Wednesday, May 10, 2023

உரை 29.4.2023


ஸ்ரீநிருத்லாலயாவின்  நிறுவனர் மற்றும் இயக்குனர்  Dr  .கிருஷ்ணகுமார் அவர்களே, இசைக் கலைஞர்களே,  நடனக் கலைஞர்களே, பெற்றோர்களே, கலாரசிகர்களே, குழந்தைகளே அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள் .

இந்த  மாபெரும் நாட்டிய நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு , உரை ஆற்றுவதில்  மகிழ்ச்சியும் ,பெருமிதமும் கொள்கிறேன்.

என்னை தலைமை உரை ஆற்ற அழைத்ததின் காரணம் எனக்கு இதுவரை புரியவில்லை. நடனத்தை ஒரு பிரமிப்புடன் ரசிப்பேனே தவிர ,அதில் எதுவும்   தெரியாது .சங்கீத ஞானமும் இல்லை.பாட்டும் நடனமும்  பார்க்கவும் ,ரசிக்கவும் தெரியுமே  அதன் நுணுக்கங்கள் தெரியாது .பெரிய பேச்சாளர் இல்லை .  பெரிய எழுத்தாளர் என்றும் சொல்ல   முடியாது .

  ஆனால் உங்கள் குரு  கிருஷ்ணகுமார் என் தம்பி. ஒரு மூத்த சகோதரியாக அவரை வாழ்த்தவும், இங்கு நடனமாடும் குழந்தைகளை  ஆசிர்வதிக்கவும் நான் இங்கு வந்திருக்கிறேன். 

திரு .கிருஷ்ணகுமார் சின்னமனூர் கிருஷ்ணகுமாராக பேஸ்புக்கில் அறிமுகம் . அவருக்கு முன்பே அவரது பெரிய அண்ணன் நந்தன் ஸ்ரீதரன் அவர்களைத் தெரியும்.திரைத்துறையில் உதவி இயக்குனர், வசனகர்த்தா, பல தொலைகாட்சி தொடர்களுக்கு  உரையாடல் எழுதுபவர் , தலை சிறந்த எழுத்தாளர், கவிஞர்  என்று பல அடையாளங்களைக்  கொண்டவர் . அவரது மனைவி மீனாள் சிறந்த பாடகி. அவரையும் சந்தித்திருக்கிறேன்.  இவரது இரண்டாவது  அண்ணன் பாலாஜி, கவிஞர், புகைப்படக் கலைஞர், தேனி சின்னமனூரில் பிறந்து வளர்ந்து கலைகளின் மேல் ஈடுபாடு கொண்டு வாழும் இந்த குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாகவே உணர்கிறேன். அதனால் தம்பியின் அழைப்புக்கு மறுப்பு சொல்லாமல் இங்கு வாழ்த்த வந்தேன்.

திரு .கிருஷ்ணகுமார் நாட்டியத்தை தன் உயிர் மூச்சாக கொண்டு அதற்கெனவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.     மிக சிறிய வயதிலேயே பரதத்தின் மேல் கொண்ட காதலால் , தன் வீட்டில் எழுந்த எதிர்ப்பையும் மீறி  நடனம் கற்றுக் கொண்டவர் . அவரது முதல் குரு சித்ரா ராமநாதன் .பின்னர் சென்னைக்கு வந்து ருக்மணி அருண்டேலின் கலாஷேத்ராவில் நடனப்பயிற்சி பெற்று சிறந்த மாணவனாக வெளிவந்தார் . பின்னர்   திரு கிருஷ்ணகுமார் பத்மபூஷன் சி.வி .சந்திரசேகரின் பிரதம சீடர் . இருபது ஆண்டுகளுக்கு மேல் அவரது திருக்கரங்களால்  செதுக்கப்பட்டு, உயிருள்ள சிற்பமாக இன்று விளங்குகிறார் . 

  இன்று\ ஆயிரம் மாணாக்கருக்கு  மேல் குருவாக விளங்குகிறார்.Dr கிருஷ்ணகுமார் . பல நாட்டிய நாடங்கங்களில் அவரது பங்களிப்பு உள்ளது .பாஞ்சாலி சபதம் , வள்ளி திருமணம், பாதுகா பட்டாபிஷேகம் போன்ற நாட்டிய நாடகங்ளை வடிவமைத்து நடத்தியவர் .அமெரிக்காவின் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் இவரது நடன திறமைக்கு  ஒரு சான்று . யுவகலா விபஞ்சி விருது ,நிருத்ய கலாரத்தினா விருது, நர்த்தக நிபுண விருது என பல்வேறு விருதுகள் இவர் தோளில்  மாலைகளாக  விழுந்துள்ளன .என்னை  விட அவரது அர்ப்பணிப்பும், நடனக்கலையின் மேல் அவர் வைத்துள்ள காதலையும் பற்றி  அவரது  மாணவர்களே சான்று  .

