Thursday, July 27, 2023


தொட்டனைத்து ஊறும்  "மணற்கேணி"

மரியா சிவானந்தம் 


கல்வி  என்பது நமக்கெல்லாம்  கடவுள் தரும் வரம், 

கல்வியை நேசிப்பவருக்கு,  அது ஒரு தவம். 

 தமிழகத்தில் என்றுமே கல்விக்கு முதல் மரியாதைதான். .அரசுகள் மாறினாலும் , ஆட்சிகள் மாறினாலும் இங்கு கல்விக்குத் தரப்படும் கௌரவம், சிறப்பு, முக்கியத்துவம் வேறு மாநிலங்களில் இல்லை என்று நாம்  உறுதியாக சொல்லலாம்.  

எளிய மக்கள் இன்னும் அரசு மருத்துவமனைகளையும் ,அரசுப்பள்ளிகளையும் நம்பி வாழ்கிறார்கள். எனவே,  தமிழக அரசு மருத்துவத்துக்கும், கல்விக்கும் பட்ஜெட்டில் அதிக பட்ச தொகையை ஒதுக்கி வருகிறது  இவற்றில்   கல்வித்துறையே முதலாம் இடம் பிடிக்கிறது .இந்த நிதியாண்டில் ரூ.40,299 கோடி கல்விக்கான நிதியாக  ஒதுக்கி, அத்துறையை மேம்படுத்திட முனைந்துள்ளது.  அரசுப்  பள்ளிகளில் காலை உணவு   வழங்கப்படும் திட்டம்  மேலும் பல பள்ளிகளுக்கு விரிவாக்கப்பட்டதால், நம் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான  மாணவர்கள் மகிழ்ச்சியுடன்  தங்கள் பள்ளிப்  படிப்பைத் தொடர்கிறார்கள் .

தமிழக பள்ளி கல்வித்துறையின் (tnschoolsedu)  செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளன.  இப்போது பள்ளி மாணவர்களின்  கற்றல் திறனை மேம்படுத்த,  புதிதாக  'மணற்கேணி 'என்ற புதிய செயலியை அத்துறை  அறிமுகப்படுத்தி  உள்ளது. இந்த செயலி காணொலி வழியாக மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிக்கிறது.   தமிழ்நாடு பாட திட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த காணொளிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. 

கணினி  நமக்கு அறிமுகமான போது , வீடுகளில்  பிள்ளைகளின்  படிப்புக்காக , பொழுது போக்குக்காக கணினி நிறுவிய போது, இணையமும் , கூகுளும்  தேடு தளங்களும் இல்லாத காலத்தில் கல்வி சி.டிக்கள் வாங்கி பயன்படுத்தினோம்.   சில கம்பெனிகள்  அறிவியல்  பாடங்களை அனிமேசன் தொழிற்நுட்ப  உதவியுடன் வடிவமைத்து விற்றனர். அப்போது அந்த சி.டிக்கள் கொள்ளை விலை விற்றன. இந்த "மணற்கேணி" செயலி முற்றிலும் இலவசமாக எல்லா தரப்பு மாணவரும் பயன் பெறும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மீடியங்களுக்காக  தனித்தனியாக  தரப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதல் முதலாக காணொலி வடிவில் பாடங்களை அமைத்துள்ளது நமக்கு பெருமையைத் தரும்  செய்தி ஆகும். SCERT (State Council of Educational Research and Training) ஒத்துழைப்பில்,  அரசுத் துறையின் மென்பொறியாளர்கள் ,அனிமேட்டர்கள் உதவியுடன் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்பது மற்றும் ஒரு பெருமைக்குரிய செய்தி. 

கடந்த 25 ஆம் தேதி ,தாம்பரம் அடுத்த சேலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  கல்வி அமைச்சர்,  UNCCD துணைப் பொதுச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க, "மணற்கேணி"செயலி  வெளியிடப்பட்டது .6 ஆம்  முதல் 12 வகுப்பு வரை உள்ள பாடங்களை 27000  கருப்பொருளாக்கி 8000  காணொலிகள்  தயாரிக்கப் படுகிறது.  முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் வேதியியல் ,உயிரியல் , இயற்பியல் படங்களும்  6 முதல் 10 வகுப்பு வரை கணிதம் ,அறிவியல் பாடங்களும் (முதல் பருவம் வரை) தயாரிக்கப்பட்டு செயலியில் கிடைக்கிறது. இனி அனைத்துப் பாடங்களும் .அனைத்து வகுப்புகளுக்கும் உருவாக்கப்பட்டு, செயலியில் ஏற்றப்படும் .

இந்த செயலி பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. எளிய தமிழிலும் ,ஆங்கிலத்திலும் நல்ல அனிமேஷன் உடன் பாடங்கள் புரிந்துக் கொள்ளும்படியாக  இருக்கிறது .கணினி தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றலை எளிமையாக்கும், இனிதாக்கும் முயற்சி இது.   ஆசிரியர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் . ஆர்வம் உள்ள பெற்றோர்களும் இந்த ஆப்பைப் பயன்படுத்திக் கொண்டு தம் பிள்ளைகளுக்கு வழி காட்டலாம் . 

தனியார் பள்ளிகள், நல்ல கட்டமைப்புடன் இயங்குவதால்  இந்த செயலியைப் பயன்படுத்த  முடியும். அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் உள்ள பள்ளிகள், நல்ல கணினி, இணைய வசதி, திரை  போன்ற அமைப்புகள் இருப்பவர்கள்  நல்ல விதத்தில் இந்த செயலியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அரசின் கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை ஒளிபரப்புகையில் அதையும் மாணவர்கள் கண்டு, கற்றுக் கொள்ளலாம் .ஒவ்வொரு காணொலியின் இறுதியிலும் அந்த பாடத்தை ஒட்டி  எழுப்பப்படும் வினாக்கள் அப்பாடத்தை மேலும் கருத்தூன்றி படிக்க உதவும் .

மணற்கேணி செயலி மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து அவர்களுக்கு கற்றலை இனிதாக்க , சுவாரஸ்யமாக்க  பெரு முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது .

"கற்றனைத்  தூறும்  அறிவு" என்று மணற்கேணியின் செயலியில் வள்ளுவர் வாக்கு பதிக்கப்பட்டுள்ளது. அவ்வாக்கு மாணவர் உள்ளத்திலும் பதிக்கப்படும். 

 மணற்கேணி நம் மாணவர் தம்  அறிவின் ஊற்றுக் கண்களைத் திறந்து விடும்  செயலியாக அமையட்டும் .

     

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...