Wednesday, May 10, 2023

கலங்க வைக்கும்  "அயோத்தி " 

திரை விமர்சனம் 

மரியா சிவானந்தம் 


வேலூரின் புகழ் பெற்ற சிஎம்சி மருத்துவமனைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இந்தியாவின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் இங்கு சிகிச்சைக்காக மக்கள் வருவார்கள். அறுபது சதவீதத்துக்கும் மேலாக வட இந்திய நோயாளிகள், குறிப்பாக வங்காளிகள்  நிரம்பி வழியும் மருத்துவமனை இது. சிஎம்சி மருத்துவமனை இருக்கும் பகுதிக்குச் செல்லும் போது ஒரு மினி இந்தியாவையே நாம்  காண முடியும் . 

இங்கு தரப்படும் சிகிச்சையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நலம் பெற்று சொந்த ஊருக்குத் திரும்பி செல்கிறார்கள். ஆனால் நோய் முற்றிய நிலையில், மருத்துவர்களால் காப்பற்ற முடியாத நோயாளிகள் இறந்து போவதும் உண்டு. மொழி தெரியாத ஊரில் அன்புக்குரியவர்களின் உடலை வைத்துக் கொண்டு அவர்கள் பரிதவிக்கும் நிலையை  பார்ப்பவர்கள், அவர்களுடன் சேர்ந்து கண்ணீர் சிந்துவார்கள். கங்கைக் கரையில் பிறந்து வளர்ந்தவர்கள்  இங்கே பாலாற்றங்கரையில்  அடக்கமாகும் சம்பவங்கள் வேலூரில் அனுதின நிகழ்ச்சி.

இது போன்ற சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட  தமிழ்த் திரைப்படம்  "அயோத்தி" .இப்படத்தை சமீபத்தில்  OTTயில் பார்த்தேன். மனதை நெகிழ வைக்கும்  இந்த திரைப்படத்தை ரவீந்திரன் தயாரிக்க, மந்திரமூர்த்தி இயக்கி உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமாருக்கு,  அவரது திரை வாழ்வில் முக்கியமான படம் இது. 

அயோத்தியின் கதை இதுதான். அயோத்தியில் வசிக்கும் பல்ராம் (யஷ்பால் சர்மா) தன் மனைவி, மகள், மகனுடன் புண்ணிய யாத்திரையாக ராமேஸ்வரம் வருகிறார். ராமேஸ்வரம் செல்லும் வழியில் அவர் மனைவி கார் விபத்தில் இறந்து விடுகிறார். பல்ராமின்  நம்பிக்கைப்படி மனைவியின் சடலத்தை  தன் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று, சடங்குகள் செய்து அடக்கம் செய்ய   வேண்டும்.  மொழி தெரியாத ஊரில்  அவர் குடும்பத்துக்கு உதவி செய்து, சடலத்துடன் அவர் குடும்பத்தையும் விமானத்தில் ஏற்றி விட ஆபத்பாந்தவனாக  நிற்கிறார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வரும் சசிகுமார். 

ஏறத்தாழ ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை திரையில் காட்டுகிறார்கள் . 'சென்னையில் ஒரு நாள்'  திரைப்படம் போலவே ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்வதை மனதை உருக்கும் விதத்தில்  படமாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகரும், திரையில் அப்பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். முரட்டுத்தனமும், வறட்டு பிடிவாதமும் கொண்ட, கண்டிப்புக்கார,  கல்நெஞ்ச  அப்பாவாக பல்ராம்  நடித்துள்ளார் . மனைவி உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யக் கூடாது, உடலை பதப்படுத்த (Embalming)  கூடாது என்று   பிடிவாதம் காட்டுவதும் அவரை முதலில் ஒரு  வில்லத்தனமான பாத்திரமாகவே சித்தரிக்கிறார்கள். இறுதியில் மகளின்  ஆவேசப் பேச்சில் மனம்     மாறி, உடைந்து அழும்போது  சிறந்த நடிப்பை  வெளிப்படுத்துகிறார்.

