குறை ஒன்றும் இல்லை, கண்ணா
மரியா சிவானந்தம்
முதலில் ஓர் உண்மைச் சம்பவம்
அது எங்கள் கல்லூரி ஆண்டு விழா .. சிறப்பு விருந்தினருக்காக வாசலில் காத்துக் கொண்டு இருக்கிறோம் . கார் வந்து நிற்கிறது .கல்லூரி முதல்வர் உட்பட, பலரும் காரை நோக்கி ஓடுகிறார்கள். சரசரக்கும் பட்டுப் புடைவையில் , மூக்குத்தி மின்ன ,அரசி போல் ஒருவர் இறங்கி நிற்கிறார் .'பூங்கொத்து தந்து வரவேற்று அரங்குக்கு அழைக்கிறார்கள் .அவர் , "பின்னால் கணவர் நிற்கிறார் 'என்று கை காட்டுகிறார் .அதன் பிறகே குழு அவரது கணவரை வரவேற்க திரும்புகிறது / இருவரும் சேர்ந்து ஒன்றாக கரவொலிக்கு நடுவில் அரங்குக்குள் நுழைகிறார்கள், . அவர் இந்தியாவின் இசை அரசி என்று கொண்டாடப்பட்ட M. S சுப்புலக்ஷ்மி , . பாரத் ரத்னா பட்டத்துக்கு சொந்தக்காரர் , ஐநாவில் பாடிய பெண் பாடகி
இந்த சம்பவம் என் ஆழ்மனதில் பதிந்த சம்பவம் . "ஒரு புகழ்பெற்ற பெண்மணி தான் செல்லும் இடங்களில் தன் கணவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பால் உணர்த்தியது" பற்றி பின் வரும் நாட்களில் கல்லூரியில் 'சிஸ்டர்ஸ் மகிழ்ச்சியுடன் புகழ்ந்துக் கொண்டே இருந்தனர்.. அன்று M.S பாடிய 'குறை ஒன்றும் இல்லை ,மறை மூர்த்தி கண்ணா ' இன்று கேட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய பொருளைக் கற்றுக் கொடுக்கிறது .
சுப்புலக்ஷ்மி அம்மாவின் வெற்றிக்கும் ,புகழுக்கும் பின்னால் சதாசிவம் அவர்களின் உழைப்பு இருந்தது .அவர் எம்.எஸ் அவர்களுக்கு ஊக்கம் , உற்சாகம், தந்து ,அவருக்கு நிழலாக இருந்து பாதுகாப்பு தந்தார் . அவரது இசை சாம்ராஜ்ஜியம் நாடு தாண்டி, கண்டங்கள் தாண்டி ,உலகம் முழுதும் பரவியதற்கு அவரது இசைத்திறமையுடன் அவரது கணவரின் உதவியும் ஒரு காரணம் .
சதாசிவம் .அவர்களைப் போலவே மனைவியின் திறன் வெளிப்பட உதவும்' துணை'வர்கள் பலர் . அரசியல் ,சினிமா , வணிகம் , சமூகம், எழுத்து, விளையாட்டு என்று பல துறைகளில் இங்கு ஒளிர் விடும் பெண் நட்சத்திரங்களுக்கு வானமாக விளங்கும் கணவன்மார்கள் உண்டு .
ஆந்திர ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் அடிப்படையில் தலை சிறந்த மருத்துவர் . அவருக்கு அரசியல் ஈடுபாடு எழுந்த போது ,அவரது கணவர் அவரை உற்சாகப்படுத்தி அவருக்கு உதவி செய்தார் .காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்த குமரி அனந்தனின் மகள் ,பிஜேபியில் சேர்ந்த போது மக்கள் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டனர். ஆயினும் தமிழிசை அரசியல் களத்தில் இறங்கி கலக்கினார் .அக்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவரது அதிரடி பேச்சு ,'மீம்' களை சமூக வலைத்தளங்களில் நிறைத்தது .அவரோ, .எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிலையாக நின்று ஓர் ஆளுமையாக ஜெயித்தார் .அதற்கு பின்னணியில் மருத்துவர் சௌந்தராஜன் அவர்களின் ஒத்துழைப்பும் ,பக்க பலமும் இருந்தது .
