Wednesday, May 10, 2023

 


இனிய இயந்திரா...

மரியா சிவானந்தம் 


பண்டிகை  காலங்கள் தாம்  எத்துணை அழகானவை !

வாழ்க்கைக்கு வண்ணமும், அழகும், அர்த்தமும் தருபவை  திருவிழாக்கள். அவை  வருடம்  முழுவதும்  நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தி, அன்றாட உளைச்சல்களில் இருந்தும், கவலைகளில் இருந்தும்  விடுவிக்கின்றன. "எங்க பாட்டி காலத்து தீபாவளியின் போது...."  என்று நாம் ஆரம்பிக்கும் போதே ஐம்பதாண்டுக்கு முந்திய நினைவுகளில் அமிழ்ந்து, மீண்டும் அந்த நாளில் வாழ எத்தனிக்கிறோம். இந்த பண்டிகைகள் நம் இதயத்தை வருடிக் கொடுத்து,  இதமான மெல்லிய உணர்வுகளை நம்மில் விழித்தெழ செய்கின்றன.

தமக்குரிய திருநாட்களை அந்தந்த மதத்தினர் விமரிசையாக கொண்டாடினாலும், தமிழர் திருநாளாம் பொங்கல் எல்லா மதத்தவரும் கொண்டாடும் பண்டிகையாகவே இருந்து வருகிறது. சர்ச்சுகளில் அந்நாளை "நன்றியின் நாளாக" சிறப்பித்து, சிறப்பு வழிபாடு நடத்தி  பொதுவான பானைகளில் பொங்கல் வைத்து பரிமாறிக் கொள்கிறார்கள்.

பொங்கலை போன்ற மற்றும் ஒரு சர்வமத பண்டிகை ஆயுதபூஜை. நவராத்திரியின் போது பெண்கள் வேறுபாடுகள் மறந்து  கொலுவுக்குச் சென்று பாட்டுப் பாடி, சுண்டலும் மஞ்சள் குங்குமமும் பெற்றுக் கொள்ளும்போது அங்கு சாதியம், மதம் நிறம் இழக்கின்றன.

 வீடுகள் மட்டும் அல்ல, அலுவலகங்கள், வங்கிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள்   எல்லாமே ஆயுத பூஜைக்கு புதிய அலங்காரம் பெறுகின்றன.  ஒவ்வொரு இடமும் தூய்மையாக்கும் பணியில் ஊழியர்கள் சிறிதும் சுணக்கமின்றி செய்வார்கள். ஆயுத பூஜையின் மகத்தான பணியாக இதை எல்லோரும் விரும்பி செய்வார்கள். வங்கிகள், ஹோட்டல்கள், துணிக்கடைகளில் வாசலில் அலங்கரிக்கப்பட்ட  கொலு நம்மை வரவேற்கும் . மாலை நேரத்தில் பூஜை முடித்து   இனிப்பும், சுண்டலும், பொரி கடலையும்  மகிழ்ச்சியுடன் விநியோகிக்கப்படும்.  எல்லா இடங்களிலும் ஓர் ஆனந்த அலை  மௌனமாக பரவுவதை   நாம்  கண்கூடாக தரிசிப்போம் . 

இந்த புதன்கிழமை வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  ஆயுத பூஜை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. விஐடி பல்கலைக்கழகம் வேலூரின் அழகான அடையாளம். ஆசிய அளவில் மிகப்பெரிய மருத்துவமனையான சிஎம்சி மட்டுமே ஒரு காலத்தில் வேலூரின் பெருமைக்குரிய அடையாளமாக இருந்து வந்தது. பின்னாட்களில்  விஐடியும் ,பொற்கோவிலும் வேலூரின் முகவரிகளாக அமைந்து விட்டன . 

முதலில்  சிறிய  அளவில் முன்னாள் மத்திய அமைச்சர்  திரு.ஜி. விசுவநாதன் அவர்களால் துவக்கப்பட்ட வேலூர் என்ஜினீரியங் கல்லூரி (VEC),  குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுள்ளது. பன்னாட்டு மாணவர்களும் பயிலும் பிரும்மாண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 

எல்லாவித பொறியியல் படிப்புகளும், கலையியல் கல்வியும் இங்கு  தரப்படுகிறது. கேம்பஸ்  இன்டர்வியூவில் பன்னாட்டு நிறுவனங்கள்  போட்டி போட்டுக் கொண்டு  இப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருகின்றன.  இந்த பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் சாதனைகளை படைத்து புகழ் பெறுகிறார்கள். பணம் படைத்தவர்களுக்கு மட்டும் கல்வி என்ற நிலைமை இன்றி , வேலூர் மாவட்டத்தின் தகுதி படைத்த ஏழை மாணவர்களுக்கு இலவச பொறியியல் கல்வியை வழங்குகிறார்கள். 

