Friday, November 3, 2023

 மனித உழைப்பு என்னும் மகா சக்தி 

மரியா சிவானந்தம் 



மனிதனின் முழு முதல் அடையாளம் உழைப்பு .

உழைப்பின் வழியாகவே மனித இனம், நாம்  இன்று அனுபவிக்கும்  உன்னத நிலையை  அடைந்துள்ளது. 

காடு களைந்தோம் - நல்ல
கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம் 

வீடுகள் கண்டோம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.(பாரதிதாசன் )

என்று பாரதிதாசன் சொல்வது போல , காடு  களைந்து , கழனி திருத்தி  நாடுகளாக்கியது மனித உழைப்பே. கற்காலம் முதல் இக்காலம் வரை, மனித உழைப்பில் விளைந்ததுவே மனுக்குலத்தின் உயர்வு .

காலம் செல்ல செல்ல அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும்  தொழிற்சாலைகளை உருவாக்கின. புதிய தொழிற்களங்களில் தொழிலாளிகள் கசக்கி பிழியப்பட்டனர். தினமும் 16 மணி வேலை நேரம்.செய்த தொழிலாளிகள் முறையான உணவு, ஓய்வு எதுவும் இன்றி   உடல்நலம் தொலைத்து அவதிக்கு உள்ளானார்கள் .உழைக்கும் வர்க்கம் அடிமைகளாக நடத்தப்பட்ட காலம் அது .  

அப்போது தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொது உடமை இயக்கம் தொடங்கப்பட்டு "உலகத்  தொழிலாளர்களே  ஒன்றுபடுங்கள்" என்ற அறைக்கூவல் விடுத்தார் கார்ல் மார்க்ஸ் . 1889 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில்  தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோஷத்தை எழுப்பினார். எத்திசையும் எதிரொலித்த அந்த கோஷத்தின் தாக்கம் இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி வேலை நேரம் ,வார ஓய்வு, உணவு இடைவேளை, இரவு ஷிப்டில் சலுகைகள்    எல்லாம்  பல ஆண்டு போராட்டங்களின் விளைவு .

இப்போது உலகமயமாக்களின் தாக்கத்தால் ,உழைப்பாளரின் வேளை நேரம் அதிகரித்து இருக்கிறது .ஐடி துறையில் தினம் பத்து மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை  வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். மருத்துவர்கள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை பார்க்கிறார்கள் .  சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு தினம் 12  மணி நேரம்,வாரம் மூன்று நாள் விடுப்பு   என்ற மசோதாவை  தாக்கல் செய்தது.வெளி நாட்டில் இருந்து முதலீடு செய்பவர்களுக்கு, நம் வேலை நேரம்  பொருந்த வேண்டும் என்ற கருத்தில் சொன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னாலும் , அதை நம் சூழலுக்கு ஏற்க முடியாது .

இந்நிலையில் சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனர்  ஒரு பேட்டியில் இந்திய இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கருத்து சொல்லி இருக்கிறார். இந்தியா சைனாவைப் போல முன்னேறிய நாடாக மாற வேண்டுமானால் , இந்திய இளைஞர்கள் 70 மணி நேரம் கடினமாக உழைக்க வேண்டும் என்பது அவர் கருத்து . 

முன்னேறிய பல நாடுகளில் வேலை நேரம் மிக குறைவு. குறைந்த பட்சமாக ஜெர்மனியில் வாரத்துக்கு  28 மணி நேரம் மட்டுமே செய்கிறரர்கள் . எல்லா நாடுகளிலும் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் வார விடுமுறையாக்கப்பட்டு, மக்கள் வார  இறுதியைக் கொண்டாடி தீர்க்கிறார்கள். இரண்டு நாள் ஓய்வு, மனதுக்குப்  புத்துணர்ச்சியைத் தருகிறது.    ஐந்து நாள் வேலையையும் நான்கு நாட்களாகவோ , மூன்று நாட்களாகவோ குறைக்கும் எண்ணம் மற்ற நாடுகளில் இருக்கிறது.  இது ஒரு சாராரின் கருத்து 

