கை கொடுக்கும் நண்பன்
மரியா சிவானந்தம்
இயற்கையின் வலிமை அதன் சீற்றத்தின் போது அறியப்படுகிறது
கால்கோள், வெள்ளம், நில நடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் கட்டற்ற மனித சக்தியின் இறுமாப்பை கலைத்து விடுகிறது. தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை மனிதன் உணராமல் இருக்கும் போது இயற்கை தன் இருப்பை காட்டி விடுகிறது. வல்லமை மிக்க தன் கரங்களால் மனிதனை அசைத்துப் போடுகிறது .
சென்ற வாரம் ஆறாம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்நாடுகளை மட்டுமல்ல, உலகத்தையே கலங்க வைத்து விட்டது. துருக்கியின் காஜியன்டப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. அடுத்தொரு பூகம்பம் 7.5 ரிக்டர் அளவில் தோன்றியது. அதன் பின் தொடர்ந்து 312 முறை நிலநடுக்கம் ஏற்பட அந்நாடுகள் அந்த பேரிடரை சந்திக்க முடியாமல் தடுமாறுகின்றன. துருக்கியின் பத்து மாநிலங்கள் மற்றும் சிரியாவின் வடக்குப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன .
ஓங்கி உயர்ந்த கான்கிரீட் மலைகள் போன்ற கட்டிடங்கள் சரிந்து விழுந்து, தரை மட்டமாகி விட அதிகாலை உறக்கத்தில் இருந்த துருக்கி சிரியா மக்கள் , தம்மைச் சுற்றி நிகழ்வதை அறியாமலேயே இடிபாடுகளில் சிக்கி உயிர் துறந்தனர் . ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். எங்கும் கேட்கும் அழுகுரல் நம் இதயத்தைப் இரு கரம் கொண்டு அழுத்துகிறது. ஒரு பதினேழு வினாடிகள் பல லட்சம் பேருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு, பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கியுள்ளது
.இன்னமும் நடந்து கொண்டிருக்கும் மீட்பு பணிகளில் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பவரை மீட்கும் பணி நடந்துக் கொண்டே இருக்கிறது. துருக்கி இராணுவம், காவல்படை , தீயணைப்பு படை என 26,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உடனடியாக மீட்புப்பணிகளில் இறங்கினார்கள். இவர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் மீட்புப்பணியில் களத்தில் இருக்கிறார்கள்.
இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நாள் வரை சுமார் 42,000 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அதிசயமாக , அற்புதமாக ஒன்பது நாட்களுக்குப் பிறகும் இடிபாடுகளில் சிக்கிய சிலரை உயிருடன் மீட்பதைக் காணுகையில் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு நம்மிடம் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் வீடிழந்து, உடமைகள் இழந்து, உறவுகளை இழந்து நடைப்பிணமாகி விட்ட அந்நாட்டு மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி, தங்க பாதுகாப்பான இடம் போன்றவற்றை ஏற்பாடு செய்யும் பொறுப்பு அந்நாட்டு அரசாங்கத்தின் தோள்களில் சுமையாக அழுத்துகிறது .
எல்லா நாடுகளும் துருக்கிக்கு உதவி செய்திட முன்வருகையில் , இந்தியா மிக மிக துரிதமாக செயல் பட்டுள்ளது. நிலநடுக்கம் நடந்த 12 மணி நேரத்துக்குள் இந்திய விமானப்படையின் C17 ஜம்போ விமானம் துருக்கியின் அடானா நகரை அடைந்தது. மருந்துகள், நிவாரணப்பொருட்கள், தேசிய பேரிடர் குழுவின் ஐம்பது வீரர்கள் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் இவர்களைக் கொண்ட அவ்விமானம் உடனடியாக அனுப்பப்பட்டது.
நம் பிரதம மந்திரி வெற்று அனுதாபச் செய்தியுடன் நிறுத்திக் கொள்ளாமல் , எல்லா மீட்புப் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார் . நேச நாடுகளுக்கு உதவிகளை அனுப்புவது இயற்கைதான். ஆனால் அரசியல் காரணங்களால் முரண்பட்ட துருக்கிக்கு இந்தியா ஓடோடி உதவி செய்வது நம் மாண்பை காட்டுவதுடன், இந்திய அரசின் மனிதாபிமானம் மிக்க செயலாகவும் மதிக்கப்படுகிறது.
இந்தியாவின் "ஆபரேசன் தோஸ்த் (Operation Dost)" எனப்படும் துருக்கி நிவாரணப்பணி இவ்வாறு முழு வீச்சில் இறங்கியது. தோஸ்த் என்றால் நண்பன் என்பது இந்தியில் மட்டுமல்ல, துருக்கிய மொழியிலும்தான். . இந்தியாவின் துருக்கி தூதுவர் பிரட் சுனேல் (Firat Sunel ) "ஆபத்து காலத்தில் உதவிக்கு வரும் நண்பனே உண்மையான நண்பன் (A friend in need is a friend indeed) என்னும் ஆங்கிலப் பழமொழியைக் கூறி தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அடுத்த நாளில் அனுப்பட்ட இரண்டு விமானங்களில் நிவாரணப் பொருட்களுடன் ஒரு மொபைல் மருத்துவமனையும், மருத்துவர் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆக்ராவின் ராணுவ மருத்துவமனையின் சார்பாக சென்ற இக்குழுவில் பொது மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களும், அவசரப்பிரிவு மருத்துவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்ரே, வெண்டிலேட்டர், இதயம் காக்கும் கருவிகள் என ஒரு மருத்துவமனையின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எல்லா கருவிகளையும் அந்த விமானங்கள் எடுத்துச் சென்றன. முப்பது படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை நம் நாட்டு மருத்துவர்களால் உடனடியாக அமைக்கப்பட்டு பல உயிர்களைக் காத்து வருகின்றனர் .
இதுவரை 7 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள மருத்துவ சாதனங்கள் இந்தியாவின் சார்பாக துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிரியாவுக்கு அனுப்பப்பட்ட 1.4 கோடி மதிப்புள்ள 72 வகை அவசர கால மருந்துகள்,7.2 டன் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. தீவிர சிகிச்சைக்கு 4 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நாடுகளில் நம் மீட்புக்குழுவினரும், மருத்துவர்களும் ஒப்பற்ற சேவை செய்து வருகிறார்கள் . இந்திய ராணுவ மருத்துவர் மேஜர்.பீனா திவாரி இரண்டரை வயதுள்ள குழந்தையைக் காப்பாற்றிய போது ,ஒரு துருக்கிய பெண்மணி அவர் கன்னத்தை மகிழ்ச்சியுடன் கடித்து முத்தமிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது .இந்தியாவின் பிம்பத்தை உலக அளவில் உயர்த்தி செல்வதாக இப்புகைப்படம் பேசப்படுகிறது .
நூறாண்டில் இல்லாத பேரழிவு இது என்று உலக சுகாதர அமைப்பு இந்த நிலநடுக்கத்தைக் குறிப்பிடுகிறது. நிலநடுக்கங்களில் இருந்து ஜப்பான் பாடம் கற்றுக் கொண்டு, அதற்கேற்ப வலுவான கட்டிடங்களை தன் நாட்டில் கட்டி வருகிறது. துருக்கியின் கட்டிடங்கள் அந்த அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. சில நொடிகளில் எல்லாம் இடிந்து விழுந்து தரை மட்டமாக்கப்பட்டு மக்கள் வாழ்வு கேள்விக்குரியதாக ஆக்கப்பட்டு விட்டது . இத்தனை நிவாரண பணிகளுக்கு இடையில் துருக்கியும், சிரியாவும் மீண்டெழுந்து வரவேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள்.
ஊடகங்களில் வெளியிடப்படும் படங்களும், வீடியோக்களும் கண்ணீரை வரவழைக்கின்றன. இறந்த தன் மகளின் கையைப் பிடித்தபடி அமர்ந்திருக்கும் தந்தை, சவமாக மீட்கப்பட்ட தந்தையின் உடலுக்கு அடியில் உயிரோடு மீட்கப்பட்ட குழந்தை, சிரியாவின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பிறந்து சில நாட்களே ஆன சிசு, 33 கட்டிடங்களுக்கு அதிபதியான கோடீஸ்வரர் சில நொடிகளில் வீதியில் தள்ளப்பட்டு, ரொட்டிகளை சேகரித்த காட்சி இவை எல்லாம் நம் இதயத்தை மட்டுமல்ல, அங்கு நாம் சேமித்து வைத்துள்ள ஆணவத்தையும் அடித்து நொறுக்குகிறது.
இப்படங்களும், வீடியோக்களும் "இதுதான் வாழ்க்கை, இவ்வளவுதான் வாழ்க்கை என்று பாடத்தை வார்த்தைகளின்றி நமக்கு போதிக்கின்றன. தவிர, கான்கிரிட் இடிபாட்டுக் குவியலின் நடுவில் பூத்திருக்கும் 'மனிதம் 'என்னும் மகத்தான பூவையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் 2.6 கோடி மக்கள் பரிதவிக்கும் அசாதரண சூழல் நிலவுகிறது. அவர்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ,உலகம் என்னும் ஒரே குடும்பத்தின் மக்கள்தாம். அவர்களுக்காக பரிதாபப் படுவதைக் காட்டிலும், .இந்திய அரசுடன் கைகோர்த்து நல்ல நண்பனாக நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய நாம் முன் வர வேண்டும் .
மலரும் மனிதம் மண்ணில் மாற்றங்களைத் தோற்றுவிக்கட்டும்
No comments:
Post a Comment