பாவம் , ராகம் ,தாளம்  இந்த மூன்று சொற்களின் முதலெழுத்தே பரதம் என்றானது எனலாம் .  பரதம் என்ற சொல் பின்னாளில் வந்தது . பண்டைய காலத்திலும் ,சங்ககாலத்திலும் நடனத்தைக் கூத்து என்றே அழைத்தனர் . கூத்தாடும் ஆண் கூத்தன் என்றும் பெண்ணை விறலி என்றும் அழைத்தனர் . அரசனுக்கு முன் ஆடும் நடனம் வேத்தியல் , பொதுவியல்  பொது மக்கள்  முன் ஆடும் ஆட்டம் .வேத்தியல் அகத்திணைக்கு உரியது என்றால் , பொதுவியல் புறத்திணைக்கு உரியது. 

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அதுவிளிந் தற்று.(குறள் 332) 

கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கை விட்டுச் செல்வதை போல, ஒருவர் சேர்த்த செல்வமும் அவரை விட்டு நீங்கி விடும் . எனவே இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருக்குறளில் நடனம் ,நடன அரங்கு இவற்றைப் பற்றிய கருத்துக்களைக் காண்கிறோம் .

நாலடியார் நாம் அறிந்த அற இலக்கியம் . அதுவும் 'வாழ்க்கை நிலையாமையை பற்றிக்கூறும்போது , 

“தோல் பையுள் நின்று தொழில் அறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக்கால் ”என்கிறது .வேறொரு பாடலில் , வாள்  முனையில் நின்று ஆடும் பெண்களைப் பற்றி பாடுகிறது ,அப்பெண்களின் கண்கள் கவனம் சிதறாமல் இருப்பதைப் போலவே ஒருவன் இருந்தால் ,அவன் தவறு செய்வதில்லை,தடுமாறுவதில்லை   என்ற அர்த்தத்தில் 

வாள் ஆடு கூத்தியார் கண்போல தடுமாறும் தாளார்க்கு உண்டோ தவறு”    என்று  பாடுகிறது  நாலடியார்

 சிலப்பதிகாரம் இயல் ,இசை ,நாடகம் என்னும் முத்தமிழும் சதிராடும் காவியம்,இரண்டாம் நூற்றாண்டை சார்ந்தது  .சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் நடனம் ,கூத்து, இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன . 

   .சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை ஒரு நடன நிகழ்ச்சிக்கான அத்தனை சங்கதிகளையும் விவரமாக சொல்கிறது . நடன அரங்கின் அமைப்பு, அங்கு கட்டப்பட்ட திரைசீலைகள் முதற்கொண்டு  ,நடன ஆசிரியர் ,பாடல் ஆசிரியர் ,யாழ் இசைப்பவர் , குழல் ஓதுபவர் ,தண்ணும்மை என்னும் மத்தளம் கொட்டுபவரின் திறமைகளை அரங்கேற்ற காதை சொல்கிறது .

யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை -
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன் - தானும் -

 அத்துடன் தலைசிறந்த  நடன கலைஞருக்கு  வழங்கப்படும் விருதான தலைக்கோல் என்னும் அணிகலன் தயாரிக்கப்படும் விதத்தை சொல்கிறது . புறமுதுகு காட்டி ஓடிய எதிரி நாட்டு மன்னனின் வெண்கொற்றக் குடையின் கணுக்களில்  ,அணிமணிகள் பூட்டி செய்து வழங்குவதே தலைக்கோல். 

அதே காதையில் மாதவியின் 12 வது வயதில்  சோழமன்னனின் முன்னிலையில் அரங்கேற்றம் நடக்கிறது என்றும் அவள் நடனமுறை தவறாமல் நடனம் ஆடியது கண்டு மகிழ்ந்த அரசன் தலைக்கோல் வழங்கி ,1008  பொன் கழஞ்சு  மதிப்புள்ள பச்சை மாலையை பரிசாக வழங்கியதும்  இளங்கோ அடிகள் விளக்குகிறார்.

