Thursday, November 9, 2023

 சேலை வாங்க , சேலத்துக்கு வாங்க !!

மரியா சிவானந்தம் 


தீபாவளி வந்தாச்சு ..! 

பண்டிகை என்றாலே குதூகலம்தான்.  அதிலும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித் தரும் விழா தீபாவளி . மன இடுக்கில் ஈரமாய் கசியும்  நினைவுகளை, மகிழ்வான கணங்களை   பகிர்ந்துக் கொள்ளும்  விழா தீபாவளி.  இனிப்பு, பலகாரம், பட்டாசு, புத்தாடை, உறவினர் நண்பர்களின் வாழ்த்துக்கள்   இவை எல்லாம்  விழாக்கால சந்தோஷத்தை  பலமடங்காய்   நம் உள்ளத்தில் பெருக்கித் தரும் .

ஒரு தீபாவளி முடியும் போதே , மனம் அடுத்த தீபாவளிக்கு  ஏங்க ஆரம்பிக்கும் . குறிப்பாக பெண்களுக்கு மிகப் பிடித்தமான பண்டிகைகளில்  தீபாவளி முதன்மையானது . புதிய, வண்ணமயமான ஆடைகள் தீபாவளியின் போது வாங்கி உடுத்துவது  எல்லா வயது பெண்களுக்கும் பிடித்தமான ஒன்று .

முன்பொரு காலம் இருந்தது .  தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் ஜவுளி எடுத்த காலம் அது. இப்போது அப்படி இல்லை, வருடம் முழுவதும் மக்கள் ஜவுளிக்கடைகளில் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஐந்து சேலை ,பத்து சேலை வைத்திருந்த நம் அம்மாக்கள் போல் இல்லை. இப்போது குறைந்தது  200  சேலை வைத்திருக்கும் தலைமுறை   நம் தலைமுறை  .

"பற்றுக பற்றற்றான் பற்றினை" என்ற குறள் சொன்னாலும் ,எப்பற்றை விடுத்தாலும் , பட்டின் மேல் வைக்கும் பற்று  பெண்களை விட்டு அகலாது.  தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி ,தர்மாவரம்   என பட்டு நெசவு செய்யும்இந்த ஊர்களில்   இன்னும் வீடுகளில் வியாபாரம் நடப்பதை காண்கிறோம். அந்த வீடு கம் கடைகளில் தரையில் பாய் விரித்து, வாடிக்கையாளரை அதில் அமர வைத்து விற்பனை செய்கிறார்கள்  .நம் பெண்கள்  சலிக்காமல் பேரம் பேசி சேலைகள் வாங்குவது ஒரு சுகானுபவம் .

சேலமும் பட்டுக்கு புகழ் பெற்றது . பட்டு நெசவு , கைத்தறிக்கு புகழ்  பெற்ற சேலம் நகரைச் சுற்றி  பல கிராமங்களில் பட்டு நெசவு நடந்து வருகிறது .கைத்தறி மற்றும் பவர் லூம் நெசவுகள் நடைபெறுகிறது. இளம்பிள்ளை, மேச்சேரி, நங்கவல்லி, கொண்டலாம்பட்டி, பஞ்சுகாளிபட்டி, சிந்தாமணியூர்  போன்ற கிராமங்களில் நெய்யப்படும் பட்டுச் சேலைகள் தரமாகவும் ,  நகர் புறத்து மெகா ஷோ ரூம்களில்  குறிக்கப்படும் விலையை விட விலை குறைந்ததாகவும் இருக்கிறது .  இக்கிராமங்களில் தயாரிக்கப்படும் பட்டுச் சேலைகளை முதலில்  வீடுகளிலேயே விற்பனை செய்து வந்தனர் .  இப்போது  ஷோரூம்களும் நிறைய பெருகி வருகிறது.  அதே போல சேலம் ஸ்பெஷல் காட்டன் சேலைகளும் இக்கிராமங்களில் நெய்யப்பட்டு ,விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன 

சேலம்- மேட்டூர் நெடுஞ்சாலையில் உள்ளடங்கி இருக்கும்  சிறு கிராமமான சிந்தாமணியூரில் உள்ள  கோபாலகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸை நாம் பார்த்த போது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. .தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் மக்கள் இங்கு காரில் வந்து பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்வதைப் நேரில் பார்த்த போது  புதிய அனுபவமாக இருந்தது . முகூர்த்த காலங்களில் இங்கு கூடும்  மக்கள் கூட்டம் அசர வைக்கிறது. 

கோபாலகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ்   உரிமையாளர் கனகராஜ் அவர்களை விகடகவி தீபாவளி சிறப்பிதழுக்காக நேர்க்காணல் செய்தோம் . அவர் தன் 'பட்டு' அனுபவங்களை நம்மிடம்  பகிர்ந்துக் கொண்டார் .

