அமேசானில் ஓர் அதிசயம்
மரியா சிவானந்தம்
ஒரு அடர்வனத்தில் தனித்து விடப்பட்டால் என்ன செய்வீர்கள் ?
தனிமையும், பசியும், அச்சம் தரும் காட்டு விலங்குகளும்,. கவிழ்ந்திடும் இருளும் உங்களை பயமுறுத்த, மரணபயம் உங்களைத் துரத்தும் அல்லவா? பழக்கம் இல்லாத அந்த சூழலில் இருந்து மீண்டு வெளியில் வர வழி தேடி அலைவீர்கள், மனதில் தோன்றும் கடவுள்களை உதவிக்கு அழைப்பீர்கள் , எதை தின்று உயிர் வாழ்வது என்று தவிப்பீர்கள் . கற்பனை செய்து பார்க்கவே கடினமாக இருக்கிறது அல்லவா ?
கொலம்பியாவைச் சேர்ந்த லெஸ்லி என்னும் 13 வயது சிறுமி தன்னை விட இளைய தம்பி ,தங்கையரோடு தனித்து காட்டில் விடப்பட்டு, பின்னர் அச்சூழலில் இருந்து மீட்கப்பட்டது ,உலகெங்கும் பேசும் பொருளாகி விட்டது
தென் அமெரிக்காவில் பரந்து விரிந்த அமேசான் காட்டில், கொலம்பியா பகுதியில் நடைபெற்ற இந்த அதிசயம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது . விமான விபத்தில் சிக்கி கொண்ட நான்கு குழந்தைகள் நாற்பது நாட்களுக்குப் பிறகு ,அமேசானின் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட செய்தியும் அந்த குழந்தைகள் காட்டிய அசாத்திய துணிவும், தைரியமும் நம்மை புல்லரிக்க செய்துள்ளது .
அந்த நிஜ த்ரில்லர் கதை இதுதான் .
மே முதல் தேதி அன்று கொலம்பியாவில் இருந்து ஆறு பயணிகள் மற்றும் ஒரு பைலட் கொண்ட ஒரு குட்டி விமானம் புறப்பட்டு பறந்தது . அமேசான் காட்டுக்கு மேலே பறந்துக் கொண்டு இருக்கையில் விமானம் விபத்துக்குள்ளானது . நான்கு குழந்தைகள், அவரது தாய் மேக்தலினா முகுடி வேலன்சியா , பழங்குடி இனத் தலைவர் ஒருவர் .மற்றும் விமான ஓட்டி என்று ஏழு பேர் அடங்கிய அந்த விமானம் அராராகுவரா என்ற இடத்தில் இருந்து புறப்பட்டது விமானம் பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே என்ஜினில் கோளாறு என்று பைலட் கண்டு பிடித்து தரைதளத்துக்கு செய்தி அனுப்பினார். எதுவும் செய்வதற்கு முன்பே ,விமானம் விபத்துக்குள்ளாகி சிதறி விழுந்தது.
விமானம் சிதறிய இடத்தில் தாயின் சடலமும் , விமான ஓட்டியவரின் சடலமும் , உடன் பயணம் செய்தவரின் சடலம் மட்டுமே கிடைத்தது. நான்கு குழந்தைகளும் அந்த விபத்தில் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதியே ராணுவமும் ,காவல் துறையினரும் முதலில் தங்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்கள். பின்னர் சில குழந்தைகளின் ஆடைகள், பாட்டில்கள் பார்த்து பிள்ளைகள் உயிருடன் இருக்கலாம் என்ற ஐயம் ராணுவத்துக்கு ஏற்பட்டது. கொலம்பியா ராணுவத்தின் 160 ராணுவ வீரர்கள், 70 தன்னார்வலர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு அடர்ந்த "Operation Hope" என்று அழைக்கப்படும் இந்த தேடுதலுக்கு மேஜர் ஹெல்டர் ஜிரால்டோ தலைமை வகித்தார் .
அமேசான் காடுகளில் தேடி செல்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை. அங்கு வாழும் பூர்வக்குடியினரின் உதவி இன்றி தேடுதல் சுலபமில்லை . அவர்களுடன் இணைந்து ராணுவம் தொடர்ந்து செயலாற்றியது , இறுதியில் நாற்பது நாட்களுக்கு பின்னர் பிள்ளைகள் உயிரோடு இருப்பது கண்டு பிடித்தனர். இத்தனை நாட்களும் இந்த குழந்தைகள் எதை உண்டு உயிர் வாழ்ந்தனர் என்று மலைத்துப் போயினர் .
முதலில் விமானத்தில் இருந்த யூக்கா என்ற மாவை சாப்பிட்ட குழந்தைகள் பின்னர் காட்டில் தங்கள் உணவைத் தேடினர். பழங்குடி இனத்தை சார்ந்த அந்த குழந்தைகளுக்கு காடுகளை பற்றிய அறிவை அவர்களது பெற்றோரும், பாட்டியும் அவர்கள் படித்த பள்ளியும் அளித்திருந்தது. அந்த ஆபத்து வேளையில் காடுகள் பற்றிய அந்த அறிவு அவர்களுக்கு உதவி இருக்கிறது. காடுகளில் விளையக்கூடிய விதைகள், வேர்கள், பழங்களில் உண்ணக்கூடியது எவை என்று அறிந்தவர்கள் அவர்கள்.
காட்டில் விளையும் பொருட்களில் விஷமற்றவை எவை அடையாளம் கண்டு, அவற்றை உண்டு உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்/ அந்த குழந்தைகள் 13 வயது லெஸ்லி , 9 வயது ஸோலினி , ஐந்து வயது டியான் , ஒரு வயது கிறிஸ்டின் என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது .மூத்த பெண் குழந்தை லெஸ்லி காட்டில் கிடைப்பவற்றை கொடுத்து உண்ண வைத்து, தானும் பிழைத்து தன் உடன் பிறந்தோரையும் உயிர் பிழைக்க செய்தது அரும் பெரும் செயல் .
பாம்புகள்,கொடிய விலங்குகள், விஷ ஜந்துகள் வாழும் அடர்ந்த காட்டில் தன் தம்பி தங்கையரை மழை ,வெயில் மற்றும் விலங்குகள் இடமிருந்து காத்தது சாதாரண சாதனை இல்லை .நெஞ்சில் உரமும், நம்பிக்கையும் கொண்ட ஒரு தேர்ச்சி சிறுமியின் துணிச்சல் மிக்க செயல். நுண்ணறிவும் ,ஆற்றலும் அவளுக்கு இயற்கை அளித்த வரம் என்றால், அந்த இயற்கையே அவளைக் காக்கும் சக்தியாக அமைந்துள்ளது . மரப்பொந்துகளில் அந்த குழந்தைகள் தங்கி தங்களைக் காத்துக் கொண்டதை அறியும் போது வியப்பாக இருக்கிறது .எல்லோரிலும் இளைய குழந்தை ஓராண்டே நிறைந்தது என்பது நமக்கு பெரும் ஆச்சரியத்தையும் , ஆனந்தத்தையும் தருகிறது .
மீட்கப்பட்ட பிள்ளைகள் பகோடா நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். .கொலம்பியாவின் அதிபர் குஷ்டவோ பெட்ரோ அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் . இப்போது உணவு உண்ணவும், சிறிது பேசவும் ஆரம்பித்துள்ள குழந்தைகள் விரைவில் முழுமையாய் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று உலகமே ஒன்று கூடி வாழ்த்துகிறது .
கடல், காடு,மலைகள், நதிகள் என்று வாழ்ந்த மனிதன் தான் நாகரிகம் அடைந்து நகர வாழ்க்கைக்கு மாறி விட்டான்.இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ஒன்று நமக்கும் , நமது இளைய தலைமுறைக்கும் இல்லாமலே போய் விட்டது .காலம் செல்ல செல்ல அம்மாதிரி வாழ்க்கை நாம் வாழும் கான்கிரிட் காடுகளில் அமையப் போவதில்லை . இந்த காலத்தில் , தனித்து விடப்பட்ட குழந்தைகள் காட்டின் சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ,அங்கு நாற்பது நாட்கள் வாழ்ந்து வெளியில் வந்திருப்பது நமக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது .
"இயற்கை தம்மை நம்பியவரைக் கை விடுவதில்லை " இனியேனும் இயன்ற பொழுதுகளில் இயற்கையை ரசித்தும், இயற்கையோடு ஒன்றியும் வாழ்வோம் .
Fatima Valencia
No comments:
Post a Comment