இந்திரவிழவூர் எடுத்த காதையில்  இந்திரவிழாவின் போது  மாதவி அல்லியம், கொடுகட்டி, குடைக் கூத்து, குடம், குடை, பாண்டரங்கம், மலடல், துடி, கடையம், மரக்கால், பாவை, பேடி ஆடல் என 11 வகையான கூத்துகளை ஆடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

சிலப்பதிகாரம் காட்டும் இன்னுமொரு  நடன நிகழ்ச்சி ஆய்ச்சியர் குரவை காதையில் வருகிறது . கண்ணகியின் கால்  சிலம்பை எடுத்துக் கொண்டு கோவலன் கடை வீதிக்கு சென்று விடுகிறான். கண்ணகி மாதரி வீட்டில் அடைக்கலம் ஆகிறாள் . அப்போது மாதரி   கோவிலுக்கு நெய் வழங்க செல்லும் போது ,கண்ட காட்சிகள் அவளை அச்சம் கொள்ள வைத்தது.   அவள் வீட்டில்  குடத்தில் இருந்த பால் உறையவில்லை, உறியில் வைத்த வெண்ணெய் உருகவில்லை. எருதின் கண்கள் நீரைச் சொரிந்தன. இதெல்லாம் அந்நாளில் தீமையை கொண்டு வரும் நிமித்தங்கள் /

இந்த தீய நிமித்தங்கள் கண்டு பயந்த மாதரி  தன்  தோழிகள் சூழ குரவைக்கூத்து ஆடினாள். கண்ணபிரானின்  அருளை வேண்டி ஆடும் குழு நடனமே குரவைக்கூத்து .

இது போன்ற பல நடனக்குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் இருக்கிறது .இவை நடனக்கலையின் பழமையை நமக்கு சொல்கிறது. 

காதலும் ,வீரமும் பண்டைய தமிழ் மக்களின் இரு கண்கள் என்றால் , கலைகள் அவர்களின் இதயமாக , உயிர் மூச்சாக விளங்கியது.  பாரம்பரியம் மிகுந்த இந்த பரதக்கலை நசிந்து விடாமல் ,அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றால் அது தம்பி கிருஷ்ணகுமார் போன்றோரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் காரணம்.

இவர் ஆடுவது நடனம் மட்டும் அல்ல .அது  கலைமகளை மனதில் இருத்தி செய்யும் தவம். நடனத்துக்கென்று இவர் செய்த தியாகங்கள் வெறும்  வார்த்தைகளில் பேசி முடியாதது . இவரது சாதனைகளை இவரது சீடர்களே முறியடிக்க வேண்டும் . இக்கலையை உயிர் போல்   நேசித்தால் மட்டுமே அது சாத்தியம். 

 

மாணவச் செல்வங்களே, நீங்கள் நடனத்தை  சிறப்பாக கற்று தேற  வேண்டும். எதை படித்தாலும் ,எந்த பணியில் இருந்தாலும் எப்போதும் நடனத்தை விட்டு விட கூடாது .இந்த கலை உங்களுக்கு இறைவன் தந்த வரம்.உங்களை தேர்ந்தெடுத்து இறைவன் அந்த வரத்தை வழங்கி உள்ளார்.  "ஆடல் கலையே தேவன் தந்தது, தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது "என்பது மறுக்க முடியாத உண்மை  

 அறுபது  வயதில் பாலசரஸ்வதி ஆடினார் என்பது வயதில் .பத்மா சுப்ரமணியம் ஆடுகிறார்,இன்று 86 வயதில்   வைஜயந்தி மாலா ஆடுகிறார் . கலைக்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் கலைஞர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் / எந்நாளும் உங்கள் சலங்கையை கழற்றி வைத்து ஓய்வு கொடுக்காதீர்கள் .உங்கள் கால்களை அது அலங்கரிக்கட்டும்.


சிங்காரக் கை குலுங்கி

வளையோடு விளையாட

சேலாடும் விழியோடு

ஜெகம் யாவும் உறவாட

மங்காத எழில் ஆட

மனமாட மொழியாட

தந்தோம் தந்தோம்

என்று ஜதியோடு மலராட

கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு

நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு

 

வாழ்நாள் முழுவதும் உங்கள் அதன்   ஒலி  ஒலிக்கட்டும் , உலகத்தின் எல்லைகள் குலுங்க   அந்த கொஞ்சும் சலங்கைகள் ஒலித்துக் கொண்டே இருக்க  வாழ்த்துக்கள் ,

உங்கள் நடுவில் இருந்து பாலசரஸ்வதிகள் , பத்மினிகள் ,  பத்மா சுப்ரமணியம்கள் ,வைஜயந்தி மாலாக்கள் மட்டும் அல்ல, உதய்சங்கர்களும்  ,கிருஷ்ணகுமார்களும் உருவாக வேண்டும் என்பதே என் ஆசையும் ,பிரார்த்தனைக்ளும் .God Bless You All ,Thank you 

 





No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...