Friday, March 22, 2024

 

ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் ?

தவக்கால சிந்தனை 

மரியா சிவானந்தம் 

கிறிஸ்துவர்களின் தவக்காலம் எனப்படும் "லென்ட் " நாட்கள் வரும் வாரத்தில் முடிவடைகிறது .குருத்து ஞாயிறு தொடங்கி ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிறு வரை ஏழு வாரங்கள் தொடர்ச்சியாக இந்த தவக்காலம் அனுசரிக்கப்ப்டுகிறது .

இக்காலங்களில் , இயேசு கிறிஸ்து அனுபவித்த  சிலுவை மரணத்தையும் ,உயிர்ப்பையும் நினைவு கூர்ந்து  தியானிப்பது வழக்கம்.  பைபிளில் எழுதப்பட்டுள்ளபடி அந்த சிலுவை  மரணத்தையும் அதன் வழியாக மனுக்குலம் பெற்றுக் கொண்ட மீட்பையும்  மீண்டும் ஒருமுறை மனதில் சிந்திப்பதுண்டு .

மிகச் சிறப்பாக இயேசுவின் மரணத்தருவாயில் ,சிலுவையில் தொங்கியபடி அவர் உச்சரித்த ஏழு வாக்கியங்களை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்திக் கொள்கிறோம் . 

முதல் வாக்கியம் :

இயேசு சிலுவையில் அறையப்பட்டு , மூன்று ஆணிகளில் தொங்கிக் கொண்டு இருக்கையில் அவரைக் சுற்றி நின்று கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்த யூத மக்களைப் பார்த்து கூறியது 

“தந்தையே , இவர்களை  மன்னியும்,  ஏனேனில் தாங்கள் செய்கிறது என்னவென்று இவர்களுக்கு  தெரியவில்லை ” (லூக்கா 23:34)

உன்னதமான மன்னிப்பின் மேன்மையை உணர்த்தும் மொழி இது 

இரண்டாம்  வாக்கியம் 

இயேசுவை சிலுவையில் அறைந்த போது இரண்டு பக்கங்களிலும் இரண்டு கள்வர்களை அறைந்தனர் . அதில் ஒருவன் எசுவைப் பரிகாசம் செய்கையில் , மற்றொரு கள்வன் ," நாம் நாம் செய்த குற்றங்களுக்காக சிலுவையில் இருக்கிறோம். குற்றமற்ற இவரை நீ கேலி செய்யாதே " என்றான் 

அதற்கு இயேசு 

“  நீர் இன்று  என்னோடு  வான் வீட்டில் இருப்பீர் என்று உறுதியாக உனக்குச் சொல்கிறேன்  ” (லூக்கா 23:43

இறுதியில் அந்த கள்வன் மோட்சத்தையும் திருடி விட்டான் என்று சொல்வார்கள் 

மூன்றாவது வாக்கியம் 

சிலுவையின் அடியில் இயேசுவின் தாய் மரியாள் அழுது கொண்டு இருக்க, அவரை விட்டு அகலாமல் இருந்த அன்புக்குரிய சீடர் யோவான் எனப்படும் அருளப்பரிடம் மரியாளை ஒப்படைத்து சொன்ன வாக்கியம் இது 

3 “இயேசு தம்முடைய தாயை நோக்கி: அம்மா , இவரே , உன் மகன் என்றார். பின்பு தம் அன்புச் சீடரை  நோக்கி:இவரே , உம்  தாய் என்றார்” (யோவான் 19:26-27).

இறைவனே என்றாலும் அன்னையின் பாசத்துக்கு கட்டுப்பட்டவர் என்பதை சொல்லும் வாக்கியம் இது 

நான்காம் வாக்கியம் 

4 “ஏலீ! ஏலீ! லெமா சபக்தானி' என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46).

என் இறைவா ,என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் என்ற பொருள்படும் இந்த நான்காம் வாக்கியம் ,இயேசு உடலும் ,உணர்வும் கொண்ட மனிதனாகவும் வாழ்ந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு 

ஐந்தாம் வாக்கியம் 

 “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28)

வருத்தும் நன்பகல் வெயிலும் , இரவு முதல் அடைந்த துன்பங்களும் , பெற்ற கசை அடிகளும் யேசுவைக் களைப்புற செய்தன , அவர் நா உலர்ந்து தண்ணீருக்காக தவித்த போது சொன்ன வாக்கியம் இது .

என்னை வேண்டி தேடும் ஆண்மாக்களுக்காக நான் தாகமாக இருக்கிறேன் என்னும் உட் பொருள் கொண்ட வாக்கியம் இது .

