Wednesday, May 10, 2023

 என்றும் வாழும் தமிழ் 

மரியா சிவானந்தம் 

ஒரு  மனிதனின்  வாழ்விலும் ,வளர்ச்சியிலும்  முழுமையான பங்கு பெறுவது  அவனது தாய் மொழி .மொழி நம் பண்பாட்டின் அடையாளம் , நம்  கலாச்சாரத்தின் முகவரி .பாரதிதாசன் சொல்வது போல,  நம் தாய் மொழியாம் தமிழ் மொழி  நம் உயர்வுக்கு வான்,நம் அசதிக்குச் சுடர் தந்த தேன்  .ஆம் , தமிழுக்கு அமுதென்று பேர்! 

சமீபத்தில், பன்னாட்டு தாய் மொழி தினமான பிப்ரவரி 21ஆம் தேதியன்று  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் "தமிழைத் தேடி" என்னும்  விழிப்புணர்வு  பயணத்தை மேற்கொண்டுள்ளார் .சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து மதுரை நோக்கிச் செல்லும் இந்த பரப்புரை பயணம் மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக பயணித்து மதுரையில் வரும் பிப்ரவரி 28-ம் தேதி நிறைவு பெறுகிறது. 

"சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குதல், பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பயிற்று மொழி, கோவில்களில் தமிழில்  வழிபாடு, தமிழிசை வளர்ச்சி, தமிழக அரசின் அரசாணைகள் முழுமையாக தமிழில் வெளியிடப்படுதல்"   உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த பயணத்தை தமிழ் அறிஞர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் இந்த பயணத்தை நடத்துகிறார் . 

தவிர ,அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழில் பெயர் பலகை இருப்பதை உறுதி செய்வதும், பிறமொழியில் பெயர்ப்பலகை இருந்தால் அதை கருப்பு அடித்து அழிப்பதும்  இப்பயணத்தின் நோக்கம். தமிழைத்தேடும் இந்த பரப்புரை பயணத்தில் ,மக்கள் பிறமொழி கலவாமல் பேச விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இப்பயணத்தின் மற்றொரு நோக்கமாகும் . அவ்வாறு பிறமொழி கலந்து பேச நேர்ந்தால் தனக்குத்தானே அபராதம் விதித்துக் கொண்டதாகவும் பேசி  இருக்கிறார்.இரண்டு முறை  இவ்வாறு பேசி இரண்டாயிரம் ரூபாய் அபராதம் செலுத்திக் கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார் .

மருத்துவர் ராமதாஸின் நோக்கம் உயர்வானது. தமிழ் வளர்ச்சிக்கு அவர் எடுக்க தூண்டும் நடவடிக்கைகள் எல்லாமே தேவையானவை.  அதில் அரசியல் நோக்கம் இருப்பதாக கருத  வேண்டியதில்லை. ஆனால் தமிழ் மொழி அழிவை நோக்கி போய் கொண்டு இருப்பதாக அவர் சொல்வதை ஏற்க முடியாது . ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட ஒரு  மொழியை எவராலும் அழித்து விட முடியாது. 

தமிழன்னை தன்னைத்தானே சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்பவள். சங்ககாலம் தொட்டு, இன்றைய கணினி காலம் வரை எல்லா  காலங்களிலும் தமிழ் வளர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது . கணினி வந்த போது ,  நிரல்கள் எல்லாமே ஆங்கிலத்தில் தான். கணினி மொழியும் ஆங்கிலத்தில் தான். ஆனால் வெகு  விரைவில்  என்று வித விதமாக தமிழ் எழுத்துருக்குகள் (tamil fonts) உருவாக்கப்பட்டன. தமிழில் தட்டச்சு அறியாதவர்கள் கூட  ஆங்கில கீபோர்டை உபயோகித்து தமிழில் டைப் செய்ய முரசு ,அழகி போன்ற எழுத்துருக்கள் தோன்றி கணினி உலகில் ஒரு   தமிழ் புரட்சியை உருவாக்கி உள்ளன. 

"நீங்க தமிழில் பேசுங்க, நான் தட்டச்சு செய்கிறேன்' என்னும்  Speech to text இப்போது பெரிய வரம். இது போன்ற வசதிகளும் , தமிழ்  எழுத்துருக்களும்  சமூக வலைத்தளங்களில் பலரை கருத்து பரிமாற்றம் செய்ய வைத்துள்ளது.மிக சாதாரணமாக எழுத தொடங்கிய பலர் இப்போது சில ஆண்டுகளில் பெயரும் , புகழும் கொண்ட எழுத்தாளர்களாக புதிய அவதாரம் எடுப்பதை நாம் காண்கிறோம் . இவற்றை எல்லாம் தமிழ் வளர்ச்சியின் புதிய பரிணாமமாக நாம் தாராளமாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். 

