Friday, June 30, 2023

 விருந்தும் வேண்டாம் , விரதமும் வேண்டாம் 

மரியா சிவானந்தம் 

 

காலை முதல் இரவு வெகுநேரம் கழிந்த பின்பும் நமது கணினியில், மொபைலில்  தகவல்கள் கொட்டிக் கொண்டே  உள்ளன. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்  வாட்சப், ரீல்ஸ்,  குறுஞ் செய்தி, குறும்படம்  என்று எதாவது உருவத்தில் பல்வகையான தகவல்கள் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. அவற்றுள் முக்கியமானவை உடல்நலம் , நோய்கள , மருத்துவம் பற்றிய செய்திகளே, மருத்துவம்  சார்ந்த செய்திகளில் முன்னிலை வகுப்பது இதயநோய் , நீரிழிவு ,மூட்டு சம்பந்தமான நோய்களே .

இக்காரணத்தால், முன்பு எப்போதையும் விட இப்போது நோய்களைப் பற்றிய  விழிப்புணர்வு அதிகம் .  அதே போல எக்காலத்தையும் விட,  இளம் வயதில் நோய்களால்  பாதிக்கப்படுபவர்கள் இப்போது அதிகம். மருத்துவமணிக்குச் சென்றால்  இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் பிரிவுகளில் சின்னச் சின்ன குழந்தைகள் பலர் சிகிச்சைக்காக காத்திருப்பதைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, இந்தியாவில், தமிழகத்தில் இளம் வயதில் நோய் வாய்ப்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.

மாறி வரும் வாழ்க்கை முறை,  துரித உணவுகள், நல்ல தூக்கம்  மற்றும் சரியான உடற்பயிற்சி இல்லாமை இவற்றால்  இளம் வயதில் வியாதிகள், குறிப்பாக நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் பெருகி வருகிறது. உடலுக்குள் ஒளிந்திருந்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ,உடல் உறுப்புகளைச் சிதைத்து மனிதனை  மரணவாயிலில் நிறுத்தும் "வில்லத்தனம்" கொண்டது சர்க்கரை நோய்.  இது இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலாக இன்று மாறி நம்மை மிரள  வைக்கிறது.

விகடகவிக்காக Dr.பூபதிராஜன் அவர்களைச் சந்தித்தோம் .  நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில்  அரசு மருத்துவராக பணி புரிபவர்  நீரிழிவு நோய் பற்றிய பல தகவல்களை அவர்  நம்முடன் பகிர்ந்துக் கொண்டார் .

நீரிழிவு  நோய் எதனால் ஏற்படுகிறது ?

நீரிழிவு ஒரு நோய் என்று சொல்வதை விட ஒரு குறைபாடு என்றே  சொல்லலாம். நம்  உடலில் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கிறது . நாம் உணவு சர்க்கரையாக மாற்றப்பட்ட பின்பு அதை ஆற்றலாக மாற்றுவது இன்சுலினின் வேலை.

இரண்டு விதமான சர்க்கரை நோய் உண்டு . Type 1 சர்க்கரை நோயில்  கணையம் மரபணு குறைபாட்டால் , இன்சுலின் சுரப்பது நின்று விடும். இளம் வயதிலேயே  இந்த வகை சர்க்கரை வியாதி தாக்கம் தெரியும்  . இவர்கள் வாழ்நாள் முழுவதும் ஊசி மூலமாக இன்சுலின் எடுக்க வேண்டி இருக்கும் .Type 2  சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு  இன்சுலின் சுரக்கும். ஆனால் இன்சுலின் செயல்பாடு தடைபடும் (Insulin Resistance)  .இவ்வாறு இன்சுலின் சுரப்பது தடைபடும் போது, உடலின் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது.  அப்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது .சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கா விட்டால், நாளடைவில் பல் வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் .இது வழக்கமாக நாற்பது  வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு ஏற்படும் . மரபணு , வாழ்க்கை முறை, அதிக உடல் உழைப்பின்மை, உடல் பருமன் போன்ற காரணங்களால் சர்க்கரை வியாதி வருகிறது 

நீரிழிவு நோயை எப்படி கண்டு பிடிப்பது ?
திடீர் உடல் எடைக் குறைவு, சோர்வு, அதிக தாகம் எடுத்தல்,  அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் தென்படும் போது உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் .இவ்வித அறிகுறிகள் இல்லாமலே அதிக சர்க்கரை அளவுடன் இருப்பவர்களும் உண்டு. இப்போது  இளம் வயதிலேயே சர்க்கரை வியாதியுடன் இருப்பவர்கள்  அதிகமாகி விட்டார்கள் . நாற்பது வயதைக் கடந்தவர்கள் உடல் பரிசோதனையுடன் இரத்தத சர்க்கரை அளவையும் பரிசோதிக்க வேண்டும் ?

இந்த நோயைக் கண்டறிந்தவுடன் எப்படி நாம் என்ன செய்ய வேண்டும் .