ஆறாம் வாக்கியம் 

“எல்லாம்  நிறைவேறிற்று ” (யோவான் 19:30)

யூத படை வீரன் ஒருவன் புளித்த திராட்சை ரசத்தை கடற்பஞ்சில் தோய்த்து ஒரு கம்பில் கட்டி அதை இயேசுவின் தாகத்தை தணிக்க முயன்றான் . இயேசு  அதை குடிக்க விரும்பவில்லை .

தான் இந்த பூமிக்கு பிறப்பெடுத்த நோக்கம் நிறைவேறியது என்று சொன்னதே இந்த ஆறாம் வாக்கியம் 

ஏழாம் வாக்கியம் 

 “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46) என்று இறுதி வாக்கியமாக  கூறி தன் உயிரைத் துறந்தார் .

மரணத் தருவாயில் ஒருவர் உரைக்கும் சொற்கள் சக்தி   வாய்ந்தவை,  உயிரோட்டம் மிக்கவை .  அவ்வகையில் இயேசு உரைத்த ஏழு வாக்கியங்களும் மகத்துவம் மிக்கவை . மனுகுலத்துக்கு வாழ்வையும் ,வழியையும் அளிக்க வல்லமை கொண்ட சொற்கள் .

அனைவருக்கும் ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள் 

Friday, March 15, 2024

 

பத்து கட்டளைகள் 

நமது நிருபர் 


கடந்த வாரம்  புதுச்சேரியில் நடந்த கொடூரம் நம் மனதை விட்டு நீங்காமல்  பெரும் மன அழுத்தத்தை  அளிக்கிறது. 

பெண் குழந்தைகளின் மேல் தொடுக்கப்படும் பாலியல்   வன்முறை,அதைத் தொடர்ந்த கொலையும் நம்மை நிலை குலைய  வைக்கிறது. பொக்சோ போன்ற கடினமான சட்டங்கள் போட்டும் இது போன்ற குற்றங்கள் குறையவில்லை .

சென்னை அயனாவரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு , காது கேட்கும் திறன் இல்லாத பதினோரு வயதான சிறுமியை  17  ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நம் நினைவுக்கு வருகிறது.

அப்போது  விகடகவியின் பொறுப்பாசிரியர் சுபா வெங்கட் எழுதிய."சீரழியும் சமூகம் " எனப்படும் கட்டுரை   மீண்டும் படிக்கும் போது அவர் எழுதிய பத்துக் கட்டளைகள்  எக்காலத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது . 

நம்  வீடுகளில் , சமூகத்தில் அலசி ஆராய்ந்து  சுபா வெங்கட் தந்த அந்த பத்து கட்டளைகள் கடை பிடித்தால் இது போன்ற குற்றங்களை தவிர்க்கவும் ,குறைக்கவும் முடியும் .  சமூகத்தில்  பெண் குழந்தைகளின் பாதுகாப்பை  விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் இவற்றைப் பின்பற்ற வேண்டும் .

மீண்டும்   அந்த கட்டளைகளை படியுங்கள், நண்பர்கள் உறவினரிடையே  பகிர்ந்துக் கொள்ளுங்கள் .

1. சி.சி.டி.விக்களை சாலைகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புக்களில் பொருத்துவதோடு நம் வேலைகள் முடிந்து விடவில்லை. அதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியது அங்கே குடியிருக்கும் நமது தலையாயக் கடமை. அசோசியேஷன் சண்டைகள் அல்லது தெருவில் வண்டி பார்க்கிங் சண்டைகளை விட நமக்கு இது மிக முக்கியம்.


2. தாய், தந்தை என இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளிலும் சரி...போகாத வீடுகளிலும் சரி! தினசரி அரை மணி நேரமாவது குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுவோம். படிப்பு அல்லது வேலை சம்பந்தமான சம்பிரதாய பேச்சுக்களாக அவை நிச்சயம் இருக்கக்கூடாது. டி.வி. பார்த்தபடியே பேசுவதாகவும் இருக்கக்கூடாது. நிஜமான.. ஜாலியான.. பொதுவான.. ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்ளக்கூடிய பயனுள்ள பேச்சாக அது இருக்கட்டும்.

3. வீட்டுக்கு வரும் உதவியாளரோ அல்லது உறவினரோ... யாராக இருந்தாலும் அவர்களை குழந்தைகளுடன் தனியாக விடாமல் இருப்போம். அப்படி விட்டே ஆக வேண்டிய அவசியம் இருப்பின் அவ்வப்போது ‘சர்ப்ரைஸ் செக்கிங்’ செய்வோம்.

