தொலைந்த அடையாளங்கள்
மரியா சிவானந்தம்
உங்களுக்கு இவை நினைவிருக்கிறதா ?
மாடப்பிறையில் ஒளிர்விடும் அகல் விளக்கு .. சாணம் தெளித்து, அரிசி மாவில் கோலம் எழுதிய இளம் பச்சை நிறத்தில் மினுங்கும் வாசல்.. செம்மண் தீட்டிய மண் தரை. புகை மண்டிய சமையல் கட்டின் விறகடுப்பு.. சமைக்க பரிமாற மண். பித்தளை , செம்பு பாத்திரங்கள். முன் வாசல் மர நிழலில் கயிற்றுக் கட்டில் .முற்றத்தில் படரும் முல்லை . தோட்டத்தில் கன்றுடன் பசு.
தமிழ் மண்ணின் வாழ்வியல் சார்ந்த இந்த அடையாளங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பார்த்த நினைவிருந்தால் உங்கள் வயது ஐம்பது ப்ளஸ் என்று பொருள் .
தமிழகத்தின் அடையாளங்கள் மாறிக் கொண்டே வருகிறது . கடந்த இருபது வருடங்களில், நம் இல்லம், உணவு. உடை, வழிபாடு, திருமணம் ,கொண்டாட்டங்கள் எல்லாவற்றிலும் ஒரு பெரிய மாறுதல் நிகழ்ந்துள்ளது .தமிழர் வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி , இப்போது ஒரு கலப்புக் கலாச்சாரத்தை நாம் கடை பிடிக்கிறோம். நம் பழக்க வழக்கங்களில் வடநாட்டு கலாச்சாரமும் , மேற்கத்திய கலாச்சாரமும் புகுந்து விட்டதையும் ,அதை நாம் விரும்பி பின்பற்ற ஆரம்பித்து விட்டதையும் நாம் இன்னும் அறியாமலேயே இருக்கிறோம் .
சென்னையில் என் நாற்பதாண்டு கால நண்பரின் மகன் திருமணத்துக்குச் சென்றேன் .அவர் என்னுடன் ஒன்றாக இலாகாவில் பயிற்சி எடுத்தவர். பின்னர் வெவ்வேறு இடங்களில் பணி செய்து, பதவி உயர்வுகள் பெற்று இறுதியில் சென்னை அலுவலகத்தில் இருந்தார் . திருமண வரவேற்பு ஒரு ரிசார்ட்டில் நடந்தது . வரவேற்பில் மணமகன் குதிரையில் வந்து இறங்கினார் .மணமகன் உட்பட ஆண்கள் பளபளக்கும் ஷெர்வானியிலும் ,பெண்கள் லெஹன்கா, காக்ராவிலும் நடமாடினார்கள் . சேலை தவிர வேறு உடை அணிந்திராத நண்பரின் மனைவி ,சேலையை 'மார்வாரி 'ஸ்டைலில் உடுத்தி இருந்தார் .
பஃபே உணவு அரங்கில் , இட்லியைத் தேடி உண்டோம். எல்லாமே பெயர் தெரியாத வட இந்திய உணவுகள் . பின்னணியில் ஷெனாய் இசை சாரலாக பொழிந்துக் கொண்டிருந்தது மணமகள் வட இந்தியப் பெண் . எனவே அதே ஸ்டைலில் நடத்துவதாக நண்பர் குறிப்பிட்டார். தமிழகத்தின் ஒரு கடைக்கோடி கிராமத்தின் இளைஞன் ஒருவன் உயர்வு பெற்று , ஒரு சிறப்பான திருமணத்தை, ஆர்ப்பாட்டமாக நடத்தும் மகிழ்ச்சி அவர் முகத்தில் பளீரிட்டது. சாதிய கட்டுகளை உடைத்து சமுதாயத்தில் சாதித்த பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது .
இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. திருமணம் மட்டுமல்ல, தமிழர் வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் வந்து விட்டது. 'விருந்தோம்பல் தமிழரின் அடிப்படை பண்பாடு. அம்மாக்களும், சித்திகளும் ,அத்தைகளும் சேர்ந்து ஐம்பது பேருக்கான உணவைத் தயாரிப்பதும் , விருந்தினரை விழுந்து ,விழுந்து உபசரிப்பதுமான காலம் போய் விட்டது .இருபது பேருக்கு என்றாலும் சமைக்க நேரமும் ,பொறுமையும் இன்றி ,கேட்டரிங் சர்வீஸ் உதவியை அழைப்பது வாடிக்கையாகி விட்டது .இன்னும் குறைவான எண்ணிக்கை என்றால் ஸ்விக்கி அல்லது ஸோமோட்டோ இருக்கவே இருக்கிறது.
