Wednesday, May 10, 2023

ப்ளீஸ் , தள்ளாதீங்க !

மரியா சிவானந்தம் 


அது  தொண்ணுறுகளின் துவக்கம்,   "இன்டர்நெட்"   என்ற சொல்லை ஒரு மந்திரம் போல மக்கள்  உச்சரிக்க துவங்கிய காலம். 

தொலைத்தொடர்புத் துறையில் இணைய வசதி அறிமுகப்படுத்த கருவிகளும் ,உபகரணங்களும் வந்து தொலைபேசி நிலையங்களில் வந்து இறங்கின. அங்கங்கே பயிற்சி மையங்களில் இணையம் பற்றிய பயிற்சி நடைபெற துவங்கியது . .நான் மைசூரில் உள்ள பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்குச் சென்றேன். 

பயிற்சியாளர் இணையத்தின் வரலாறு , வலைத்தளங்களின் பின்னல்  மோடம் (Modem Configuration) தொழிற்நுட்பம் என்று  அடிப்படை தகவல்களை சொல்லிக் கொண்டே போனார். "உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்ச்சியையும் நம்மால் காண முடியும் .எவரிடமும் ஈமெயில் வழியாக உடனடியாக  தொடர்பு கொள்ள முடியும் ,'சாட்' செய்ய முடியும்" என்று இணையத்தின் வசதிகளை மூச்சு விடாமல் அடுக்கிக் கொண்டே போனார். வகுப்பில் நடுவில் இருந்து ஒரு குரல் எழுந்தது "சார், இந்த இன்டர்நெட்டில் ஐஸ்வர்யா ராயைப் பார்க்க முடியுமா?' என்றது அக்குரல் .

டென்சனாகி விட்டார் வாத்தியார் ." ஏன்  சார், டிவி ,சினிமா எல்லா இடத்திலும் தான் அவங்களை பார்க்கறீங்க , இங்கேயாவது உபயோகமான நல்ல விஷயங்களைப் பாருங்க" என்று  சப்தம் போட்டார்.வகுப்பு கப்சிப் ஆனது . .ஐஸ்வர்யா ராய் உச்சத்தில் இருந்த நேரம் அது. உலக அழகியை  இந்தியா முழுவதும் ஆராதித்தது. அடுத்து சில ஆண்டுகளுக்கு  இங்கு முக்கால்வாசி கம்ப்யூட்டர்களில் வால் பேப்பராகவும், ஸ்கிரீன் சேவராகவும் ஐஸ்வர்யா ராய் வியாபித்தார். 

இந்த நிகழ்ச்சியை எதற்கு சொல்ல வந்தேன் என்றால் , உலக அழகி என்றில்லை , எந்த பிரபலம் என்றாலும் அவர்களைப் பார்க்க, அவர்களுடன் பேச, செல்ஃபி  புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒரு ரசிகராக எல்லோருக்கும்  ஆவல் இருக்கிறது . இப்போது மொபைல் வந்த பின்பு, அதுவும் ஸ்மார்ட் போன் வந்த பிறகு இந்த ஆசைஅதிகமாகி உள்ளது .  இன்ஸ்டாவும், யூடியூபும் , இணைய தள வீடியோக்களும் பெருகி விட்ட காலத்தில், இளைஞர் முதல் முதியவர் வரை செல்ஃபீ  ஆசை அதிகமாகவே உள்ளது . இது ரசிகர்களுக்கு சந்தோசம் தந்தாலும், பிரபலங்களுக்கு சங்கடத்தையே வருவிக்கிறது. 

நேற்று நடிகை நயன்தாராவுக்கு நடந்த நிகழ்ச்சி அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே  மேல்வளத்தூரில் அவரது கணவரின் குலதெய்வக் கோயிலில் கணவருடன் சாமி கும்பிடச்   சென்றார். அதன் பின்னர் தாராசுரம் கோவிலில்  வழிபாடு நடத்தினார். அது முடிந்து திரும்பும் போது தாராசுரம் கல்லூரி மாணவியர் சிலர் அவருடன் புகைப்படமும் செல்பியும் எடுக்க விரும்பி அவரைச் சூழ்ந்துக் கொண்டனர். நயன்தாராவும் அவர்களின் விருப்பத்துக்கு இணங்கி போஸ் கொடுக்க முனைகையில் ஒரு மாணவி அவரது தோளில் கை போட முயற்சித்தார் .நயன்தாரா இந்த செய்கையால் எரிச்சலாகி,  கோபத்துடன் முறைத்தவாறே  அங்கிருந்து கிளம்பினார்.

பின்னர் அவர் கணவருடன் திருச்சி வந்து ரயிலில் செல்ல இருக்கையில் , ரயில் நிலையத்தில் ரசிகர்கள்  சூழ்ந்துக் கொண்டு, தள்ளிக்கொண்டு வந்து புகைப்படம் எடுக்க தொடங்கினர் .ஏற்கனவே கடுப்பில் இருந்த நயன்தாரா, "போட்டோ எடுத்தால் போனை உடைத்துப் போடுவேன்" என்று சப்தம் போட்டார். அதன் பின்னர் ரசிகர்கள் விலகி அவர்களுக்கு வழி விட்டனர் .

இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமல்ல , இது போன்ற பல நிகழ்ச்சிகள் பிரபலங்கள் அனுதினமும் சந்திக்கும் தொந்தரவுகளை நாம் அறிகிறோம். சமீபத்தில்  நடிகர் அஜித்தின் தந்தை இறந்த போது ,'என் தந்தையின் இறப்பை ஒரு குடும்ப நிகழ்வாக அறிவித்து , ரசிகர்கள் மட்டுமல்ல ஊடகத்தினரையும் தவிர்த்ததையும்  பார்க்கிறோம்..ஒரு நிகழ்ச்சியின் போது செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை அவர் கோபத்துடன் பிடுங்கியதும்  இங்கு நடந்தது .