வெறும் வயிற்றில் பரிசோதிக்கும் போது சர்க்கரை அளவு 70mg -100mg இருந்தால் அது சரியான அளவு .நூறுக்கு மேல் போனால் நீரிழிவுக்கு முன் நிலை (pre diabetic ) அப்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . உடற்பயிற்சி ,நடைப்பயிற்சி ,உணவுக் கட்டுப்பாடுகளை கடைப் பிடிக்க தொடங்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் . மருந்து எடுக்க தொடங்கிய பிறகு , தொடர்ந்து மருந்தின் அளவை  மாற்றாமல் இருக்க வேண்டாம் .மூன்று  மாதத்துக்கு ஒருமுறை HbA1C  டெஸ்ட் எடுக்க வேண்டும் .இது  கடந்த மூன்று மாத சர்க்கரை அளவை நமக்கு காட்டும். இந்த அளவு வைத்து மருத்துவர் நாம் எடுக்கும் மாத்திரை அளவை நமக்கு தருவார். கணையத்தில் இன்சுலின் சுரப்பது அதிகமாக தடைபடும் போது இன்சுலின் ஊசி வடிவில் போட வேண்டிய அவசியமும் ஏற்படும்.

நமது உணவு முறையில் என்னென்ன மாற்றத்தை கொண்டுவர வேண்டும் .

மாவுச் சத்து குறைந்த low carb டயட்டை பின்பற்ற வேண்டும். புரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் .தென்னிந்தியாவில் அரிசி சாதமே நம் முக்கிய உணவாக இருக்கிறது . பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைத் தவிர்த்து கைக்குத்தல் அரிசியைப் பழகி கொள்ளலாம் . அரிசிக்கு பதிலாக சிறுதானியங்கள், கோதுமை சேர்த்துக் கொள்ளலாம் . அரிசியை விட இவற்றில் Glycaemic Index (சர்க்கரை அளவு குறியீடு ) குறைவு .பழங்களை சாறாக்கி குடிப்பதை விட பழமாகவே சாப்பிடுவது நல்லது. கஞ்சி வகைகளும் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக கூட்டும் என்பதால் தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகள், முளை கட்டிய பயிறு, பிற பயிறு   வகைகளை சேர்த்துக் கொள்ளலாம் .

உங்கள் தட்டில் பாதியளவு காய்கறிகள், கால் அளவு புரோட்டின் மீதி கால் அளவு  கார்போஹைட்ரேட்  இருக்க வேண்டும். இதுவே நல்ல உணவு முறை. கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம் .சரியான இடைவெளி விட்டு சாப்பிடலாம் . Neither fasting nor feasting என்று சொல்வது  போல விரதமும் தவறு ,விருந்தும் தவறு .

முறையான உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி அத்துடன் உடல் உழைப்பும் இருந்தால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படும். ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். இனிப்பு ,ஐஸ் கிரீம், துரித உணவுகள்  போன்றவற்றை தவிர்க்க வேண்டும்  புகைப்பிடித்தல் போன்ற வழக்கம் உள்ளவர்கள் அதை விட்டுவிட வேண்டியது மிகவும் அவசியம் .

சர்க்கரை நோயின் தாக்கங்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

"அதிக சர்க்கரை அளவு கண்கள்,  கால்கள், நரம்பு மண்டலம் , சிறுநீரகம்  போன்றவற்றை பாதிக்கும். கண் விழித்திரை பாதிப்பு  (Diabetic retinopathy) சரியான விதத்தில் சிகிச்சை எடுக்கவில்லை எனில் கண் பார்வையே போய் விடும் . சிறுநீரக பாதிப்பு (Diabetic nephropathy ) நரம்பு மண்டல பாதிப்புகளும் (Diabetic Neuropathy) சிறுநீரக பழுது. ஸ்ட்ரோக் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.கால் நரம்புகள் சரிவர செயல்படாது .காலில் புண் அல்லது காயம் ஏற்பட்டால் சீக்கிரத்தில் குணமாகாது . சீழ் பிடித்து, செப்டிக் ஆகும். விரல்களை மட்டுமல்ல, காலையே எடுக்க வேண்டிய நிர்பந்தம்  ஏற்படும். 

சர்க்கரை அளவை சரியான கட்டுக்குள் வைத்திருப்பது ,மருத்துவ ஆலோசனை பெறுவது , உரிய மருந்துகளை  தவறாமல் சாப்பிடுவது இவை எல்லாமே கட்டாயம் பின்பற்ற வேண்டும் . இல்லையேல், உடல் நலம் கெடுவதுடன் பல விளைவுகள் ஏற்படும் . 

வரும் முன் காப்பது எல்லாவற்றுக்கும் மேலானது. இளைய தலைமுறையினர்  நல்ல பழக்க வழக்கம், உணவு முறை ,உடற்பயிற்சி ஆகியவற்றை கடை பிடித்தால்  சர்க்கரை நோய் மட்டும் அல்ல இதய நோய் போன்ற  நோய்களும் வர வாய்ப்பு இருக்கிறது .உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்கள் பெற வேண்டும்" என்று முடித்துக் கொண்டார் .

நல்ல ஆலோசனைகள் கூறிய மருத்துவருக்கு நன்றி கூறி முடித்துக் கொண்டோம் 

'What cannot be cured, must be endured " என்று சொல்வார்கள் . சர்க்கரை வியாதியை முழுவதும் குணப்படுத்த முடியாது என்றாலும் ,நல்ல பயிற்சி முறைகள் ,மருத்துவ உதவியுடன் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். கவலை இல்லாமல் வாழ முடியும் . இந்த சூட்சமத்தை நம் இளைய தலைமுறைக்கும் கற்றுத்தர வேண்டும் .துவே இன்றைய தேவை . 


வாக்கியம் 

இலக்கண விதிகளுக்குட்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து பொருளை உணர்த்தினால் அவ்வமைப்பு தொடர் என்றும் வாக்கியம் என்றும் கூறப்படும்.


