Saturday, June 5, 2021

 மகத்தான மனிதர் மயூர்  ஷெல்கே 

மரியா சிவானந்தம் 





இந்த வாரத்தில் ஒரு மனதை நெகிழ வைக்கும்  காணொலி  இணையத் தளங்களில் வைரலாகிக் கொண்டு  இருக்கிறது . இன்னும் உலகில் மரித்து விடாத மனித நேயத்தின் வெளிப்பாடாக அமைந்த இந்த காணொலி நம்மைப் பேச்சற்று,  செயலிழக்க வைக்கிறது. மும்பை ரயில்வேத்துறை ஊழியரான மயூர் ஷெல்கே .தன் உயிரையும் பொருட் படுத்தாது  இருப்புப் பாதையில் தவறி விழுந்து விட்ட ஒரு குழந்தையைக் காப்பாற்றிய  வீரச்செயல் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது , 


புல்லரிக்க வைக்கும் இந்த சம்பவம் ஏப்ரல் 17 ஆம் தேதி , சனிக்கிழமை மாலை 7 மணி அளவில்  நடந்தது. மும்பையின் புறநகர்ப்பகுதியான வாங்கனி ரயில் நிலையத்தில் அந்த பார்வை இழந்த தாய் தன் ஆறு வயது மகனைக் கையில் பிடித்துக் கொண்டு நடைமேடையில் நடந்துக் கொண்டிருக்கிறாள் . அப்பெண்ணுக்கு அந்த சிறுவனே கண்கள். . திடீர் என்று சிறுவன்  நிலைத் தடுமாறி தண்டவாளப்பகுதியில் விழுந்து விட்டான் .ரயில் வேகமாக வந்துக் கொண்டிருக்கிறது .பார்வையில்லாத அப்பெண்மணி கதறுகிறாள் .எங்கிருந்தோ வேகமாக ஓடி வந்த ரயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே தண்டாவாளத்தில் பாய்ந்து அச்சிறுவனைத் தூக்கி நடைமேடையில் போட்டு விட்டு தானும் மேலே ஏறி விடுகிறார் . ரயில் நடைமேடையைத் தாண்டிப் பறக்கிறது. ஒரு 3-4  நொடிப் பொழுதுகளில் இந்த சம்பவம் நடந்து முடிந்தது .

"தெய்வம் மனுஷ்ய ரூபணே" என்ற வாக்கை மயூர் நிரூபித்துள்ளார் ..மனிதன் இக்கட்டில் இருக்கும் போது கடவுள் மனித வடிவில் வந்து காப்பாற்றுவதை நம் அனுபவத்தில் பார்க்கிறோம். இந்த நிகழ்ச்சியும் நமக்கு அதே அனுபவத்தைத் தருகிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் , இறைவன் நமக்குள் உறைகிறார் என்ற நம்பிக்கை கொள்கிறோம் . அந்த கணத்தில் மயூரின் உடலில் கடவுள் புகுந்து ஓர் அற்புதத்தை நிகழ்த்துவதைப்போல இருக்கிறது அக்காட்சி .

இன்று மயூர் ஷெல்கே  என்னும் பெயர் அனைவரும் அன்புடன் உச்சரிக்கும் ஒரு பெயராக, மரியாதைக்குரிய ஒரு பெயராக  மாறி  விட்டது ,தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பாய்ந்துச் சென்று ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றும்  இந்த நிகழ்ச்சி ,திரைப்படங்களில் வரும் பல ஸ்டண்ட் காட்சிகளை மிஞ்சி விட்டது .ரயில் நிலையத்தில் வைத்துள்ள சிசிடிவி கேமரா இதைத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. பார்க்கும் நாம் பதறிப் போகிறோம்.. 

"அந்த குழந்தையை நோக்கி நான் ஓடும் போது ,நானும் ஆபத்தை நோக்கி ஓடுவதை உணர்ந்துதான் ஓடினேன் .ஆனால் எப்படியும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இருந்தது .(I ran towards the child but also thought that I might be in danger too... Still, I thought I should save him.) என்கிறார் மயூர் . அவரது நம்பிக்கை வீணாகவில்லை . குழந்தை கைப்பற்றப்பட்டது . ஒரு உயிரைக்காக்கும் பதட்டம் அந்த ஓட்டத்தில் தெரிகிறது . ஒரு மைக்ரோ செகன்ட் தாமதம் செய்திருந்தாலும் ,அவரும் குழந்தையும்என்னவாகி இருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்யவே மனம் நடுங்குகிறது . It was a golden moment ! அந்த தருணத்தை எழுத்தில் வடிக்க முடியாது .

