மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறார்
மரியா சிவானந்தம்
"ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்” (எசாயா 9:6), ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்கள் எதிர்பார்த்து பிறந்த பாலன் இயேசு. பாவத்தில் மடிந்துக் கொண்டிருந்த மனித இனத்தை மீட்டு, நல்வழி காட்டி, அன்பை ,அமைதியை விதைத்து, விண்ணுலகுக்கு வழி காட்டிய இறைமகன் இயேசுவின் பிறந்த நாள் கிறிஸ்துமஸ் கொண்டாட இருக்கிறோம். உலகமே திருவிழாக் கோலம் பூண்டு அனைவரும் ஆனந்தம் கலந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பண்டிகை இது .
"உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை , பூவுலகில் நன்மனத்தோருக்கு அமைதி" இதுவே கிறிஸ்துமஸின் முதன்மை பாடல். இயேசு பிறந்த போது வான தூதர்கள் பாடிய இந்த பாடலை நள்ளிரவில் தேவாலயத்தில் கிறிஸ்துவர்கள் இரவு வழிபாட்டின் போது பாடும் போது, ஆலய மணிகள் இடைவிடாது ஒலிக்கும், மின்விளக்குகள் அணைந்து எரியும். . வெடிச் சத்தம் காதைப் பிளக்கும். கிறிஸ்துமஸ்க்கு சிறப்பான விதத்தில் அமைக்கப்பட்ட குடிலில் இயேசு பாலன் பிறந்ததைக் குறிக்க திருவுருவ சிலையை மூடி இருக்கும் துணி விலக , இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை மீண்டும் நம் கண் முன் நிறுத்தி, நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் இரவு கிறிஸ்துமஸ் இரவு.
இந்த விழாவுக்காக பலவித தயாரிப்புகள் நடைபெறும் .ஒரு மாதத்துக்கு முன்பே வேலைகள் துவங்கும். சிறிய வீடானாலும் சரி, பெரிய வீடானாலும் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடிக்கப்படும். வீட்டின் முகப்பில் ஒரு அழகான ஸ்டார் மின் விளக்குடன் பொருத்தப்படும் வீடுகளில் குடில் அமைப்போர், வித விதமான குடில்கள் அமைப்பார்கள். முன்பு வண்ணக் காகிதங்களை வெட்டி , வீட்டில் ஒட்டுவர்,இப்போது. கடையில் விற்கும் அலங்காரப் பொருட்களே தோரணமாகிறது .
அக்காலத்தில் கிறிஸ்துமஸ் மரத்துக்காக சவுக்கு மர கிளைகளை வெட்டி வைத்து அலங்கரிப்பார்கள். இப்போது பிளாஸ்டிக் மரம் வந்து விட்டது .எத்தனை உயரம் வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம் . கிறிஸ்துமஸ் முடிந்ததும் பிரித்து பத்திரப்படுத்துவர். குடில் பொம்மைகளும் பண்டிகை முடிந்தவுடன் எடுத்து காகிதத்தில் சுற்றி வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் .
தேவாலயங்களும் தூய்மை செய்யப்படும். பித்தளையில் செய்யப்பட்ட உயர உயரமான மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், பூச்சாடிகள் எல்லாவற்றையும் இளம் பெண்கள் போட்டி போட்டுத் துடைத்து வைக்க, இளைஞர்கள் கோவிலை அலங்கரிப்பர் .முன்பெல்லாம் சாடின் துணி தோரணங்களாக கட்டுவார்கள். இப்போது அவை காணப்படுவதில்லை. ரெடிமேட் தோரணங்கள், நட்சத்திரங்கள், கிறிஸ்துமஸ் மரம் , குடில் என்று ஒவ்வொன்றையும் போட்டி போட்டு அலங்கரிப்பர். பாடல் பயிற்சி , திருவழிபாட்டு பயிற்சி என்று அனைவரும் தத்தம் பங்கை செய்வார்கள். கோவில் வளாகத்தில் உள்ள மரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சாண்டா கிளாஸ் வாழ்த்து சொல்லி ஆடிவர, கிறிஸ்துமஸ் இரவே ஒளியும், ஒலியும் நிறைந்ததாக இருக்கும் .