பிறமொழி கலவாமல் நாம் பேச முயற்சி செய்யலாம் .ஆனால் அது எவ்வளவு தூரம் எதார்த்ததுடன் ஒத்துப் போகும் என்று நாம் பார்க்க  வேண்டும் . பஸ், காபி, மொபைல் , டிவி , கார்.சோபா  போன்று நாம் அனுதினம் உபயோகிக்கும் பல பொருட்கள் தமிழாகி ஆண்டுகள் பலவாயின. இது போன்ற சொற்களை தமிழ்ப்படுத்தி பேசும் போது, கேட்பவரை சிரமத்துக்குள்ளாக்கி நம்மை சங்கடத்துக்குள்ளாக்கும் என்பது என் கருத்து .  

நாம் கவலையடைய வேண்டியது அடுத்த தலைமுறையைப் பற்றி. இப்போது பள்ளிகளில் படிக்கும்  குழந்தைகள் மட்டுமல்ல ,கல்லூரி படிப்பவர்களும் ,படித்து முடித்தவர்களும் தமிழைப் பிழை இன்றி எழுத முடியாதவர்களாக இருப்பதைக் காணும் போது நமக்கு  கலக்கமாக இருக்கிறது. ஒற்றுப்பிழை மட்டுமன்றி எழுத்துப் பிழைகளுடன்   எழுதுவதை படிக்கும் போது நமக்குள் ஏதோ   ஒன்று  உடைகிறது. 

பெருகி வரும் ஆங்கிலப்பள்ளிகளில், தமிழ் பேச தடை விதித்துள்ளதை  நாம் காண முடியும். English monitor எனப்படும் ஒரு மாணவரை இதற்கென்றே நியமித்து தமிழ் வகுப்பு தவிர, மற்ற நேரங்களில் தமிழில் பேசுபவர்களைக் கண்காணிப்பது இந்த மானிட்டரின் வேலை . தமிழில் பேசினால், அபராதம் உள்ளிட்ட  தண்டனைகளை வழங்குவதும் இப்பள்ளிகளில் வழக்கம் . இதைக் குறித்து எந்த பெற்றோரும் ஆசிரியர் - பெற்றோர்  சந்திப்பின் போது தம் எதிர்ப்பை தெரிவிப்பதில்லை . 

நம் குழந்தை தமிழில் பேசுகிறானோ, பிழையின்றி எழுதுகிறானோ, ஆங்கிலத்தில் பேசினால் போதும் என்றல்லவா நம்  எண்ணம் இருக்கிறது .இன்னும் சில பள்ளிகள் ,குழந்தைகள் வீட்டில் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றே வலியுறுத்துவதையும் நாம் வேதனையுடன் பார்க்கிறோம் .ஆங்கிலப்பள்ளிகள் மட்டுமல்ல,அரசுப் பள்ளியில் படிப்பவர்களும் தமிழில் பிழையின்றி எழுத பயிறுவிக்கப்படுவதில்லை என்பது மற்றும் ஒரு கசப்பான நிதர்சனம்.

இளமையில் கல்வி ,சிலை மேல் எழுத்து ' என்பது தமிழைக் கற்கவும் பொருந்தும் .   சிறு வயதில் இருந்தே தமிழில் பிழையின்றி பேச ,எழுத நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும் .பள்ளிகள் அதை செய்ய முற்படாத போது, பெற்றவர்கள் அதை செய்ய வேண்டும். அதில் சமரசம் செய்துக் கொள்ள தேவை இல்லை . எனக்கு எட்டு வயதாகும் போதே, என்னுடைய அம்மா என்னிடம் தபால் கவரைக் கொடுத்து, ஊரில் உள்ள உறவினருக்கு கடிதம் எழுத வைப்பார்கள். எழுதும் போதே அதை திருத்தவும் செய்வார்கள், அது நல்ல பயிற்சியாக, இன்று நினைவு கூறுகிறேன்.  

மொழி வளர்க்க சிறந்த தளம் நம் இல்லம் தான். திருக்குறள், பாரதி பாடல்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள்  போன்ற எளிய இலக்கியங்களை நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினால், பின்னாளில் அவர்கள் ஏனைய இலக்கியங்களைத் தேடிப் படிப்பார்கள். இணையதளத்தில், யூடியூபில்  ஏகப்பட்ட காணொளிகள் குழ்நதைகளுக்காக உள்ளன .சிறுகதைகள் ,பாடல்கள் என்று அந்த உலகம் பரந்துள்ளது. அவ்வுலகை  நம் சிறார்கள் அனுபவிக்க வேண்டும்.

தமிழினி மெல்ல சாகும் என்று பாரதி பாடலின் முதல் வரியை மட்டும் மேற்கோள் காட்டுபவர்கள் மீதி வரிகளையும் படிப்பது நல்லது . எட்டு திசையெங்கும் கலைச் செல்வங்களை சேர்க்க முயலுவோம். அதுவே தமிழ் வாழவும், உயரவும் வழியாகும் .

மெல்லத் தமிழினி சாகும் -அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்த பேதை உரைத்தான் -ஆ !

இந்த வசை எனக்கெய்திடலாமோ ?

சென்றிடுவீர் எட்டு திக்கும் -கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் (பாரதி )







No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...