Wednesday, May 10, 2023

 ஊதாமணியை  ஒளித்து   விட்டோம் 

மரியா சிவானந்தம் 


   விடுமுறை  என்றாலே  குழந்தைகளுக்கு என்றுமே  கொண்டாட்டம் தான்.

 வீடு முழுக்க இறைந்திருக்கும் கதைப்  புத்தகங்கள், டிராயிங் நோட்டுகள், கலர் பென்சில்கள், கிரையான்கள்,    சின்னச்  சின்ன பொம்மைகள் , குறுக்கெழுத்து புத்தகங்கள் "இப்போது விடுமுறை " என்பதை வருவோருக்கு அறிவிக்கும்.  தவிர ,  'சம்மர் கேம்பு'களில் குழந்தைகளை சேர்த்து விட்டு  கையெழுத்துப் பயிற்சி, நீச்சல், வாய்ப்பாட்டு, வீணை,  நடனம், அபாகஸ், ஸ்கேட்டிங், பிரென்ச், ஜெர்மன் என்று வகுப்புகளுக்கு துரத்துகிறார்கள் பெற்றோர்கள்.  பிள்ளைகள் மேல் வெயில் விழாமலும், அவர்கள் விரல்களில்  மண் படாமலும்  பொழுது போக்க செய்வதே இந்நாளில் பெற்றோரின் லட்சியம் .

அரை நூற்றாண்டுக்கு முன் நாம் சிறுவர்களாக இருந்த போதும் விடுமுறை கொண்டாட்டத்துக்குரிய காலமாகவே இருந்தது.  வீட்டில் அடங்கி இருப்பதை அந்நாளைய குழந்தைகள் விரும்புவதில்லை .ஒரு பனங்காய் வண்டியை வைத்துக் கொண்டு ஊர் முழுதும் சுற்றி வருவான் ஒரு சிறுவன் .அவனைச் சுற்றி பத்து சிறுவர்கள் கூடவே ஓடுவார்கள். ஒரு டயர் வண்டி  போதும் அவர்களை மகிழ்ச்சியாய் வைக்க. கோலி ஆட்டம் , கிட்டிப்புள், பம்பரம், கபடி, பச்சைக்குதிரை தாண்டுதல் , சிலம்பாட்டம் என்று சிறுவர்களுக்கு விதவிதமான விளையாட்டுகள் இருந்தன .காசு செலவில்லாமல் , தெருக்களில் விளையாடிக் கொண்டு இருப்பார்கள் . "ஊரில் காயும் வெளியில் பூரா உன் தலையில்தான் இருக்கு , தெருப்புழுதி பூரா உன் சட்டையில் தான் இருக்கு "என்று அம்மாமார்கள்  தம் மகன்களை திட்டிக் கொண்டே  குளிக்க வைப்பார்கள் .

பெண்களின் உலகம் தனித்துவம் வாய்ந்தது. வீட்டில் உட்கார்ந்து விளையாட தாயம் ,பல்லாங்குழி, பரமபதம்,,கல்லாட்டம்  என்று நிறைய விளையாட்டுகள் இருந்தன. ஒரு மரப்பாச்சி பொம்மை போதும் , ஒரு சிறுமியின் பொழுது சுலபமாக போய் விடும். அதற்கு தலை வாரி, சேலை உடுத்தி அலங்கரிப்பதில்  முழுக் கவனமும் இருக்கும். தவிர சிறுவர்களைப் போலவே பெண் குழந்தைகளும்  தெருவில் இறங்கி விளையாடுவது உண்டு .

மாலை நேரத்தில் ,இரவின் மங்கிய தெரு விளக்கு  வெளிச்சத்தில் தம் தோழிகளுடன் சிறுமிகள் விளையாடுவது பார்க்கவே கவித்துவமாக இருக்கும்.    சில விளையாட்டுகளில்  சிறுவர்களையும், இரக்கப்பட்டு  சேர்த்துக் கொள்வதுண்டு. அப்போது சிறுமிகளாக இருந்த போது  நாங்கள் விளையாடிய விளையாட்டுகளை  இந்த தலைமுறை குழந்தைகள் கேள்வி பட்டிருக்க முடியாது. மொபைலில் ஆழ்ந்து ,டிவி நிகழ்சசிகளில் தொலைந்துப் போயிருக்கும் இவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய பெண்கள் விளையாட்டுகள் சிலவற்றை  இங்கு சொல்வேன் .

இது ஒரு விளையாட்டு 'ஒரு குடம்  தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்,ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சாம் ' என்று பாடிக்கொண்டே இரு சிறுமிகள்   கைகளை கோர்த்துக் கொண்டு உயர்த்தி பிடிக்க வரிசையாக மற்ற சிறுமிகள் அந்த 'கேப்பில் நுழைந்து வர வேண்டும். பத்துக் குடம் தண்ணி ஊத்தும் போது உள்ளே நுழையும் சிறுமி அந்த நான்கு கரங்களுக்குள் மாட்டிக் கொள்வாள். இருவரும் பட சொல்லியோ.ஆடச்சொல்லியோ அந்த கை சிறையில் இருந்து விடுவிப்பார்கள்.

இதே போல சிறை பிடிக்கும் மற்றொரு விளையாட்டு "சங்கிலி,புங்கிலி கதவைத் திற"  கைகளைக் கோர்த்துக் கொண்டு ஒரு குழுவே வட்டமாய் ஓடிப் பிடிக்க , மற்றொரு குழு அவ்ர்களைத் துரத்துவார்கள். யாரையாவது துரத்திப் பிடித்து சங்கிலிக்குள் அடைப்பார்கள்.

அப்போது  பாடும் பாட்டே அத்தனை அழகாய் இருக்கும் 

"சங்கிலி புங்கிலி கதவைத் திற ,

"நான் மாட்டேன் ,வேங்கை புலி" 

"ஆட்டுக்குட்டியைக் கண்டீங்களா?" 

"கண்டோம்" 

"எங்கே ?"

"வீட்டுக்குள்ளே "

"வரலாமா ?"

"வரக்கூடாது "

பிரம்மபிரயத்தனப்பட்டு, ஒரு போராட்டத்துக்குப் பின்னரே  சங்கிலிக்குள் அடைப்பட்ட  "ஆட்டுக்குட்டி " விடுவிக்கப்படும் .

ஒரு பெரிய வட்டமாக சிறுமிகள் உட்கார்ந்துக் கொள்வார்கள். பின்னால் கை கட்டி இருக்கும். ஒரு பெண் ஒளிந்துக் கொள்வாள் . தலைவியாகிய ஒரு பெண் ஒரு பாசிமலையையோ ,வளையலையோ ஓடிக் கொண்டே பின்னால் கட்டப்பட்டிருக்கும் கைகளில் ஒன்றில் போடுவாள்.அப்போது பாட்டு உச்சஸ்தாயில் பிறக்கும் .

"ஊதாமணியை ஒளித்து விட்டோம் 

கண்டு பிடித்தால் கையை தட்டுவோம்"

ஒளிந்திருக்கும் பெண் வெளியில் வந்து  "ஊதாமணி'  வைத்து இருப்பவரை கண்டு பிக்க வேண்டும் .மூணு சான்ஸ் தரப்படும். கண்டுபிடிக்க முடியவில்லை ஊதாமணி வைத்து இருப்பவர் எழுந்து  வட்டத்தைச் சுற்றி ஓட ,  அவரை துரத்தி  பிடிப்பாள் .பாவம் போல முகபாவம் வைத்து கண்டு பிடிப்பவரை ஏமாற்றுவார்கள் இப்பெண்கள் .

இன்னொரு விளையாட்டு.இதன் நிஜப்பெயர் மறந்து விட்டது. சிறுமிகள் மட்டுமே, உட்கார்ந்து விளையாடுவர் , இதற்கு பையன்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.  இரண்டு  டீமாக சிறுமிகள் பிரிவார்கள். இரண்டு டீம் லீடர் உண்டு. காய், பூ, கனி என்று ஒவ்வொரு டீமுக்கும் ஒரு தீம் இருக்கும், அதன்படி ஒரு டீம் மெம்பர்களுக்கு கத்திரிக்காய் , வெண்டைக்காய்  என்றோ அடுத்த டீம் மெம்பர்களுக்கு மல்லிப்பூ, ரோஜா என்றும் பெயர் சூட்டப்படும் . ஒரு டீமில் உள்ள ஒரு பெண்ணை  கண்ணை அடுத்த டீமின் லீடர் பொத்திக் கொண்டு, "ரோஜாப்பூ ,மெல்ல வந்து கிள்ளிப் போ " என்று அழைக்க, 'ரோஜாப்பூ' மெல்ல நடந்து வந்து கண்ணை பொத்தியவளின் மூக்கைக் கிள்ளி விட்டு போவாள் (இந்த காரணத்துக்காக பையன்களை இந்த  விளையாட்டுக்கு சேர்க்க மாட்டார்கள்).  மூக்கு எரிய ,முகம் சிவக்க , கண்ணைத் திறந்து பார்த்து தன்னை கிள்ளியது யார் என்று  சொல்ல வேண்டும் . சில சண்டைக்கார சிறுமிகள், பழைய பகையை மனதில் வைத்து நறுக் என்று கிள்ளி விடுவதும், அதனாலேயே  சீக்கிரமாக பிடிபடுவதும் உண்டு .

இது போல எத்தனையோ கேம்கள் இருக்கு ."பூப்பறிக்க வருகிறோம்" என்ற விளையாட்டும் இரு அணிகளாக  விளையாடும் ஒரு விளையாட்டு. இதெல்லாம் குழுவாக விளையாடும் விளையாட்டுகள். "புதிய பூமியில் ஜெயலலிதா தோழியருடன் "நான்தாண்டி காத்தி" என்ற பாடலில்  ஆடுவது "கிளித்தட்டு" ! சரோஜாதேவி பணக்கார குடும்பம்  படத்தில் "வாடியம்மா வாடி" என்று   'பலிஞ் சடுகுடு ஆடுவார் . மூச்சைப் பிடித்து தம் கட்டி விளையாடுவதே அந்த விளையாட்டின் அழகு . கண்ணாமூச்சி  காலத்தால் அழியாத காவிய விளையாட்டு. இன்னும் நாங்கள் குழுவாக விளையாடிய இங்கிலீஷ் கேம்ஸ் பலவுண்டு .

 இவை தவிர நொண்டி, பாண்டி, பனைக்காற்றாடி விடுதல், பட்டம் விடுதல் போன்ற எண்ணற்ற பொழுது போக்குகள் பெண் குழந்தைகளுக்கானது. ஓட்டாஞ்சில்லி (மண் பானையின் உடைந்த துண்டு) ,புளியங்கொட்டை, கூழாங்கற்கள், சோழிகள், கற்கள், காக்காமணி, கொடுக்காப்புளி கொட்டைகள் போன்ற காசு செலவில்லாத பொருட்களே பெண்களின் விளையாட்டுகளில் பிரதான உபகரணங்கள் . 

பையன்களைப் போல நாங்கள் , தும்பிகள் வாலில் நூல் கட்டியோ பொன் வண்டுகளை தீப்பெட்டியில் அடைத்தோ  இம்சித்ததில்லை. பம்பரம் சுற்றி விளையாட மாட்டோம். தீப்பெட்டி அட்டைகளை சேகரிக்க அலையமாட்டோம்.   ஆற்றங்கரையில் வீடு கட்டுவதும் .மரப்பாச்சிக்கு சேலை உடுத்துவதும், கூட்டாஞ்சோறு சமைப்பதும் எல்லா பெண் குழந்தைகளும் விரும்பும் பொழுதுபோக்குகள். திருவிழா நாட்களில் கும்மியும் ,கோலாட்டமும் தூள் பறக்கும் இரட்டை பின்னலில் மல்லிகையும், கனகாம்பரமும் சூடி சின்னாளப்பட்டு பாவாடை சட்டையில். கை வளைகள் பின்னணி சங்கீதம் பாட கோலாட்டம் ஆடும் பெண்ணின் எழிலை இங்கு எம்மொழியாலும் விவரிக்க முடியாது .

வெயில் படாமல் வளரும் இந்த கால பிள்ளைகள்  அறிய மாட்டீர்கள் , நாங்கள் அனுபவித்த  சொர்க்கத்துக்கு  நெருங்கிய சுக வாழ்வை . உடலில் வலிவும் ,உள்ளத்தில் உறுதியும் சேர்க்கும் அவ்விளையாட்டுகளை  அடுத்த தலைமுறைக்கு கற்பிப்போம்.

கல்லா ? மண்ணா? ஸ்கிப்பிங்  ,

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...