"செம்பருத்தி ,செம்பருத்தி பூவைப் போல பெண்ணொருத்தி"யை நாம் அறிவோம் . செம்பருத்தி படத்தில் இளம் நடிகை ரோஜா ,தென்னிந்திய திரைப்படங்களில் வெற்றிக் கொடி கட்டியவர் . இயக்குனர் ஆர்.கே செல்வமணியின் மனைவி ஆன பின்பும் , திரையில் சாதித்தவர் ,ஆந்திர அரசியலில் குதித்து எம்.எல் .ஏ ஆகி இப்போது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் .ஒரு திரைப்பட விழாவில் செல்வமணி கூறியது நினைவுக்கு வருகிறது ."குடும்ப வாழ்க்கை ஜெயிக்க வேண்டுமா ,'மனைவியிடம் தோற்றுப் போங்கள் .மனைவியை ஜெயிக்க வைத்து விடுங்கள் "என்கிறார் அவர். .வாக்குவாதங்களும், சச்சரவும் இல்லாத வாழ்க்கை இல்லை . ஆயினும் குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து ,மனைவியை பொது வாழ்க்கையில் ஜெயிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கைக்கு செல்வமணி , நல்லதோர் எடுத்துக்காட்டு .
நாட்டுப்புற பாடல்களை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய விஜயலட்சமி நவநீதகிருஷ்ணன் இந்த வரிசையில் இடம் பிடிக்கிறார் .நாட்டுப்புற பாடல்கள் மேல் அதீத ஆர்வம் கொண்ட பேராசிரியை விஜயலட்சமி, தன்னைப்போலவே இத்துறையில் ஆர்வம் கொண்டவரையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நவனீதகிருஷ்ணனும் இவர் போலவே தமிழ்த்துறை பேராசிரியரே, . இருவரும் இணைந்த பின் , விஜயலட்சுமி நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சியில் மேலும் உத்வேகத்துடன் ஈடுபட்டார் .இருவரும் இணைந்து மேடைகளில் ,தொலைக்காட்சியில் பாடல்களைப் பாடினார்கள் .10000 மேற்பட்ட இசைத்தொகுப்புகளை வெளியிட்டனர் . விஜயலட்சுமி பத்மஸ்ரீ விருது பெற்றார் .
'ஒரு சிங்கம் முயலாகிறது 'என்று நாவல் எழுதினாலும் ,பத்திரிக்கைத் துறையில் ஒரு பெண் சிங்கம் போலவே சாதித்த எழுத்தாளர் சிவசங்கரி. பெண்கள் அதிகம் இல்லாத எழுத்துத் துறைக்கு வந்து , ஈரம் மிக்க எழுத்துக்களால் வாசகர்களைக் கவர்ந்தவர் . குடும்ப உறவுகள் , மனித மதிப்பீடுகள் ,சமூகம் சார்ந்த எழுத்துக்கள் தோய்வில்லா நடை இவரை முன்னணி எழுத்தாளராக்கியது .ஆயினும் இவருக்கு பின்னணியில் இருந்தவர் இவர் கணவர் சந்திரசேகரன். பொறியாளரான இவர் தன் மனைவிக்கு கொடுத்த சுதந்திரமும் ,சூழலும் இவரை வெற்றிகரமான எழுத்தாளராக ,சமூக அக்கறை கொண்ட பெண்மணியாக முன்னிறுத்தின . எண்பது வயது நெருங்கும் இந்த நேரத்திலும் 'சூரிய வம்சம் 'என்னும் சுயவரலாற்றுத் தொடரை எழுதி தன் நீண்ட நாள் வாசகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் .
