Friday, October 27, 2023

 கண்ணம்மாவின் முயல்குட்டி 

மரியா சிவானந்தம் 



 நம் பால்யத்தில் நாம் பாடி களித்த  குழந்தைப் பாடல்கள்  நினைவுக்கு வருகிறதா ?

 எப்போதேனும் அவற்றை நம் வீட்டு மழலைகள் வாயிலாக கேட்க நேரும் போது  ,நம் குழந்தை பருவத்து இனிமையை  மீட்டுக் கொணர்வது போன்ற உணர்வை அவை  ஏற்படுத்துகிறது .அது Twinkle twinkle little star போன்ற ஆங்கில ரைம்ஸ் என்றாலும் சரி, "பத்துக்காசு விலையிலே பலூன் ஒன்று வாங்கினேன்" போன்ற தமிழ்ப் பாடலானாலும் சரி, கேட்க கேட்க உள்ளம் துள்ளி குதிப்பதை நாம் உணர்வோம் . 

இணைய பயன்பாடுகள் இந்த இருபது ஆண்டுகளில் நம் வாழ்க்கையை ஆக்கிரமித்து  விட்டது. அதிலும் இந்த பத்து ஆண்டுகளில் அனிமேஷன் துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது .யூட்யூப்  கணக்கற்ற காணொலிகளை நமக்கு கொட்டிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான காணொலிகள்  ஆயிரக்கணக்கில் இங்கு உள்ளன. 

சரி, உலகத்திலேயே மிகச் சிரமமான காரியம் என்றால் எதைச் சொல்வீர்கள் ?

எனக்கு ஒரு இரண்டு வயது பேரனைக் கவனித்துக் கொள்வதுதான் . மூன்று மாதங்களாக பேரன் ரோஹனுடன்  இருக்கிறேன். குட்டிச் செல்லத்தை  தூக்கத்தில் இருந்து எழுப்ப தூங்க வைக்க , சாப்பிட வைக்க, ஆடம் பிடித்து  அழுகையில் சமாதானப்படுத்த இவை எல்லாவற்றுக்கும்  பெரிய பிரயத்தனம் தேவைப்படுகிறது . முன்பு போல, இடுப்பில் சுமந்துக் கொண்டு  தெருவில் ,வேடிக்கை காட்டி, காக்கா குருவி காட்டி சமாதானப் படுத்த முடியாது. அந்த சமயங்களில் இந்த  யூட்யூப்   காணொலிகள் உதவிக்கு வருகின்றன. இந்த காணொலிகளைத் தேடி  உள்ளே சென்றால்  நாம் பார்ப்பது  பிரமிப்பு தரும் வண்ணமயமான உலகம்  விரிந்துக் கொண்டே போகிறது .

"Wheels on the bus go round and round," "Humpty dumpty sat on a wall"",Johnny Johnny yes papa", "Hickory Dickory  dock"" Old M’c Donald had a farm., Mary had a little lamb" என்று நாம் ஒருகாலத்தில் கைதட்டி பாடி  மகிழ்ந்த ஆங்கில பாடல்கள் , அழகாக அனிமேட் செய்யப்பட்டு காணொலி வடிவில் கிடைக்கிறது . 

விரைவிலேயே சலிப்பூட்டும் இந்த பாடல்களை விடுத்து தேடிய போது கிடைத்த   தமிழ் ரைம்ஸ்  எனப்படும் குழந்தைப் பாடல்கள் ஆச்சர்யம் தருகிறது .

. "பத்துக்காசு விலையிலே பலூன் வாங்கிய" பாடலைப் போலவே ,காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு , பூனைக்கும் ,பூனைக்கும் கல்யாணமாம் , தோசை அம்மா தோசை கட கட கட என வண்டி வருகுது என்று நாம் பாடிய பாடல்கள் அனைத்தும் தமிழ் மண்ணின் பாரம்பரிய வடிவம் ,காட்சி அமைப்பு , உடை அலங்காரம்  என்று அசத்தலான அனிமேசனுடன் இருக்கிறது .