Thursday, June 22, 2023

 தாயும் நானே,  தந்தையும் நானே 

மரியா சிவானந்தம் 



சென்ற வாரத்தில் வைரலான செய்தி ஒன்று நம்மை நெகிழ வைத்தது .

திருவாருரைச் சேர்ந்த  அம்ருதீன் ஷேக் தாவூது  தன் தாய் ஜெய்லானி பீவி   நினைவாக  ஐந்துக் கோடி ரூபாய் செலவழைத்து, சலவைக் கல்லால் இழைத்து உருவாக்கிய தாஜ்மகால் மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அவரது தந்தையின் இறப்புக்குப் பின் தாய் ஜெய்லானி ஒற்றை ஆளாக நின்று  மிகவும் சிரமப்பட்டு,  குடும்பத் தொழிலாக  இருந்த ஹார்ட்வேர்  கடையை நிர்வாகம் செய்தவாறே அம்ருதீனையும், அவரது  சகோதரிகளையும்  வளர்த்து, படிக்க வைத்தது வாழ்வில் ஏற்றம் கொடுத்து இருக்கிறார் . ஜெய்லானியின்  மறைவுக்குப் பின் அம்ருதீன் தன் தாயின் நினைவைப் போற்றும் விதமாக தாஜ்மகால் வடிவில் பிரும்மாண்ட நினைவுச் சின்னம் அமைத்துள்ளார்.ஒற்றைப் பெற்றோராக' இருந்து உழைத்து மறைந்த ஒரு தாய்க்கு செய்த ஒப்பற்ற  பெருமையாகவே  நான் இதை பார்க்கிறேன்.

தாயும், தந்தையும் நாம் காணக் கூடிய கடவுள்கள்.  நல்ல பெற்றோர் அமைவது வாழ்க்கையில் ஒருவர்  பெறக் கூடிய  அரும் வரம்.நமது இந்திய குடும்ப அமைப்பில், தாயும், தந்தையும்  இணைந்தே குழந்தைகளின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.  ஆழமான அடிக்கல் இட்டு, உறுதியான கோபுரமாக நிமிர்ந்து நிற்பவை நம் குடும்ப அமைப்புகள். கணவர் சம்பாதிக்க ,மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரித்து வருவதே சென்ற நூற்றாண்டு  வழக்கமான ஒன்றாக இங்கு இருந்து வருகிறது.

சில குடும்பங்களில் இயற்கை இருவரில் ஒருவரைப் பறித்து ஒற்றைப் பெற்றோராக ஆக்கி விடுகிறது .குறிப்பாக கணவன் இறந்த பின்பு, மனைவியே தன் பிள்ளைகளையும் ,குடும்பத்தையும் வழி நடத்த வேண்டிய சூழல் உருவாகிறது. அசாத்திய துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை  கொண்டு பெண் தந்தையுமாகி தன் குடும்பத்தைக் காப்பாற்ற உழைப்பதை நாம் காண்கிறோம் . இது போலவே மனைவியை  இழந்த கணவன்,  மறுமணம் செய்துக் கொள்ளாமல் தன் பிள்ளைகளை தனி ஒருவராக வளர்த்து ஆளாக்குவதும் நம் சமூகத்தில் நடப்பது .ஆனால் அது எண்ணிக்கையில் குறைவு. 

இவை ஒருபுறம் இருக்க, இப்போது  குடும்ப அமைப்புகள்  சிதைந்து, நொறுங்கிப் போவதை நம் கண் முன் காண்கிறோம். "விவாகரத்து"  இங்கு ஒரு  சகஜ நிகழ்வாக மாறிப் போகிறது.  பல காரணங்களால்  தம்பதியர்கள்   புரிதலும், அன்பும் இல்லாத வாழ்க்கையில் தொடர்ந்து இணைந்து பயணிக்க முடியாமல் கோர்ட் வாசலில் நிற்பவர் எண்ணிக்கை பெருகி வருகிறது . கல்வியும், வேலையும் பெற்று பொருளாதார விடுதலை பெற்றவர்கள் மட்டும் அல்ல , இவை எல்லாம் இல்லாதவர்களும் விவாகரத்து பெற்று தங்கள் வாழ்வை தனியே நடத்த ஆரம்பிக்கிறார்கள். 

உலக அளவில்   இந்தியாவில் நடக்கும் விவாகரத்துகள் குறைவு. 1% அளவு, எனினும்  இங்கு  'ஒற்றை பெற்றோர்' என்ற சொல் பிரபலமாகி வருவதைக் காண்கிறோம்.  தொலைக்காட்சி "டாக் ஷோக்களை" பார்க்கும் போது  இது போன்ற விவாகரத்துகளின் தாக்கம் நன்றாகவே  தெரிகிறது. இந்த ஒற்றை பெற்றோரில் 90% பேர் பெண்களாகவே இருக்கிறார்கள். கணவனின் துணை இன்றி தம் பிள்ளைகளை வளர்ப்பதும், படிக்க வைப்பதும்  ,வாழ்க்கைத் துணை தேடித் தருவதும் என்று எல்லா சுமைகளையும் ஒருவராகவே சுமக்கிறார்கள்.

அமெரிக்காவில்  25 முதல் 30% பிள்ளைகள் ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறார்கள். மனைவி அல்லது கணவர் மறைந்தவர் ,விவாகரத்து ஆனவர்கள் மட்டும் மன்றி ,திருமணம் செய்யாமல் இருப்பவர்களும் , குழந்தைப் பெற்றுக் கொண்டோ அல்லது தத்தெடுத்து கொண்டோ, 'ஒற்றைப் பெற்றோராக ' இருக்கிறார்கள். இந்தியாவில்  இந்த  அளவுக்கு இல்லை என்றாலும் கணிசமான அளவில் ஒற்றைப்  பெற்றோர் இருக்கிறார்கள். 