 பிரபலங்கள்  சாதாரண மக்களைப் போல உடலும், உணர்வும், குடும்பமும்  கொண்டவர்கள். அவர்களுக்கென்று ஒரு அந்தரங்கம் உள்ளது. இதை  நம் மக்கள் மறந்துப் போவதை பார்க்கையில் நமக்கே எரிச்சலாக இருக்கும் போது சம்பந்தப்பட்ட நடிகர் நடிகையருக்கு எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை .  

ஏர்போர்ட்டில்  விமானத்துக்கு காத்திருக்கையில், விமானப் பயணத்தில், கோவிலுக்கு சாமி கும்பிட போகையில், படப்பிடிப்புக்காக வெளியூர் செல்கையில் அவர்கள் ரசிகர்களால் சூழப்பட்டு, நெருக்கப் படுவதும், புகைப்படத்துக்காக வலியுறுத்தப்படுவதும் நடக்கிறது முதலில் நடிகர்கள் ,"ப்ளீஸ் தள்ளாதீங்க" என்று  இறைஞ்சி கேட்கிறார்கள். கோபத்தின் உச்சியில் கடுமையான சொற்களைப் பிரயோகிக்கிறார்கள்.  பதட்டம், மன அழுத்தம்    அவர்களுக்கு  மென் மேலும் மன உளைச்சலையும், உடல் உபாதையும்     தருகிறது . .

பிரபலங்களின் மேல் திணிக்கப்படும் இந்த வன்முறை தமிழகத்தில் தான் கொடுமையாக நடக்கிறது . பிற மாநிலங்களில்.வடநாட்டில்  இந்த அளவு இல்லை .கேரளாவில் நடிகர் நடிகைகள்  ஏர்போர்ட்டில் சாதாரணமாக  செல்வதை காண முடியும். ஆந்திராவிலும் இந்த அளவு நெருக்குதல் இல்லை . தமிழ் ரசிகர்கள் மட்டும் ஏன் நடிக நடிகையர் மேல் இத்தனை வெறித்தனமான அன்பு வைத்திருக்கிறார்கள்? .ஒரு  தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி தங்களையே ஏன்  தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்?

 ஏர்போர்ட் போகும் போதெல்லாம் சினிமா பிரபலங்கள் பார்க்க நேரிடும்.  நெருங்கி சென்று பேச நினைப்பதில்லை. ஒரு முறை சரியான வாயில் தெரியாமல் தவித்த போது  எங்களுக்கு வழி சொன்னவர் ஒரு டிவி பிரபலம். இப்ப வரை அவர்  பெயர் தெரியவில்லை .இன்னொரு முறை  இரயிலில் எதிர் பெர்த்தில் ஒரு டிவி பிரபலம் வந்தாங்க. பேச நினைத்து 'தேவிபாலாதானே?' 'என்றேன். சிரித்துக் கொண்டே 'தேவிக்கிருபா' என்றார். அப்புறம்தான் தேவிபாலா எழுத்தாளர் பெயராச்சே என்று நினைவுக்கு வந்தது.  பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு  நான் சென்ற  போது  வெளியில் வந்தவர் மேஜர் சுந்தரராஜன் . எதிரில் வந்தவரை நான் கைகூப்பி வணங்க , அவரும் பதில் வணக்கம் சொல்லி சென்றார் .   அவருக்கும் தொந்தரவில்லை. எனக்கும் மகிழ்ச்சி.  

நடிகர்களும் நகமும் , சதையும் கொண்ட மனிதர்கள் தாம்.  அவர்கள் உள்ளமும், உடம்பும் இரும்பால் செய்யப்பட்டவை அல்ல. சக மனிதரைப் போல அவர்களுக்கு   அந்தரங்கம் தேவை, எப்போதும்  மெய்க்காப்பாளர்களுடன். பதட்டத்துடன்  பயணிப்பது   துன்பமான விஷயம் . பிரபலங்கள் மேல் அன்பு வைப்பதும் ,அவர்களை சந்தித்தால் பேச விரும்புவதும் இயல்பானது என்பதை நான் மறுக்கவில்லை , ஆனால் அது அவர்களுக்கு வலிக்காமல்  பார்த்துக் கொள்ளுங்கள்.தனி மனிதனாக நல்ல குணங்களைக் கொண்டவரும், கூட்டத்தில் இருக்கும் போது  கூட்ட மனப்பாண்மை (mob mentality) கொண்டு ,அவர்களை நெருக்குவதும் தொட முயற்சிப்பதும்  பொது வெளியில்  எத்தனை இழிவான செயல்!

நடிகர்கள்,நடிகையர்கள்  பணம் , புகழுக்காக உழைப்பவர்கள் , சமூக அங்கீகாரத்தை எதிர்ப் பார்ப்பவர்கள் . அதற்காக அவர்களை மூசசு முட்டும் அளவுக்கு  திணற அடிப்பதில் , மிஞ்சி இருப்பது வேதனையும் ,துன்பமும் தான். இந்த இடையூறுகளை அவர்களின் புகழுக்கு தரும் விலை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள் .  எதற்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கிறது. அதனால்   அவரவர் எல்லைக்குள் இயங்குவது எல்லோருக்கும்  நல்லது .

நடிகரும் மனிதரே, அவருக்குரிய இடத்தை (Personal space) அவருக்குத் தருவோம், வலிகள் ஏதுமின்றி.



குறிப்பாக இந்தப் படம் எல்லோரும் தம் கணினி அல்லது மடிக்கணினியில் வைத்திருந்த படம் 


 

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...