'சுட்டி கண்ணம்மா " என்ற பெயரில்  உருவாக்கப்பட்ட  அனிமேஷன்  பெண் குழந்தை  நம் மண்ணுக்குரிய  ஆடை, அணி  அலங்காரங்களுடன் உலா வருகிறாள். உயிர் உள்ள குழந்தை போலவே உணர்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக வடிவமைத்து இருக்கிறார்கள் .  அழகாக நடனமாடுகிறாள் .அவளுடன் கோபு, பாபு , அம்மா ,அப்பா, தாத்தா ,பாட்டி ,மாமா ,அத்தை கரடி மாமா , கியாங் குருவி, குரங்கு மாமா ,  பூனை , யானை என்று பல கதாபாத்திரங்கள் தமிழ் பேசி நடிக்கின்றனர் ,நடனமாடுகிறார்கள் . 

பல ஆங்கில பாடல்கள் ட்யூன்கள்  தமிழ் வடிவம் பெற்று காணொலியாக வலம் வருகின்றன .

Mary had a little lamb" கண்ணம்மாவின் முயல்குட்டியாகி அவள் போகும் இடமெல்லாம் பின் தொடர்கிறது."Hickory Dickory  dock ,உயர்ந்த பெரிய கடிகாரம் ஆகி அசத்துகிறது .'Johnny Johnny yes papa"  ."சுட்டி ,சுட்டி என்னம்மா ? மிட்டாய் சாப்பிடுறாயா சொல்லம்மா என்று  மொழி  மாறி அசத்துகிறது . Old M’c Donald had a farm.என்ற பாடல்தான் "எந்தன் தாத்தா பண்ணை இது " என்ற பாடல் வடிவம் பெற்று இருக்கிறது.இப்படி நிறைய பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம் . 

இந்த காணொலிகள் பொழுது போக்குக்காக மட்டும் இன்றி ,குழந்தைகளுக்கு நல்ல படிப்பினை கற்பிக்கவும் செய்கிறது. "கொக்கும் நண்டும் "கதை படித்த நினைவுக்கு வருகிறதா ?.


அடர்ந்த அந்த காட்டில் உண்டு  ,அங்கே ஓர் குளம் ," என்று தொடங்கும் அப்பாடலில் கொக்கு செய்யும் சூழ்ச்சியும் ,நண்டின்  சாதுரியம்  கூறி ,ஒற்றுமையாக வாழவேண்டும் என்று முடியும் .ஒரு  காட்டின்  அமைப்பு,  பறவைகள் ,குரங்குகள் , கொக்கு, நண்டு , குளத்தில் துள்ளும் மீன்கள் எல்லாமே மிக அழகாக உருவாக்கி இருப்பார்கள் .அதே போல 'கியாங் கியாங் குருவி 'பாடல் ஆபத்தில் உதவிட கற்றுத் தருகிறது. இந்த காணொளிகளில் ஓடி விளையாடு பாப்பா பாடல் போன்ற பாரதி பாடலும் இனிய இசையடன் மயக்குகிறது .

உருளைக்கிழங்கு செல்லக்குட்டி என்ற ஒரு பாத்திரம் அழகோ அழகு. மிகச் சிறந்த கற்பனை வளத்துடன் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் பாத்திரம் என்றே சொல்லலாம் .

. நல்ல இசை ,வண்ணமயமான படப்பிடிப்பு ,மனதை கொள்ளை கொள்ளும் அனிமேஷன் பாத்திரங்கள் , கொஞ்சும் தமிழ் என்று குழந்தைகளை  கவர்ந்திழுக்கும் இந்த காணொளிகளை மொபைல் போனில் பார்ப்பதை விட ,  இப்பாடல்களை பெரிய டி .வி  திரையில் குழந்தைகளுடன் ரசித்து பார்ப்பது சிறப்பு . மீண்டும் நாம்  குழந்தையாகும் அந்த மணித்துளிகள் நம் துன்பங்களை மறந்து நம்மை சிரிக்க வைக்கும் , ரசிக்க வைக்கும்  . 

/

  

Thursday, October 12, 2023

Wednesday, October 11, 2023

பொம்மை அல்ல, பொம்மை அல்ல...உண்மை  !

மரியா சிவானந்தம் 


விழாக் காலங்கள்  தொடங்கி விட்டன..! 

 பண்டிகைகள் இறைவனுக்கும், மனிதருக்கும்  இடையே  நெருக்கத்தை  அதிகரிப்பது  மட்டுமல்ல, சக மனிதருடன் வேற்றுமைகள் களைந்து, இடைவெளிகள்  குறைத்து,  அன்பையும், நட்பையும் வளர்க்கும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ன. 

நவராத்திரி அவற்றுள் முக்கியமான, வண்ண மயமான    அழகிய பண்டிகை.  குறிப்பாக சொல்வதானால் ,பெண்கள் தம் உழைப்பையும், கற்பனையையும், அழகுணர்வையும்  கலை உணர்வையும் வெளிப்படுத்தும்  பண்டிகை இது . 

வீட்டில் கொலு அமைத்த பின், அழகாக உடுத்திக் கொண்டு , அக்கம் பக்கத்தவரை ,நண்பர்களை  குங்குமம் கொடுத்து அழைக்க செல்வதில் இருந்து ஆரம்பிக்கிறது  நவராத்திரி கொண்டாட்டம். பின்னர் வீட்டுக்கு . வருபவரை வரவேற்று  அவர்களை பாட வைத்து  சுண்டல், பலகாரம் கொடுத்து உபசரித்து, தாம்பூலம் தந்து வழி அனுப்பி வைப்பது என முழுக்கவே பெண்களின் பங்களிப்பு உள்ள விழா நவராத்திரி. உறவுத் தளைகளை இறுக்க பின்னும் கலை  அறிந்தவர்கள் அல்லவா பெண்கள் ?

நவராத்திரியின் முழு முதல்  வசீகரமே கொலு பொம்மைகள் தாம். எத்தனை விதமான பொம்மைகள். மண்ணில், காகிதத்தில் , மரத்தில்,  பிளாஸ்டிக்கில், பீங்கானில், துணியில் என்று விதவிதமான பொம்மைகளை கொலுவில் வைப்பது என்றாலும். மண்ணில் செய்யப்படும் கடவுளர்களின் பொம்மைகள்,அதற்குரிய முறையில்    வைக்கப்படும். கைவினைக்  கலைஞர்களால் உருவாக்கப்படும் இப்பொம்மைகள் பல ஆண்டுகள் நீடித்து  வரும். நல்ல விதத்தில் பராமரித்தால்   தலைமுறைகள் தாண்டி இவை வீட்டு கொலுவில் இடம் பெறும் .

இத்தகைய மண் பொம்மைகள் செய்யும் கலைஞர் ஒருவரை விகடகவி  சார்பாக, அவர் இல்லத்தில்  சந்தித்தோம். அவர் வேலூர் கொசப்பேட்டை, சூளைமேட்டைச் சார்ந்த அபிராமி.  

மிக   மும்முரமாக பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு  பேசினோம்.

அபிராமி அவரை  அறிமுகப்படுத்திக் கொண்டார் . 

" என் பெயர் அபிராமி, எனக்கு 52 வயது ஆகிறது. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். பொம்மை செய்வது  எங்கள் பாரம்பரிய தொழில். எனவே சிறுவயதில் இருந்தே  பொம்மை செய்வதில் எனக்கு பரிச்சயமுண்டு, ஆர்வத்துடன் இதில் ஈடுபடுகிறேன்  . இங்கு வேலூரில் இந்த பகுதியில் மூன்று குடும்பங்கள் பொம்மை செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறோம்"  . . 

சொல்லுங்க, இந்த நவராத்திரி பொம்மை செய்வதை எப்போது ஆரம்பிக்கிறீர்கள் ?  உதவிக்கு யார் இருக்கிறார்கள் ?

"நவராத்திரி முடிந்த அடுத்த வாரமே அடுத்த நவராத்திரிக்கான பொம்மைகளை செய்ய ஆரம்பித்து விடுவோம். ஆறுமாதம் பொம்மை செய்யவும், ஆறு மாதம் வண்ணம் தீட்டவும் என பொம்மைகள் ஓராண்டுக்குள்  தயாராகி விடும் .நாங்கள் செய்வது எல்லாமே களிமண் பொம்மைகள். இதற்கு தேவையான மண்ணை வன்றந்தாங்கல்  ஏரியில் இருந்து பெறுகிறோம் . என் உதவிக்கு 4 பேர் இருக்கிறார்கள். முப்பது ரூபாய் முதல் இங்கு பொம்மைகள் விலைக்கு கிடைக்கும் கடவுள் பொம்மை உட்பட எல்லாவித பொம்மைகளும் செய்கிறோம்."