4. குழந்தைகளுக்கு ’குட் டச் பேட் டச்” சொல்லித்தர நமக்கு கூச்சமாக இருக்கிறதா? இதற்கென்று படித்த சைக்யாட்ரிஸ்ட்டுகள் மற்றும் மன நல வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நம் குழந்தைகளை தாராளமாக அழைத்துச் செல்வோம். இது ஆபத்து நிறைந்த உலகம்தான் என புரிய வைக்கும் அதே சமயத்தில் அதிலிருந்து நம் குழந்தை எப்படி தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதையும் அவசியம் சொல்லிக் கொடுப்போம்.

5. இதுபோன்ற கொடூரங்களில் பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்று மட்டுமே இந்த வன்கொடுமையினை வேதனையோடு பார்க்கும் அடிப்படை மனசாட்சி நம்மிடம் இருக்கட்டும். அநாவசியமாக சம்பந்தப்பட்ட பெற்றோர் மீதோ அல்லது ‘குடியிருப்புவாசிகள் ஒருவருக்குமா இது தெரியவில்லை?’ என மற்றவர் மீதோ விமர்சனங்கள் வைக்காமல் இருப்போம். வம்பு பேசும் தொனி இதில் நிச்சயம் தவறு.

6. ‘யாருக்கோ... எங்கோ நடக்கிறது.. நம் வீட்டில் இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. நம் குழந்தைகளும் பெண்களும் பத்திரமாகவே இருப்பார்கள்!” என்பது நம்முடைய பாசிட்டிவ்வான எண்ணமாக இருக்கலாம். ஆனால் அது உண்மைதானா என அவ்வப்போது உறுதி செய்து கொள்வது அவசியம். இதற்காக உடனே ‘கண்மூடித்தனமான கண்காணிப்பு தான் ஒரே தீர்வு’ என்கிற முடிவுக்கு வந்து பிள்ளைகளுக்கான அடிப்படை சுதந்திரங்களில் கை வைத்து விடவேண்டாம். அவர்களுக்கு நாம் சுதந்திரமும் தர வேண்டும். கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்களில் கட்டுப்படுத்தவும் வேண்டும். அதிக செல்லமும் ஆபத்து... அநாவசியத் தடைகளும் தவறு என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

7. பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் சினிமாவிலோ, சீரியலிலோ வரும்போது 'இது தேவையற்ற காட்சி...காட்டப்படுவது மிகவும் தவறான செயல்..' என அழுத்தந் திருத்தமாக நம் குழந்தைகள் மனதில் பதிய வைப்போம். அவற்றை சர்வ சாதாரணமாக தாண்டிப்போகும் மனநிலை தயவுசெய்து நமக்கு வேண்டாம். முக்கியமாக நம் வீட்டு ஆண் குழந்தைகளிடம் பெண்களை இது போன்ற வல்லுறவுகள் எந்த அளவிற்கு துயரப்படுத்தும் என புரிய வைப்போம். ஆண் குழந்தைகளிடம் முரட்டுத்தனம் கண்டால் 'நீ ஆம்பளடா' என மகிழ்ந்து அவனை ஊக்குவிப்பதோ அல்லது பெண் குழந்தைகளை 'நீ பலவீனமானவள்' என்று சொல்லி அடக்கி வளர்ப்பதோ மிக மிக மோசமான பேரண்டிங் என உணர்வோம்.

8. குழந்தைகளின் உடலையும் மனதையும் உறுதி செய்வதில் உடற்பயிற்சியும் விளையாட்டும் மிக முக்கிய காரணிகள்.. நமக்கும் அதில் ஈடுபாடு இருக்கட்டும். அடிப்படையில் நடைப் பயிற்சியாவது நமக்கு இருந்தால்தான் நம் குழந்தைகளும் அவற்றின் அவசியத்தை உணரும். அதே போல அவர்களுக்கு நல்ல இலக்கியங்களையும் புத்தகங்களையும் அறிமுகப் படுத்த வேண்டியதும் நம் கடமையே. அதை விடுத்து வேலைக்குப்போவது தவிர மற்ற நேரங்களில் டி.வி.யிலோ, ஃபேஸ்புக்கிலோ, டிவிட்டரிலோ, பார்ட்டியிலோ நாம் மூழ்கினால் நம் குழந்தைகளுக்கு நாம் ஹீரோ இல்லை.. முழு ஜீரோ!