பாசம் கொண்ட மகளான ஷிவானி (ப்ரீத்தி  அஸ்ராணி) படத்தின் உயிரோட்டமான    பாத்திரம் . தாயின் மறைவு தந்த சோகத்தை, மொழி அறியாத ஊரில் அல்லாடும் பரிதவிப்பை சோகம் ததும்பும் முகபாவத்தாலும், கண்ணீர் தேங்கும் விழிகளாலும் உருக்கமாக  நடித்துள்ளார். சசிகுமாரிடம் கும்பிட்டு உதவி கேட்கும் போதும், கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்காத தந்தைக்கு பயந்து நடுங்கும் போதும், தன் தம்பியை அணைத்துக் கொண்டு   தாய்மையைக் காட்டும் போதும், தந்தையிடம் ஆவேசமாக பேசி அவருக்கு நிதர்சனத்தை உணர்த்தும் போதும்,   உயர்ந்த நடிப்பைத் தந்துள்ளார் ப்ரீத்தி  . தம்பியாக நடித்துள்ள குட்டிப் பையனின் நடிப்பு அருமை. 

ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் உள்ளம் கவர்கிறார் சசிகுமார். மனித நேயத்தின் மறு உருவமாகி,  வட இந்திய குடும்பத்துக்கு உதவிட, பரபரப்பாக செயல் படும் அவரது கதாபாத்திரத்தின் மீது நமக்கு பெரும் மதிப்பு ஏற்படுகிறது. அரசு மருத்துவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ,விமான அதிகாரிகள் என்று  ஒவ்வொருவரிடமும்  கெஞ்சி காரியத்தை சாதிக்கும் அந்த பாத்திரம் நம் மனதில் நிற்கிறது.. ஒவ்வொரு இடத்திலும் பணமே  பிரதானமாக காட்டும் இயக்குனர், அலுவலகங்களில் படிந்துள்ள அழுக்கை வெளிப்படுத்துகிறார். தாயின் சடலத்தை தர தலையைச் சொறிந்துக் கொண்டு நிற்கும் ஊழியருக்கு மகன் உண்டியலை உடைத்து   தரும் காட்சி ஒன்றே போதும் . 

அருமையான படம். இருந்தாலும்  நம் முன் இரு  கேள்விகளை வைக்கிறது.  முதல் கேள்வி 'அரசு இயந்திரம் இவர்கள் காட்டும் அளவுக்கு இதயம் இல்லாததா?" ஆயினும் அலுவலர்கள் விதிகளை மீறாமல் உதவிக்கரம் நீட்டுவதை படம் பதிவு செய்துள்ளது ஆறுதலைத் தருகிறது .இரண்டாவது கேள்வி- "இக்கட்டில் இருப்பவருக்கு ஓடி உதவி செய்யும் சசிகுமாரை இஸ்லாமியராக ஏன் இறுதியில் அறிமுகம் செய்கிறார்கள் ?" மனதில் ஈரம் கொண்ட யாரும் இவ்விதமாகவே செயல்படுவார்கள். மத நல்லிணக்கத்தை வளர்க்கும் எண்ணமாக இருக்குமோ ?

விருதுகளை குவிக்கப்  போகும் படமாக இப்படத்தைப் பார்க்கிறேன். நடிப்புக்கோ ,இயக்கத்துக்கோ, தேசிய  ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதாலேயோ,  ஏதேனும் ஒரு விருது இந்த திரைப்படத்துக்கு நிச்சயம் கிடைக்கும். நகைச்சுவை காட்சிகள் இல்லை, காதல் காட்சிகள் , குத்துப்பாட்டு இல்லை, சண்டைக்காட்சிகளும் இல்லை என்பதால் இப்படம் தனித்துவம் பெறுகிறது  . கண்களில் பாசம் காட்டி  நடிக்கும் தாய், ஆம்புலன்ஸ் உதவியாளரான புகழ், சவப்பெட்டி விற்கும் போஸ் வெங்கட் என எல்லோருமே தம் பங்கை கச்சிதமாக செய்துள்ளார்கள். 

நம் மனதில் உறங்கும் மனித நேயத்தை விழிக்க வைக்கும் "அயோத்தி"   பல இடங்களில் கண் கலங்க வைக்கிறது . இது போல்  உதவி செய்ய நம் வாழ்நாளில் ஒரு வாய்ப்பு கிடைத்தால்.அதை நாம் செய்து முடித்தால்    அதுவே நாம் பிறவி எடுத்ததன் பயன் என்றே நினைக்கிறேன். 

அயோத்தி நம்மை கலங்க வைக்கிறது , சிந்திக்க வைக்கிறது . துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் தர கற்றுத் தருகிறது . நம் மெல்லிய  உணர்வுகளை மயிலிறகு போல தடவிக் கொடுக்கிறது . 


 

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...