எப்படி விற்பனை செய்கிறீர்கள்? நீங்களே தனியாக கடை போடுவீர்களா ?

"நவராத்திரி நேரத்தில்  எனக்கு அவ்வளவு நேரம் இல்லை . சர்வோதயா சங்கம் போன்ற அரசு நிறுவனங்கள் எங்களிடம் நேரிடையாக வாங்கி கொள்வார்கள். இங்கு விற்பது மட்டுமன்றி, அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். தவிர உள்ளூர் மக்களும், வெளி மாவட்டத்தவரும் உண்டு.  ஆந்திரா , பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வந்து வாங்கி செல்பவர்களும் உண்டு."

இந்த தொழிலுக்கு அரசாங்க உதவி உள்ளதா ? 

"பேங்க் லோன் போட்டுக் கொள்கிறேன். முதல் முறை  லோன் வாங்கும் போது மானியம் கிடைக்கும். பெரிதாக லாபம் பார்ப்பதில்லை. ஒரு சீசனில் வாங்கும் கடனை அடுத்த நவராத்திரிக்குள் அடைக்க முடிந்தால் போதும்.  மூலப்பொருட்கள், வேலை செய்பவருக்கு சம்பளம் இதர செலவுகள் போக லாபம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம் ". 

அரசாங்கத்திடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?

"பொம்மை செய்பவர்கள் எல்லோருமே இப்போது வேறு வேலை செய்ய போய் விட்டார்கள் . என்னைப்போல ஒரு சிலரே இதைத் தொடருகிறோம்.  எங்களுடன்  இந்த கலை அழிய கூடாது . அரசாங்கம் இதற்கான பயிற்சி கூடங்களைத் திறந்து, விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். எனக்கும் இதைக் கற்றுத்தர விருப்பம்".

"உங்கள் விருப்பத்தை எங்கள் விகடகவி எடுத்து சொல்லும்"  என்று உறுதி தந்து  விடை பெற்றுக் கொண்டோம் .

வேலூர் போலவே கிருஷ்ணகிரியிலும் 20 குடும்பங்கள் கொலு பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கிருஷ்ணகிரி திருநீலகண்ட தெருவில் இவர்களிடம் ஐந்து ரூபாய் முதற்கொண்டு பொம்மை கிடைக்கும்.  40 பொம்மைகள்  கொண்ட செட் ரூ 500 முதல் ரூ 9000 வரையும் ,தனி பொம்மைகள் ரூ 100 முதல் பத்தாயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கிறது.. இந்த பொம்மைகளுக்கு பெங்களூர், மைசூரில் நல்ல மார்க்கெட் உண்டு. பொம்மை செய்ய தேவையான களிமண் கிடைக்காத நிலையில் தற்போது  காகிதக்கூழில் பொம்மை செய்கிறார்கள். முன்பு 100 குடும்பங்கள் இந்த பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தனராம் .

விழுப்புரம் அருகே கரடிப்பாக்கம் கிராமத்திலும் பொம்மை தயாரிப்பு தொழில் நடைபெறுகிறது .முன்னூறு முதல் மூவாயிரம் ரூபாய் வரை விற்கப்படும் இந்த ஊர் பொம்மைகளுக்கு மதுரை,கோவை ,சென்னை, ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன .ஏரியில் கிடைக்கும் வண்டல் மண்ணை வைத்து இங்கு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.,

நவராத்திரி நேரத்தில் அரசின் பூம்புகார் நிறுவனம், சர்வோதயா நிறுவனங்கள் கண்காட்சி நடத்தி ,பொம்மைகளை விற்பனை செய்வதையும், பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதை வாங்கி செல்வதையும்  பார்க்கிறோம் . இந்த வருட லேட்டஸ்ட்  அட்ராக்சன் சந்திராயன் செட்.. விலை ரூ 2999.

கண்ணையும் ,கருத்தையும் கவரும் பொம்மைகள் நம்மை கடவுள் பக்கம் திரும்புகின்றன. நாம் சற்று   திரும்பி பார்த்தால்  அதை உருவாக்க பாடுபடும் கலைஞரின் வாழ்வு ,வறுமையில் வாடுவதை காண  முடியும் .  குடிசைத் தொழிலாக  இத்தொழில் நடைபெறும் இடங்களில் அந்த தொழிலாளர்கள் வாழ்க்கை நிலை   பெரிதும்  கவலை அளிப்பதாகவே இருக்கிறது.