வெளிப்புற அலங்காரங்கள் மட்டுமல்ல, அனைவரும் ஆன்மிக தயாரிப்பிலும் ஈடுபடுவர். டிசம்பர் முதல் வாரம் அல்லது நவம்பர் இறுதி வாரமே திருவருகைக் காலம் (Advent season) துவங்கும் .அந்த நான்கு வாரமும் கிறிஸ்து பிறப்பு ஒட்டிய கருத்துக்களும் ,பாடல்களுமாக இருக்கும் . இந்த காலகட்டத்தில் மிகுதியாக பேசப்படும் நம்பிக்கை , அமைதி , மகிழ்ச்சி, அன்பு என்ற நான்கு உண்மைகளைக் குறிக்கும் வகையில் மெழுகுவர்த்திகள் திருவழிபாட்டு துவக்கத்தில் ஏற்றப்படும். நம்பிக்கை, அமைதி அன்பு குறிக்க ஊதா நிற மெழுவர்த்திகளும், மகிழ்ச்சியைக் குறிக்க இளஞ்சிவப்பு மெழுவர்த்தியும் ஏற்றுவார்கள். டிசம்பர் 16 முதல் நவநாள் (Novena) எனப்படும் ஒன்பது நாள் ஜெபம் தேவாலயத்தில் தினமும் ஜெபிக்கப்படும் .அழகான பாடல்களுடன் .
கிறிஸ்துமஸ் என்றாலே அன்பு, அமைதி , ஆனந்தம் தான் . இறைவனுடன் உள்ள உறவை புதுப்பித்துக் கொள்ளவும் , உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான காலம் இது. எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்துமஸ் ஒரு பகிர்தலுக்கான பண்டிகை . நம்மிடம் உள்ளதை இல்லாதவருக்கு கொடுத்து மகிழ்வது இந்த பண்டிகை கால வழக்கம் .
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி பல்கலைக்கழகத்தின் கணினியியல் துறைத் தலைவர்(ஓய்வு) முனைவர். வசந்த கல்யாணி டேவிட் நம்மிடம் பேசும் போது இந்த பகிர்தலைப் பற்றி கூறினார் .
"ஒரு மாத காலத்துக்கு முன்பே அனாதை குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களை வாங்கி பேக் செய்வோம் . அவரவர் வயது , படிப்பு ,ஆர்வத்துக்கு தகுந்த படி துணிகள் , அழகான எழுது பொருட்கள் ,கதைபுத்தகங்கள், அலாரம் கடிகாரம், பொம்மைகள், பென்சில் பாக்ஸ் என்று இருக்கும். அவர்களோடு பாட்டுப் பாடி ,நடனமாடி சாண்டாக்ளாஸ் கைப்பட அந்த பரிசுப்பொருள்களை கொடுப்போம். முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்களில் கேரல் பாடல்கள் பாடுவோம் .வீட்டையும் தேவாலயத்தையும் அலங்கரிப்போம் .கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் சென்று வழிபாடு முடித்து, அனைவரிடமும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொள்வோம் .அன்று பிரியாணியும் ,கேக்கும் கொடுத்து மகிழ்வோம்" என்று தன் கிறிஸ்துமஸ் பகிர்வினைப் பற்றி கூறினார் .
நன்று வசந்த கல்யாணி மேடம்
'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறார், நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்'. இந்த கொண்டாட்ட காலங்கள் நமக்கென உள்ளதை பிறருக்கு பகிர்ந்து வாழும் படிப்பினையைத் தருகிறது.தென் தமிழகமும் , சிங்கார சென்னையும் வெள்ளம் கொண்டு வந்த கொடுமையில் உடமைகளை இழந்து , உணவின்றி தவிக்கிறார்கள். . அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி , மீட்டு வரும் வாய்ப்பை இந்த கிறிஸ்துமஸ் நமக்கு தந்துள்ளது .
பகிர்ந்து வாழ்வதே பிறப்பின் பயன் .கிறிஸ்து இயேசு உணர்த்துவதும் அதுவே .
கிறிஸ்துமஸ் நன்னாள் வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment