Thursday, July 6, 2023

 ஓய்வறியா சிங்கங்கள் -II 

மரியா சிவானந்தம்  `


இறையன்பு ஐஏஎஸ்  பணி ஓய்வு பெற்ற அன்றே , பணி ஓய்வு பெற்றவர் சைலேந்திர பாபு ஐபிஎஸ். தமிழகத்தின் உயர் காவல் அதிகாரியான DGP அந்தஸ்தில் இருந்து சாதனைகள் செய்தவர். . வடக்கில் கிரண்பேடி, தெற்கில் வால்டர் தேவாரம், திலகவதி,  அலெக்ஸாண்டர், விஜயகுமார் போன்ற காவல் துறை உயர் அதிகாரிகள் தங்கள் செய்லபாடுகளால் மக்களிடையே நற்பெயரும், புகழும் அடைந்தவர்கள். அவர்களின் வரிசையில் சமீப காலங்களில் இடம் பெற்றவர் சைலேந்திர பாபு ஐபிஎஸ்,

சைலேந்திர பாபு ஐபிஎஸ் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவர் . இறையன்பு அவர்களைப் போலவே இவர் முதல் முதலாக பட்டம் பெற்றது வேளாண்மைத் துறையில் தான்.அதன் பின்னரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ,பாரதிதாசன் பல்கலைக்கழகம் ,சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டங்கள் பெற்றார் "காணாமல்  போன குழந்தைகள் " என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில்  குற்றவியல் துறையிலும் ஆய்வு நடத்தி முனைவர்  பட்டம் பெற்றார் .

1987 ஆம்  ஆண்டு ஐபிஸ் பணியில் சேர்ந்தவர் . காவல் துறைக்கு உரித்தான உறுதியான உடலும் , முறுக்கு மீசையும் , கம்பீரமான தோற்றம் கொண்டவர். எடுத்த காரியத்தைச் சாதிக்கும் மனத் திண்மையும் கொண்டவர். சேலம் ,தருமபுரி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏஎஸ்பி ஆக பணி புரிந்தார் .செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர் மாவட்டங்களில்  எஸ்பி ஆகவும், பின்னர் சென்னை ,விழுப்புரம் ஆகிய இடங்களில் காவல் துறை  இணை ஆணையராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணி ஆற்றியவர்.

 தமிழத்தின் கடலோரக்காவல் துறை ,ரயில்வே போலீஸ், சிறைத்துறை   போன்ற முக்கிய துறைகளில் கூடுதல் தலமைப் இயக்குனராக பணி புரிந்துள்ளார் . அப்போது  கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு குழுவைக் கட்டமைத்தார் .கோயம்பத்தூர் நகர ஆணையராக இருந்த போது காவல் துறையால் பள்ளிகளைத் தத்தெடுத்து கணினி மயமாக்கியது அவரது பெரிய சாதனை. 2021 முதல் சென்ற மாதம் ஓய்வு பெரும் வரை தமிழத்தின் டிஜிபி ஆக பதவி வகித்தார்.

சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக நிற்பவர்.  வீரப்பனை பிடிக்கும் படையில்  ஐஜி யாக  பணியாற்றியவர். சென்னை வெள்ளத்தின் போது சிறப்பாக செயல் புரிந்தார் . தமிழக டிஜிபியாக  பொறுப்பேற்ற பின்பு காவல் துறையினருக்கு பல நலத்திட்டங்களை  ஆணையிட்டார் .அவற்றுள் முக்கியமானது , மற்ற துறையில் இருப்பவர்களைப் போல காவல் துறையினருக்கு வார விடுமுறை அளிப்பது ( Weekly off ) ஆகும் 

சிறந்த எழுத்தாளர்,நல்ல பேச்சாளர் "நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம், உடலினை உறுதி செய், உனக்குள் ஒரு தலைவன் ,' சாதிக்க ஆசைப்படு"  போன்ற சுய முன்னேற்ற நூல்கள் அவர் எழுதிய  பத்துக்கும் மேற்பட்ட நூற்களில் சிறப்பு மிக்கவை. 'உடலினை  உறுதி செய், இலக்கினை  இறுதி செய்'  என்ற பொருளில் காணொலி வெளியிடுகிறார்  சைலேந்திர பாபு.  பிரதமர் விருது, குடியரசு தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளும், பதக்கங்களும் இவரது தோள்களை அலங்கரிக்கின்றன. 

 விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் . இந்திய தேசிய தடகள அணியின் மேலாளர் ஆக இருந்தார் .சைக்கிள் ஓட்டம் ,மாரத்தான், நீச்சல் ,துப்பாக்கி சுடுதல் என்று பல விளையாட்டுகளில் பரிசுகளை அள்ளியவர் .  

அவரது பணிக்காலத்தில் அரும்  பெரும் பணியாற்றயவர். அவரது  ஓய்வு தினத்தன்று பிரிவு உபச்சாரம் முடிந்த பின்பு  அவரையும் அவர் மனைவியையும்  அமர வைத்து  அவரது காரில்   வடம் கட்டி தேர் போல காவல் துறையினர் இழுத்துச் சென்றது அவரது காக்கைச்சட்டைக்கு கிடைத்த பெரும் கௌரவம். இறையன்பு போலவே  சைலேந்திர பாபு அவர்களும்  மாணவர்களை சந்தித்து,வழி நடத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளார்.

இந்திய  நாட்டின் முன்னேற்றத்துக்கும், அமைதிக்கும் மக்களின் பாதுகாப்புக்கும்   ஆட்சித் துறையும் காவல் துறையும்  செய்யும் அளப்பரிய சேவை நாம் அறிந்ததே. இவர்களைப் போலவே , மிக நேர்மையாக கடினமாக உழைக்கும்  ஏராளமான ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள், ஊடகத்தின் வெளிச்ச ஒளி இவர்கள் மேல் படா விட்டாலும் சிறந்த சேவையைச் செய்துக் கொண்டே இருக்கிறார்கள்,  இந்த அதிகாரிகளின் வழி காட்டுதலில்,அரசின்  மேல் நிலை அதிகாரிகள் முதல்  கீழ் பலர்  கடைநிலை ஊழியர் வரை,  அர்ப்பணிப்புடன் அற்புதமாக  பணி செய்பவர்களின்  தியாகமும்,  சேவையும். எங்கும் பதிவு செய்யப்படவில்லை . அரசு இயந்திரத்தின் பல் சக்கரங்களில் தன்னைப் பொருத்திக் கொண்டு, உழைத்துத் தேய்ந்தவர்கள் ஏராளம் . 

அனைவரையும்   வழி நடத்தி , உத்வேகம் தந்து  தான் தலைமை வகிக்கும் துறைக்கும் , நாட்டு மக்களுக்கும் நன்மை செய்து பணி ஓய்வு பெரும் ஓய்வறியா சிங்கங்கள் இருவரையும்   பாராட்டி  கை குலுக்கி   வாழ்த்துக்களைத் தெரிவித்துக் தெரிவிக்கிறது விகடகவி .

மக்கள் சார்பாக  அன்புடன் வரவேற்கிறோம் , சமூகப்பணி செய்ய வாருங்கள் .இனி உங்கள் களம் பெரிது . 





No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...