பொய்யும் ,மெய்யும் கலந்ததே பொம்மை என்று அழைக்கப்படுகிறது. கண்ணையும் கருத்தையும் கவரும் பொம்மைகளை உயிர் அற்றவை. அவற்றை உருவாக்குவோர் சதையும் , ரத்தமும் உள்ள, உயிரும மெய்யும் உள்ள மனிதர்கள். அவர்கள் வறுமையால் வாடாமல் இருந்தால்தான் பொம்மைகள்  உருவாகும் .இந்த கலை நசிவடையாமல் காப்பாற்ற படும் .

சரியான பயிற்சி, வழிகாட்டுதல் , நிதி உதவி  சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு விருது வழங்குதல்  போன்ற அரசின் திட்டங்கள் எல்லா கலைஞர்களையும் சென்றடைய வேண்டும்  .

இது அரசின் கடமை மட்டும் அல்ல, நம் கடமையும் ஆகும் .













Friday, October 6, 2023

 மறுக்கப்படாத நீதி  -வாச்சாத்தி 

மரியா சிவானந்தம் 


Justice delayed is justice denied   என்பது  மிகப்பிரபலமான சொற்றொடர் .

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்றே நாம் அனைவரும் இன்று வரை சொல்லி வந்தோம் .நீதிதேவதை இன்று  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்க்கையைத் தொலைத்த 18 பெண்களுக்கு நீதி வழங்கி உள்ளாள். தன் பொற்கரத்தால் அவர்களுக்கு ஆசி வழங்கி இருக்கிறாள் .சென்னை உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் தீர்ப்பை சமீபத்தில் வழங்கி இருக்கிறது.

வாச்சாத்தி , தமிழகத்தில் யாராலும் மறக்க முடியாத பெயர் . தருமபுரி மாவட்டம், அரூர் அருகே  கல்வராயன் மலைத்தொடரில் அமைந்த சிறிய மலைக்கிராமம் . 1992 ஆண்டு வரை  அப்பெயரை நாம் யாரும் அறிந்திருக்கவில்லை. 

 வீரப்பன், தமிழகத்தின் முக்கிய புள்ளிகளின் ஆதரவுடன், சந்தனக் கடத்தல் சாம்ராஜ்ஜியம் நடத்திய  அக்காலத்தில்  அவனைத் தேடும் பணி அன்றைய தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டது.அதே நேரத்தில் எங்கெல்லாம் சந்தன கடத்தல் நடை பெறுகிறது என்றும் வலை வீசப்பட்டது.  அந்த தேடுதல் வேட்டை வாச்சாத்தி கிராமத்தில் 1992 ஆம்  ஆண்டு ஜூன் இருபதாம் தேதி நடந்தது  155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய் துறையினர் என்று 269 அரசுப் பணியாளர் அக்கிராமத்தில் முகாம் இட்டனர் . அப்போது ஒரு பிரளயம் வெடித்தது. 

தேடுதல் வேட்டை என்ற பெயரில் இந்த அரசு அலுவலர்களும்,  பணியாளரும்   அக்கிராமத்தில் வீடு வீடாக புகுந்து சூறையாடினர். அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தனர். அங்குள்ள கிராம மக்கள் 133 பேரை விசாரணை என்று கூறி ஊர் நடுவே இருந்த ஆலமரத்துக்கு அருகே அழைத்து வந்தனர் . அவர்களில் 90 பேர் பெண்கள்!  

அன்று மாலை ஏரிக்கரையில் மறைத்து வைத்துள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து தருமாறு 18 பெண்களை காவல் துறையினரும் , வனத் துறையினரும் தனியாக அழைத்துச் சென்று ,ஏரிக்கரையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 13 வயது சிறுமி, எட்டு மாத கர்ப்பிணி பெண் உட்பட அந்த பதினெட்டு பெரும்  'புலன் விசாரணை என்ற போர்வையில் சூறையாடப் பெற்றனர். அவர்களின் கூக்குரலும், அலறலும் வெகு தாமதமாகவே வெளி உலகத்துக்கு எட்டியது  .

 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம், அரூர் முன்னாள் எம்எல்ஏ அண்ணாமலை ,தேசிய பழங்குடி மற்றும் பட்டியல் இன மக்கள் ஆணையம் , தேசிய ஜனநாயக மாதர் சங்கம்  போன்றோர் எதிர்க் குரல் எழுப்பினர். இவர்களது  தொடர் முயற்சியின் பயனாக  சென்னை உயர்நீதி மன்றம்  சிபிஐ  விசாரணைக்கு உத்தரவிட்டது.  

1995இல் வழக்கு பதிவு செய்த சிபிஐ இரண்டு ஆண்டுகளாக விசாரணை செய்து குற்றத்தில் ஈடுபட்டதாக 269  வனத்துறையினர்,  காவல் துறையினர், வருவாய் துறையினர் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து . கைது செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பை  2011 ஆம் ஆண்டு தர்மபுரி முதன்மை நீதிபதி குமரகுரு அளித்தார் . அப்போது உயிருடன் இருந்த 215 பேரில் 12 பேருக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ,மற்றவர்களுக்கு 1-3 ஆண்டு சிறை தண்டனையும் அவர் வழங்கினார்.

சென்னை உயர் நீதி மன்றத்தில் இந்த தண்டனையை எதிர்த்து 2011 ஆம் ஆண்டு  மேல் முறையீடு செய்யப்பட்டது. இவை எல்லாமே அரசுப்பணியின்  காரணமாக  நடந்ததாக  குற்றவாளிகள் சார்பாக மனு கொடுக்கப்பட்டு வழக்கு நடந்து வந்தது .

அதன் பின் 12 ஆண்டுகளுக்குப்பின் இப்போது அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு ,ஏற்கனவே வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது . குற்றவாளிகள் அரசு பணி என்ற  போர்வையில் செய்த அராஜகத்தை உயர் நீதி மன்றம் கடுமையாக கண்டித்துள்ளது .

முப்பது ஆண்டுகளாய் அவமானமும், வறுமையும், கண்ணீருமே  வாழ்க்கையாக இருந்த 18 பெண்களுக்குத் தலா பத்து லட்ச ரூபாய் நிவரணத்தொகையாக வழங்கப்பட வேண்டும் என்றும்,அவர்களுக்கு அரசு வேலை  அல்லது சுய தொழில் செய்ய உதவியை அரசு தர வேண்டும் என்றும்  நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது ,

தமிழக வரலாற்றின் பக்கங்களில் ,கரிய மசியால் எழுதப்பட்டுள்ள இந்த வாச்சாத்தி வன்கொடுமைக்காக , பொது  உடமைக் கட்சிகளும் , ஜனநாயக மாதர் சங்கமும் , தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன. தோழர்கள் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பாலபாரதி எம். எல். ஏ  , வாசுகி உமாநாத் போன்றவர்கள் அப்பெண்களுக்கு ஆதரவாக நின்றனர் .  

காலத்தால் அழிக்க முடியாத வலியையும்,   வடுவையும் அந்த கோர சம்பவம் வாச்சாத்தி பெண்களுக்கு அளித்தது. "அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்" என்று சொல்வதுண்டு.அரசும் நின்று கொல்லும் காலம் இது.. பிரேமானந்தா , சிதம்பரம் பத்மினி  வழக்குகளைப் போலவே வாச்சாத்தி வழக்கிலும் நல்லதோர் திருப்பமாக ,இந்த தீர்ப்பு அமைந்துள்ளது . இனி பெண்களைத் தொடும்  முன் எந்த ஆணும், அவன் அரசு அதிகாரி என்றாலும்  ஒரு நிமிடம் சிந்திப்பான் .

நிவாரணங்கள் ஒரு நிரந்தர நிவாரணி அல்ல . வாழ்க்கையை இழந்தவர்க்கு அவை ஊன்று கோலாக அமையுமே அன்றி, இழந்த வாழ்க்கையை  இனி அவர் பெற போவதில்லை.  தண்டனை பெற்றவர்களும் தாம் தொலைத்த நிம்மதியை இனி பெற போவதில்லை .

ஏனெனில் ,

ஏழை சிந்திய கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் . .

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...