பொம்மை அல்ல, பொம்மை அல்ல...உண்மை !
மரியா சிவானந்தம்
விழாக் காலங்கள் தொடங்கி விட்டன..!
பண்டிகைகள் இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, சக மனிதருடன் வேற்றுமைகள் களைந்து, இடைவெளிகள் குறைத்து, அன்பையும், நட்பையும் வளர்க்கும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ன.
நவராத்திரி அவற்றுள் முக்கியமான, வண்ண மயமான அழகிய பண்டிகை. குறிப்பாக சொல்வதானால் ,பெண்கள் தம் உழைப்பையும், கற்பனையையும், அழகுணர்வையும் கலை உணர்வையும் வெளிப்படுத்தும் பண்டிகை இது .
வீட்டில் கொலு அமைத்த பின், அழகாக உடுத்திக் கொண்டு , அக்கம் பக்கத்தவரை ,நண்பர்களை குங்குமம் கொடுத்து அழைக்க செல்வதில் இருந்து ஆரம்பிக்கிறது நவராத்திரி கொண்டாட்டம். பின்னர் வீட்டுக்கு . வருபவரை வரவேற்று அவர்களை பாட வைத்து சுண்டல், பலகாரம் கொடுத்து உபசரித்து, தாம்பூலம் தந்து வழி அனுப்பி வைப்பது என முழுக்கவே பெண்களின் பங்களிப்பு உள்ள விழா நவராத்திரி. உறவுத் தளைகளை இறுக்க பின்னும் கலை அறிந்தவர்கள் அல்லவா பெண்கள் ?
நவராத்திரியின் முழு முதல் வசீகரமே கொலு பொம்மைகள் தாம். எத்தனை விதமான பொம்மைகள். மண்ணில், காகிதத்தில் , மரத்தில், பிளாஸ்டிக்கில், பீங்கானில், துணியில் என்று விதவிதமான பொம்மைகளை கொலுவில் வைப்பது என்றாலும். மண்ணில் செய்யப்படும் கடவுளர்களின் பொம்மைகள்,அதற்குரிய முறையில் வைக்கப்படும். கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்படும் இப்பொம்மைகள் பல ஆண்டுகள் நீடித்து வரும். நல்ல விதத்தில் பராமரித்தால் தலைமுறைகள் தாண்டி இவை வீட்டு கொலுவில் இடம் பெறும் .
இத்தகைய மண் பொம்மைகள் செய்யும் கலைஞர் ஒருவரை விகடகவி சார்பாக, அவர் இல்லத்தில் சந்தித்தோம். அவர் வேலூர் கொசப்பேட்டை, சூளைமேட்டைச் சார்ந்த அபிராமி.
மிக மும்முரமாக பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம்.
அபிராமி அவரை அறிமுகப்படுத்திக் கொண்டார் .
" என் பெயர் அபிராமி, எனக்கு 52 வயது ஆகிறது. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். பொம்மை செய்வது எங்கள் பாரம்பரிய தொழில். எனவே சிறுவயதில் இருந்தே பொம்மை செய்வதில் எனக்கு பரிச்சயமுண்டு, ஆர்வத்துடன் இதில் ஈடுபடுகிறேன் . இங்கு வேலூரில் இந்த பகுதியில் மூன்று குடும்பங்கள் பொம்மை செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறோம்" . .
சொல்லுங்க, இந்த நவராத்திரி பொம்மை செய்வதை எப்போது ஆரம்பிக்கிறீர்கள் ? உதவிக்கு யார் இருக்கிறார்கள் ?
"நவராத்திரி முடிந்த அடுத்த வாரமே அடுத்த நவராத்திரிக்கான பொம்மைகளை செய்ய ஆரம்பித்து விடுவோம். ஆறுமாதம் பொம்மை செய்யவும், ஆறு மாதம் வண்ணம் தீட்டவும் என பொம்மைகள் ஓராண்டுக்குள் தயாராகி விடும் .நாங்கள் செய்வது எல்லாமே களிமண் பொம்மைகள். இதற்கு தேவையான மண்ணை வன்றந்தாங்கல் ஏரியில் இருந்து பெறுகிறோம் . என் உதவிக்கு 4 பேர் இருக்கிறார்கள். முப்பது ரூபாய் முதல் இங்கு பொம்மைகள் விலைக்கு கிடைக்கும் கடவுள் பொம்மை உட்பட எல்லாவித பொம்மைகளும் செய்கிறோம்."
எப்படி விற்பனை செய்கிறீர்கள்? நீங்களே தனியாக கடை போடுவீர்களா ?
"நவராத்திரி நேரத்தில் எனக்கு அவ்வளவு நேரம் இல்லை . சர்வோதயா சங்கம் போன்ற அரசு நிறுவனங்கள் எங்களிடம் நேரிடையாக வாங்கி கொள்வார்கள். இங்கு விற்பது மட்டுமன்றி, அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். தவிர உள்ளூர் மக்களும், வெளி மாவட்டத்தவரும் உண்டு. ஆந்திரா , பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வந்து வாங்கி செல்பவர்களும் உண்டு."
இந்த தொழிலுக்கு அரசாங்க உதவி உள்ளதா ?
"பேங்க் லோன் போட்டுக் கொள்கிறேன். முதல் முறை லோன் வாங்கும் போது மானியம் கிடைக்கும். பெரிதாக லாபம் பார்ப்பதில்லை. ஒரு சீசனில் வாங்கும் கடனை அடுத்த நவராத்திரிக்குள் அடைக்க முடிந்தால் போதும். மூலப்பொருட்கள், வேலை செய்பவருக்கு சம்பளம் இதர செலவுகள் போக லாபம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம் ".
அரசாங்கத்திடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?
"பொம்மை செய்பவர்கள் எல்லோருமே இப்போது வேறு வேலை செய்ய போய் விட்டார்கள் . என்னைப்போல ஒரு சிலரே இதைத் தொடருகிறோம். எங்களுடன் இந்த கலை அழிய கூடாது . அரசாங்கம் இதற்கான பயிற்சி கூடங்களைத் திறந்து, விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். எனக்கும் இதைக் கற்றுத்தர விருப்பம்".
"உங்கள் விருப்பத்தை எங்கள் விகடகவி எடுத்து சொல்லும்" என்று உறுதி தந்து விடை பெற்றுக் கொண்டோம் .
வேலூர் போலவே கிருஷ்ணகிரியிலும் 20 குடும்பங்கள் கொலு பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கிருஷ்ணகிரி திருநீலகண்ட தெருவில் இவர்களிடம் ஐந்து ரூபாய் முதற்கொண்டு பொம்மை கிடைக்கும். 40 பொம்மைகள் கொண்ட செட் ரூ 500 முதல் ரூ 9000 வரையும் ,தனி பொம்மைகள் ரூ 100 முதல் பத்தாயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கிறது.. இந்த பொம்மைகளுக்கு பெங்களூர், மைசூரில் நல்ல மார்க்கெட் உண்டு. பொம்மை செய்ய தேவையான களிமண் கிடைக்காத நிலையில் தற்போது காகிதக்கூழில் பொம்மை செய்கிறார்கள். முன்பு 100 குடும்பங்கள் இந்த பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தனராம் .
விழுப்புரம் அருகே கரடிப்பாக்கம் கிராமத்திலும் பொம்மை தயாரிப்பு தொழில் நடைபெறுகிறது .முன்னூறு முதல் மூவாயிரம் ரூபாய் வரை விற்கப்படும் இந்த ஊர் பொம்மைகளுக்கு மதுரை,கோவை ,சென்னை, ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன .ஏரியில் கிடைக்கும் வண்டல் மண்ணை வைத்து இங்கு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.,
நவராத்திரி நேரத்தில் அரசின் பூம்புகார் நிறுவனம், சர்வோதயா நிறுவனங்கள் கண்காட்சி நடத்தி ,பொம்மைகளை விற்பனை செய்வதையும், பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதை வாங்கி செல்வதையும் பார்க்கிறோம் . இந்த வருட லேட்டஸ்ட் அட்ராக்சன் சந்திராயன் செட்.. விலை ரூ 2999.
No comments:
Post a Comment