9. நாம், நம் குழந்தைகள் மட்டும் கொண்டதல்ல இந்த சமூகம். இதிலே நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு. ஆனால் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதால் நாம் முதலில் நம் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த உதாரண மனிதராக இருப்பது அவசியம். ஆகவே நாம் முதலில் நல்லதொரு ஒழுக்கமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறோமா என உறுதி செய்து கொள்வோம். நம்மிடம் ஏதேனும் ஒழுக்க ரீதியான தவறு இருந்தால் அதை முதலில் ஒப்புக்கொள்வோம். அதிலிருந்து உடனே மீள்வோம்.

10. 'பாலியல் கொடுமைகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்' என்பது போன்ற சமூகநீதிக்கான விஷயங்களில் அதிக அக்கறை கொள்வோம். தேவைப்பட்டால் ஜல்லிக்கட்டுக்கு நடந்த மக்கள் புரட்சி மாதிரி சமூக மக்கள் மொத்த பேரும் கூட கொதித்தெழுந்து இதற்காக போராட முன் வரவேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.

முழு கட்டுரையும் மீண்டும் படியுங்கள் .சமூகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் 


Thursday, March 14, 2024

 சமுக  வலைதளங்கள் Vs பெண்கள் பாதுகாப்பு -II 

மரியா சிவானந்தம்

 

இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க , சமுக வலைதளங்களில் பெண்கள் கொண்ட ஈடுபாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த பத்து வருடங்களில் முகனூல் , ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா கிராம் போன்ற வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளோர் எண்ணிக்கை பல மடங்காக பெருகி உள்ளது. புகைப்படங்கள், வீடியோக்கள் வழியாக தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வது தினப்படி  வழக்கமாகி விட்டது

பல்லாயிரம் பேர் வந்துச் செல்லும் ஒரு பொது மேடையில் இவ்வாறு தகவல்களைப் பாதுகாப்பான வழியில் பகிர்ந்துக் கொள்வது பற்றி  போன இதழில் இரு தோழிகள் தங்கள் எண்ணங்களை  கூறினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து இன்று மூன்று  தோழிகள்  நம்முடன் பகிர்ந்த கருத்துக்கள் இதோ 

 தீபா நாகராணி :(எழுத்தாளர் , பேச்சாளர் ,சமூக ஆர்வலர் )

 என்னுடைய புகைப்படத்தை 'ஹேக்' பண்ணி காந்திமதி என்பவர் ஒரு முகநூல் பக்கத்தை ஆரம்பித்துள்ளார். இது தெரிந்ததும் முகநூல் நிர்வாகத்துக்கு 'ரிப்போர்ட் 'செய்தேன். அந்த ஐடி வைத்துள்ளவர் தன் பக்கத்தை பூட்டி வைத்துள்ளார். அதனால் அங்கு பகிரப்படும் செய்திகள் என்னவென்று தெரியவில்லை. இது போல நிறைய பேர் செய்கிறார்கள். அதைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் பிற வேலைகள் எதுவும் நடக்காது. 

நம்மைப் பற்றிய செய்திகளை பகிரும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒருசிலர் தம் சொந்த பிரச்சனைகளை முகநூலில் பதிவாக போடுகிறார்கள். அதைப் படித்த எதிர்பாலினர்  ஆறுதல் சொல்வதாக  காட்டிக் கொண்டு நம்மை மேலும் பலவீனப் படுததுவார்கள் .அந்த  சூழ்நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு தம் எல்லைகளை மீறுவார்கள்.அதே போல் நாம் வெளியில் செல்லும் தகவல்களையும் இங்கு பகிராமல் இருப்பது நலம் .

சுகுணா முத்துசாமி: (புகைப்பட கலைஞர், ஓவியர், இயற்கை வேளாண்மை) 

சரியான விதத்தில் பயன்படுத்தினால் சமூக வலைத்தளங்கள் பெண்களுக்கு ஒரு நல்ல தளம். அரசியல்,சமூகம்,பெண்ணியம்  சார்ந்த கருத்துக்களை மிக அழகாக இங்கு பதிவிடுகிறர்ர்கள். இயற்கை வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் ,மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்தும் வணிகத்தலமாக இருப்பதால் பலர் இதனால் பயன் பெறுகிறார்கள். தவிர மனம் சார்ந்த சுமைகளை இறக்கி வைப்பதால்,மனம் அமைதியை பெறுகிறார்கள் . பெண்களுக்கான நல்ல தளமாகவே முகநூல், வாட்சப் போன்ற இடங்கள் இருக்கின்றன.

ரமா ஸ்ரீனிவாசன் (ஆன்மிகம் ,இசை, கலைகள்)

சத்சங்கம், செய்தித்தாள் , வாரபத்திரிகை என்று ஒரு காலத்தில் நம் பொழுதைக் கழித்தோம் .இப்போது சிறியவர் முதல் பெரியவர் வரை போன் மூலமாகவே எல்லாவற்றையும் அறிந்துக் கொள்கிறோம். இங்கு பாதுகாப்புடன் இருப்பது அவரவரைப் பொறுத்தே இருக்கிறது .நாம் எதில்  ஆர்வம் காட்டுகிறோமோ அவற்றைப் பற்றி மட்டும் எழுதினால் வீணான எதிர்விளைவுகளை தடுக்கலாம் .யாரேனும் தேவையற்ற 'கமெண்ட்' போட்டால் இருக்கவே இருக்கிறது ரிப்போர்ட் மற்றும் ப்ளாக் வழிகள்.சமூக வலைத்தளங்கள் நல்ல விதத்தில் பயன்படுத்துவது,பாதுகாப்பாக இருப்பது  அவரவர் கையில் தான் இருக்கிறது.

தோழிகள் மூவருக்கும் நன்றி .

சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தினால் ,  அவை உங்களை ஒரு ஆளுமையாக உருவாக்கும், 

 

 




Thursday, March 7, 2024

 சமூக வலைதளங்கள்  Vs  பெண்கள் பாதுகாப்பு 

மரியா சிவானந்தம் 


 சமூக வலை தளங்கள்  இன்று நமக்கான புதிய வடிகால்கள் . 

பரபரப்பும் ,அவசரமும்   மிக்க வாழ்க்கை சூழலில், நிழல் தரும் மரம் போல  சமூக வலை தளங்களான ட்விட்டர் ,முகநூல் , இன்ஸ்டா  போன்றவை  இருக்கின்றன. தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதோடு மட்டுமன்றி , தங்கள் உணர்வுகளை, கருத்துக்களை முன் வைக்கும் இடமாகவும் இவை உள்ளன . தம் திறமைகளை உலகுக்கு அறிவிக்கும் இடமாகவும்  அவற்றை மேம்படுத்தும் தளமாகவும்  இவை விளங்குகின்றன.

முகநூலில் எழுதி  எழுதியே  எழுத்தாளர்களாக, கவிஞர்களாக  அவதாரம் எடுக்கிறார்கள். .திரைத்துறை, சின்னத்திரைக்கு  இங்கிருந்து செல்பவர்கள் இன்று உண்டு.  பெண்களுக்கு முகநூல் ட்வீட்டர்  புதிய அங்கீகாரம் மற்றும்  அடையாளத்தைத் தருகிறது.   சுய முன்னேற்றம், வணிகம் , இயற்கை உணவியல், மருத்துவம்  சார்ந்து பல நல்ல ஆலோசனைகளுக்கு பெண்கள் முகநூலில் நீடித்து இயங்குகிறார்கள்.

இத்தனை நேர்மறை சங்கதிகள் இருந்த போதும்  பெண்களுக்கான பல அச்சுறுத்தல்கள் இங்கு உண்டு. இன்பாக்சில் தேவையற்ற 'சாட்டிங் 'செய்வது,ஆபாச படங்களை பகிர்வது, உணர்வு பூர்வமாக காயப்படுத்துவது ,புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி மன உளைச்சளைத் தருவது  போன்ற எதிர்மறை சங்கதிகள் இங்கு தினமும் உண்டு ,  பசப்பு வார்த்தைகளைப் பேசி பணம் பறிப்பதும்  நடக்கிறது .

முகநூலில் நடக்கும் எதிர்மறை, நேர்மறை  சங்கதிகளை ஆய்ந்தறிந்து   சிறப்பான முறையில்  சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை முன் வைத்து பாதுகாப்பாக  இயங்குபவர்கள் பலர்  . அவர்களில் இருவரை இந்த வாரம் சந்தித்தோம் .

முதல்வர் லலிதா முரளி   லல்லிஸ் கிச்சன் என்ற பெயரில் சமையல் குறிப்பு வெளியிடுவது இவர் சிறப்பு . மிகுந்த பக்குவத்துடன் அழகான விதத்தில் நட்பு வட்டத்தை உள்ளார்ந்த அன்புடன்  கையாள்வது கூடுதல் சிறப்பு.  "என்  மகிழ்ச்சியின் சாவி என் குடும்பம் " என்கிறார் இவர் .

