Friday, October 6, 2023

 மறுக்கப்படாத நீதி  -வாச்சாத்தி 

மரியா சிவானந்தம் 


Justice delayed is justice denied   என்பது  மிகப்பிரபலமான சொற்றொடர் .

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்றே நாம் அனைவரும் இன்று வரை சொல்லி வந்தோம் .நீதிதேவதை இன்று  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்க்கையைத் தொலைத்த 18 பெண்களுக்கு நீதி வழங்கி உள்ளாள். தன் பொற்கரத்தால் அவர்களுக்கு ஆசி வழங்கி இருக்கிறாள் .சென்னை உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் தீர்ப்பை சமீபத்தில் வழங்கி இருக்கிறது.

வாச்சாத்தி , தமிழகத்தில் யாராலும் மறக்க முடியாத பெயர் . தருமபுரி மாவட்டம், அரூர் அருகே  கல்வராயன் மலைத்தொடரில் அமைந்த சிறிய மலைக்கிராமம் . 1992 ஆண்டு வரை  அப்பெயரை நாம் யாரும் அறிந்திருக்கவில்லை. 

 வீரப்பன், தமிழகத்தின் முக்கிய புள்ளிகளின் ஆதரவுடன், சந்தனக் கடத்தல் சாம்ராஜ்ஜியம் நடத்திய  அக்காலத்தில்  அவனைத் தேடும் பணி அன்றைய தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டது.அதே நேரத்தில் எங்கெல்லாம் சந்தன கடத்தல் நடை பெறுகிறது என்றும் வலை வீசப்பட்டது.  அந்த தேடுதல் வேட்டை வாச்சாத்தி கிராமத்தில் 1992 ஆம்  ஆண்டு ஜூன் இருபதாம் தேதி நடந்தது  155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய் துறையினர் என்று 269 அரசுப் பணியாளர் அக்கிராமத்தில் முகாம் இட்டனர் . அப்போது ஒரு பிரளயம் வெடித்தது. 

தேடுதல் வேட்டை என்ற பெயரில் இந்த அரசு அலுவலர்களும்,  பணியாளரும்   அக்கிராமத்தில் வீடு வீடாக புகுந்து சூறையாடினர். அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தனர். அங்குள்ள கிராம மக்கள் 133 பேரை விசாரணை என்று கூறி ஊர் நடுவே இருந்த ஆலமரத்துக்கு அருகே அழைத்து வந்தனர் . அவர்களில் 90 பேர் பெண்கள்!  

அன்று மாலை ஏரிக்கரையில் மறைத்து வைத்துள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து தருமாறு 18 பெண்களை காவல் துறையினரும் , வனத் துறையினரும் தனியாக அழைத்துச் சென்று ,ஏரிக்கரையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 13 வயது சிறுமி, எட்டு மாத கர்ப்பிணி பெண் உட்பட அந்த பதினெட்டு பெரும்  'புலன் விசாரணை என்ற போர்வையில் சூறையாடப் பெற்றனர். அவர்களின் கூக்குரலும், அலறலும் வெகு தாமதமாகவே வெளி உலகத்துக்கு எட்டியது  .

 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம், அரூர் முன்னாள் எம்எல்ஏ அண்ணாமலை ,தேசிய பழங்குடி மற்றும் பட்டியல் இன மக்கள் ஆணையம் , தேசிய ஜனநாயக மாதர் சங்கம்  போன்றோர் எதிர்க் குரல் எழுப்பினர். இவர்களது  தொடர் முயற்சியின் பயனாக  சென்னை உயர்நீதி மன்றம்  சிபிஐ  விசாரணைக்கு உத்தரவிட்டது.  

1995இல் வழக்கு பதிவு செய்த சிபிஐ இரண்டு ஆண்டுகளாக விசாரணை செய்து குற்றத்தில் ஈடுபட்டதாக 269  வனத்துறையினர்,  காவல் துறையினர், வருவாய் துறையினர் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து . கைது செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பை  2011 ஆம் ஆண்டு தர்மபுரி முதன்மை நீதிபதி குமரகுரு அளித்தார் . அப்போது உயிருடன் இருந்த 215 பேரில் 12 பேருக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ,மற்றவர்களுக்கு 1-3 ஆண்டு சிறை தண்டனையும் அவர் வழங்கினார்.

சென்னை உயர் நீதி மன்றத்தில் இந்த தண்டனையை எதிர்த்து 2011 ஆம் ஆண்டு  மேல் முறையீடு செய்யப்பட்டது. இவை எல்லாமே அரசுப்பணியின்  காரணமாக  நடந்ததாக  குற்றவாளிகள் சார்பாக மனு கொடுக்கப்பட்டு வழக்கு நடந்து வந்தது .

அதன் பின் 12 ஆண்டுகளுக்குப்பின் இப்போது அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு ,ஏற்கனவே வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது . குற்றவாளிகள் அரசு பணி என்ற  போர்வையில் செய்த அராஜகத்தை உயர் நீதி மன்றம் கடுமையாக கண்டித்துள்ளது .

முப்பது ஆண்டுகளாய் அவமானமும், வறுமையும், கண்ணீருமே  வாழ்க்கையாக இருந்த 18 பெண்களுக்குத் தலா பத்து லட்ச ரூபாய் நிவரணத்தொகையாக வழங்கப்பட வேண்டும் என்றும்,அவர்களுக்கு அரசு வேலை  அல்லது சுய தொழில் செய்ய உதவியை அரசு தர வேண்டும் என்றும்  நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது ,

தமிழக வரலாற்றின் பக்கங்களில் ,கரிய மசியால் எழுதப்பட்டுள்ள இந்த வாச்சாத்தி வன்கொடுமைக்காக , பொது  உடமைக் கட்சிகளும் , ஜனநாயக மாதர் சங்கமும் , தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன. தோழர்கள் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பாலபாரதி எம். எல். ஏ  , வாசுகி உமாநாத் போன்றவர்கள் அப்பெண்களுக்கு ஆதரவாக நின்றனர் .  

காலத்தால் அழிக்க முடியாத வலியையும்,   வடுவையும் அந்த கோர சம்பவம் வாச்சாத்தி பெண்களுக்கு அளித்தது. "அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்" என்று சொல்வதுண்டு.அரசும் நின்று கொல்லும் காலம் இது.. பிரேமானந்தா , சிதம்பரம் பத்மினி  வழக்குகளைப் போலவே வாச்சாத்தி வழக்கிலும் நல்லதோர் திருப்பமாக ,இந்த தீர்ப்பு அமைந்துள்ளது . இனி பெண்களைத் தொடும்  முன் எந்த ஆணும், அவன் அரசு அதிகாரி என்றாலும்  ஒரு நிமிடம் சிந்திப்பான் .

நிவாரணங்கள் ஒரு நிரந்தர நிவாரணி அல்ல . வாழ்க்கையை இழந்தவர்க்கு அவை ஊன்று கோலாக அமையுமே அன்றி, இழந்த வாழ்க்கையை  இனி அவர் பெற போவதில்லை.  தண்டனை பெற்றவர்களும் தாம் தொலைத்த நிம்மதியை இனி பெற போவதில்லை .

ஏனெனில் ,

ஏழை சிந்திய கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் . .

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...