Sunday, April 28, 2019



ஒரு நிஜமான  "கனா " -   ஆசியாவின் சாம்பியன்
-கோமதி மாரிமுத்து

மரியா  சிவானந்தம்




சில மாதங்களுக்கு முன் 'கனா ' என்ற தமிழ்  திரைப்படம் வெளியானது/ , ஒரு பின் தங்கிய கிராமத்தைச்  சேர்ந்த இளம் பெண் கௌசல்யா முருகேசன் , கிரிக்கெட் வீராங்கணையாகும்  'கனா ' வுடன் போராடி ஜெயிப்பதைப் பற்றி சொல்லிய படம் அது. கிராமிய பின்புலத்தில் , வசதியற்ற சூழலில் வாழும் இளம் பெண் 'விளையாட்டில் சாதிப்பது என்பது எத்தனை கடினமான காரியம் என்பதை , அரசியல் , பணபலம்  சமுக சூழல், பெண்களை  ஒடுக்கும் கட்டுப்பாடுகள்  என்று அத்தனை காரணிகளையும் உணர்ச்சிப் பொங்க விவரித்த படம்.

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ,  தந்தையாக  சத்யராஜ் , கோச் சிவகார்த்திகேயன் என எல்லோரும் சிறந்த நடிப்பைத் தந்த படம். படத்தைப்  பார்க்கும் போதே எனக்குக்  கண்ணீர் பெருக்கெடுத்தது . இந்த சமூகம் யாருக்கானது ? ஏழைகளால் எதையும் சாதிக்க முடியாதா?  " என்ற கேள்விகளால் தூக்கம் தொலைத்தேன். ஆனால் இன்று ஒரு 'கோமதி மாரிமுத்து ' தடகள விளையாட்டில் சாதனை படைத்து , நம்  கவலைகளைத் துடைத்திருக்கிறர். இந்த நாடு எல்லோருக்கும் ஆனது என்பதை நிறுவி இருக்கிறார் .  

திரையில் ஒரு  "கௌசல்யா முருகேசன் ,"நிஜத்தில் ஒரு ' கோமதி மாரிமுத்து ' இங்கும் ஒரு கனவு நனவாகி இருக்கிறது . 






ஏப்ரல் 22 ஆம் தேதி, திருச்சிக்கு 30 கி.மி தொலைவில் உள்ள முடிக்கண்டம் என்ற அடிப்படை வசதிகள் அற்ற கிராமம்  . அரசு வழங்கும் இலவச தொகுப்பு  வீட்டில் ராசாத்தி அம்மா  தடுமாறிக் கொண்டிருக்கிறார் ,அவருக்கு  டிவி பெட்டியை இயக்கத் தெரியவில்லை . கடல் கடந்த கத்தார் நாட்டில் நடக்கும் தடகளப் போட்டியில் அவள் மகள் கோமதி அன்று கலந்துக் கொள்கிறாள் . குழப்பமும், கவலையும் ஒன்று சேர வெறித்துக்  கொண்டிருந்த  போது , ஒரு மக்கள் கூட்டமே அவர் இல்லத்தில் நுழைந்து ,'உன் மகள் அந்த போட்டியில் தங்க மெடல் வாங்கி இருக்கிறாள் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்த போது , கண்ணீரும் ,சிரிப்பும்  கலந்து பொங்கியது அந்த தாய்க்கு  .ஆம், அவள் மகள் சாதித்து விட்டாள் .!




கத்தாரின் தலைநகர் தோஹாவில்  ஆசிய நாடுகளுக்கிடையே நடந்த  23 ஆம் தடகளப் போட்டியில் 800 மீ ஓட்டப் பந்தயத்தில் இலக்கை 2:02.70 நிமிட நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு இந்த தொடரில் கிடைத்த முதல் தங்கப் பதக்கம் , இரண்டாவது தங்கப்பதக்கம் 1500 மீட்டர் தடகளப் போட்டியில் முதலாவது வந்த கேரளத்தை சார்ந்த 

 பந்தயம் துவங்கிய போது ஆறாவது இடத்தில் இருந்த கோமதி, பிறகு வேகம் பிடித்து  , கடைசி 200 மீட்டரில் கஜகஸ்தான் மற்றும் சீனாவை சேர்ந்த வீராங்கனைகளை கடந்து முதலிடத்தை பிடித்து ,  தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .இதற்கு முன்னர் 2013 ஆண்டு நடைபெற்ற இதே ஆசிய போட்டியில் ஏழாவது இடம் பெற்ற கோமதி ,  2015ஆம்  ஆண்டு நான்காவது இடத்தை பெற முடிந்தது. விடா முயற்சியும், இடைவிடா பயிற்சியும், தன்னம்பிக்கையும் இன்று இவருக்கு ஆசிய  சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது. 

இந்த விருது பெற  இவர் தந்த உழைப்பு, இவரின் அர்ப்பணிப்பு  வீணாகவில்லை .முடிகண்டத்தில் ஏழை விவசாயி மாரிமுத்துவின்  கடைசி மகளாக பிறந்த கோமதிக்கு ஒரு  அண்ணாவும், இரு அக்காக்களும் உடன் பிறந்தவர். இளம் வயதில் இருந்தே இவருக்கு தடகள விளையாட்டில்  ஆர்வம் இருந்ததைக்  கண்ட இவர் தந்தை , எதிர்ப்புகளுக்கிடையில் தன் ஒத்துழைப்பைத் தந்தார் , , மாரிமுத்து மகள்  சைக்கிளில் வைத்து பயிற்சிக்கு அழைத்துச் செல்வாராம் . படிப்படியாக இவர் தடகளப்  போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கி குவித்தார். வருமான வரித்துறையில் பணியில் சேர்ந்தார் .பணியில் சேர்ந்த அடுத்த ஆண்டே அவர் தந்தை புற்று நோயில் இறந்து விட்டார். அதன் பின் அவருக்கு ஆர்வத்துடன் உற்சாகப்படுத்தி பயிற்சி தந்த பயிற்சியாளர் காந்தியும் இறந்தார். இத்தனை தடைகளையும் மீறி அவர் தொடர்  பயிற்சியை விடவில்லை . தொடர்ந்து பத்தாண்டுகளாக களத்தில்  உள்ள .கோமதிக்கு  இந்த வெற்றி பெரும் மகிழ்சசியைத் தந்துள்ளது.  




