சுகமான குரலென்றால் ....
மரியா சிவானந்தம்
இந்த வாரம் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வாரம்
தென்னிந்தியாவின் முடிசூடா இசைப் பேரரசி, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நடந்தது .ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் முதல்வரால், சுசீலாவுக்கு இந்த கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. ஒரு தகுதி மிக்க நபருக்கு இப்பட்டத்தை அளித்து பல்கலைக்கழகம் தன்னைக் கௌரவப் படுத்திக் கொண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும் .
உலகில் இனிமை தரும் பொருட்களைப் பட்டியல் இடுகையில், அவை எல்லாவற்றுக்கும் முதன்மையில் நிற்பது சுசீலாவின் குரல். பூந்தேனை விட இனிப்பது, இளந்தென்றலை விட மென்மையானது. 'சுகமான குரலென்றால் அது சுசீலாவின் குரல் அன்றோ ? "
88 வயதாகும் சுசீலா அம்மாவின் நீண்ட , நெடிய இசைப்பயணத்தில் அவர் வாங்காத விருது இல்லை .ஐந்து முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது பெற்றவர் .உண்மையில் பின்னணி பாடகியருக்கான விருது ஏற்படுத்தப்பட்டவுடன் முதல் விருதே சுசீலாவுக்கு வழங்கப்பட்டது. கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் ,"எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ " இவரது முதல் பாடல் .ஐம்பதுகளில் தொடங்கிய ஐம்பதாண்டு கடந்து இன்னும் பெருமை பொங்கும் பல விருதுகளுடன் தொடர்கிறது. 17000கும் மேற்பட்ட பாடல்களால் அவர் கின்னஸில் நுழைந்தார் . தமிழக அரசின் கலைமாமணி விருதும் , இந்திய அரசின் பத்ம பூஷன் விருதும் அவரது திறமைக்கு கிடைத்த பிற அங்கீகாரங்கள் .
வாழ்வின் ரணங்களால் புண்பட்ட மனதிற்கு , இசை போன்ற மருந்து வேறொன்றில்லை . அதிலும் சுசீலாவின் மென்மையான குரல் இரவின் மௌனத்திற்கு இதம் சேர்க்கிறது. யாரும் அறியாமல் நம் கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கிறது. நம் சந்தோச தருணங்களில் நம் கைகளைப் பற்றிக் கொள்கிறது. பயணங்களில் துணை வருகிறது. காதல் நினைவுகளைக் மீட்டெடுக்கிறது. மழலையின் தாலாட்டில் தொடங்கி , எல்லா வயதினருக்கும் , எல்லா நிலைகளிலும் சுசீலாவின் இசையின் தாக்கம் இன்றி வாழ்வு நிறைவதில்லை .
ஆயிரக்கணக்கான பாடல்களில் எதை சொல்ல ? எதை விட ?
டிஎம்எஸ் உடன் ஆயிரம் டூயட் பாடல்கள் பாடியவர் சுசீலா . ஆனால் அவர் கதாநாயகியருக்கு பாடிய சோலோ பாடல்கள் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்
"பொன்னெழில் பூத்தது புது வானில் ,
வெண்பனி தூவும் நிலவே நில் ' என்ற பாடலில் சரோஜா தேவியின் முக பாவனையில் சுசீலாவின் குரல் நடித்தது . "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் " இனிமையும் ,அழகும் நிறைந்த பாடல்.
சாவித்திரிக்கு குரல் தந்த பாசமலரின் , "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல " பாதகாணிக்கையின் " அத்தை மகனே போய் வரவா? போன்ற பாடல்கள் காலத்தின் சுழற்சியில் அழிக்க முடியாதவை .
தேவிகாவுக்கு 'அழகே வா வா, அருகே வா " "ஆயிரம் பெண்மை மலரட்டுமே " போன்ற பாடல்களும், விஜயகுமாரிக்கு, "இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலை கேட்கின்றேன் "மதுரா நகரில் தமிழ் சங்கம் " போன்ற பாடலாலும் தனி அடையாளம் தந்தார் . சௌகார் ஜானகி "நீராடும் வைகையில் நின்றாடும் மீனே" மாலைப் பொழுதின் மயக்கத்திலே " போன்ற பாடல்கள் கே ஆர் விஜயாவுக்கு ."உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல " ... இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே சொல்லும் . ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்னும் நூறாண்டு சென்ற பின்னும் நம் செவிகளில் நிறையும் .
மனதை மயக்கம் மற்றுமொரு பாடல் .."கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம் ...கண்ணன் நடுவினிலே' என்னும் வானம்பாடி பட பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். அப்பாடலின் நிரந்தரப் புகழுக்கு காரணம் கண்ணதாசனின் வரிகளா, கே.வி.எம்மின் இசையா, அழகான தேவிகாவின் முகபாவங்களா இல்லை உயிர் கலந்து பாடிய சுசிலாவின் குரலா என்ற பிரமிப்பு ஒவ்வொரு முறையும் ஏற்படும் . துவக்கத்தில் "ஹஹ் ஹஹ் ஹா' என்று தொடங்கும் இடமும் , முடிவில் கண்ணா என்று உச்சஸ்தாயில் சென்று மென்மையாக பல்லவியில் முடியும் போது, நாம் காண முடியாத கண்ணனின் பாதத்தில் நம் உள்ளம் தானாக சென்று சரண் அடைந்து விடுகிறது .
ஐம்பதுகளில் பாட ஆரம்பித்து அறுபதுகளில். எழுபதுகளில் சுசீலாவுடன் உடன் களத்தில் இருந்த பின்னணி பாடகியர் சிலர் . எல் ஆர் .ஈஸ்வரி , எஸ்.ஜானகி , ஏ .பி.கோமளா , ராஜேஸ்வரி , ஜிக்கி என்று இவர்கள் தத்தம் பாணியில் பாடல்களைத் தந்துக் கொண்டு இருக்க, சுசீலாவின் ராஜாங்கம் தனியாகவே நடந்தது. அவர் ஒரு மகாராணியாக சிம்மாசனத்தில் அமர்ந்து , இசையை ஆண்டார். "சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா கூ கூ .." என்று எண்பதுகளின் துவக்கத்தில் ஒரு சின்னக்குயில் பாடிக் கொண்டு வந்த பின்பே, சுசிலா திரைப்பட பாடல்களில் இருந்து, பக்தி பாடல்கள் ,தனிப்பாடல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் . முழுமையாக இல்லை என்றாலும் , ஓரளவு ஒய்வு அவருக்கு அதன் பின் தான் வாய்க்கப்பட்டது .
சினிமா இசை என்பது கூட்டு முயற்சியே . பாடல் ஆசிரியர் , இசை அமைப்பாளர் , பாடகர் அனைவரும் ஒரு பாடலின் வெற்றியில் பங்கெடுத்துக் கொண்டாலும், அப்பாடலுக்கு உயிர் தரும் ரசவாதத்தை நிகழ்த்துவது பாடுபவரே .அவ்விதத்தில் சுசிலா நான்கு தலைமுறைக்கான இசைத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளார் .
மதிப்புறு முனைவர் பட்டம் பெறும் டாக்டர் சுசீலாவுக்கு நம் சார்பில் ஒரு பூங்கொத்து
No comments:
Post a Comment