லலிதா முரளி   : 

சமூக வலைத்தளம் என்றாலே  100% பாதுகாப்பு எதிர்பாக்க முடியாது, எல்லா இடங்களிலும்  பெண்களுக்கு எதோ ஒரு வகையில், அச்சுறுத்தல், புகைப்படத்தை மோசமான தளத்தில் பகிர்வது, மற்றவர்களுக்குப் பிடித்த கட்சிக்கு எதிராக பேசினாலோ, அக்கட்சியின் ஆட்சி பற்றி விமர்சித்தாலோ, அப்பெண்களின் நடத்தைப் பற்றியும் அவர்கள் கணவர் குடும்பம் பற்றியும் மிக கேவலமா விமர்சிப்பார்கள்,

பெண்கள் எந்த வகையிலும் தனித்து இயங்குவதோ, சுதந்திரமாக இயங்குவதயோ இவர்கள் விரும்புவது இல்லை, ஆனால் பெண்களுக்கு அப்போது இல்லாமல் இப்பொழுது, தங்கள் கருத்துகளை வெளியிடவும், சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு சிறந்த முறையில் தங்களுடைய வியாபாரத்தை பெருக்கவும்,நல்ல நண்பர்கள் கிடைக்கவும், நண்பர்கள் மூலம் வேலை வாய்ப்பு தளமாகவும் சோசியல் மீடியா கிடைத்துள்ளது,

மிகவும் பாதுகாப்பாக  நெருங்கிய நேரில் பார்த்த நண்பர்கள் இவர்கள் மூலம் நண்பர்களை இணைத்துக் கொள்ளலாம், பிசினஸ் செய்யும் பெண்கள் அரசியலில் உள்ள பெண்கள் அப்படி பார்த்து பார்த்து இணைப்பது கடினம்,

"ஃபோட்டோ ஷேர் பண்றியா பண்ணிக்கோ, தப்பா பேசறயா பேசிக்கோ, உங்கள் விமர்சனம் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது, என்  மகிழ்ச்சியின் சாவி என் குடும்பம் மனம் சார்ந்ததுன்னு அசால்ட்டா கடந்து போயிடனும் . எந்த விமர்சனமுமே புதியதாக ஒன்று வரும் வரை தான்,.நம்மைப் பற்றி நம் நடத்தையைப் பற்றி விமர்சித்து மனதளவில் நம்மை பலவீனமாக்க முயல்பவர்களுக்கு நாம் தரும் உச்ச பட்ச   தண்டனை சிரித்து கடப்பதே,  சியர்ஸ் பெண்களே.!.

அடுத்து நாம் சந்தித்தவர் யாழ் மொழி.  ஆடை வடிவமைப்பாளர் . கோவையில் ஆடை அணிகலன்களை விற்பனை செய்யும் "நளினம் " விற்பனையகத்தை நடத்தி வரும்  சமூக செயற்பாட்டாளர் . 

யாழ் மொழி  : 

"பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் முகம் அறியாதவர்களே நம் நட்புகளாக தொடர்கிறோம். அவர்கள் வாழும் சூழல் அவர்களது குணம் பழகும் பண்பு, அவர்கள் செய்யும் பணி, குடும்ப உறவுகளின் புரிதல்கள் என எல்லாம் கலந்து நாம் பார்க்கின்ற புரிந்து கொள்கின்ற ஒரு விஷயத்தை அவர்கள் வேறு வடிவில் புரிந்து கொள்ள பலவிதமான சாத்திய கூறுகள் உள்ளது. 

 அதனால் அதிகம் முரண்படாமலும் நம் கருத்தில் நாம் வலு இழக்காமலும் சொல்ல வேண்டியதை பகிர வேண்டியதை அவசியமானதை உணர்ந்து பதிவுகளை இடுவதும் பகிர்ந்து கொள்வதும் அழகான நட்புறவோடு தொடர வழிவகுக்கும். குறிப்பாக பெண்கள் இங்கு தங்களது தனித்திறமைகளை   ,அதன் மூலம் பெற்ற வெற்றிகளை நிறைவான வாழ்க்கை முறையை பகிர்ந்து கொள்வது நமது அடுத்த தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுதலாக அமைகிறது."

இருவருக்கும் நன்றி 

மேலும் சில தோழிகளை அடுத்த வாரம்    சந்திப்போம் 

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

தொடரும் 

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...