நான் உனக்குத் தாய் மட்டும் அல்ல, தந்தையும் தான்" என்று தன் பிள்ளையின் மனதில் பதிய விடுவது அவர்களது முதல் வேலை. குழந்தை உணர்வு பூர்வமாகவும் , அறிவு பூர்வமாகவும் அந்த நிலையை மனதில் ஏற்றுக்  கொள்ள வேண்டும் . வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து மாறுபட்ட  சூழ்நிலைக்கு, அந்தக் குழந்தை தன்னைத் தானே தயாரித்துக் கொள்ள வேண்டும் . தனிமை, பொருளாதார மாற்றம் , பாதுகாப்பற்ற தன்மை , உறவு மற்றும்  சமூகத்தின் கேள்விக்கணைகள், கேலிப் பேச்சு போன்றவற்றை புறந்தள்ளி வாழ்தல் எந்த வயதிலும் கடினம் .

ஒற்றைப் பெற்றோராக அவதாரம் எடுக்கும் பெண்  இரு மடங்கு உழைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அல்லது தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.  எல்லாவற்றையும் தன் தோளில்  சுமக்கவும் , எந்த நேரத்திலும் தன் பிள்ளையின் நலம் ஒன்றே வாழ்வில்   குறிக்கோள் என்று வாழவும் பழகிக் கொள்கிறாள் .

ஒரு தந்தை ரோல் என்பது சவால்கள் நிறைந்தது .அதை ஒரு பெண் ஏற்றுக் கொண்டு செயல்படும்  போது அவள் சந்திக்கும் துன்பங்கள் ஏராளம் . தினம் தினம் அவள் சந்திக்கும் மனிதரின் கேள்விகளுக்குப்  பதில் சொல்ல அவள் முதலில் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறாள். அவற்றைப் புறக்கணித்து, அவளது    உள்ளத்தைப் அவை பாதிக்காமல் இருக்க  மனப்பயிற்சி செய்ய வேண்டும் . மன அழுத்தம் தவிர்க்க, பல நேரங்களில் குடும்ப விழாக்கள் , மற்றும் திருமணங்களில் கலந்துக் கொள்ளாமல் அப்பெண் இருக்க வேண்டி உள்ளது . தன்னைச் சுற்றி  தானே ஒரு வேலி அமைத்துக் கொண்டு தன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்கிறாள், தன் பிள்ளையுடன். தாய், பிள்ளை இருவருமே, சமூக பாதுகாப்பின்றி அல்லாடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .

உறவினர்களின் ஆதரவு இல்லை என்றால் ,இப்பெண்ணின் சுமை மேலும் பளுவாக  அழுத்தும்.   அந்த ஒற்றை மாலுமியின் கப்பலை ஒரு சிறு நதியில் செலுத்தியாக வேண்டும், மிகுந்த  கவனமாக, லாவகமாக. மகளின் அல்லது மகனின் அடிப்படைத் தேவைகள். கல்வி. மருத்துவம் என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.   இருவர் மட்டுமே இருந்தால் சுகத்தையும் ,துக்கத்தையும் இருவர் மட்டுமே  அன்பவிக்க வேண்டும் .பிள்ளையும் அந்த நிலைமையை அனுசரிக்க பக்குவப்பட வேண்டும்.

நாம் பார்க்கும் "ஒற்றைப் பெற்றோர்" இந்த  சூழலை  விரும்பி தேர்ந்தெடுத்தாலும் , அல்லது அதை தேர்ந்தெடுக்கும்  சூழலில்  தள்ளப்பட்டாலும்  மீதி வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து தீர்க்க வேண்டி உள்ளது. அதை வெற்றிகரமாக  செய்ய அவர்கள் எதிர்கொள்ளும்  துன்பங்கள், சந்திக்கும்  சவால்கள் சொல்லில் அடக்க முடியாதவை .    அவர்களது போராட்ட களங்கள்  நம் கற்பனைகளுக்கு  அப்பாற்பட்டவை.  மனதைரியமும் , தன்னம்பிக்கையும் கொண்ட   பெண்கள் இன்று தனி ஆளாக சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் . அதே நேரத்தில்  பெண் தன் தகுதிகளை வளர்த்துக்கொண்டும்,  வேலையில் உச்சங்களை எட்டவும் உழைக்கிறாள். தன்னை மேம்படுத்திக் கொள்வதும் அவளுக்கு அவசியமாக இருக்கிறது . 

தாய்மை  ஆற்றல்  மிக்கது. சமயங்களில் அது தந்தைமையையும்  ஏற்றுக் கொள்ளும், தந்தையாகவே செயல்படும். அதற்கான தியாகத்தையும்  ,உடல் உழைப்பையும், உள்ள உறுதியையும்  கல்வியும் பொருளாதார விடுதலையும் தந்து விடுகிறது  என்பது மிகை இல்லை . 








Friday, June 16, 2023

 அமேசானில்  ஓர்  அதிசயம் 

மரியா சிவானந்தம் 


ஒரு அடர்வனத்தில் தனித்து விடப்பட்டால் என்ன செய்வீர்கள் ? 

