Friday, January 26, 2024

ஒளியிலே கலந்த தேவதை - பவதாரிணி 

மரியா சிவானந்தம் 


 நம் மனதை சுக்கு நூறாக்கி உடைக்கும் நிகழ்ச்சி இன்று நிகழ்ந்தது.

  .தன் குயில் குரலால், நம்மை  ஆற்றுப்படுத்திய 'மயில் போல பொண்ணு' பவதாரிணி மறைந்துப் போனார். இலங்கைக்குச் சிகிச்சைக்குச் சென்ற அவர் அங்கு இறந்தார் . "ராஜா" வீட்டு இளவரசி இம்மண்ணை வீட்டு மறைந்தார் .

பவதாரிணி 

குழந்தைக் குரல் , கனிவு மிக்க கண்கள் , அமைதியான தோற்றம். இசைச் சக்கரவர்த்தியின் மகள் என்ற கர்வமோ  , ஆணவமோ இல்லாத பெண். பார்க்கும் போதே நம் வீட்டு மகளைப் போன்ற ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் உருவம். எந்த இசை நிகழ்ச்சியிலும் ."பளபள " என்ற பகட்டான ஆடைகளை உடுத்தாமல், அவருக்குப் பொருந்தும் வகையில் நேர்த்தியாக உடுத்தும் அழகி. 47 வயதான போதும் ஒரு இளம் பெண்ணுக்குரிய தோற்றம் . அவர் இனி இல்லை என்னும் போதே நம் மனதில் ஒரு சோகம் கவ்விக் கொள்வதை உணர முடிகிறது.

பவதாரிணியின் இசைப்பயணம் 8 வயதிலேயே தொடங்கி விட்டது. 'மை டியர் குட்டிச் சாத்தான்' மலையாள திரைப்படத்துக்குக்காக அவர் பாடிய போது அவர் சின்னஞ்சிறு சிறுமி .  அதன்பின் "அஞ்சலி அஞ்சலி"  பாடல் கோரஸில்  அவர் குரல் ஒலித்தது .  மஸ்தானா மஸ்தானா பாடல் அவரது தனித்துவம் மிக்க குரலை தமிழ்த்திரைக்கு அறிமுகப்படுத்திய பாடல் என்றால் அது மிகையாகாது . காதலுக்கு மரியாதை படத்தின் என்னைத் தாலாட்ட வருவாளா பாடலில் வரும் "ல ல லா " ஹம்மிங் பவதாரிணியின் மென் குரலால்  அப்பாடல்  மேலும் அழகு  பெற்று விளங்கியது . 

அதே பாடலின் மற்றொரு வடிவமான "இது சங்கீத திருநாளோ? " இன்னும் ஒரு அழகான பாடல்.   காதலுக்கு மரியாதை படத்தின் கிளைமேக்ஸ் இன்றும் நம்மை கண் கலங்க வைக்கும். அப்போது இந்த துள்ளல் இசை பாடல் பவதாரிணி குரலில் ஒலிக்கையில் படம்  நிறைவடையும். நாமும் கண்ணீரைத் துடைத்துக்  கொண்டே அப்பாடலின் ஆனந்தத்தில் கரைவோம்.  

2000 ஆம் ஆண்டின்  திரைக்காவியமான "பாரதி " படத்தில் வரும் "மயில் போல பொண்ணு " பாட்டு பவதாரிணிக்கும் அப்பாடலை எழுதிய வைரமுத்துவுக்கும் தேசிய விருதை வாங்கித் தந்தது, அந்த பாடல் காட்சியில் பாடிக் கொண்டு வரும் சிறுமி  பவதாரிணி ஜாடையில்  இருந்தததால், அந்த காட்சியில் பவதாரிணியே நடித்தது போல எனக்குத் தோன்றும் . என்ன ஒரு பாடல் அது. கவிதை வரியும் , இசையும் அவரது மயக்கும் குரலில் வேறு பரிமாணங்களைப் பெற்றது. மிக இளைய வயதில் தேசிய விருது பெற்ற பெருமைக்கு உரியவர் ஆனார்.

