Saturday, June 5, 2021

 சென்று வாருங்கள் விவேக் 

மரியா சிவானந்தம் 


இந்த காலை கண்ணீரை சுமந்து  விடிந்திருக்கிறது ..

நம்முடன் வாழ்ந்து , நம்மைச் சிரிக்க வைத்த, சிந்திக்க வைத்த  மக்கள் கலைஞன் விவேக்  மறைந்தார்  என்ற அதிர்ச்சி தரும் செய்தியை இன்று காலை கொண்டு  வந்துள்ளது .


 நம்ப முடியவில்லை .  

 இந்த   மண்ணை ,மக்களை ,சமுதாயத்தை நேசித்த ஒரு கலைஞர் விவேக்.  நகைச்சுவை வழியாக சமூக சீர்த்திருத்த கருத்துக்களைச் சொன்ன கலைவாணர் , எம்.ஆர்.ராதா வரிசையில் இன்னும் ஒரு நகைச்சுவை நடிகராக ,ரசிகர்களின் நெஞ்சில் அரியாசனம் போட்டு அமர்ந்தவர் .இவர் இன்று இல்லை என்ற எண்ணமே நம் கண்களில் நீரை வரவழைக்கிறது .


பாலச்சந்தரின் அறிமுகம் விவேக் .மனதில் உறுதி வேண்டும் , முதல் படம் . கதாநாயகி சுகாசினியின் தம்பிகளில் ஒருவராக நடித்து கவனம் பெற்றவர் .தொடர்ந்து அவர் நடித்த படங்களும் ,தாங்கிய வேடங்களும் நம் மனத்திரையில் ஒன்றன் பின் ஒன்றாக வந்துப் போகின்றன .அசால்ட் ஆறுமுகம் , கருத்து கந்தசாமி ,எமோஷனல் ஏகாம்பரம் ,பன்ச் பாலா ,தமிழ் கிறுக்கன் இவர்களை எல்லாம் நம்மால்  மறக்க முடியுமா ? 

1987 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக்கின் கலைப் பயணம் இன்று வரை தொடரந்துக் கொண்டிருந்தது . தொண்ணுறுகளில்  முழு வீச்சில் இருந்த இவரது கலைப்பணி  முப்பது ஆண்டுகளாக தொய்வின்றி இருந்தது . கதாநாயகனின் நண்பனாக வெளுத்து வாங்கிய விவேக் , கதாநாயகனையே கருணை இன்றி கலாய்த்து விடுவார் . இவர் ஏறத்தாழ எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் நண்பராக  திரையில் வாழ்ந்தவர் . சிவாஜி படத்தில் ரஜினியுடன் செய்யும் அலம்பல்கள் எங்கு நினைத்தாலும் ,என்று நினைத்தாலும் சிரிப்பு வரும் .


இவரது புகழை நிலை நாட்டிய படங்களின் பட்டியல் நீளம் .புதுப்புது அர்த்தங்கள் , காதல் மன்னன். பூமகள் ஊர்வலம் , ஏழையின் சிரிப்பில், அலைபாயுதே , பிரியமானவளே , மின்னலே , உள்ளம் கொள்ளை போகுதே , லேசா ,லேசா , தூள் , பேரழகன் , ஆயுதம் செய்வோம் , உத்தம புத்திரன் , வேலைக்காரன் என்ற படங்களில் இவர் கதாநாயகனையே விஞ்சும்  பாத்திரங்களில்    நடித்திருக்கிறார் . 

எதை சொல்வது ?எதை விடுவது ?

மிடில் க்ளாஸ் மாதவன் " மணிமாறன் ,' ஜமீன்தாராக வெட்டி பந்தா விடுவதிலாகட்டும் , ஏழையின் சிரிப்பில்  'கண்டக்டர்  அரசு' வாக அதகளம் செய்வதிலாகட்டும், பெண்ணின் மனத்தைத் தொட்டு படத்தில்   பின்பக்கம் புண்பட்ட கந்தசாமியாக சிரிக்க வைத்ததலாகட்டும் , எதிலும் குறை வைக்காத  பாத்திரங்களால் நம்மில் நிறைந்தவர் விவேக் .என் பெயர் பாலா ,வெள்ளைப்பூக்களை என்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் ..இரண்டுமே சிறப்பான வேடங்கள் .

நல்ல நடிகன் ,அதை விட நல்ல மனிதன் , சமூக பொறுப்புள்ள கலைஞன் .இயற்கை ஆர்வலர் , நல்ல கவிஞர், இசையில் ஆர்வம் கொண்டவர் என்று பலமுகங்கள் கொண்டவர்  விவேக். இவரது கவிதைகளை. பாலச்சந்தர் 'வானமே எல்லை 'படத்தில் பயன்படுத்திக் கொண்டார்    பத்மஸ்ரீ முதற்கொண்டு பல விருதுகள் இவர் மகுடத்தில் சிறகுகளாக அமைந்தன . அப்துல் கலாமின் கனவை நனவாக்க  ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் தொண்டைத் துவக்கி வைத்து தமிழகமெங்கும் அதற்கென பயணித்தவர் .அப்பணி முடியும் முன்னர் மரித்தது பெரும் சோகம் . 


ஊடகங்களில் நேர்க்காணலில்  விவேக்கின் சிரித்த முகமும், கற்பனைத் திறன் கொண்ட பேச்சும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும். அவர் ஓர் பிறவிக் கலைஞர்  . சிரிக்க சிரிக்க பேசி இன்று நம்மை அழ வைத்து செல்கிறார் .

தமிழ்த்திரை உலகம் ஒரு நல்ல நடிகரை இழந்து விட்டது .நாம் நல்ல நண்பரை இழந்து விட்டோம் .இந்த மரணம் ஏற்படுத்தும் ரணத்தை எந்த களிம்பு கொண்டும் ஆற்ற முடியாது .

சென்று இளைப்பாறுங்கள்  விவேக் .,நீங்கள் விட்டுச் செல்லும் வெற்றிடம் நீண்ட காலத்துக்கு நிரப்பப்படாமலே இருக்கும் என்பதே நிதர்சனம் .

விகடகவி வாசகர்கள் சார்பாக   கண்ணீர் அஞ்சலிகள் 



No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...