Friday, September 1, 2023

 உயிரோடு விளையாடாதீங்க 

மரியா சிவானந்தம் 


இந்தியா சந்திராயன்-3 வெற்றிக்களிப்பில் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில், தமிழகத்தில்  தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரத்தில் ஒரு வீட்டில் அழுகையும், புலம்பலும்  இருந்தது .

அவ்வூரைச் சேர்ந்த லோகநாயகி என்னும் பெண் பிரசவத்தில் மரித்துப் போனார்.  பிரசவ இறப்பு விழுக்காடு மிகவும் குறைந்த தமிழகத்தில் இந்த இறப்பு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், இந்த பிரசவத்தை இயற்கை முறையில், வீட்டிலேயே நடத்தியது அவரது கணவர் மாதேஷ் .யூடூயூப்  பார்த்து தன் மனைவிக்கு பிரசவம் பார்த்தார் மாதேஷ், அவருக்கு உதவியாக அவரது நண்பர் பிரவீன் இருந்தார். பிரசவத்தில்  சிக்கல்  ஏற்பட்டு லோகநாயகி உயிர் இழந்தார்.

லோகநாயகி கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் . இளம் வயதில் இருந்தே இயற்கை வாழ்வியல் முறையில் ஆர்வம் கொண்டவர். அதற்கேற்ற முறையில் அவரது  உணவு வழக்கங்களை அமைத்துக் கொண்டவர். அவருக்கும்  மாதேஷுக்கும் திருமணம் முடிந்த பின்பு இருவரும் முழுமையாக இயற்கை உணவுகளை , காய்கறிகளைப் பயன்படுத்தி வந்தார்கள் . இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லோகநாயகி கர்ப்பம் அடைந்தார். அப்போது தன் கணவரிடம் இயற்கையாய் தனக்கு பிரசவம் நடக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த மாதேஷ் தானே வீட்டில் பிரசவம் பார்த்திருக்கிறார் . ஆண் குழந்தை  நலமுடன் பிறந்தது.  ஆனால் நச்சுக்கொடி வெளி வராமல் சிக்கல் ஏற்பட்டது. ரத்தப்போக்கு அதிகமாகி  சிறிது நேரத்தில் லோகநாயகிக்கு வலிப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது ,அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் அறிவித்தார் . 

இந்த வருந்தத்தக்க நிகழ்ச்சி பெரும் சோகத்தைக் கொண்டு வந்துள்ளது.   பிரசவத்துக்கு முன்பு வரை அரசு கிராம செவிலியர் இடம் மருத்துவ ஆலோசனை பெற்று வந்த லோகநாயகி, தனியார் மருத்துவ விடுதியில் பிரசவம் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டு சென்று இருக்கிறார். பின்னர் வீட்டில் பிரசவம் பார்த்துக் கொண்டு உயிர் இழந்துள்ளார்.கிராமச்  செவிலியர்  புகார் கொடுக்க, மாதேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  என்ன செய்து என்ன, அறியாமையால் ஒரு  உயிர் பலியாகி விட்டது !

தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு ஆரம்பச் சுகாதார நிலையம் உள்ளது. ஏறத்தாழ 1500 சுகாதார நிலையங்கள்,தவிர முழுமையாய் தயார் நிலையில் உள்ள அரசு மருத்துவமனைகள் , மருத்துவக் கல்லூரிகள் உள்ளன . நல்ல விதத்தில் தேர்ச்சி பெற்ற  மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள் என்று ஒரு மருத்துவப்படையே 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது . தமிழகத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 99.8% பிரசவங்கள் மருத்துவமனையில் நடப்பதாகவும், பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் விகிதம், (ஒரு லட்சம் பிரசவத்தில்  58 பேர்) என்று   மிகவும் குறைவாக இருப்பதும் தமிழகத்தில்தான் .

தவிர அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையில்  கர்ப்பம் தரித்த காலத்தில் இருந்தே கண்காணிப்பு,  பேறுகால  பரிசோதனைகள் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது . பண உதவி, மருந்துகள் எல்லாமே தரப்படுகிறது. தரமான சிகிச்சையும், பத்திரமான பிரசவமும்  உறுதி செய்யப்படுகிறது .

