விண்வெளியில் நம் கொடி -I
மரியா சிவானந்தம்
விண்ணை முட்ட பறக்கும் இந்தியக்கொடி இன்று விண்வெளியில் பறக்கிறது .
சந்திராயன் 3 நிலாவின் பரப்பில் கொடி நாட்டிய வெற்றிக்கதையை நாம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்ளும் தருணத்தில் , அந்த மகிழ்சசியை இரட்டிப்பாக்கும் விதமாக ஆதித்யா L1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட செய்தி நம் செவிகளில் விழுந்து பரவசத்தைத் தருகிறது. உலக அரங்கில் நான்காவது சூரியவெளி ஆராய்ச்சியாளராக இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. இம்மாபெரும் சாதனைக்கு காரணர்களாக விளங்கும் இந்திய அரசையும், விண்வெளி ஆரய்ச்சியாளர்களையும் நாம் இருகரம் கூப்பி வணங்குகிறோம்..
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கள்யான் , நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் திட்டங்களைப் போலவே சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. 2008 இல் உருவாக்கப்பட்டு, பல்வேறு பரிசோதனை நிலைகளைத் தாண்டி. சென்ற வாரம் செப்டம்பர் 2 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவின் சதிஷ் தவான் மையத்தில் இருந்து PSLV C57 (Polar satellite launch Vehicle)ராக்கெட் மூலம் ஆதித்யா L1 செலுத்தப்பட்டது .
விண்ணோக்கி பாய்ந்த ஒரு மணி நேர பயணத்துக்குப் பிறகு, தரையில் இருந்து 648 கி.மீ உயரத்தில் , ஆதித்யா விண்கலம் பிரிக்கப்பட்டு ,விண்கலத்தின் இயந்திரம் இயங்க துவங்கியது. இவ்வாறாக இந்தியாவின் முதல் சூரிய விண்வெளித்திட்டத்துக்கு நெற்றிப் பொட்டு வைக்கட்டுள்ளது .
முதல் பதினாறு நாட்களுக்கு ஆதித்யா விண்கலம் புவியின் சுற்று வட்டப் பாதையிலேயே (Earth’s Orbit) பயணிக்கும். பின் அதில் இருந்து விலகி சூரியனின் halo Orbit பாதையில் பயணிக்கும். 125 நாட்களுக்குப் பின்னர், .பூமியில் இருந்து 1.5 மில்லியன் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் 1 (Lagrangian Point 1) பகுதியில் ஆதித்யா L 1 விண்கலம் நிறுத்தப்பட்டு சூரிய ஆய்வுகளை மேற்கொள்ளும் .சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் ,க்ரோமோஸ்பியர், சூரிய மண்டல சுழல்கள் போன்ற பகுதிகளை இந்த விண்கலம் ஆய்வு செய்யும். இந்த ஆய்வு சூரிய மண்டலத்தின் கதிர்வீச்சு, துகள்களின் சுழற்சி, வெப்பம் காந்த மண்டலம் போன்றவற்றை ஆழமாக ஆராயும்.
இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ஆதித்யா விண்கலத்தில் மொத்தம் ஏழு முக்கிய உபகரண கட்டமைப்புகள் (Pay Loads) உள்ளன, இந்த ஆய்வு சாதனங்களில் நான்கு கருவிகள் சூரியனின் வளி வீச்சு, நிறப்பிரிகைகள், புற ஊதா கதிர்களை ஆய்வு செய்யும் இந்த கருவிகளில் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளும் அடங்கும் VELC (Visible Emission line Coronagraph), SUIT (Solar Ultra violet imaging Telescope), SoLEX ( Solar low energy Xray Spectrometer), HELIOS – High Energy L1 Orbiting Xray spectrometer ) என்ற நான்கு கருவிகள் நிரல் செய்யப்பட்டபடி தம் பணியைச் செய்து , பதிவு செய்வதை படங்களாக, தரவுகளாக அனுப்பி வைக்கும் .
மற்ற மூன்று கட்டமைப்புகள் சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளால் அதன் புறவெளியில் உருவாகும் மாற்றங்களை ஆராய்ந்து கணிக்கும் விதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன.ASPEX ( Aditya Solar Wind Particle Experiment) PAPA (Plasma analyser package for Aditya ) என்ற கருவிகளுடன் அதி நவீன காந்தமானியும் (Advanced tri - axial High resolution digital Magneto meter) உள்ளன. இங்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் என்ன வென்றால் சேலம் இரும்பாலையின் 304L 2.5, 6.0,6.5,மிமீ ரக ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடுகள் ஆதித்யாவின் வடிவமைப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது .ராஞ்சியின் Heavy Engineering Corporation (HEC) நிறுவனம் தன் முழு உழைப்பையும் ஆதித்யாவின் கட்டுமானத்துக்கு அளித்துள்ளது . L & T ,BHEL போன்ற நிறுவனங்களின் பங்களிப்பும் ஆதித்யாவின் சூரிய ஆய்வு திட்டத்தில் இருக்கிறது.
ஆதித்யாவின் விண்வெளி பயணத்தில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் , வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் மையம் ,இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்சசி கழகம் ஆகியவை பெரும்பங்கு ஆற்றி உள்ளன.
சூரியனே ,பூமியின் முழுமுதற் சக்தி. மனுக்குலத்தின் வாழ்வுக்கு, சூரியனைப் பற்றிய ஆய்வு மிகவும் முக்கியம். சூரியனின் பண்புகள், சூரிய புயல்கள் , அதன் வளி மண்டலத்தில் நிகழும் மாற்றங்கள் இவற்றை விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து ஆய்வு செய்வது விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல். விண்வெளியில் இருந்து பூமியின் படத்தை ஆதித்யா பதிவு செய்து அனுப்பி இருப்பதை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது .
. ஆழ்ந்த அறிவும் , அனுபவமும் கொண்ட நம் நாட்டு விஞ்ஞானிகள் தம் அயராத முயற்சியாலும் உழைப்பாலும் இந்த விண்ணை முட்டும் வெற்றியைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் .
ஆதித்யா L1 விண்கலத்தின் ஆயுள் ஐந்து ஆண்டுகள். இந்த திட்டத்துக்காக 380 கோடிகள் .இதுவரை செலவிடப்பட்டுள்ளது . இந்தியாவைப் பற்றி ஏளனமாக நினைத்த உலகநாடுகள் மத்தியில் ,இந்த சூரிய விண்வெளிப் பயணம் பெரும் கௌரவத்தை ஈட்டித் தந்துள்ளது. நம் நாட்டைப் பற்றிய கேலிப் பிம்பங்கள் எல்லாம் நொறுக்கப்பட, நாம் பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தும் தருணம் இது.
இதை சாத்தியமாக்கிய விண்வெளி ஆரய்ச்சியாளர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் .ஆதித்யா L 1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி ,நிகரில்லா சாதனையைப் படைத்துள்ளார் .
நிகர் ஷாஜி பற்றியும் ,ஏனைய விண்வெளி ஆரய்ச்சியாளர்கள் பற்றியும் அறிந்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment