Thursday, June 22, 2023

 தாயும் நானே,  தந்தையும் நானே 

மரியா சிவானந்தம் 



சென்ற வாரத்தில் வைரலான செய்தி ஒன்று நம்மை நெகிழ வைத்தது .

திருவாருரைச் சேர்ந்த  அம்ருதீன் ஷேக் தாவூது  தன் தாய் ஜெய்லானி பீவி   நினைவாக  ஐந்துக் கோடி ரூபாய் செலவழைத்து, சலவைக் கல்லால் இழைத்து உருவாக்கிய தாஜ்மகால் மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அவரது தந்தையின் இறப்புக்குப் பின் தாய் ஜெய்லானி ஒற்றை ஆளாக நின்று  மிகவும் சிரமப்பட்டு,  குடும்பத் தொழிலாக  இருந்த ஹார்ட்வேர்  கடையை நிர்வாகம் செய்தவாறே அம்ருதீனையும், அவரது  சகோதரிகளையும்  வளர்த்து, படிக்க வைத்தது வாழ்வில் ஏற்றம் கொடுத்து இருக்கிறார் . ஜெய்லானியின்  மறைவுக்குப் பின் அம்ருதீன் தன் தாயின் நினைவைப் போற்றும் விதமாக தாஜ்மகால் வடிவில் பிரும்மாண்ட நினைவுச் சின்னம் அமைத்துள்ளார்.ஒற்றைப் பெற்றோராக' இருந்து உழைத்து மறைந்த ஒரு தாய்க்கு செய்த ஒப்பற்ற  பெருமையாகவே  நான் இதை பார்க்கிறேன்.

தாயும், தந்தையும் நாம் காணக் கூடிய கடவுள்கள்.  நல்ல பெற்றோர் அமைவது வாழ்க்கையில் ஒருவர்  பெறக் கூடிய  அரும் வரம்.நமது இந்திய குடும்ப அமைப்பில், தாயும், தந்தையும்  இணைந்தே குழந்தைகளின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.  ஆழமான அடிக்கல் இட்டு, உறுதியான கோபுரமாக நிமிர்ந்து நிற்பவை நம் குடும்ப அமைப்புகள். கணவர் சம்பாதிக்க ,மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரித்து வருவதே சென்ற நூற்றாண்டு  வழக்கமான ஒன்றாக இங்கு இருந்து வருகிறது.

சில குடும்பங்களில் இயற்கை இருவரில் ஒருவரைப் பறித்து ஒற்றைப் பெற்றோராக ஆக்கி விடுகிறது .குறிப்பாக கணவன் இறந்த பின்பு, மனைவியே தன் பிள்ளைகளையும் ,குடும்பத்தையும் வழி நடத்த வேண்டிய சூழல் உருவாகிறது. அசாத்திய துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை  கொண்டு பெண் தந்தையுமாகி தன் குடும்பத்தைக் காப்பாற்ற உழைப்பதை நாம் காண்கிறோம் . இது போலவே மனைவியை  இழந்த கணவன்,  மறுமணம் செய்துக் கொள்ளாமல் தன் பிள்ளைகளை தனி ஒருவராக வளர்த்து ஆளாக்குவதும் நம் சமூகத்தில் நடப்பது .ஆனால் அது எண்ணிக்கையில் குறைவு. 

இவை ஒருபுறம் இருக்க, இப்போது  குடும்ப அமைப்புகள்  சிதைந்து, நொறுங்கிப் போவதை நம் கண் முன் காண்கிறோம். "விவாகரத்து"  இங்கு ஒரு  சகஜ நிகழ்வாக மாறிப் போகிறது.  பல காரணங்களால்  தம்பதியர்கள்   புரிதலும், அன்பும் இல்லாத வாழ்க்கையில் தொடர்ந்து இணைந்து பயணிக்க முடியாமல் கோர்ட் வாசலில் நிற்பவர் எண்ணிக்கை பெருகி வருகிறது . கல்வியும், வேலையும் பெற்று பொருளாதார விடுதலை பெற்றவர்கள் மட்டும் அல்ல , இவை எல்லாம் இல்லாதவர்களும் விவாகரத்து பெற்று தங்கள் வாழ்வை தனியே நடத்த ஆரம்பிக்கிறார்கள். 

உலக அளவில்   இந்தியாவில் நடக்கும் விவாகரத்துகள் குறைவு. 1% அளவு, எனினும்  இங்கு  'ஒற்றை பெற்றோர்' என்ற சொல் பிரபலமாகி வருவதைக் காண்கிறோம்.  தொலைக்காட்சி "டாக் ஷோக்களை" பார்க்கும் போது  இது போன்ற விவாகரத்துகளின் தாக்கம் நன்றாகவே  தெரிகிறது. இந்த ஒற்றை பெற்றோரில் 90% பேர் பெண்களாகவே இருக்கிறார்கள். கணவனின் துணை இன்றி தம் பிள்ளைகளை வளர்ப்பதும், படிக்க வைப்பதும்  ,வாழ்க்கைத் துணை தேடித் தருவதும் என்று எல்லா சுமைகளையும் ஒருவராகவே சுமக்கிறார்கள்.

அமெரிக்காவில்  25 முதல் 30% பிள்ளைகள் ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறார்கள். மனைவி அல்லது கணவர் மறைந்தவர் ,விவாகரத்து ஆனவர்கள் மட்டும் மன்றி ,திருமணம் செய்யாமல் இருப்பவர்களும் , குழந்தைப் பெற்றுக் கொண்டோ அல்லது தத்தெடுத்து கொண்டோ, 'ஒற்றைப் பெற்றோராக ' இருக்கிறார்கள். இந்தியாவில்  இந்த  அளவுக்கு இல்லை என்றாலும் கணிசமான அளவில் ஒற்றைப்  பெற்றோர் இருக்கிறார்கள். 

நான் உனக்குத் தாய் மட்டும் அல்ல, தந்தையும் தான்" என்று தன் பிள்ளையின் மனதில் பதிய விடுவது அவர்களது முதல் வேலை. குழந்தை உணர்வு பூர்வமாகவும் , அறிவு பூர்வமாகவும் அந்த நிலையை மனதில் ஏற்றுக்  கொள்ள வேண்டும் . வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து மாறுபட்ட  சூழ்நிலைக்கு, அந்தக் குழந்தை தன்னைத் தானே தயாரித்துக் கொள்ள வேண்டும் . தனிமை, பொருளாதார மாற்றம் , பாதுகாப்பற்ற தன்மை , உறவு மற்றும்  சமூகத்தின் கேள்விக்கணைகள், கேலிப் பேச்சு போன்றவற்றை புறந்தள்ளி வாழ்தல் எந்த வயதிலும் கடினம் .

ஒற்றைப் பெற்றோராக அவதாரம் எடுக்கும் பெண்  இரு மடங்கு உழைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அல்லது தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.  எல்லாவற்றையும் தன் தோளில்  சுமக்கவும் , எந்த நேரத்திலும் தன் பிள்ளையின் நலம் ஒன்றே வாழ்வில்   குறிக்கோள் என்று வாழவும் பழகிக் கொள்கிறாள் .

ஒரு தந்தை ரோல் என்பது சவால்கள் நிறைந்தது .அதை ஒரு பெண் ஏற்றுக் கொண்டு செயல்படும்  போது அவள் சந்திக்கும் துன்பங்கள் ஏராளம் . தினம் தினம் அவள் சந்திக்கும் மனிதரின் கேள்விகளுக்குப்  பதில் சொல்ல அவள் முதலில் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறாள். அவற்றைப் புறக்கணித்து, அவளது    உள்ளத்தைப் அவை பாதிக்காமல் இருக்க  மனப்பயிற்சி செய்ய வேண்டும் . மன அழுத்தம் தவிர்க்க, பல நேரங்களில் குடும்ப விழாக்கள் , மற்றும் திருமணங்களில் கலந்துக் கொள்ளாமல் அப்பெண் இருக்க வேண்டி உள்ளது . தன்னைச் சுற்றி  தானே ஒரு வேலி அமைத்துக் கொண்டு தன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்கிறாள், தன் பிள்ளையுடன். தாய், பிள்ளை இருவருமே, சமூக பாதுகாப்பின்றி அல்லாடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .

உறவினர்களின் ஆதரவு இல்லை என்றால் ,இப்பெண்ணின் சுமை மேலும் பளுவாக  அழுத்தும்.   அந்த ஒற்றை மாலுமியின் கப்பலை ஒரு சிறு நதியில் செலுத்தியாக வேண்டும், மிகுந்த  கவனமாக, லாவகமாக. மகளின் அல்லது மகனின் அடிப்படைத் தேவைகள். கல்வி. மருத்துவம் என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.   இருவர் மட்டுமே இருந்தால் சுகத்தையும் ,துக்கத்தையும் இருவர் மட்டுமே  அன்பவிக்க வேண்டும் .பிள்ளையும் அந்த நிலைமையை அனுசரிக்க பக்குவப்பட வேண்டும்.

நாம் பார்க்கும் "ஒற்றைப் பெற்றோர்" இந்த  சூழலை  விரும்பி தேர்ந்தெடுத்தாலும் , அல்லது அதை தேர்ந்தெடுக்கும்  சூழலில்  தள்ளப்பட்டாலும்  மீதி வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து தீர்க்க வேண்டி உள்ளது. அதை வெற்றிகரமாக  செய்ய அவர்கள் எதிர்கொள்ளும்  துன்பங்கள், சந்திக்கும்  சவால்கள் சொல்லில் அடக்க முடியாதவை .    அவர்களது போராட்ட களங்கள்  நம் கற்பனைகளுக்கு  அப்பாற்பட்டவை.  மனதைரியமும் , தன்னம்பிக்கையும் கொண்ட   பெண்கள் இன்று தனி ஆளாக சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் . அதே நேரத்தில்  பெண் தன் தகுதிகளை வளர்த்துக்கொண்டும்,  வேலையில் உச்சங்களை எட்டவும் உழைக்கிறாள். தன்னை மேம்படுத்திக் கொள்வதும் அவளுக்கு அவசியமாக இருக்கிறது . 

தாய்மை  ஆற்றல்  மிக்கது. சமயங்களில் அது தந்தைமையையும்  ஏற்றுக் கொள்ளும், தந்தையாகவே செயல்படும். அதற்கான தியாகத்தையும்  ,உடல் உழைப்பையும், உள்ள உறுதியையும்  கல்வியும் பொருளாதார விடுதலையும் தந்து விடுகிறது  என்பது மிகை இல்லை . 








No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...