Thursday, August 17, 2023

இளம் சாதனையாளன்  இஷான் 

மரியா சிவானந்தம் 


குழந்தை வளர்ப்பு  தனிப் பெரும்  கலை .

சின்னஞ்சிறு சிசுவாக  பிறக்கும் குழந்தை , தாய் மடி  தவழ்ந்து,  குப்புற  கவிழ்ந்து,    நகர்ந்து ,  மென்பாதம் நோக சிற்றடி எடுத்து வைக்கும்.  மழலையின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையும்   இயற்கை நிகழ்த்தும் அற்புதமான  அழகு . 

பிறந்த குழந்தையை  நான்கு வயது வரை வளர்ப்பது என்பது சவாலான சங்கதி. குளிக்க வைப்பது, உடை மாற்றுவது உணவு ஊட்டுவது, மருந்து தருவது நல்ல வழக்கங்களை ஏற்படுத்துவது, உறங்க வைப்பது எல்லாமே எந்த பள்ளியும் , கல்லூரியும் கற்றுத் தர முடியாத கலைகள். குழந்தை பள்ளியில் சேர்க்கும் முன்பே தானே உண்ணவும், தன் தேவைகளைச் சொல்லக்கூடிய நிலை வரும் வரை அக்குழந்தையை வளர்க்க  பெற்றோர்கள் மற்றும்  வீட்டில் உள்ள பெரியோர்கள் தவித்துப் போகிறார்கள் . 

இக்கால  குழந்தை  வளர்ப்பில் அனைவரும் பெரிதும் நம்பும்  துணை மொபைல் போன் தான் .ஒரு சில மாதங்களே ஆன குழந்தைக்கே மொபைல் உதவியால் உணவூட்டுவது, குளிப்பாட்டுவது ,உறங்க வைப்பது வழக்கமாகி விட்டது. குறிப்பாக குழந்தை அழுது, அடம் பிடிக்கும் போது சமாதானப்படுத்த மொபைலையே நாட வேண்டி உள்ளது..  பெரியவர்களை விட இளைய தலைமுறையும் ,இளைய தலைமுறையை விட சின்னஞ்சிறார்களே மொபைலுக்கு அதிகமாக அடிமைப்பட்டு இருப்பது நாம்  எல்லா வீடுகளிலும் பரவலாக காண முடிகிறது. 

இந்த  வழக்கத்துக்கு மாறாக தன் குழந்தையை   ,மொபைலின் பிடியில் சிக்க விடாமல் வித்தியாசமாக  சிந்தித்த  பெற்றோர் பிரசன்னா மற்றும் டாக்டர். லாவண்யா. வேலூரைச் சேர்ந்த இவர்கள் இருவரும் தம் மகன் இஷான் ரயனை மொபைல் இன்றி வளர்க்க நினைத்தனர்  அதன்படியே குழந்தையின்  ஒவ்வொரு  நிலையிலும்  கவனித்து வளர்த்தனர். இருவருக்கும் உறுதுணையாக இருந்தது லாவண்யாவின் அம்மா ,அப்பா ரீட்டா மற்றும் சீதாராமன் அவர்கள் கூட்டுகுடும்பங்கள் சிதைந்து வரும் நிலையில் தாத்தா பாட்டியின் கவனிப்பைப் பெற்ற  குழந்தைகள் . வரம் பெற்றவர்கள்.  பிறந்தது முதல் இவர்களது  சிறப்பான வளர்ப்பில் ,இஷான்  மொபைல் மற்றும்  தொலைக் காட்சிகளின் பாதிப்பு இன்றி வளர்ந்து வருகிறான் .

இப்போது ஒரு வயதும், ஒன்பது மாதமும் நிறைந்த  இஷான், மொபைல் , டேப் போன்ற உபகரணங்கள் எதுவும் இல்லாமலேயே வளர்க்கப்படுகிறான் .  குழந்தை உற்று கவனிக்கத் தொடங்கிய பருவத்திலியே அவனுடன் செலவழிக்கும் நேரத்தை திட்டமிட்டு, அவனுக்கு கற்பிக்க தொடங்கினர். சின்ன சின்ன சொற்கள், அசைவுகள், பாடல்கள், ரைம்ஸ்  என்று  கற்பித்தனர்  இஷானும் சமர்த்தாக கற்றுக் கொண்டான். பட அட்டைகள் (Flash Cards). கரும்பலகை   வழியாக விலங்குகள், பறவைகள், நிறங்கள், எழுத்துக்கள், எண்கள், உருவங்கள்  போன்றவற்றை கற்றுக் கொண்டான் 