தனிமையும், பசியும், அச்சம் தரும்  காட்டு விலங்குகளும்,. கவிழ்ந்திடும்  இருளும்  உங்களை பயமுறுத்த, மரணபயம் உங்களைத் துரத்தும் அல்லவா? பழக்கம் இல்லாத அந்த சூழலில் இருந்து மீண்டு வெளியில் வர வழி தேடி அலைவீர்கள், மனதில் தோன்றும் கடவுள்களை உதவிக்கு அழைப்பீர்கள் , எதை தின்று உயிர் வாழ்வது என்று தவிப்பீர்கள் . கற்பனை செய்து பார்க்கவே கடினமாக இருக்கிறது அல்லவா ?

கொலம்பியாவைச் சேர்ந்த லெஸ்லி என்னும் 13 வயது சிறுமி தன்னை விட இளைய தம்பி ,தங்கையரோடு தனித்து காட்டில் விடப்பட்டு, பின்னர் அச்சூழலில் இருந்து மீட்கப்பட்டது ,உலகெங்கும் பேசும் பொருளாகி விட்டது  

தென் அமெரிக்காவில் பரந்து விரிந்த அமேசான் காட்டில்,  கொலம்பியா பகுதியில் நடைபெற்ற  இந்த அதிசயம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது . விமான  விபத்தில் சிக்கி கொண்ட  நான்கு குழந்தைகள் நாற்பது நாட்களுக்குப் பிறகு ,அமேசானின் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட செய்தியும் அந்த குழந்தைகள் காட்டிய அசாத்திய   துணிவும், தைரியமும் நம்மை புல்லரிக்க செய்துள்ளது .

அந்த நிஜ த்ரில்லர் கதை இதுதான் .

மே முதல் தேதி அன்று கொலம்பியாவில் இருந்து ஆறு பயணிகள் மற்றும் ஒரு பைலட் கொண்ட ஒரு  குட்டி   விமானம் புறப்பட்டு பறந்தது . அமேசான் காட்டுக்கு மேலே  பறந்துக் கொண்டு இருக்கையில் விமானம் விபத்துக்குள்ளானது .  நான்கு குழந்தைகள், அவரது தாய் மேக்தலினா முகுடி வேலன்சியா , பழங்குடி  இனத் தலைவர் ஒருவர்  .மற்றும் விமான ஓட்டி என்று ஏழு பேர்   அடங்கிய அந்த விமானம் அராராகுவரா என்ற இடத்தில் இருந்து புறப்பட்டது  விமானம் பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே என்ஜினில் கோளாறு என்று பைலட் கண்டு பிடித்து தரைதளத்துக்கு செய்தி அனுப்பினார். எதுவும் செய்வதற்கு முன்பே ,விமானம் விபத்துக்குள்ளாகி சிதறி விழுந்தது. 

விமானம் சிதறிய இடத்தில் தாயின் சடலமும் , விமான ஓட்டியவரின் சடலமும் , உடன் பயணம் செய்தவரின் சடலம் மட்டுமே கிடைத்தது. நான்கு குழந்தைகளும் அந்த விபத்தில் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதியே ராணுவமும் ,காவல் துறையினரும்  முதலில் தங்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்கள். பின்னர்  சில  குழந்தைகளின் ஆடைகள், பாட்டில்கள் பார்த்து பிள்ளைகள் உயிருடன் இருக்கலாம் என்ற ஐயம் ராணுவத்துக்கு ஏற்பட்டது.  கொலம்பியா ராணுவத்தின்  160 ராணுவ வீரர்கள், 70 தன்னார்வலர்கள் மற்றும்  நிபுணர்கள் அடங்கிய குழு அடர்ந்த "Operation Hope" என்று அழைக்கப்படும் இந்த தேடுதலுக்கு மேஜர் ஹெல்டர் ஜிரால்டோ தலைமை வகித்தார் .

அமேசான் காடுகளில் தேடி செல்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை. அங்கு வாழும் பூர்வக்குடியினரின் உதவி இன்றி தேடுதல் சுலபமில்லை . அவர்களுடன் இணைந்து ராணுவம் தொடர்ந்து செயலாற்றியது , இறுதியில் நாற்பது நாட்களுக்கு பின்னர் பிள்ளைகள் உயிரோடு இருப்பது கண்டு பிடித்தனர். இத்தனை நாட்களும் இந்த குழந்தைகள் எதை உண்டு உயிர் வாழ்ந்தனர் என்று மலைத்துப் போயினர் .

முதலில் விமானத்தில் இருந்த யூக்கா என்ற மாவை சாப்பிட்ட குழந்தைகள் பின்னர் காட்டில் தங்கள் உணவைத்  தேடினர்.  பழங்குடி இனத்தை சார்ந்த அந்த குழந்தைகளுக்கு காடுகளை பற்றிய அறிவை அவர்களது பெற்றோரும், பாட்டியும்  அவர்கள் படித்த பள்ளியும்  அளித்திருந்தது. அந்த ஆபத்து வேளையில் காடுகள் பற்றிய அந்த அறிவு  அவர்களுக்கு உதவி இருக்கிறது. காடுகளில் விளையக்கூடிய விதைகள், வேர்கள், பழங்களில்  உண்ணக்கூடியது எவை என்று அறிந்தவர்கள் அவர்கள்.  