"தங்கம் வெல்வது  என் வாழ்நாள் கனவாக இருந்தது . ஒருமுறையேனும் இது நிறைவேறுமா என்று காத்திருந்தேன். அந்த போட்டிகளின்போது அங்கிருந்த இந்தியர்கள் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர் . இறுதி 50 மீட்டர் இருக்கும் பொது நான் வெற்றி பெறுவேன் என்பதை உணர்ந்துக் கொண்டேன் .வேகமாக ஓடி வெற்றிக்கு கோட்டைத் தொட்ட போது , இரு கைகளையும் உயர்த்தி என் வெற்றியைக் கொண்டாடினேன் .இனி என் இலக்கு ஒலிம்பிக்ஸ் "என்று ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் .


கோமதியின் சொற்கள் , இவரைப்போல சாதிக்க  துடிக்கும் அனைவருக்கும் புது உத்வேகத்தைத் தருகிறது.  மைதானம் இல்லாத ஊரில்  வாழ்ந்தாலும் , வறுமை துரத்தி அடித்தாலும் ,சலுகையின் கரங்கள் எட்டா தூரத்தில்  இருந்தாலும் , இவர்கள் காணும் கனவும், அது மெய்ப்பட இவர்கள் சிந்தும் வியர்வையும் , பின் தொடரும் வெற்றிகளும்  'கோமதிகளை ' அடையாளம் காட்டுகின்றன. மண்ணில் புதைந்த  இந்த வைரங்கள் அழுத்தப்பட ,அழுத்தப்பட , இவர்கள் மதிப்பு உயருகிறது.ஒருநாள் அது பட்டைத் தீட்டப்பட்டு ஜொலிக்கிறது 


மதிப்பெண்களை மட்டுமே குழந்தைகளின் இலக்காக காட்டும் பெற்றோர் நாம். அதை விடுத்து  விளையாட்டில் சாதிக்க வசதிகள் வேண்டும், சரியான வாய்ப்புகள் வேண்டும் ,நம் நாட்டில் இன்று நிலவும் சமூக ,அரசியல் சூழலும் , விளையாட்டுத் துறையில் உள்ள ஊழல்களும் , அத்துறையில் தடம்பதிக்க நினைப்பவரைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. "படித்து, முடித்து கை  நிறைய சம்பாதிக்க துரத்தும் " சமூக அமைப்பில்  , விளையாட்டு  இரண்டாம் தேர்வாகவே உள்ளது . இவர்களுக்கு எல்லாம்  அவ்வபபோது ஒரு பி.டி உஷாவோ ,அஷ்வினி நாச்சப்பாவோ அல்லது கோமதி மாரிமுத்துவோ வந்து உற்சாகம் தருகிறார்கள் .   இத சாதனைகளை செய்பவர்கள் பலர்  வறுமையைப் புறந்தள்ளி , சாதனைகளை சூடிக் கொண்டவர்கள் ,அடித்தட்டு மக்கள் அனுபவிக்கும் துயர்களை ருசி பார்த்தவர் 

இன்று சென்னை திரும்பியுள்ள கோமதி மாரிமுத்து , விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் , 'மிக கடினமாக உழைத்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன். சாப்பாடு, மைதானம் ,பஸ் வசதி கூட இல்லாத  கிராமத்தில் இருந்து வந்துள்ளேன். என் முதல் கோரிக்கை என் கிராமத்துக்கு அரசு பச வசதி செய்து தரவேண்டும் "என்று கூறியுள்ளார் . அவர் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் 

கோமதிக்கு இனி பரிசுகள் அறிவிக்கப்டும். அரசு அவரை சரியான விதத்தில் கௌரவிக்கும், கௌரவிக்க  வேண்டும். விளமபரதாரர்கள் அவரை உயரத்தில் கொண்டு செல்வர். இதுவரை அவருக்கு எவ்வித்திலும் பயன்படாத, எவ்விதத்திலும் கை நீட்டி உதவாத   அவர் "சாதி" அவரைச் சொந்தம் கொண்டாடும் . 

இந்த வெற்றி கொண்டாட்டங்களில் உறைந்து விடாமல்  , கோமதி தன் கனவினை விரிவா,க்க வேண்டும் . ஆசிய தடகளப் போட்டியின் வெற்றி , அவரின்  ஒலிம்பிக் வெற்றியின் முதல் படியாக இருக்க வேண்டும் ..பல கோமதிகள் இத்தமிழ் மண்ணில் உருவாக்க வேண்டும் .

 ,வறுமை என்பதெல்லாம் தன்னம்பிக்கை, உழைப்பு , பயிற்சி  உடையவருக்கு தடைக்கல் அல்ல .ஏனெனில் 

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர் (குறள் -620)

GET ,SET ,GO

VIKTAKAVI- 27/4/2019

********************************************************************************************















No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...