காது குத்திக்க வாங்க - முகங்கள்
மரியா சிவானந்தம்
தமிழர் கலாச்சாரத்தில் குழந்தை வளர்ப்பில் பல வழி முறைகள், சடங்குகள் பின்பற்றபடுகின்றன. குழந்தை பிறந்ததும் ஒன்பதாம் நாளில் தாய்க்கும், சேய்க்கும் சில சடங்குகள் செய்து தலைக்கு குளிக்க வைத்தலில் தொடங்கி ஓராண்டு நிறையும் வரை வரை நிறைய சடங்குகள் இருக்கின்றன.
மாதங்கள் நகர நகர தொட்டில் போடுதல், பெயர் சூட்டுதல் , சாதம் ஊட்டுதல் என்ற சம்பிரதாய வழக்கங்கள் உண்டு . குழந்தை குப்புற கவிழும் போதும், சிற்றடி எடுத்து முதலடி வைக்கும் போதும் இறைவனை வேண்டி சடங்குகள் செய்வதுண்டு. ஆனால் எல்லா மதத்தவரும் செய்யும் முக்கிய சடங்கு ஓராண்டு நிறைவதற்குள் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவதாகும் .
திருப்பதி, வேளாங்கண்ணி போன்ற பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடும் கோவில்களில் ஒரு நாளில் நூற்றுக்கணக்கில் மொட்டைகள் அடிக்கப்படுகின்றன. பிரார்த்தனை, நேர்ச்சிக்காக மொட்டை அடிப்பவர்களுடன், சிறு குழந்தைகளை மடியில் வைத்து பிறந்த முடி இறக்குவதை பார்க்கிறோம். ஓராண்டுக்குள் முடி இறக்கி காது குத்துவது தமிழ் பாரம்பரியத்தின் அடையாளம். இதில் அவரவர் மத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் மாறுமே தவிர அடிப்படையில் அறிவியல் சார்ந்த விஷயமாகவே அனைவரும் காண்கிறார்கள்.
குலதெய்வம் கோவில்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தும் போது முக்கியத்துவம் பெறுகின்றன. அறுபடை வீடுகளிலும் ஏராளமானவர்கள் இதற்காக திரள்கின்றனர் . நல்ல நாட்கள், முகூர்த்த நாட்களில் இக்கோயில்களில் உறவினர்களுடன் ஒன்று கூடி இந்த சிறிய விழாக்களை அழகாக நடத்துகிறார்கள். சமீபத்தில் பேரனின் காது குத்து விழாவை திருத்தணியில் குறைந்த உறவினருடன் நடத்தினோம் .
அங்கு ஒரு பெரிய மண்டபத்தில் மொழு, மொழுவென்று மொட்டை அடித்து, தலைக்கு சந்தனம் பூசிக் கொண்டு, மாலையும் கழுத்துமாக, கண்ணீரும், கம்பலையுமாக குட்டிச் செல்லங்கள் காது குத்திக் கொள்ள மாமன் மடியில் அமர. நடுத்தர வயதில் ஒரு பெண்மணி ஒரு நொடியில் காது குத்தினார் . வழக்கமாக ஆண் ஆச்சாரிகள் காது குத்துவதைப் பார்த்துள்ளேன். ஒரு பெண் காது குத்துவதைப் முதல் முதலாக பார்த்த போது, மகிழ்ச்சியும் ,ஆச்சரியமும் ஏற்பட்டது .
"என்னென்னவோ செய்கிறோம், இதை செய்ய மாட்டோமா ?" என்று கேள்வி எழுப்பும் பெண்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்டது. இருப்பினும் வித்யாசமான இந்த பணியை செய்யும் அவரை அணுகி விகடகவி இதழுக்காக ஒரு சின்ன பேட்டி எடுத்தேன்.
அவர் பெயர் சங்கரி ..இனி சங்கரியுடன் ...
"சொல்லுங்கம்மா, எப்படி இந்த காது குத்தும் வேலையை தேர்ந்து எடுத்தீங்க ?" என்று நேர்க்காணலைத் தொடங்கினேன்.
" பரம்பரையாகவே இந்தக் கோவிலில் காது குத்தும் வேலையை என் குடும்பத்தவர்கள்தாம் செய்கிறார்கள். அவர்கள் வழி நானும் இதைச் செய்து வருகிறேன்.' என்றார் முகம் முழுக்க சிரிப்புடன் .
"எத்தனை வருடமாக செய்கிறீர்கள்? இந்த அனுபவம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ? ஒருநாளுக்கு எத்தனை காதுகள் குத்துவீர்கள்? எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் ?" என்று கேள்விகள் வைத்தேன்
"பத்து வருடங்களாக இந்த வேலை செய்கிறேன். இது கோவில் காண்ட்ராக்ட் எடுத்து செய்யும் வேலை .கோவிலில் காது குத்த ஐநூறு ரூபாய் வாங்குவார்கள் (மொட்டை பிரீ தான்..! ) . எனக்கு இங்கு மாத சம்பளம் தான் . சாதாரண நாட்களில் நிறைய காது குத்துக்கள் இருக்காது, விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்களில் கூட்டம் நிறைய இருக்கும் .ஓய்வின்றி வரிசையாக காது குத்துவேன். நல்ல அனுபவம் இருப்பதால் எனக்கு கடினமாக தெரிவதில்லை " என்றார் சங்கரி .
"குழந்தைகள் வலியில் அழுவார்களே ,அப்போது பதட்டமாக இருக்காதா? மரத்துக் கொள்ள ஏதும் மருந்து தடவுவீர்களா ?" என்றேன் .
" ஒரு சிலர் மரத்துக் கொள்ள மருந்து தடவி வைப்பார்கள் . நான் அவர்கள் தரும் தங்க ஊசியில் குத்தி விடுவேன். குழந்தைகள் சற்று நேரம் அழுவார்கள். கொஞ்ச நேரத்தில் சரியாகி விடுவார்கள்" என்றவர் தொடர்ந்து, "சரியான இடம் பார்த்து காது குத்தும் போது புண்ணாகும் வாய்ப்பு குறைவு. தேங்காய் எண்ணெய் என்று எதுவும் விட வேண்டியதில்லை . அப்படியும் புண் ஏற்பட்டால் செப்டிக் ஊசி போட்டுக் கொள்ளச் சொல்வேன் " என்றார் .
ஏற்கனவே எங்கள் மகள் வழி பேரப் பிள்ளைகளுக்கு "கன்ஷாட்" (GUN SHOT) மூலம் டாக்டரிடம் தான் காது குத்தினோம் . எனவே கோவிலில் காது குத்தும் டாக்டர்கள் யாரும் இருக்கிறார்களா என்று விசாரித்த போது "கோவில்களில் எல்லாம் ஆசாரிகள்தான் காது குத்துவோம். இங்கு நான் மட்டும்தான் ஒரே ஆசாரி " என்று முடித்தார் சங்கரி
"புகைப்படம் எடுத்துக் கொள்ளவா ?" என்ற போது புன்னகையடன் போஸ் கொடுத்தார் .
"செய்யும் தொழிலே தெய்வம்' என்று அர்ப்பணிப்புடன் தம் பணி செய்யும் எவரும் வணங்கத் தக்கவர்கள். அவ்வகையில் சங்கரி போற்றப்பட வேண்டியவர். சுயமரியாதையுடன் தன் சொந்தக்காலில் நிற்க எவ்வித வேலையும் செய்யும் சங்கரி போன்ற பெண்கள் பெருமைக்கு உரியவர்கள் .
விகடகவி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து விடை பெற்றுக் கொண்டோம் .


No comments:
Post a Comment