 ஒளியிலே தெரிவது தேவதையா ? அழகி படப்பாடல் . மயில் போல பொண்ணு பாட்டில் சிறுமி அணியும் கொலுசின்  சிணுங்கல் ஒலியாக  வசீகரித்த குரல், இந்தப்பாடலில் ஒரு பக்குவப்பட்ட பெண்ணின் குரலாக மாயா  ஜாலத்தை நிகழ்த்தும் . அடுத்தடுத்து இந்த இரு பாடல்களையும் கேட்டுப் பாருங்களேன். இரண்டுமே  வெவ்வேறு ஜானர்கள் என்ற தோன்றுவது சரி, இரண்டுமே வெவ்வேறு குரல்கள் போல தோன்றும் . 

நினைக்கும் போதே இன்னும் எத்தனை எத்தனையோ பாடல்கள் நினைவுக்கு வருகிறது . பிரண்ட்ஸ் படத்தின் "தென்றல் வரும் வழியில்' பாடலில் ஹரிஹரனுடன் ஒரு ஜலதரங்க கச்சேரி நடத்தி இருப்பார் . டைம் படத்தின் "தவிக்கிறேன் ,தவிக்கிறேன்" பாடலும் ஹரிஹரன்  உடன் தான்.   

இவரது அழகிய பாடல்களின்  பட்டியல்  ஒரு முடிவடையாத பட்டியல் .

 பவதாரிணி இசை சூழ்ந்த இல்லத்தில் வாழ்ந்திருந்தார் .ஒரு நிகழ்ச்சியில் சொல்வது போல காலையிலே அவர் அம்மா ஜீவா மொசார்ட் போன்ற கலைஞர்களின் இசைத்தட்டைச் சுழல விடுவாராம் .அதைக் கேட்டுக் கொண்டே தயாராகி மூவரும் பள்ளிக்குச் செல்வார்களாம்.  வீட்டில் எந்நேரமும் இசையும் பாடலுமாக வளர்ந்த சூழலில், அவர் தவிர்க்க முடியாத பாடகியாக உருவெடுத்தது ஆச்சர்யமில்லை . அண்ணன்களுடன் அவர் பியானோ வகுப்புக்குச் சென்றார் .இசை நுணுக்கங்களைக்  கற்றுக் கொண்டார். இளைய ராஜா மட்டுமல்ல ,பல இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியதுடன் , இசை அமைப்பாளராகவும்  இருந்துள்ளார் . இன்னும் பல உயரங்களைத் தொட்டிருக்க  வேண்டியவர் இவர் .

பவதாரிணியின் இழப்பு நம்மை நிலை குலைய வைக்கிறது .சுவர்ணலதா  இளைய வயதில் இறந்துப் போனது  நினைவுக்கு வருகிறது .இருவரும் தனித்துவம் மிக்க குரலால் , திரை இசையை ஆண்டவர்கள். இறவாத புகழ்  கொண்ட பாடல்களைத் தந்து நம் சந்தோஷ தருணங்களில் உடன் நின்றவர்கள். துன்பத்தில் சோர்ந்த போது துணை நின்றவர்கள் .

பவதாரிணி என்றால் பூமாதேவி என்று பொருளாம் .பூமி போலவே பொறுமையும் ,அமைதியும் கொண்ட அப்பெண் இன்று இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும் ? நமக்கே இந்த இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாத போது இளையராஜா அவர்களுக்கும் உடன் பிறந்தோருக்கும் இது தாங்க முடியாத துயரம். அவர்கள் வணங்கும் தெய்வமும், வாழ்வில் கலந்திருக்கும்   இசையும்  அமைதி தர வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை. 

"ஒளியிலே தெரிவது நீ இல்லையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலையா"


நீ இல்லை என்பதே மனம்  ஏற்க மறுக்கிறது பவதாரிணி .

 நீ ஒளியில் தெரியும் தேவதைதான் . 

உன் குரலில் நாங்கள் கரைந்துப் போகிறோம் கண்ணீருடன் . 



தென்றல் வரும் வழியில்’

 இந்த சொல்லிற்கு ஒரு குரல் வடிவம் இருந்தால் அது பவதாரிணி. மிக இயல்பான ‘அது அதுவாகவே இருந்தது’ குரல் மற்றும் பாடும் பாணி அவருடையது. ஆங்கிலத்தில் hitting the right notes என்பார்கள். மிகத்துல்லியமான சுருதி மற்றும் ஸ்வரஸ்தானங்களை தொட்டு பாடும் வல்லமை பெற்றவர். என் கணிப்பில் அப்பாவிடம் மிகக்குறைவாக திட்டு வாங்கியிருப்பார்.