மயூர் இந்த நிகழ்ச்சி நடக்கும் 12 நாட்களுக்கு முன்புதான் ஒரு மகனுக்குத் தந்தையானார் . எனவே அவர் மனதில் தந்தைமை மேலோங்கி இருந்திருக்க வேண்டும் . "ஓவ்வொரு குழந்தையும் அவரவர் பெற்றவருக்கு மிகவும் விலைமதிப்பற்றது. எனவே நான் அதைக் காப்பாற்றும் முயற்சியில் இருந்து பின் வாங்கவில்லை" என்கிறார் மயூர் . ஒரு தந்தைக்குரிய துடிப்புடன் செயல்பட்டு, 'யாரோ பெற்ற குழந்தையை'க் காப்பாற்றி இருக்கிறார். ஒரு பார்வையற்ற தாயின் குழந்தையைக் காத்து, அவர்கள் வீட்டில் ஒளி ஏற்றி இருக்கிறார் .

மயூர் மத்திய ரயில்வேயில் பாய்ண்ட்ஸ்மேன் ஆக இருக்கிறார் . இந்த எளிய ரயில்வே ஊழியரின் மனிதநேயம் மிக்க செயல் அவருக்குப் பாராட்டைக் குவிக்கிறது . ரயில்வே ஊழியர்களும்,அலுவலர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள் . ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தனிப்பட்ட விதத்தில் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்கிறார் .மயூரின் இந்த வீரம் மிக்க செயலுக்கு எந்த பரிசோ ,பணம் ஈடு செய்ய முடியாது .கடமை உணர்வும் பொறுப்பும் மிக்க இந்த செயலின் வழியாக மனித நேயத்தை முன்னிறுத்தி இருக்கிறார் 'என்று அவர் மயூரைப் பாராட்டி இருக்கிறார் .

எல்லா பாராட்டுகளையும்  மயூர் அமைதியுடன் ஏற்றுக் கொள்கிறார் .ரயில்வே துறை அவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுப்பணம் அளித்து கௌரவித்துள்ளது .  ஜாவா  நிறுவனம் அவருக்கு ஒரு இரு சக்கர வாகனத்தைப் பரிசாக அளித்துள்ளது. எல்லா செய்தித்தாள்களிலும் அவரைப் பற்றி செய்திகள் வைத்துக் கொண்டு இருக்கின்றன . முகநூல் ,ட்விட்டர்களில் மக்கள் அவரிக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் . இந்த நிஜ ஹீரோவுக்கு   வீரதீரச் செயலுக்கான அரசின் விருதுகள்  தேடி வரும் நாளும்  தொலைவில் இல்லை .

 ஒரு பொதுத்துறை ஊழியரின் தன்னலமற்ற சேவை   மெய்  சிலிர்க்க வைக்கிறது. அரசுத்துறை ,பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைவரையும் பெருமிதம் கொள்ள வைக்கிறது.  அரசின் பொதுத்துறை ஊழியரின் அர்ப்பணிப்பு மற்றுமோர் முறை நிரூபிக்கப் பட்டுள்ளது. இத்துறைகளை, இத்தகைய ஊழியர்களைக்  காப்பது அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறது. உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து அருள் செய்து வாழ்பவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்ச வேண்டிய தீவினைகள் ஏற்படுவதில்லை என்ற வள்ளுவரின் வாக்குக்கு மயூர் ஷெல்கே ஓர் உயிருள்ள எடுத்துக்காட்டு 

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை(குறள் 244 )


அந்த மகத்தான மனிதருக்கு நீண்ட ஆயுளும் ,நிறை செல்வங்களும் இறைவன் அருள வேண்டும் என்பதே தாயுள்ளங்களின் பிரார்த்தனை !.







No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...