இப்போது இஷானால்  205 பொருட்களை  இந்த சிறு வயதில் அவனால் அடையாளம் காட்ட முடியும் .26 விலங்குகள் ,15 பறவைகள் , 10  பூக்கள், 25 பழங்கள் , 20 காய்கறிகள் 11 வண்ணங்கள் , 7 உருவங்கள்  20 வாகனங்கள் 10 உடலின் பாகங்கள் , 26 ஆங்கில எழுத்துக்கள் , 20 வரை எண்கள், 15 புதிய சொற்கள்  இவற்றை அடையாளம் காட்ட முடியும்.  பெற்றோருடன் தாத்தா பாட்டியும் கற்றுக் கொடுத்ததால் , இஷான் வெகு விரைவாக ஆர்வத்துடன் கற்றுக் கொண்டான். இந்த வயதில் இது ஒரு சாதனை .

இளம் சாதனையாளர்களின் சாதனைகளைப் பதிவு செய்து, ஊக்குவிக்கும் தனியார் நிறுவனமான கலாம் வேர்ல்ட் ரெகார்ட்ஸ், இஷானின் இந்த சாதனையை அங்கீகரித்து அவனை பாராட்டியது . சிறுவர்களின் யோகா, நீச்சல் போன்ற சாதனைகளுடன் .கற்றல் சம்பந்தமான சாதனைகளையும் இந்த நிறுவனம் அங்கீகரித்து வருகிறது . சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற விழாவில் இஷானுக்கு  பாராட்டுப் பத்திரமும், தங்க மெடலும் அப்துல் கலாமின் உருவச் சிலையையும் நினைவுப் பரிசுகளாக வழங்கியது . .(Amazing Memory Power Grasping Genius Kid ) என்ற சிறப்பு பட்டத்தையும் வழங்கியது 

 

இரண்டாண்டு நிறையும் முன்பே பல பொருட்களை  அடையாளம் காட்டவும் , சொற்களுக்கு பதில் சொல்லவும் கற்றுக் கொண்டுள்ளான். குழந்தமை மாறாமல், அதே நேரத்தில் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறான் இந்த இளம் மேதை. இஷான்  பிறந்த சில மணி நேரத்தில் இருந்தே முழு நேரமும் அவனை  வளர்த்து வரும் 'அம்மம்மா' ரீட்டா அவர்களுக்கு   இந்த கற்பித்தலில் பெரும் பங்கு உண்டு. 

 ஒரு குழந்தையின் வளர்ச்சி  என்பது ஒரு தனி  மனிதனின் வளர்ச்சிமட்டுமல்ல அது சமூகத்தின் வளர்ச்சி. எனவே,  . பெற்றோர் அறிவுபூர்வமாக, உணர்வு பூர்வமாக குழந்தைகளை   நெருங்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.  சமூகத்துக்கும், வீட்டுக்கும்  பயனுள்ள ஒழுக்கமும், திறமையும் கொண்ட  சிறந்த குடிமக்களாக அவர்களை  வளர்க்கும் பொறுப்பு நமக்கு  உண்டு.  

மொபைல் என்னும்  நவீன  ஆக்டொபஸ் இளம் சிறுவர்களை வளைத்து, அவர்களின் ஆக்க பூர்வமான செயல்பாடுகளைக் குறைத்து, கண்ணுக்கும், உடலுக்கும், மனதுக்கும் கேடு விளைப்பதை நம் கண்ணால் காண்கிறோம். மொபைலும், தொலைக்காட்சியும் குழந்தை வளர்ப்பில் நன்மையை விட தீமைகளையே அதிகமாக செய்வதாக நான் கருதுகிறேன். இந்நிலையில்  மொபைல் இல்லாத குழந்தை வளர்ப்பு ஒரு முக்கியமான , பாராட்டுக்குரிய செய்தியாகும்.