”மயில் போல பொண்ணு ஒன்னு குயில் போல பாட்டு ஒன்னு” ’சின்னசின்ன ஆசை’யை அதன் எளிமைக்கு கொண்டாடிய வடக்கு, அதன் இன்னொரு பரிணாமமாகவே இப்பாடலை பார்த்து தேசியவிருது அளித்ததாகவே எனக்கு தோன்றும். யோசித்தால் இன்னும் எத்தனையெத்தனை நல்ல பாடல்கள்? - பவதாரிணி குரலில் ‘இது சங்கீத திருநாளோ’ என ”சங்கிலி முருகன் வழங்கும் காதலுக்கு மரியாதை” டைட்டில் கார்டிலேயே படத்தின் வெற்றி ஊர்ஜிதம் ஆனதை தியேட்டரில் பார்த்த 90ஸ் பதின்மன் நான். - திருவாசகம் ‘பூ ஏறு கோனும்’ எனக்கு மிகப்பிடித்தம். என் நினைவில் மற்ற TiS பாடல்களை ராஜாவே ஆரம்பித்து பாடியிருப்பார். ஆனால் இதை தன் மகளுக்கு விட்டுக்கொடுத்திருப்பார். ஒருபக்கம் நூற்றுக்கணக்கான சிம்பனி ஆர்கெஸ்ட்ரா வாத்தியங்கள் முழங்கி முடிக்க, மென்தென்றலாய் ‘பூ ஏறு கோனும்’ என இவர் மெல்ல உள்நுழையும் தருணம் சிலிர்ப்பு. - டைம் பட ’தவிக்கிறேன் தவிக்கிறேன்’ பாடலில் காதல் ஏக்கத்தை SS music-ல் கடக்காத 90களின் இளைஞர்கள் இருக்க முடியாது. -’ஓளியிலே தெரிவது’ கார்த்திக்குக்கான பாடல் மட்டுமல்ல. பவதாரிணி பாடுவது அந்த நாயகி சிறுவயது பார்த்திபனை ஆற்றுப்படுத்துவது போலவே இருக்கும். - ஃப்ரெண்ட்ஸ் பட ’தென்றல் வரும் வழியில்’ பாடலின் சரணத்தில் தாளகதியில் (tempo) பாடுவது எப்படி என கிளாஸ் எடுத்திருப்பார். அது திரையில் தேவயானியின் நடனத்தில் அப்படியே பிரதிபலிக்கும். மேலும் -தனம் பட ‘கண்ணனுக்கு என்ன வேண்டும்’ , -செந்தூரம் பட ‘ஆலமரம்’, -தேடினேன் வந்தது ‘ஆல்ப்ஸ் மலைக்காற்று’, -ராமன் அப்துல்லாவில் “என் வீட்டு ஜன்னல்” பாடலில் குறிப்பாய் ’கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு’ வரி - குண்டெல்லோ கோதாரி பட ’நனு நீத்தோ’ - சங்கத்தில் பாடாத கவிதையின் ஹிந்தி வடிவமான ‘பா’ பட ‘கும்சும்கும்’ பாடல் இப்படி ராஜாவுடைய ஆன்மாவின் பெண் குரலாகவே எத்தனையெத்தனை பாடல்கள் பாடியிருக்கிறார்? தன் அப்பாவுக்கும் மட்டுமல்ல, பிற இசையமைப்பாளருக்கும் இவர் பாடிய நல்முத்துக்கள் பல. - ஹாரிஸ் இசையில் திப்பு, தனுஷ் இருவருக்கும் ஈடு கொடுத்திருக்கும் அனேகன் ‘ஆத்தாடி ஆத்தாடி’ - 90ஸில் தேவாவுக்கு எவர் கண்டார் பாடலில் “என் முந்தானைக்குள்ளும் வசிக்கலாம்’ வரியெல்லாம் 25 வருடங்கள் கழித்தும் நினைவில். - ’யுவனுக்கு ‘மெர்க்குரி பூவே’ உட்பட பல பாடல்கள். மாநாடு பட மெஹர்சைலா அடிப்படையில் ஒரு துள்ளல் பாடல் தான். ஆனால் கீழ்க்கண்ட நான்கே வரிகள் பாடும் பவதாரிணி, அப்பாடலின் த்வனியையே மாற்றி விடுவார். மேகத்தின் மேலே உன்னோடு மிதந்து வந்தேன் தோழா என் பூமியெங்கும் பூக்காடு உன்னாலே கண்ணாளா இவ்வரிகளை எழுதுகையிலேயே கண்ணில் நீர்த்திரை. இந்த பூமியில் நீங்கள் சொல்லொண்ணா வலியை கடந்திருக்கலாம். நீங்கள் செல்லுமிடம் பூக்காடாய் அமையட்டும். இதுபோன்ற அமரத்தருணங்களை தந்தமைக்காகவே தமிழும், இசையும் உள்ளவரை இப்பூமியில் ஜீவிப்பீர்கள் பவதா. ❤️🙏