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நம் பட்டி காலத்தில் வீட்டில் மருத்துவச்சி உதவியுடன் பிரசவங்கள் நடைபெற்றன . அக்கால மருத்துவச்சிகள் அனுபவம் மூலமாகவே நல்ல முறையில் பிரசவம் பார்த்தார்கள் . 15000 பிரசவம் பார்த்த மருத்துவச்சி என்று செய்தித்தாளில் செய்தி படித்திருக்கிறோம். ஆனால் அக்காலத்தில் .   பிரசவத்தில் தாயோ , குழந்தையோ இறப்பதும்  அதிகம், பின்னர் கிராமப்புறங்களில் பிரசவத்துக்கு பயிற்சி கொடுத்து மருத்துவ உதவியாளர்களை தயார் 

. இப்போது காலங்கள் மாறி விட்டன. முறையான பரிசோதனை முறைகள், தடுப்பூசி , சத்து மாத்திரைகள் எல்லாமே பயிற்சி பெற்ற மருத்துவரின் கண்காணிப்பில் தேவைப்படுகின்றன. குழந்தையின் வளர்ச்சி ஸ்கேன் வழி அறியப்படுகிறது. ஏதேனும்   சிக்கலை யூகித்தால் .அதற்கு ஏற்ற வழியில் சிகிச்சை முறைகள்  பரிந்துரைக்கப்படுகிறது . இயற்கை முறையா , சிசேரியன் அறுவை சிகிச்சையா என்பது வரை முன் கூட்டியே திட்டமிடப்படுகிறது .

அரசு மருத்துவமனைகளில் இத்தனை வசதிகள் இருந்தும் ஒரு பெண் வீட்டில்  பிரசவம் பார்த்து உயிர் விட்ட பரிதாபம் நம்மை கவலை கொள்ள வைக்கிறது .அப்பெண் ஆசிரியையாக பணி செய்தவர் .அவரது அறியாமை அல்லது  இயற்கை வழி பிரசவத்தின் மேல் வைத்த அதீத நம்பிக்கையா என்று புரியவில்லை.  நாம் பெறும் கல்வி இது போன்ற அடிப்படை உண்மைகளைப் புரிய வைக்கவில்லை என்பது பெரும் சோகம்.

தனியார் மருத்துவமனைகளில் நோய் சிகிச்சை மட்டுமல்ல, பிரசவம் போன்ற  அடிப்படை சிகிச்சைகளுக்கு பெரும்  பணம்  செலவிட  வேண்டி உள்ளது. ஆயிரங்கள் காலாவதி ஆகி லட்சத்தில் பில் வருவது சாதாரண மக்களுக்கு  சுமையாக இருக்கிறது . இந்த  நேரத்தில் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக பிரசவம் பார்த்துக் கொள்வது சிறந்தது. 

 தாயின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் இதயத்துடிப்பு  மற்றும் குழந்தையின் கருவளர்ச்சி, கருப்பையில் அதன் இருப்பிடம் ,இதயத்துடிப்பு என்பதை மருத்துவமனையில் கருவிகளின் உதவியுடன் தான் செய்ய முடியும். பிரசவத்தின் முதல்,இரண்டாம் மூன்றாம் நிலைகளில் தாயின்  நிலைமை வைத்தே என்ன விதமான பிரசவம் என்று மருத்துவர்கள் முடிவு செய்ய முடியும் . எதிர்ப்பாராத சிக்கல்கள் , ரத்த தேவை , பிராண வாயு  போன்ற தேவைகளுக்கும் மருத்துவமனை தான் ஒரே சிறந்த தேர்வு .

வீட்டில், யூட்யூப்  பார்த்து செய்வது என்பது விஷப் பரீட்சை ஆகும். பிரசவம் என்பது சமையல் குறிப்பு அல்லவே, யூட்யூப்  பார்த்து செய்ய!ஒரு முட்டாள்தனமான காரியம் இல்லையா இது 

 ஒரு குழந்தையைப் பெற்றுத் தரும் பெண் உடலாலும் ,மனதாலும் மறு  பிறவி எடுக்கிறாள் . எனவே அனாவசிய பரிட்சார்த்த  முறைகளை  முயற்சி செய்யாமல், அனுபவம் ,பயிற்சி மிக்க மருத்துவமனைகளில் பிரசவத்துக்குச் செல்ல வேண்டும் .

தாயும் , சேயும் நலமாக  இருக்க  எல்லா முன்னெச்சரிக்கைகளையும் கடை பிடியுங்கள்.  மருத்துவமனையில் சுகப் பிரசவம் பார்த்துக் கொள்ளுங்கள் 

உயிர்களோடு விளையாட வேண்டாம் .



No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...