குனிந்த தலை நிமிராமல், மொபைலில் கவிழ்ந்துக் கிடைக்கும் சிறுவர் சிறுமியரைப் பார்க்கும் போது மனதில் இனம் புரியா பயமும், கவலையும்  பிறக்கிறது. அவர்கள் பார்க்கும் காணொளிகள், படங்கள், பாடல்கள் அவர்களுக்கு நல்லதைக் கற்பிக்கா விட்டாலும், வன்முறையை, ஆபாசத்தை  வயதுக்கு ஒவ்வாத சங்கதிகளைக் காட்டுகிறதோ என்று அச்சமாக இருக்கிறது. குழந்தைகளை மொபைலின் பிடியில் இருந்து காக்க இங்கு  ஒரு இயக்கமே நடத்த வேண்டும்.

பயிற்சியும் ,முயற்சியும் இளம் மேதைகளை உருவாக்கும் . நாளை அவர்களே அறிஞர்களாக உருவாக இந்த சிறுவயது பயிற்சிகள் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை .அதிக அழுத்தத்துக்கு உட்படுத்தாமல், விளையாட்டு போலவே இஷானுக்கு கற்பித்த பெற்றோரும் , தாத்தா பாட்டியும் பாராட்டுக்கு உரியவர்கள். அவன் வளர்ச்சியில் உறவினர்கள், அனைவரும் பெருமை கொள்கிறார்கள், குறிப்பாக இந்த கட்டுரையை எழுதும் பேறு பெற்ற  அவன் தந்தை வழி பாட்டியாகிய நானும். 

நீடு வாழ்க இஷான் ரயன் !



 . 


Thursday, August 3, 2023

முத்துநகரில் வலம் வரும்  தங்க ரதம் 

மரியா சிவானந்தம் 


திருவிழாக்கள் மக்கள் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்ப்பவை.  ஆண்டு தோறும்  மதம் சார்ந்த பல்வேறு விழாக்களை நம் நாட்டில்  கொண்டாடுகிறோம்.

 செப்டம்பர் மாதத்தில் வேளாங்கண்ணி திருவிழாக்கு மக்கள் உலகமெங்கும் இருந்து திரண்டு வந்து ஒன்று கூடி தேவமாதாவுக்கு விழா எடுத்து சிறப்பிக்கின்றனர் .அதற்கு முன் தூத்துக்குடியில்  இம்மாதம் ஐந்தாம் தேதியில் பனிமய மாதா  ஆலயப் பெருவிழா கோலாகலமாக நடை பெறுகிறது.

 ஜுலை மாதம் 26 ஆம் தேதி தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டிபன் அந்தோனி அவர்களின் கரத்தால் கொடியேற்றத்துடன் தொடங்கியது.,  ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நிறைவு பெறும் இவ்விழாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அன்னையின் அருளைப் பெற கூடுகிறார்கள் .

தேவ அன்னைக்கு பல பெயர்கள் உண்டு . விண்ணரசி , மாதரசி , இடை விடா சகாய மாதா, ஆரோக்கிய மாதா, அடைக்கல மாதா , பாத்திமா மாதா ,மோட்சராக்கினி,  உபகார மாதா, லூர்து மாதா, மழை மலை மாதா, பூண்டி  மாதா, பெரிய நாயகி அம்மாள் என்று தமிழகத்திலேயே  பல ஊர் கோவில்களில்  பல்வேறு  பெயர்களில்  குடி இருக்கிறாள். தூத்துக்குடியில் 'பனிமய மாதா' (Our Lady Of Snows ) என்ற அழகிய  பெயர் தாங்கி அருள் பொழிந்து  வருகிறாள் . 

கி.பி 352 ஆம் ஆண்டு ,ஆகஸ்ட் ஐந்தாம் நாள் கோடைகாலத்தில் , ஜான் பத்ரிஸ் என்பவருக்கு தேவமாதா எஸ்கலின் மலையில் தனக்கு ஒரு கோவிலைக் கட்டும்படி சொல்லி, அம்மலையின் ஒரு முகட்டில் பனி பொழிய செய்தார். அந்த அற்புதத்தின் நினைவாக ரோமில்  பனிமய மாதா ஆலயம்  எழுந்தது.  

பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரே நேரத்தில் இருபதாயிரம் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் மதம் மாறினார்கள். அவர்களுக்கென்று இந்தியா வந்த இயேசு சபை குருக்கள் கட்டிய ஆலயத்துக்கு  முதலில் சூட்டிய பெயர் இரக்கத்தின் மாதா ஆலயம் ..  1582-ம் ஆண்டு பனிமய மாத  நேர்ந்தளிப்பு விழா நாளான ஆகஸ்டு 5ஆம் தேதி அன்று அர்ச்சிக்கப்பட்டது. அப்போது  இந்த ஆலயத்துக்கு பனிமயமாதா ஆலயம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ஆண்டு நடை பெறும் திருவிழா 441 வது ஆண்டுத் திருவிழா.  நானூறு ஆண்டுகள் நிறைவு செய்த போது , ஆலயம் பேராலய அந்தஸ்து பெற்று பசிலிக்காவாக உயர்ந்தது.

இப்போது இருக்கும் ஆலயம் 1713 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக கோவிலின் தங்கத்தேர் பவனி அமைந்துள்ளது.முக்கிய நிகழ்வுகளின் நினைவாக தங்கத்தேர் பவனி நடைப் பெறும். தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு நினைவைக் குறிக்க இந்த ஆண்டு  பதினாறாவது முறையாக  தங்கத்தேர் தேவ அன்னையின் திருவுருவத்தை தாங்கி முத்துநகரின் வீதிகளில் வலம் வர இருக்கிறது .

அன்னையின் தங்கத்தேர் ஜெபமாலையின் மணிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு 53 அடி உயரத்தில் அமைந்துள்ளது  தேரின் உச்சியில்  விடிவெள்ளியும், சுழலும் விண்மீன்களும், 12 தூண்களும்  ஏழு கதிர்களும் பொருத்தப்பட்டுள்ளன. நான்கு நற்செய்தியாளர், மறைச்சாட்சிகள், வானதூதர் மற்றும் புனிதர்களின் திரு உருவமும் அமைக்கப்பட்டுள்ளது . தேவமாதா அரசி என்பதைக் குறிக்க மகுடமும் உள்ளது. பரிசுத்த ஆவியின் புறா வடிவமும், மீனவர்களின் குல தெய்வமான அங்கயற்கண்ணியின் நான்கு கிளிகளும் தேரில் பொருத்தப்பட்டுள்ளது.  

மீன்பிடி தொழிலுக்கும், முத்துக் குளித்தலுக்கும் பெயர் பெற்ற தூத்துக்குடி மீனவர்களைக் காக்கும் பாதுகாவலியாக  பனிமய மாதா கடற்கரையில் தன்னாட்சி செலுத்துகிறாள்.  உலக அமைதி, உலக நன்மைக்காக மீனவர்கள், பனைதொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் .கட்டுமரத் தொழிலாளர்கள் நலனுக்காக  தினசரி திருப்பலியில் ஜெபிக்கப்படுகிறது . 

இக்காலங்களில்  முத்து நகர் விழாக்கோலம் பூணுகிறது' அயல்நாடுகளில்  இருந்து பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். தூத்துக்குடியில் தங்கும் இடங்களில் ஓராண்டுக்கு முன்பே அறைகள் நிறைந்து விட .மக்கள் திருநெல்வேலி, திருச்செந்தூர் போன்ற ஊர்களில்  மக்கள் தங்கும் இடங்களைத் தேடி வருகின்றனர். வீடுகளில் உறவினர்கள்,நண்பர்கள் தங்கிக் கொள்ள வந்துள்ளனர் .பெருகி வரும் கூட்டத்தால் தூத்துக்குடி நிரம்பி வழிகிறது .

நகர் முழுவதும் வண்ண விளக்குகள்  இரவைப் பகலாக்கி வருகிறது. கடைகள் ,பொருட்காட்சிகள் என்று எங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாதி ,மத பாகுபாடின்றி மக்கள் திருவிழா கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டு வருகிறார்கள்.  தங்கத்தேரில் பொன்னுலக தேவதையாய்  அன்னைமரி வரும் கண் கொள்ளா காட்சியைக் காணவும் ,அவளது  ஆசியைப் பெறவும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதியை எதிர் நோக்கி   தூத்துக்குடி நகரமும், தொலைக்காட்சியில் விழா நிகழ்வுகளைக்  காண உலகமும் காத்திருக்கிறது . தூத்துக்குடி பங்குத்தந்தை குமார் ராஜா விழா ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார் 

முத்துநகரில் வலம் வரும் தங்கத்தேர் உலகுக்கு நன்மைகளைக் கொண்டு வரட்டும் 



 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...