Thursday, January 11, 2024

கல்வி வள்ளல்   பூரணம் அம்மாள்

மரியா சிவானந்தம் 


எல்லா செல்வங்களும் வாய்க்கப் பெற்றவரே கிள்ளித் தர மனமில்லாத காலத்தில் .எளிய பெண் ஒருவர் அள்ளித் தந்திருக்கிறார். மதுரையைச் சேர்ந்த ஆயி என்ற பூரணத்தம்மாள் ஒருவர் கோடிகளில் மதிப்புடைய தன் நிலத்தை அரசுப் பள்ளிக்கு நன்கொடையாக அளித்துள்ளார் .

மதுரை தல்லாகுளம் கனரா வங்கி ஊழியர் நம் பூரணத்தம்மாள் . முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் கணவர் உக்கிரபாண்டியன் மறைவுக்குப் பிறகு , கருணை அடிப்படையில் இவருக்கு வங்கிப் பணி அளிக்கப்பட்டது . கடைநிலை ஊழியராக முப்பதாண்டுகளாக  பணி புரிந்து வரும் பூரணத்தம்மாள்  அவரது ஒரே மகள் ஜனனியை தனியாளாக வளர்த்து பி.காம் வரை படிக்க வைத்தார் . பின்னர் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் .

திருமணமான ஜனனி இரண்டு ஆண்டுகளில் இறந்துப் போனார் .இறக்கும் முன்னர் தன் அம்மாவிடம் ஒரு உறுதியை வாங்கி கொண்டார். ஜனனியின் தாத்தா அவருக்கு விட்டுச் சென்ற ஒன்றரை ஏக்கர் நிலத்தைத் தான் படித்த கொடிக்குளம் நடுத்தரப் பள்ளிக்கு தானமாக கொடுக்கும்படி பூரணத்தம்மாளிடம் உறுதி வாங்கி கொண்டார் .

மகளது மறைவுக்குப் பின்னர் , பூரணத்தம்மாள் அந்த நிலத்தை  கொடிக்குளம் நடுத்தரப் பள்ளிக்கு தானமாக எழுதி , பத்திரப்பதிவு செய்து மாவட்ட கல்வி அலுவலர்.வட்டார கல்வி அலுவலர் முன்னிலையில் முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகா இடம்  ஒப்படைத்தார்சந்தை மதிப்பீட்டின் படி அந்த நிலத்தின் மதிப்பு நான்கு கோடி ரூபாய் .

இவ்வளவு விலை மதிப்புள்ள ஒரு சொத்தை , கல்விக்காக கொடுப்பது சாமானியச் செயல் அல்ல. தன் மகளின் நினைவாக செய்தாலும் , இதைச் செய்ய ஒரு பரந்த  மனம்  வேண்டும். அந்த நிலத்தை விற்று ஒரு அரசி போல பூரணத்தம்மாள் வாழ்ந்திருக்கலாம் . ஆனால் அவர் அதை செய்யவில்லை . 