சுதா நாராயணமூர்த்தி ,இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி என்ற ஒரு முகவரியே போதும் .ஆனால் தனக்கொரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் இந்த மகத்தான பெண்மணி .பொறியியலில் தங்கப்பதக்கம் வென்ற இந்த வெற்றி மங்கை, டெல்கோவின் முதல் பெண் என்ஜினீயர்/ இன்போசிஸ் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றியவர் . அத்துடன் நிறைவு பெறாது, கர்நாடகாவில் அரசுப்பள்ளிகளில் கணினியை அறிமுகப்படுத்தி ஒரு புரட்சியை சுதா விதைத்தார் . ஊரக வளர்ச்சி , வசதி இல்லாத ஏழை மக்களுக்கு வசிப்பிடம் அமைத்துத் தருவது என்று பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார் . நல்ல எழுத்தாளர் , இவரது சமூகப் பணிக்கும், எழுத்துக்கும் எண்ணிறந்த விருதுகள் இவரை தேடி வந்தன .ஆலமரத்தின் நிழலில் இளைப்பாறி இருக்காமல் ,தானும் விழுதுகளை இறக்கி மரமாகி கனி கொடுக்கிறார் .இவர் பின்னே இருக்கிறார் கணவர் நாராயணமூர்த்தி . எளிமையின் வடிவான சுதா பல வருடங்களாக புது சேலைகள் வாங்குவது இல்லையாம் ( பெண்கள் நோட் பண்ணுங்கப்பா )
குடும்ப அமைப்பு குலையாமல், வீட்டின் தேவைகளைப் பூர்த்திச் செய்துக் கொண்டும் பெண்கள் பொது வாழ்க்கையில் சாதிப்பது பெரிய சவால் .அதற்கு உற்ற துணையாக கணவர் இருப்பது எல்லோருக்கும் அமையும் வரம் அல்ல . தன்னை முழுமையாய் மறைத்துக் கொண்டு ,மனைவியின் பாதையில் நிழலாக நிற்கும் கணவர்கள் பட்டியலில் சின்னக்குயில் சித்ராவின் கணவர் விஜயசங்கர் ஒருவர் . ஆறு மொழிகளில் இடை விடாது பாடும் இந்த தேசிய விருது பெற்ற பாடகியின் வெற்றிக்குப் பின் இருக்கும் அவர் கணவர் , ஒரே குழந்தையான நந்தனா இறந்த சோகத்தில் இருந்து மீளவும் உறுதுணையாக இருந்தவர் .
கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்ற சுதாவின் கணவர் ரகுநாதன், விளையாட்டு வீராங்கனை சாய்னா நெய்வாலின் காஷ்யப் , வணிகத்துறையில் சாதனை செய்யும் நீட்டா அம்பானியின் கணவர் முகேஷ் அம்பானி என நீளும் பட்டியல் பெண் சாதனையாளருக்கு 'துண' நிற்கும் தலைச்சிறந்த ஆண்களை இனம் காட்டுகிறது .தங்கள் அன்பாலும் ,வழிகாட்டுதல்களாலும் தம் இணையரின் திறமை மக்கள் அரங்கில் வெளிப்பட இவர்கள் தம் உழைப்பைத் தருகிறார்கள் .
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற கூற்று உண்மையாகும் அளவுக்கு , பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆண் பல நேரம் இருப்பதில்லை .நமது சமூக அமைப்பு இன்னும் பல தடைகளை பெண்ணுக்கு விதித்துள்ளது .அவற்றை உடைத்தெறிய சில அபூர்வ ஆண் மக்களே துணை செய்கிறார்கள்.
பிரபலமானவர்களின் கணவர்களை பற்றி பேசும் போது நம் போன்ற சாதாரண பெண்களின் கணவரைப் பற்றியும் சொல்ல வேண்டும் . மனைவியின் பணிக்கு உறுதுணையாக இருப்பவர்கள், குடும்பச் சுமையைப் பகிர்ந்துக் கொள்பவர்கள், சவால்களை இணைந்தே எதிர் கொள்பவர்கள் .வெளி உலகம் அறியாத விதத்தில் என்று இவர்கள் இன்றும் செயல்படுகிறார்கள்
உண்மையான காதலுக்கு இலக்கணத்தை இந்த 'துணை'வர்கள் காலமென்னும் ஏட்டில் எழுதிச் செல்கிறார்கள்,
இவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.
(vikatakavi _13/3/2021)







No comments:
Post a Comment