.  70 மணி நேரம் அல்லது தினம் 12 மணி நேர வேலை என்பது மீண்டும் இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய நிலையில் தொழிலாளர்களை கூட்டி செல்லும் நிலையாகும் .   கார்ப்பரேட் முதலாளிகளின் குரலாக இருக்கும் இந்த யோசனையால்  இதுவரை போராடி பெற்ற சலுகைகள் இழக்க வேண்டி இருக்கும் என்பது ஒரு சாராரின் கருத்து .

இந்தியா போன்ற மனிதவளம் பெருகிய நாட்டில் 70 மணி நேர வேலை இரண்டு பேருக்கு பிரித்துத் தரலாம். அந்த அளவுக்கு இங்கு வேலை இல்லாதவர்கள் இருக்கிறார்கள்.  தனியார் நிறுவனங்களில்  வேலை செய்யும் அளவுக்கு மற்ற துறை   ஊழியர்களின் செயல்பாடு இருப்பதில்லை. அவர்களுக்கு ஊக்கம் தந்து  பணி  செய்ய வைத்தால் உற்பத்தி திறன் பெருகும். நம் நாட்டில் லஞ்சமும் , ஊழலும்  நல்ல பணிகள் பலவற்றுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது .அவற்றை களைந்தாலே இங்கு தொழில் வளம் பெருகும் , அரசு வருவாயும் தனிநபர் வருவாயும் பெருகும். 

மனிதன் வேலை செய்யும் இயந்திரம்  மட்டுமல்ல. அவன்  உடலும், மனமும்  உள்ள  சமூக பிரஜை. உடலுக்கு ஓய்வும் ,மனதிற்கு அமைதி கொண்ட பணிச்சூழலும் அவனது தேவைகள். பொருளாதார காரணங்களைத் தாண்டி , அவன் மனதுக்கு உவப்பானதாக ஒரு பணிச்சூழல் அமைய வேண்டும் .அவனது குடும்பத்திற்கு அவன் நேரம் ஒதுக்க வேண்டும்  . 70 மணி நேர வேலை என்றால் இவை எதுவும் சாத்தியமில்லை .  

நம் நாட்டில் முறை  சாரா தொழிலாளர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் . அவர்கள் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை ஓய்வின்றி உழைக்கிறார்கள் .எத்தனை தொழிலாளர் நலச்  சட்டங்கள் இருந்தாலும் ,எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலை உயருவதில்லை என்பது நிஜம் . 

 வேலை நேரத்தைக் கூட்டினால் மட்டுமே உற்பத்தி பெருகும் என்பது நிரூபிக்கப்படாத  உண்மை. பணிச்சுமையும், களைப்பும், சலிப்பும் கொண்ட ஊழியரால் எவ்வாறு நிறுவனம் விரும்பும்   பங்களிப்பைத் தர முடியும்?  பெண்கள் இன்று சரிபாதியாக, அல்லது ஆண்களை விட அதிகமாக வேலைக்குச் செல்கிறார்கள். 12 மணிநேர வேலைக்குச் செல்லும் பெண் எத்தனை மணிக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகளை முடித்து விட்டு பணிக்கு செல்ல முடியும்? இன்னும் இந்த வேலைகளை  பெண்களுக்கான மட்டுமான வேலைகளாக அல்லவா நம் சமூகம் நிர்ணயித்துள்ளது ?

There is no substitute for hard work என்பது மறுக்க முடியாத உண்மை. அனைவரும் ஒன்றுபட்டு  உழைத்தால் மட்டுமே இலக்குகளை அடைய முடியும் என்பதில் மாற்று கருத்தில்லை . 

வேலை நேரத்தை அதிகரிப்பது மட்டுமே அதற்கு தீர்வாகாது . 

.


No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...