"என் பாட்டி மல்லக்காள் காலத்தில் இருந்தே, எங்கள் வீட்டில் தறி நெசவு செய்து வந்தோம் . என் தந்தை கோவிந்தராஜ் கர்நாடகா ,கேரளா போன்ற மாநிலங்களில் எங்கள் சேலைகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வார் . 1960 முதல்  விற்பனை துவங்கி நடத்தி வருகிறோம் .அடுத்த தலைமுறையாக ,நானும் என் சகோதரர்களும் உற்பத்தி மற்றும் விற்பனையைக் கவனித்துக் கொள்கிறோம்" என்று துவக்கினார் .

"என்னென்ன ரகங்களில் சேலைகள் இருக்கின்றன ,என்ன விலையில் இருக்கிறது ?

எங்களிடம் ரூ 375 முதல் அறுபதாயிரம் ரூபாய் வரை சேலைகள் இருக்கின்றன. பட்டு சேலையில் சாப்ட் சில்க், ரா சில்க், செமி சில்க், டிசைனர் சேலைகள் , திருமண பட்டுப் புடவைகள் என பல ரகங்கள் உள்ளன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் தரமான ஆடைகளை ,குறைந்த விலையில் தருகிறோம் . பருத்தி சேலைகள் , சில்க் காட்டன் சேலைகளும் உண்டு 

இந்த துணிவகைகள்  உங்கள் தறியிலேயே உருவானவையா ?

சேலத்தைச் சுற்றியுள்ள  20 கிராமங்களில் உள்ள தறிகளில் பட்டு நெசவு  செய்கிறார்கள்.  நெய்யும் கூலி கொடுத்து  வாங்குவதும், ஒப்பந்த அடிப்படையில்  நெய்து வாங்குவதும் உண்டு, எங்கள் தறியில் உருவான துணிகளுடன் இவற்றையும் விற்பனை செய்கிறோம் .  ஒரு திருமணத்துக்கு வேண்டிய பட்டுப்புடவைகள், கூறைப் புடவைகள் கிப்ட் சேலைகள் , ரிசப்ஷன் சேலைகள் எல்லாமே இங்கு உண்டு. ஆண்களுக்கான பட்டு வேட்டி, பட்டுச்  சட்டைகளில்   ராம்ராஜ் , உதயம்  பிராண்டுகள் விற்பனை செய்கிறோம் .

உங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

தரம், விலை இவற்றின் அடிப்படையில் தமிழகமெங்கும் எங்களுக்கு  வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் பலர்  திருமணம்  போன்ற வைபவங்களுக்கு எங்களைத் தேடி வருகிறார்கள். தவிர சென்னை  தருமபுரி , கரூர் போன்ற இடங்களில் இருந்து வழக்கமான வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உண்டு. தவிர நாங்கள் எப்போதும்  மொத்த விலைக்கே  விற்பனை செய்வதால் , பல சில்லறை வியாபாரிகள் இங்கு வாங்கிச் சென்று விற்று லாபம் பெறுகிறார்கள் .  பெரிய கடைகளுக்கும் இங்கிருந்து அனுப்புவது உண்டு. ஆன்லைனிலும் விற்பனை செய்கிறோம்  " என்று முடித்துக் கொண்டார் 

சிந்தாமனையூரில் சிறிதும் ,பெரிதுமாக 50 கடைகள் உள்ளன . பல கடைகள்  பல ஆண்டுகளாக வீடுகளில் இயங்குகின்றன. விளம்பரத்துக்காக கோடி கணக்கில் செலவிடும் கார்ப்பரேட் 'துணிக்கடல்'கள் இடையில், விளம்பரமே இல்லாமல் அல்லது வாய் மொழி  விளம்பரத்தை மட்டுமே வைத்து  விற்பனையில்  ஈடுபட்டு வருகிறார்கள் .  சிந்தாமணியூர், இளம்பிள்ளை மற்றும் பிற  கிராமங்கள் நெசவை நம்பியே  வாழ்கின்றன.

கிராமமக்களின் வாழ்வாதாரமும், கிராமப் பொருளாதாரமும் நெசவுத்  தொழிலை நம்பியே இருக்கின்றன.  பட்டு நூல் விலை உயர்வு ,நெய்யும் கூலி , போக்குவரத்து செலவு , பராமரிப்பு செலவு என்று எல்லாமே விலை கூடியுள்ள இந்த கால கட்டத்தில்  இத்தொழிலைத் தொய்வின்றி இவர்கள் நடத்துவது கடினமே .

தீபாவளி மட்டுமல்ல   வாய்ப்பிருக்கும் போதெல்லாம்  இந்த நெசவாளர்களுக்கு  ஆதரவு  தர வேண்டியது அவசியம்.  








No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...