிசம்பர் தேதி அமெரிக்காவின் பாத் பைண்டர் (Path Finder ) விண்கலம் செவ்வாயில் Ares Vallis என்னும் இடத்தில் தரை இறங்கியது , ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் .
சென்ற வாரத்தில் ,இன்னும் ஒரு அற்புதம் நிகழ்ந்தது .அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளின் பெரு முயற்சியால் பெர்சிவரன்ஸ் ரோவர் என்னும் கலத்தை , ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியுள்ளது. இந்த பெர்சிவரன்ஸ் ரோவர் இந்த மாதம் 18 ஆம் தேதி ஜி.எம்.டி நேரப்படி இரவு 20.55 செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் அது அனுப்பியுள்ளது .
இந்த நிகழ்வை தொலைக்காட்சியில் நாம் பார்த்துக் கொண்டு இருந்த போது , கட்டுப்பட்டு அறைக்குள் இருந்து ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் ஒரு இந்திய முகத்தைக் கண்டோம் . மாஸ்க் கொண்டு மூடிய முகத்தில் இரு கண்களும் சுழன்று ,கண்காணிக்க புருவங்களுக்கு மத்தியில் இருந்த சின்ன திலகம் நம் கருத்தைக் கவர்ந்தது .அவர் ஸ்வாதி மோகன் . என்னும் விண்வெளி பொறியாளர் ..நாசாவின் விண்வெளி நிர்வாக திட்டத்தின் வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டு செயல்பாட்டுத் தலைவர் (Guidance and Controls Operations Lead )ஆவார்..பார்த்துக் கொண்டு இருந்த அனைவரும் பெருமிதத்தில் மெய் சிலிர்த்துப் போனோம் .
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் பெங்களூரூவைச் சேர்ந்தவர் . ஒரு வயது
குழந்தையாக குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர் .இயல்பிலேயே நல்ல
படிப்பாளியான ஸ்வாதி குழந்தை நல மருத்துவராக படிக்க விரும்பினார் . .ஸ்டார் ட்ரெக் என்னும்
அறிவியல் தொடரைப் பார்த்தவருக்கு ,விண்வெளி ஆய்வுத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது .பின்னர்
கோர்னெல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ,இயந்திர மற்றும் விண்வெளி பொறியியல்
துறையில் ,பட்டம் பெற்றார் . மசாசூசெட்ஸ் தொழிற்நுட்பக்கழகத்தில் (MIT ) வானூர்தி அறிவியலில்
முனைவர் பட்டம் பெற்றார் .2013 முதல் இவர் நாசாவின் ஜெட் புராபல்சன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) திட்டப் பணிக்கான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகள் செயல்பாட்டுத் தலைவராகப் பணியாற்றுகிறார்..
. தரையூர்தியைச் (rover) சுமக்கும் விண்கலம் செவ்வாய்க் கோளிற்கான பயணத்தின்போதும், கோளின் மேற்பரப்பில் தரையிறங்கும் போதும் சரியான திசையில் நிலைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்வது அவர் பொறுப்பாக இருந்தது . பெர்சிவியரன்ஸ் தரை ஊர்தி (Perseverance Rover ) கட்டுப்பட்டு அறையில் இருந்து கண்காணித்துக் கொண்டு ரோவர் செவ்வாயின் தரையைத் தோட்ட போது போது" Touchdown is confirmed," என்று உலகுக்கு அறிவித்தார் .1969 ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த போது "That's one small step for a man, one giant leap for mankind."என்ற வரலாற்று சிறப்பு மிக்க வரி தந்த உணர்வை ஸ்வாதியின் "touchdown is confirmed " கொடுத்தது .
EDL Sequence எனப்படும் (entry, descent, and landing (EDL) sequence) ஏழு நிமிடங்களில் நடத்தப்பட ஸ்வாதி மோகன் மற்றும் அவ்ருடன் பணியாற்றும் விண்வெளி அறிவியல் அறிஞர்களின் ஏழாண்டு கால கடின உழைப்பு இருக்கிறது . .கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, நாசா செவ்வாய் கிரகத்தின் வேறொரு பள்ளத்தில்தரையிறக்கியது.இத்துடன் இணைந்து பெர்சிவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனைக்கு இந்தியாவின் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதியின் திறமையும் ,அறிவும் ,திட்டமிடலும் துணை நின்றது, கல்பனா சாவ்லாவை நாம் மறந்திருக்க மாட்டோம் . இந்திய மண்ணின் புகழை அயல்நாட்டில் நிலை நாட்டும் சீரிய பணியைச் செவ்வனே செய்தவர்கள் வரிசையில் ஸ்வாதியும் இடம் பெறுகிறார் .நமக்கு பெருமையாய் இருக்கிறது .
இந்தியவம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் சரித்திரம் படைத்துள்ளார் .அவரைப் பாராட்டி வாழ்த்துகையில், இனி வரும் காலத்தில் இந்தியர்கள் அவர் போல சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறோம் . அந்நாளும் வரவேண்டும் .
அன்று இந்தியா வெற்றித்திலகம் சூடும் .
(VIKATAKAVI 24/2/2021)