காட்டில் விளையும் பொருட்களில் விஷமற்றவை  எவை  அடையாளம் கண்டு,  அவற்றை உண்டு  உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்/ அந்த குழந்தைகள் 13 வயது லெஸ்லி , 9 வயது ஸோலினி  , ஐந்து வயது டியான் , ஒரு வயது கிறிஸ்டின்  என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது .மூத்த பெண் குழந்தை லெஸ்லி காட்டில் கிடைப்பவற்றை  கொடுத்து உண்ண வைத்து, தானும் பிழைத்து தன் உடன் பிறந்தோரையும்  உயிர் பிழைக்க செய்தது அரும் பெரும் செயல் .

பாம்புகள்,கொடிய விலங்குகள்,  விஷ ஜந்துகள் வாழும்  அடர்ந்த காட்டில்  தன் தம்பி தங்கையரை மழை ,வெயில் மற்றும்  விலங்குகள்  இடமிருந்து காத்தது சாதாரண சாதனை இல்லை .நெஞ்சில் உரமும், நம்பிக்கையும் கொண்ட ஒரு தேர்ச்சி சிறுமியின் துணிச்சல் மிக்க செயல். நுண்ணறிவும் ,ஆற்றலும் அவளுக்கு இயற்கை அளித்த வரம் என்றால், அந்த இயற்கையே அவளைக் காக்கும் சக்தியாக அமைந்துள்ளது . மரப்பொந்துகளில் அந்த குழந்தைகள் தங்கி தங்களைக் காத்துக் கொண்டதை அறியும் போது வியப்பாக இருக்கிறது .எல்லோரிலும் இளைய குழந்தை ஓராண்டே நிறைந்தது என்பது நமக்கு பெரும் ஆச்சரியத்தையும் , ஆனந்தத்தையும் தருகிறது .

மீட்கப்பட்ட  பிள்ளைகள் பகோடா நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். .கொலம்பியாவின் அதிபர் குஷ்டவோ பெட்ரோ அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் . இப்போது உணவு உண்ணவும், சிறிது பேசவும் ஆரம்பித்துள்ள குழந்தைகள் விரைவில் முழுமையாய் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று உலகமே ஒன்று கூடி வாழ்த்துகிறது . 


கடல், காடு,மலைகள், நதிகள் என்று வாழ்ந்த மனிதன் தான் நாகரிகம் அடைந்து நகர வாழ்க்கைக்கு மாறி விட்டான்.இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ஒன்று நமக்கும் , நமது இளைய தலைமுறைக்கும் இல்லாமலே போய் விட்டது .காலம் செல்ல செல்ல  அம்மாதிரி வாழ்க்கை நாம் வாழும் கான்கிரிட் காடுகளில் அமையப் போவதில்லை . இந்த காலத்தில் , தனித்து விடப்பட்ட குழந்தைகள் காட்டின் சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ,அங்கு நாற்பது நாட்கள் வாழ்ந்து வெளியில் வந்திருப்பது நமக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது .

"இயற்கை தம்மை நம்பியவரைக் கை  விடுவதில்லை " இனியேனும் இயன்ற பொழுதுகளில் இயற்கையை ரசித்தும், இயற்கையோடு ஒன்றியும் வாழ்வோம் .  


Fatima Valencia


Thursday, June 1, 2023

 சுகம் தரும் சித்த மருத்துவம் 

மரியா  சிவானந்தம் 


பாரத மண் யோகிகளும் ,சித்தர்களும் வாழ்ந்த மண், யோகமும், தவமும் விளைந்த மண் .உலகுக்கே அன்பையும் , அகிம்சையும் கலந்த வாழ்வியல் முறையை கற்பித்த மண் .

நோய் நாடி, நோய் முதல் நாடி அது தணிக்கும் 

வாய் நாடி வாய்ப்பச் செயல் (குறள் 948)

என்று நோய் தீர்க்கும் வழிகளை பாரம்பரியத்தை பெருமிதமாக கொண்ட இம்மண்ணில் சித்தர்கள் அருளிய சித்த  மருத்துவம் தனித்துவம் மிக்கது /

உலகின் தொன்மை வாய்ந்த மருத்துவ முறைகளில் நம் தென்னிந்தியாவின் சித்த மருத்துவ முறையும் ஒன்று .இயற்கை அளித்த கொடைகளான மூலிகைகள், நவலோகங்கள், தாது பொருட்கள் , நன்னீர் , கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், போன்ற  நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியன கொண்டும், தெங்கு, புங்கு, புன்னை, வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட மருத்துவ முறை சித்த வைத்திய முறையாகும் .குரு-சீடர் வைத்திய பரம்பரையில் வாய் வழி கடத்தப்படும் மருத்துவ செய்முறைகள், மருந்து வகைகள் கல்பங்கள் மற்றும் சூரணங்கள்  இங்கு காலம் காலமாக மக்களுக்கு நற்சுகத்தை அளித்து, நோய்கள் அணுகாது காத்தும் வருகின்றன.

சித்த மருத்துவத்தில் நாடி வைத்திய முறை  சிறப்பு மிக்கது .ஒருவரின் நாடி பிடித்துப் பார்த்தே அவர் உடலில் உள்ள நோய்களைக் கண்டு பிடித்து ,உரிய மருந்தைக் கொடுக்கும் வைத்தியர்கள் முன்பு  இருந்தார்கள். இப்போதும்  சிலர் அக்கலையில் கற்று தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் . வேலூர் சத்துவாச்சாரியில் சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்கள் நாடி வைத்தியத்தில் சிறப்பான சேவை செய்து வருகிறார் .