பள்ளி விடுமுறைக் காலங்களில் பாட்டி வீட்டில் ,பெரியப்பா வீட்டில் குழந்தைகள் ஒன்றாக தங்கி ,ஒன்றாக விளையாடி உண்டு , உறங்கி இருந்த நினைவுகள் எழுகின்றன . இப்போது உறவினர் வீடு செல்லும் போது , அந்நியமாகவே உணருகிறோம். உரத்த குரலில் தொலைக்காட்சி பேசிக் கொண்டிருக்க, விளம்பர இடைவேளைகளில் உபசரிப்பும் ,உரையாடலும் நடக்கிறது. சட்டென்று மனதில் ஒரு புழுக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. சில மணித்துளிகளில் கை கூப்பி விடை பெறுகிறோம். .எப்போதேனும் விசேச தினங்களில் சந்திக்கையில் ஒரு கையசைப்பில் அன்பை வெளிப்படுத்தி முடித்துக் கொள்கிறோம் .
தமிழ் மண்ணின் வாசம் இன்று கிராமங்களில் கூட இல்லை. ஜீன்சும் , சுடிதாரும், விரித்த கூந்தலும் , திலகம் இல்லாத நெற்றியும் அங்கே பார்க்க முடிகிறது நகர மயமாக்கல் , பொருளாதார வளர்ச்சி தாராளமயமாக்கல் ,நுகர்வு கலாச்சாரம் இவை எல்லாமே முன்பு வாழ்ந்த எளிமையான , இனிமையான வாழ்க்கையைப் பறித்து விட்டன . மிகக் குறைந்த தேவைகளைக் கொண்டிருந்த நம் பெற்றோரின் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் , வசதிகள் மிகுந்த வாழ்க்கை நமக்கு வாய்த்துள்ளது .அதில் நம் அடையாளங்களை நாம் அறியாமலே தொலைத்து விட்டோம் . .
நம் கலாச்சார படிமங்கள் மேல் புகை படிந்துள்ளன . வருடம் ஒரு முறை வரும் சித்திரைத் திருநாளும் , தைத்திருநாளும் 'நாம் தமிழர் ' என்று நமக்கு நினைவுபடுத்துகிறது . நம் வீட்டு ஆண்கள் அலமாரியில் மடித்து வைத்துள்ள வேட்டிகளை எடுத்து உடுத்திக் கொள்கிறார்கள் .இளம் பெண்கள் பாவாடை ,தாவணியில் செல்பி எடுத்து முகப்பு படமாக வைத்துக் கொள்கிறார்கள் .மறுநாளே அவர்கள் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு மாற வேண்டிய சூழல் வந்து விடுகிறது .
தமிழர் பண்பாடும் , தமிழ் மொழி வளர்ச்சியும் இரு இணை கோடுகளாக பயணிக்க வேண்டும் . ஆனால் தனியார் பள்ளிகளில் தமிழைக் கற்பிக்கும் ஆசிரியைகள் ,ஆங்கிலத்திலேயே கற்பிக்கிறார்கள் . தமிழைத் தவறின்றி எழுத இவர்கள் கற்றுக்கொள்ள முனைவதில்லை. தமிழ் இலக்கியங்களின் சுவை பருக , இவர்கள் தயாரில்லை. தமிழ் வளர்ந்த அறிஞர்களாம் உ வே .சா , கி.வ.ஜா, மு.வ . திரு, வி.க , நா. பா, லா .ச .ரா இவர்கள் எல்லோரும் யாரென்று இன்றைய இளைஞரிடம் கேட்டுப் பாருங்கள். கூகிள் தட்டி பார்ப்பார்கள். .பாரதியையும் , பாரதிதாசனையும் விரும்பி படிப்பவர்களை இத்தலைமுறையில் விரல் விட்டு எண்ணி விடலாம்.
நம் வீர விளையாட்டுகள் காணாமல் போய் விட்டன . கும்மி ,கோலாட்டம் போன்ற பெண்களுக்கான ஆட்டங்கள் இல்லை . நமது நாட்டுப்புற கலைகள் நலிவடைந்து விட்டது . நாட்டுப்புறக் கலைஞர்கள் வேறு தொழில் தெரியாமல் முடங்கி விட்டனர். தாலாட்டு பாடும் தாய்மார்களைக் காணவில்லை . தமிழ்க்கடவுள்கள் குடியிருந்த நம் பூஜை அறைகளில் சாஸ்தாக்களும், சாய் பாபாக்களும் அமர்ந்திருக்கிறார்கள் . நம் உணவில் தமிழ் இல்லை . உணர்வில் தமிழ் இல்லை , நம் பெயரிலும் தமிழ் இல்லை .
மாற்றம் ஒன்றே மாறாதது . கால ஓட்டத்தில் பழையன கழிதலும், புதியன புகுதலும் தவிர்க்க முடியாது . நமது உடைகள் மாறியதும் ,உணவு மாறியதும் 'கலாச்சார சீரழிவு ' என்று கூப்பாடு போடுவதும் எனக்கு உடன்பாடில்லை .வசதியானதை உடுத்திக் கொள்ளலாம் வயிறு ஏற்பதை உண்ணலாம். ஆனால் இந்த மண்ணுக்குரிய பாரம்பரியத்தை, அழகியல் நிறைந்த வழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் . .
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்