Thursday, August 3, 2023

முத்துநகரில் வலம் வரும்  தங்க ரதம் 

மரியா சிவானந்தம் 


திருவிழாக்கள் மக்கள் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்ப்பவை.  ஆண்டு தோறும்  மதம் சார்ந்த பல்வேறு விழாக்களை நம் நாட்டில்  கொண்டாடுகிறோம்.

 செப்டம்பர் மாதத்தில் வேளாங்கண்ணி திருவிழாக்கு மக்கள் உலகமெங்கும் இருந்து திரண்டு வந்து ஒன்று கூடி தேவமாதாவுக்கு விழா எடுத்து சிறப்பிக்கின்றனர் .அதற்கு முன் தூத்துக்குடியில்  இம்மாதம் ஐந்தாம் தேதியில் பனிமய மாதா  ஆலயப் பெருவிழா கோலாகலமாக நடை பெறுகிறது.

 ஜுலை மாதம் 26 ஆம் தேதி தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டிபன் அந்தோனி அவர்களின் கரத்தால் கொடியேற்றத்துடன் தொடங்கியது.,  ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நிறைவு பெறும் இவ்விழாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அன்னையின் அருளைப் பெற கூடுகிறார்கள் .

தேவ அன்னைக்கு பல பெயர்கள் உண்டு . விண்ணரசி , மாதரசி , இடை விடா சகாய மாதா, ஆரோக்கிய மாதா, அடைக்கல மாதா , பாத்திமா மாதா ,மோட்சராக்கினி,  உபகார மாதா, லூர்து மாதா, மழை மலை மாதா, பூண்டி  மாதா, பெரிய நாயகி அம்மாள் என்று தமிழகத்திலேயே  பல ஊர் கோவில்களில்  பல்வேறு  பெயர்களில்  குடி இருக்கிறாள். தூத்துக்குடியில் 'பனிமய மாதா' (Our Lady Of Snows ) என்ற அழகிய  பெயர் தாங்கி அருள் பொழிந்து  வருகிறாள் . 

கி.பி 352 ஆம் ஆண்டு ,ஆகஸ்ட் ஐந்தாம் நாள் கோடைகாலத்தில் , ஜான் பத்ரிஸ் என்பவருக்கு தேவமாதா எஸ்கலின் மலையில் தனக்கு ஒரு கோவிலைக் கட்டும்படி சொல்லி, அம்மலையின் ஒரு முகட்டில் பனி பொழிய செய்தார். அந்த அற்புதத்தின் நினைவாக ரோமில்  பனிமய மாதா ஆலயம்  எழுந்தது.  

பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரே நேரத்தில் இருபதாயிரம் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் மதம் மாறினார்கள். அவர்களுக்கென்று இந்தியா வந்த இயேசு சபை குருக்கள் கட்டிய ஆலயத்துக்கு  முதலில் சூட்டிய பெயர் இரக்கத்தின் மாதா ஆலயம் ..  1582-ம் ஆண்டு பனிமய மாத  நேர்ந்தளிப்பு விழா நாளான ஆகஸ்டு 5ஆம் தேதி அன்று அர்ச்சிக்கப்பட்டது. அப்போது  இந்த ஆலயத்துக்கு பனிமயமாதா ஆலயம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ஆண்டு நடை பெறும் திருவிழா 441 வது ஆண்டுத் திருவிழா.  நானூறு ஆண்டுகள் நிறைவு செய்த போது , ஆலயம் பேராலய அந்தஸ்து பெற்று பசிலிக்காவாக உயர்ந்தது.

இப்போது இருக்கும் ஆலயம் 1713 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக கோவிலின் தங்கத்தேர் பவனி அமைந்துள்ளது.முக்கிய நிகழ்வுகளின் நினைவாக தங்கத்தேர் பவனி நடைப் பெறும். தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு நினைவைக் குறிக்க இந்த ஆண்டு  பதினாறாவது முறையாக  தங்கத்தேர் தேவ அன்னையின் திருவுருவத்தை தாங்கி முத்துநகரின் வீதிகளில் வலம் வர இருக்கிறது .

அன்னையின் தங்கத்தேர் ஜெபமாலையின் மணிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு 53 அடி உயரத்தில் அமைந்துள்ளது  தேரின் உச்சியில்  விடிவெள்ளியும், சுழலும் விண்மீன்களும், 12 தூண்களும்  ஏழு கதிர்களும் பொருத்தப்பட்டுள்ளன. நான்கு நற்செய்தியாளர், மறைச்சாட்சிகள், வானதூதர் மற்றும் புனிதர்களின் திரு உருவமும் அமைக்கப்பட்டுள்ளது . தேவமாதா அரசி என்பதைக் குறிக்க மகுடமும் உள்ளது. பரிசுத்த ஆவியின் புறா வடிவமும், மீனவர்களின் குல தெய்வமான அங்கயற்கண்ணியின் நான்கு கிளிகளும் தேரில் பொருத்தப்பட்டுள்ளது.  

மீன்பிடி தொழிலுக்கும், முத்துக் குளித்தலுக்கும் பெயர் பெற்ற தூத்துக்குடி மீனவர்களைக் காக்கும் பாதுகாவலியாக  பனிமய மாதா கடற்கரையில் தன்னாட்சி செலுத்துகிறாள்.  உலக அமைதி, உலக நன்மைக்காக மீனவர்கள், பனைதொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் .கட்டுமரத் தொழிலாளர்கள் நலனுக்காக  தினசரி திருப்பலியில் ஜெபிக்கப்படுகிறது . 

இக்காலங்களில்  முத்து நகர் விழாக்கோலம் பூணுகிறது' அயல்நாடுகளில்  இருந்து பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். தூத்துக்குடியில் தங்கும் இடங்களில் ஓராண்டுக்கு முன்பே அறைகள் நிறைந்து விட .மக்கள் திருநெல்வேலி, திருச்செந்தூர் போன்ற ஊர்களில்  மக்கள் தங்கும் இடங்களைத் தேடி வருகின்றனர். வீடுகளில் உறவினர்கள்,நண்பர்கள் தங்கிக் கொள்ள வந்துள்ளனர் .பெருகி வரும் கூட்டத்தால் தூத்துக்குடி நிரம்பி வழிகிறது .

நகர் முழுவதும் வண்ண விளக்குகள்  இரவைப் பகலாக்கி வருகிறது. கடைகள் ,பொருட்காட்சிகள் என்று எங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாதி ,மத பாகுபாடின்றி மக்கள் திருவிழா கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டு வருகிறார்கள்.  தங்கத்தேரில் பொன்னுலக தேவதையாய்  அன்னைமரி வரும் கண் கொள்ளா காட்சியைக் காணவும் ,அவளது  ஆசியைப் பெறவும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதியை எதிர் நோக்கி   தூத்துக்குடி நகரமும், தொலைக்காட்சியில் விழா நிகழ்வுகளைக்  காண உலகமும் காத்திருக்கிறது . தூத்துக்குடி பங்குத்தந்தை குமார் ராஜா விழா ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார் 

முத்துநகரில் வலம் வரும் தங்கத்தேர் உலகுக்கு நன்மைகளைக் கொண்டு வரட்டும் 



No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...