மரித்துப் போனதோ மனித நேயம் ?
மரியா சிவானந்தம்
மிக்ஜாம் புயலும், கனமழையும் சென்னையைப் புரட்டி விட்டது.
எங்கும் வெள்ளம் சூழ்ந்தது .மக்கள் வீடுகளில் சிறைப்பட்டனர். தண்ணீர் புகுந்த வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்கள் மீட்புப் படகுகளில் ஏற்றிக் கொள்ளப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பது, அவர்களுக்கு உணவு அளிப்பது எல்லாமே கடினமான பணியானது. தொடர்ந்த மின்வெட்டு மக்களுக்கு அச்சத்தை அளித்தது.
அரசுப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், மாநகர அலுவலர்கள், காவல் துறையினர் ,தேசிய பேரிடர் மீட்புக் துறையினர் என ஒரு பெரிய படையே மீட்பு பணிகளில் ஈடுபட்டது. இவர்களுடன் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது சமையலறை அமைத்து உணவு சமைத்து வழங்கினார்கள்.இப்போது Back to Home என்று மக்களுக்கு போர்வைகள், மளிகை சாமான்கள், உள்ளாடைகள் அவசியமான பொருட்களை வழங்கி வருகிறார்கள். மக்கள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாக இப்போதும் சொல்ல முடியாது.
'எரிகிற வீட்டில் பிடுங்கிய வரைக்கும் லாபம்" என்ற பழமொழி இந்த சூழலில் உண்மையானது. இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு லிட்டர் பால் நூறு ரூபாய் வரைக்கும் விற்றவர் உண்டு.ரப்பர் படகில் ஏற்றி செல்ல அநியாய கூலி கேட்டதும் நடந்தது. மருந்து, காய்கறி,குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிபடுகையில் விலைகளை ஏற்றி அநியாய லாபம் கண்டவர்கள் உண்டு. நன்றாக வாழ்ந்தவர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு கை ஏந்தி நிற்பது அத்தனை அவமானகரமானது என்பது காணொளிகளைப் பார்க்கையில் உணர முடிந்தது .
எனக்குத் தெரிந்த பெண் வழக்கறிஞர் வசந்தா சுசிலா, 45 வயது பெண்மணி சமூக ஆர்வலர், இலக்கியவாதி, பொது உடமை மேடைகளில் முழங்கியவர், பெண்களுக்கான போராட்டங்களை நடத்தியவர். இரண்டு மகன்களின் அம்மா.
வானத்தைப் பிளந்து மழை கொட்டிய அந்த இரவில் திடீர் என்று சுசீலாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது .அவர் இருந்த கேகே நகர் பகுதியில் எங்கும் வெள்ளம் சூழ்ந்திருந்தது.அவர் கணவரால் சுசீலாவை எங்கும் எடுத்துச் செல்லவோ , மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை தரவோ முடியாத நிலையில் , சுசிலா இறந்தார் . அவர் இறப்பு சமூகத்தின் இழப்பு
இந்த வெள்ளத்தில் இது போன்ற நிறைய கண்ணீர் கதைகள் மிதந்து வருகின்றன .அவற்றில் ஒன்று மசூத் ,சௌமியாவின் கலங்க வைக்கும் கதை
மசூத் ,சௌமியா இருவரும் வடசென்னை, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த தம்பதிகள். மசூத் ஒரு கூலித் தொழிலாளி. அந்த மழைநாளில் சௌமியாவுக்கு பிரசவ ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில் அக்கம் பக்கத்துப் பெண்கள் வந்து பிரசவம் பார்த்தனர். தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் மீன்பாடி வண்டியில் ஏற்றி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சௌமியாவை எடுத்துச் சென்றார் மசூத். அது பூட்டி இருக்க பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள் .அங்கு இறந்த குழந்தையைப் பிரித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் செல்ல , சௌமியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறந்த குழந்தையை மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்தனர் .
மசூத் குழந்தையை அடக்கம் செய்ய கேட்டு மார்ச்சுவரியை அணுகிய போது அங்கிருந்த ஊழியர் அவரை அலைக்கழித்தனர். முதலில் போலீசிடம் கடிதம் வாங்கி வா என்று அனுப்பினார். போலீஸ் "நாங்க சொன்னதாக சொல்லு " என்று திருப்பி அனுப்பினார். அப்போதும் மார்ச்சுவரி ஊழியர் ரூ 2500 கொண்டு வரச் சொல்லி திருப்பி அனுப்பினார்கள் ஊழியர் .முதலாளியிடம் கடனாக வாங்கிய 5000 ரூபாயும் ஏற்கனவே செலவழித்து விட்ட மசூத் நான்கு நாட்கள் நடையாக நடந்த பின்னரே இருந்த குழந்தை அவரிடம் கொடுக்கப்பட்டது .
அதுவும் துணிகளில் சுற்றி அல்ல ,ஒரு அட்டைபெட்டையில் போட்டு கொடுத்து அனுப்பினார்கள் மார்ச்சுவரி ஊழியர். சமூக வலைத்தளமும் , ஊடகங்களும் இந்த மனிதாபிமானமற்ற செயலால் அதிர்ந்தன . அதன் பின்னர் பணம் கேட்ட மார்ச்சுவரி ஊழியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார் .
அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் ஆழமாய் வேரூன்றி ,கிளை பரப்பி விஷ விருட்சமாகி பல்லாண்டு காலமாகிறது . ஆனால் இறந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் அடைத்து தரும் செயல் கொடுமையானது. மனித உணர்வுள்ள யாரும் நினைக்கவும் முடியாத செயல் .மழை வெள்ளத்தில் மனிதம் துளிர்த்து , பல நல்ல சேவைகளை செய்யும் நேரத்தில் , மனிதம் மரித்ததோ என்று கலங்க வைக்கிறது இந்த சம்பவம்.காவலர் தயாளன் என்பவர் ஒரு குழந்தையை மீட்டு தூக்கி வரும் புகைப்படம் வைரலாகி கவனம் பெற்றது .
வெள்ளம் சென்னை வீதிகளில் மட்டும் அல்ல , சில உள்ளங்களிலும் நிறைந்து வழிகிறது கண்ணீராக !
No comments:
Post a Comment