இவர் நடத்தி மருத்துவ சாலையில் வரும்,  டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலையில் இருக்கும்  நோயாளிகள் பலருக்கு சிகிச்சையளித்து நோயிலிருந்து மீட்டுள்ளார். நாள் பட்ட  சர்க்கரை நோய், சொரியாசிஸ் உட்பட பல்வேறு தோல் நோய்கள், நாள்பட்ட சிறுநீரகம் சம்பந்தமான  நோய்கள், கல்லீரல் நோய், மூட்டுவலி, ஒற்றைத்தலைவலி, புற்று நோய்  உட்பட பல்வேறு வியாதிகளுக்கும் மருந்து தயாரித்து தந்து   குணப்படுத்தி வருகிறார். 

 கொரோனா காலத்தில் தன்னார்வத்துடன் இவர் செய்த மருத்துவ உதவிகள் ஏராளம். மூலிகை முகக் கவசத்தை உருவாக்கி அதனை இலவசமாக மக்களுக்கு  வழங்கினார். வேலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்டம் முழுவதும் இலவச சித்த மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்தினார். அதற்காக வேலூர் மாவட்ட நிர்வாகமும், விஐடி பல்கலைக்கழக குடியரசு தினவிழாவில்  நோய் தொற்று தடுப்பு பணிகளை சிறப்பாக செய்தததற்கு  மருத்துவர் பாஸ்கரன் கௌரவிக்கப்பட்டார் . புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை அவர்களிடம் 'சிறந்த சமூக சேவகர் விருது பெற்றுள்ளார்.  மேலும் இம்ப்காப்ஸ் (The Indian Medical Practitioners’ Co-operative Pharmacy and Stores Ltd)  நிறுவனத்தின் இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இவர். 

சித்த மருத்துவத்தின்  புதிய நட்சத்திரமாக விளங்கும்  மருத்துவர் பாஸ்கரன் அவர்களை  விகடகவி இதழுக்காக நேர்க்காணல் செய்தோம் ....

" உங்களைப் பற்றி சொல்லுங்கள் ,டாக்டர் "

"நான் டாக்டர் பாஸ்கரன். வேலூரில் பள்ளி படிப்பை முடித்த பின் ஸ்ரீபெரும்புதூரில் சித்த மருத்துவக்கல்லூரியில் BSMS முடித்துள்ளேன். 

என் நான்காவது வயதில் இருந்தே சித்த மருத்துவத்துக்கும் எனக்கும் தொடர்பு இருந்ததால் அதில் ஆர்வம் பிறந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த  காலாங்கி நாதர் என்ற சித்தர்  ஶ்ரீ புற்று மகரிஷி என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் மூலவரை பிரதிருஷ்டை செய்தவர் .காலங்கி நாதரின்   47 வது -சீடப் பரம்பரையில் வந்தவர் நான் .என் தந்தை டம்பாச்சாரி எலும்பு முறிவு சிகிச்சையில் நிபுணத்துவம் கொண்ட சித்த மருத்துவர். பெரியப்பா அர்ஜூனன் நொடிகளில் நாடிக்கணிப்பு செய்து சகல நோய்களுக்கும் வைத்தியம் செய்து, நிரந்தர குணமாக்குவதில் கெட்டிக்காரர். இவர்களிடம் சித்த மருத்துவ முறைகளை இளமை முதல் கற்றுக் கொண்டேன் 

நாடி பிடித்து உடலின் வியாதிகளை எப்படி கண்டு பிடிக்கிறீர்கள் ,டாக்டர் ? 

நிலம் ,நீர் ,நெருப்பு ,காற்று ,ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதே மனித உடல். இந்த மனித உடலில் வாதம் , பித்தம், கபம் இவற்றின் அளவுகள் ஒருவரின் ஆரோக்கியத்தை அளவீடு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன . சித்த  மருத்துவத்தின் சிறப்பம்சம் ஒருவரின் நாடி பார்த்து வியாதியின் தன்மையை அறிந்து அதற்கு தகுந்தவாறதேவையான மருந்தை தயாரித்து கொடுப்பதாகும்.

நீரழிவு நோயை பொருத்த காலை நேரத்தில் அவரது நாடியை பார்த்தால் வாத நாடிகுறைந்தும் பித்தநாடி அதிகரித்தும் அதிகமாகவும்  இருக்கும் .அப்போது சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.எண்ணெய் விட்டு பார்த்து நீரழிவு நோய் எந்த அளவில் இருக்கிறது என்று கணிப்போம் .நீர்க்குறி எண்ணெய்  குறி என்று இந்த பரிசோதனைமுறைகளை  அழைப்பார்கள். சர்க்கரை அளவை கணித்து தகுந்த மருந்து தயாரித்து அளிப்போம். ஆரம்ப நிலையில் இருக்கும் சர்க்கரை நோயை பூரணமாக  குணப்படுத்தி விடலாம். மேலும் டயாலிசிஸ் பாதிப்பு ஒன்று போன்று அதிக பாதிப்பு இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தால் அவர்களை குணப்படுத்தி விடலாம்.

அதேபோல புற்றுநோயையும் சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோயை விரைவாகவே குணப்படுத்திவிடலாம். ஒவ்வொரு நோய்க்கும் தேவையான மருந்தை தயாரித்து கொடுக்க கொடுக்க முடியும்.பொறுமையாக மருத்துவரின் ஆலோசனை கேட்டு அதை பின்பற்றி நடப்பவர்கள் குணம் பெறுவார்கள்வைத்தியத்தில் உலோக சேர்த்து செய்வதால் மக்களுக்கு வியாதி குணமாகாமல் போவதுடன் பக்க விளைவுகள் அதிகமாக வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சித்த மருத்துவத்தில் பாதரசம் கந்தகம்  போன்ற  உலோகங்கள்  சேர்த்து செய்வதால் பக்க விளைவுகள் ஏற்படும் அல்லவா  ?

உண்மையில்  மருந்து தயாரிக்கும் போது, பாதரசம் போன்ற உலோகங்களை சரியான முறையில் சுத்திகரிக்கப்பட்டு உபயோகப்படுத்துகிறோம். மருந்துக்கு ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து அவருக்கு தேவையான அளவு பாதரசமும் கந்தகமும் சேர்க்கும்போது எருக்கம் பாலில் அதை பலமுறை ஏன் நூறு முறை கூட சுத்திகரிப்பது உண்டு இதை சுத்தி முறை என்று அழைக்கிறோம். தவிர நோயாளிகளின் உடலின் தன்மை அறிந்து, மருந்து  சாப்பிட வேண்டிய கால அளவையும் நிர்ணயிக்கிறோம் .மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தை உட் கொள்ள வேண்டும் .

இவ்வளவு சிறப்பு வாய்ந்த     சித்த மருத்துவத்தின்  பலன்களை எப்படி மக்களிடையே  கொண்டு சேர்க்கிறீர்கள் ?

கொரோனா காலத்தின் போது மக்களிடையே பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. கபசுர குடிநீர் எல்லா இடத்திலும் விநியோகிக்கப்பட்டது. மக்கள் மட்டுமல்ல எல்லா மருத்துவர்களும் அதன் பயனை உணர்ந்து தினமும் குடித்து வந்தனர்.  இயற்கையான உணவுகள், சிறு தானியங்கள், கசாயங்கள் இவற்றை பயன்படுத்தி மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொண்டனர் . வருமுன் காக்கும் மருத்துவ உபாயங்களை மக்கள் அறிந்துகொண்டு அதன்படி தங்களை காத்துக் கொண்டனர் . காய்ச்சல் வந்தால் மாத்திரைகளை  விழுங்கும் வழக்கம் கொண்டவர்களும் ,கஷாயம் வைத்து குடித்து குணமாக்கி கொள்ளும் பழக்கத்துக்கு மாறினார் .

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நீங்கள் சொல்லும் வழிகள் என்ன?

ஒரு பாடல் உண்டு

காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி  நடப்பானே ..
.

இந்தப் பாடலின் படி காலையில் இஞ்சிச்சாறு சுடுநீரில் கலந்து குடிப்பதும் மதிய வேளையில் சுக்கு பொடியாக்கிசேர்த்துக் கொள்வதும்  மாலை வேளையில் கடுக்காய் கொடியை எடுத்துக் கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடலும் பலம் பெறும். இவை தவிர நம் வழக்கமான உணவு முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

என்ன மாதிரி உணவுகளை  உண்ண  வேண்டும் ?

வழக்கமான உணவு முறைகளை மாற்றிக் கொண்டு, அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களில் அடை தோசை மற்றும் பலகாரங்கள் செய்து சாப்பிடலாம்.  சர்க்கரைக்கு  பதிலாக நாட்டு சக்கரை பனைவெல்லம் ஆகியவற்றைப்  பயன்படுத்தலாம்.  மாவு சத்து குறைத்து , நார்சத்து , புரதச் சத்து உள்ள உணவுகளை எடுக்கலாம் 

வீட்டில் விளையும் கீரைகள், பிரண்டை முடக்கத்தான், கற்பூரவல்லி    நெல்லிக்காய் எலுமிச்சை  போன்றவற்றையும் தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.ரீபைண்ட் எண்ணெய்களுக்கு பதிலாக பதிலாக செக்கு எண்ணெய் உபயோகப்படுத்தலாம். நல்ல தூக்கம்,  உடற்பயிற்சி பிராணாயாமம் யோகா இவையெல்லாம் நல்ல உடல் நலத்துக்கு அவசியமானவை.

இவற்றைத்தவிர 

நாள் இரண்டு 

வாரம் இரண்டு

மாதம்  இரண்டு 

வருடம் இரண்டு என்று சொல்வார்கள்.

அதாவது,  ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு இரண்டு முறை உடலுறவு கொள்ள வேண்டும்.ஒரு வருடத்துக்கு இரண்டு முறை உடல் சுத்தம் செய்ய பேதிக்கு மருந்து சாப்பிட வேண்டும். இவற்றை பின்பற்றி வந்தால் உடல் நல்ல ஆரோக்கியத்துடன்  இருக்கும் .

மக்களிடையே சித்த வைத்தியத்தின் சிறப்பினை எடுத்துச் சென்று, நோய் நீக்கும் மருத்துவர் பாஸ்கரனுக்கு வாழ்த்து கூறி விடை பெற்றோம் .



யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.  (திருமந்திரம் ) 

வில்வதையோ, துளசியையோ, அருகம்புல்லையோ கொண்டு இறைவனுக்கு நம்முடைய அன்பைச் செலுத்துவோம். பசுவிற்கு ஒரு வாய் புல் அன்புடன் கொடுப்போம். உண்ணும்போது ஒரு கவளத்தை முன் வாசலிலோ பின்புறமோ மற்ற உயிரினத்துக்கு அன்போடு வழங்குங்கள். நம்மைச் சுற்றி இருக்கும் பிறர்க்கு அன்புடன் இன்சொல்லைக் கூறுங்கள்.

 

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...