Friday, September 8, 2023

 விண்வெளியில் நம்  கொடி -II 

மரியா சிவானந்தம் 


தலைமுறை தாண்டிய ஓர் இந்தியக் கனவு நனவாகி இருக்கிறது .

 இது போன்ற  சாதனை ஓரிரவில் நிகழ்ந்து விடுவதில்லை. இதற்கான பெருமையும், உரிமையும்  ஒருவருக்கானதும்  அல்ல. இந்தியாவின் இன்றைய விண்வெளி சாதனை ஓர் இமாலய சாதனை . அறிவியலும் ,தொழிற்நுட்பமும் கை கோர்த்த  போது அவற்றை உயர்த்திப் பிடிக்க நிதியும் , அரசின் உதவியும் இருந்ததால் மட்டுமே  இந்த வெற்றி சாத்தியமானது .இந்த வெற்றி மகுடத்தை பாரத அன்னையின் தலையில் சூட்டி நாம் அழகு பார்க்கிறோம்.

இந்திய விண்வெளி அறிவியல் அறிஞர்களின் அறிவும், ஆற்றலும் ,உழைப்பும் எவர்க்கும் குறைந்தது அல்ல.  விக்ரம் சாராபாய் தொடங்கி சதிஷ் தவான், அப்துல் கலாம் ,மாதவன் நாயர்   என்று பெயர் பெற்ற அறிஞர்கள் விண்வெளி பயண திட்டங்களுக்கு வித்திட்டு, நீர் சொரிந்து, உரமிட்டு வளர்த்தனர். இவர்களின் அனுபவமும் , பயிற்சியும், உழைப்பும் எல்லா  விண்வெளி திட்டங்களிலும் இருப்பதை நாம் அறிவோம் .  அவர்களின் தொலைநோக்கு இன்று  கனி பறிக்க செல்பவருக்கு   சுலபமாக்கி உள்ளது. 

இத்தலைமுறையில் அண்ணாதுரை மயில்சாமி, சிவன் ,வனிதா முத்தையா  வீரமுத்துவேல்  போன்ற விஞ்ஞானிகள்  மங்கள்யான் ,சந்திரயான், ஆதித்யா L 1 போன்ற விண் பயண திட்டங்களில்  குறையற்ற உழைப்பை நல்கி இருக்கிறார்கள் . ஒரு விண்வெளி திட்டம் தோல்வி அடைந்தாலும் ,தோய்ந்து போகாமல். தோல்விகளில் இருந்து கற்கும் மனோபாங்குடன் அடுத்தடுத்த திட்டங்களை மேம்படுத்திக் கொண்டே சென்றனர் .  

இந்த இரண்டு தொடர் வெற்றிகளில்  பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு  அபாரம் சந்திராயன் 3 வெற்றிக்குப் பின்னர், .பாரதப் பிரதமரே  இஸ்ரோவுக்கு வந்து ,நேரில் பெண் விஞ்ஞானிகள், பொறியியல் அறிஞர்களுடன் உரையாடி தன் மகிழ்சசியைத் தெரிவித்தார் .

வனிதா முத்தையா போலவே மினல், அனுராதா, ரிது கரிதால், மௌமிதா தத்தா ,நந்தினி ஹரிநாத் போன்ற  பெண் விஞ்ஞானிகள்  இஸ்ரோவின் பல திறப்பட்ட துறைகளில்  தலைமைப் பொறுப்புகளை ஏற்று இந்த விண்வெளி திட்டங்களுக்கு  பங்காற்றி உள்ளனர். 

இந்த வரிசையில் ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி   தன்னிகர் இல்லாத உழைப்பைத்  தந்து ,இஸ்ரோவின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய விண்வெளிப் பயண சரித்திரத்திலும் இடம் பெற்றுள்ளார் . ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த, தமிழகத்தைச் சேர்ந்த     பெண்மணி , விண்ணைத் தொடும் சாதனையை நிகழ்த்தி இருப்பது நம் அனைவரையும்  பெருமையில் ஆழ்த்தி உள்ளது .

தென்காசி மாவட்டம் ,செங்கோட்டையை சேர்ந்த நிகர் சுல்தானா. படிக்கும் போதே அறிவியலில் ஆர்வம் உள்ளவர் . திரு.ராமமந்திரம் அரசினர் பள்ளியில் படிக்கும் போது இந்திய அறிவியல் கழகத்தின் ஊக்கத் தொகை  பெற்று படித்தார்.ப்ளஸ் 2 வில் நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது .இருப்பினும் பொறியியல் துறையில் உள்ள ஆர்வம் காரணமாக திருநெல்வேலி  பொறியியல் கல்லூரியில் சேர்ந்து  , மின்னணுவியல், தொலைத் தொடர்பு  (Electronics &Communications ) பொறியியல் படித்தார் .

இளங்கலை படித்த உடனே இஸ்ரோவில்  சேர்ந்தார் . முதலில் ஸ்ரீஹரிகோட்டாவில் சேர்ந்து மூன்று மாதங்களில் இஸ்ரோவின் பெங்களூர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.செயற்கை கோள் பராமரிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர் , தொடர்ந்து செயற்கை கோள் தயாரிக்கும் பணியில் இருந்துள்ளார் . விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் ,அமெரிக்கா ,ஸ்காட்லாண்ட் போன்ற நாடுகளில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். விண்கல கருவிகளைப் பற்றி நாசாவில் பயிற்சி பெற்று இருக்கிறார் .

நிகர் ஷாஜியின் திறமையால் பதவி உயர்வுகள் அவரைத் தேடி வந்தது.ஆதித்யா L 1 விண்கலம் விண்ணேற்றம் செய்யப்பட்ட நாளில் திட்ட இயக்குனரான  நிகர் ஷாஜிக்கு பாராட்டுக்கள் குவிந்தன .  அப்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத்  அவர்களுடன் ,திட்ட இயக்குனராக நிகர் ஷாஜி ஆதித்யாவின் வெற்றிப்பயணத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்த போது , அந்த கம்பீரத்தை உலகமே ரசித்தது. தமிழகமோ ,"எங்கள் மகள் "என்று பெருமையுடன்   உச்சி முகர்ந்தது. அடுத்த சிலமணி நேரங்களில் அவரது புகைப் படமும், விடுத்த செய்திகளும்  இணைய தளங்களில் வைரல் ஆயின. 

பெருமைக்குரிய விண்வெளி பயண திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் அசாதரண செயலை நிகர் ஷாஜி நிகழ்த்தி காட்டி உள்ளார் .கல்வி ஒன்றே எளிய மக்களை உச்சத்துக்கு ஏற்றும் ஏணி என்பதை இந்த  "சூரியப் பெண் ' நிரூபித்துள்ளார்.   நம்  குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு  நிகர் ஷாஜி ஒரு 'ரோல் மாடல்' 

பெற்றோருக்கு நிகர் ஷாஜி விடுத்த செய்தி ஒன்று நம் கவனத்தைக் கவர்கிறது .'உங்கள் மகன்  ஒரு பெரிய வீட்டில் வசிக்கலாம். அவன் ஒரு பெரிய காரில் ஓட்டுனருடன் பயணம் செய்யும் வசதியை நீங்கள்  தந்திருக்கலாம் .நல்ல உணவு, பியானோ ,பெரிய திரை தொலைக்காட்சி என்று வசதியான வாழ்வை தர முடியும் என்றாலும் , . நீங்கள் தோட்டத்தில் புல் வெட்டிக் கொடு இருக்கையில் அவன் உங்களுடன் இருக்க செய்யுங்கள். தன் சகோதர சகோதரிகளுடன் வீட்டில் பாத்திரம் கழுவ பழக்குங்கள்..அரசு பேருந்தில் பயணம் செய்ய சொல்லுங்கள் .  உங்கள் குழந்தைகளை சரியான விதத்தில் அன்பு செய்வது என்பது  இப்படித்தான் :" என்கிறார் அவர் .

எத்தனை அருமையான அறிவுரை.ஆடம்பர வாழ்க்கையே அழகான வாழ்க்கை என்பது போல இருக்கும் இந்த காலத்தில் ,எளிமையான வாழ்வியலை உணர்த்தி இருக்கிறார் . இவரது இக்கூற்று ஒரு ஆங்கில பொன்மொழியை நினைவுறுத்துகிறது .

"Only touching the sky doesn't define your success. The real success story will be, if you don't take your feet off the ground while touching the sky"

ஒரு அற்புதமான பெண்மணியாக , ஒரு குழுவை மட்டும் அல்ல , ஒரு சமுதாயத்தை நடத்தவல்ல கருத்துக்களுடன் நிகர் ஷாஜி ஜொலிக்கிறார் .

இனி வரும் இந்திய விண்வெளிப் பயணங்களில் இன்னும் ஏராளமான வனிதா முத்தையாக்கள் , ரிது கதிரால்கள், நிகர் ஷாஜிகள்  உருவாக்கப்படுவார்கள் .

மனிதரை ஏற்றி வலம் வரும் ககன்யான் திட்டமும் ,இதே நேரத்தில் செயல்பட தொடங்கி விடும். முதல் 'ஆளில்லா 'ககன்யான் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும்.  பின்னர் போக இருக்கும் ககன்யான் கலத்தில்  நம் ஊர் கல்பனா சௌலாக்கள் பயணப்படுவார்கள் . 

பெண் சக்தி பேசப்படும் சக்தியாய் விளங்கும் .

இது காலத்தின் கட்டாயம் அல்ல , காலத்தின் கட்டளை .

 

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...