இந்த ஆண்டு ஆயுத பூஜையைக் கொண்டாட நினைத்த இயந்திரவியல் (Mechanical Engineering ) துறையினர் அதைப் புதுமையாக கொண்டாட களத்தில் இறங்கினர் . வழக்கத்துக்கு  மாறாக பூஜையை ரோபோக்களை வைத்து செய்ய விரும்பி, அதற்கான செயலாக்க திட்டங்களை உருவாக்கினர். ஆயுத பூஜையே இயந்திரங்கள், நாம் பயன்படுத்தும்  உபகரணங்களை  பூஜையில் வைத்து இறைவன் அருளை  வேண்டுவது தானே .அந்த இயந்திரங்களையே பூஜை செய்ய பயன்படுத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது.

இயந்திரவியல் துறையின் பரிசோதனை சாலை அதற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டு, இரண்டு வித ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டன. ஒரு ரோபோ தீபாராதனை காட்டவும், மற்றொரு ரோபோ பூஜை மணி அடிக்கவும் நிரல் செய்யப்பட்டன. துறைத்தலைவர் தேவேந்திரநாத் ராம்குமாரின் வழிகாட்டுதலில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டன. 

PURSE ( Promotion of University Research and Scientific  Education ) என்னும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதை ஒரு செயல்படுத்தினர். ஆயுத பூஜை அன்று இரண்டு ரோபோக்களும் எவ்வித தடையும் இன்றி அழகாக இயங்கின. பூஜை மந்திரங்களை ஒருவர் சொல்ல அங்கு கூடியிருந்த  மாணவர்களும், விரிவுரையாளர்களும்  நிறைவாக சாமி கும்பிட்டனர்.

1986 இல் சுஜாதா எழுதிய 'என் இனிய இயந்திரா'வையும், ஜூனோவையும் நாம் மறந்திருக்க மாட்டோம் .  2021 ஆம் ஆண்டில் நடைபெறுவதாக எழுதப்பட்ட அக்கதை நிஜமாகி இருப்பது நாம் உணர்கிறோம்.. நாட்டின் பல இடங்களில் ரோபோக்கள் இயங்குகின்றன . பெங்களூரின் கெம்பே கவுடா விமான நிலையத்து கெம்பா, 47 மொழிகள் பேசும் கல்வித்துறை  ஷாலு , போலீஸ் துறையில் உதவும் Robocop என்று பல ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன. ஹோட்டல்களில் உணவு பரிமாறும் ரோபோக்களும் உள்ளன. சுஜாதாவின் தொலைநோக்குப் பார்வை மெய்ப்பிக்கப் பட்டுள்ளது . 

விஐடி மாணவர்களின் பூஜை செய்யும் ரோபோக்கள் ஒரு சாதனை. மாணவர்களே வடிவமைத்து, நிரல் செய்து இயக்கியது வியப்புக்குரியது. மேலும் முயன்றால் வீட்டில் நமக்கு உதவி செய்யும் ரோபோக்களை உருவாக்கலாம். சமைக்கவும், பெருக்கவும், துடைக்கவும் அவசரத்துக்கு இரண்டு அடை ஊற்றிக் கொடுக்கவும் பயிற்சி கொடுத்திடலாம்.  ஐந்து புள்ளி கோலத்தையே அழித்து அழித்துப் போடும் என் போன்றவருக்கு பதினெட்டுப் புள்ளி கோலம் போடும்  ஒரு  ரோபோ இருந்தால் நன்றாக இருக்கும் .

'சாட்டை' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி  வருகிறது. ஒரே நேரத்தில் ஒரு கையில் தீபாராதனை செய்துக்கொண்டு , மறு கையில் பூஜை மணி அடிப்பது ஒரு மனிதனின் மூளையின் வலது,  இடது பாகங்களை ஒரே நேரத்தில்  இயங்க வைக்கும் அருமையான  பயிற்சி என்பது  காட்டப்படுவது நினைவுக்கு வருகிறது .   மனித இயக்கத்துக்கு மாற்று இல்லை என்பது உண்மைதான் .


கடல், நதி, வானம், பறவைகள் என்று இயற்கையில் இறைவன் படைத்த எதை பார்த்தாலும்  நமது உள்ளம் இறைவன்பால் செல்லும். இப்போது மனிதன்  படைத்த படைப்பான ரோபோ பூஜையில்  கலந்துக் கொண்டு  நம்மை  இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. 

இயற்கையாக இருந்தால் என்ன , இயந்திரமாக இருந்தால் என்ன ?

இறுதியில் நாம் சரணடையும்  இடம் அவன் திருவடிகள் தாமே .



No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...