இந்த கல்வி தானத்தின் மூலம் பூரணத்தம்மாள் மலை போல் உயர்ந்து நிற்கிறார் . அரசு நிலங்களைக் கைப்பற்றி, கல்விக்கூடங்கள் அமைத்து, நன்கொடை என்ற பெயரில் கோடிகளில் பணத்தை கொள்ளை அடிக்கும் 'கல்வித்தந்தைகள்' இடையில் இவர் மிகப்பெரிய கொடையாளி ஆக நிற்கிறார்.  இவரது கொடை தமிழக கல்வி வரலாற்றில் எந்நாளும் பேசப்படும் 

இப்போது நடுத்தரப்பள்ளி ஆன கொடிக்குளம் பள்ளி , மேல் நிலைப் பள்ளியாக உருவாகும் .அப்போது 'ஜனனி'என்ற அந்த வள்ளல் பெயரில் பள்ளி அமைய வேண்டும் .  

விடியலை முன்னெடுக்கும் பூரணத்தம்மாளுக்கு வந்தனம் 

 பொங்கல் 

மரியா சிவானந்தம் 

தைமகள் பிறந்து விட்டாள். அவளது  கை பிடித்து தைப் பொங்கல் நம் இல்லம்  தேடி வந்து விட்டது. வாசலில் வண்ணக் கோலம்  பளிச்சிட, மாவிலைத் தோரணங்கள் ஆடிட . கரும்பும், மஞ்சளும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்ளும். சரசரக்கும்  புத்தாடை,  அறுவடை செய்து எடுத்த புத்தரிசி, புதுப்பானை, புது வெல்லம் என்று எல்லாமே புதிதாக இருக்கும்.வாழையும் தென்னையும் செழித்திருக்கும் தோட்டத்தில் கழுத்து மணி அசைய மாடுகள் அலங்காரமாக நிற்கும், நம் இல்லங்கள் மகிழ்ச்சியை சூடிக் கொள்ளூம் அழகான திருவிழா பொங்கல்.  

நாம் கூடி களிக்கும் விழாக்களில் முதன்மையானது பொங்கல். நம் தனித்துவம் மிக்க தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது.அடிப்படையில் விவசாயத்தைத்  தொழிலாக கொண்டதால், உழவைப் போற்றும்  திருநாளாக பொங்கல் கிராமங்களில் மிக விமரிசையாக, பாரம்பரிய வழக்கங்கள் மாறாமல் கொண்டாடப்பட்டு வந்தது

கிராம வீடுகளீல்  கொண்டாடப்படும் பொங்கல் ரம்மியமானது . வெள்ளை அடித்த சுவர்கள், சாணமிட்டு மெழுகிய மண் தரை. செம்மண் எல்லையில் மினுங்கும் வண்ணக்கோலங்கள். பூசணி இலையில் சிரிக்கும் வெண்பொங்கல், அதன் மேல் காய்கறி கூட்டுக் குழம்பு.என அழகும், மணமும், சுவையும் சேர்ந்து அசர வைக்கும்

ஆனால் சமீப  வருடங்களாக, இந்த அழகான விழா தனக்கே உரிய அடையாளங்களைத் தொலைத்து விட்டதைக் காணலாம் .   நகரங்கள் உலக மயமாகையில், கிராமங்கள் நகர மயமாகின்றன. நகரத்தின் தாக்கங்கள் இல்லாத கிராமங்களை இன்று காண்பது அரிது .

 தற்போது நம் கிராமங்களில் கொண்டாடும் பொங்கல் விழாவைப் பற்றி அறிந்துக் கொள்ள குடியாத்தம் அருகில் உள்ள வேப்பனேரி கிராமத்தில் வசிக்கும் ரஞ்சனி சங்கர் அவர்களைச் சந்தித்தோம்.போகி முதற் கொண்டு காணும் பொங்கல் வரை அதே பழமை மாறாமல் கொண்டாடப் படுகிறதா என்று அறிய சென்றோம்.

இவர் பொங்கல் மட்டும் அல்ல , எல்லா பண்டிகைகளையும் அதற்குரிய தனித்துவம் மாறாமல் கொண்டாடும் வழக்கம் கொண்டவர்

“சொல்லுங்க ரஞ்சனி, உங்கள் போகி பண்டிகை இப்போது எப்படி கொண்டாடுகிறார்கள் ?”

“போகிக்கு முன்பு போல காய்ந்த இலைச் சருகுகள், தேவையற்ற பொருட்களை எரிப்பதில்லை.பழைய டயர் ,உதவாத பிலாஸ்டிக் பொருட்களை எரிக்கிறார்கள். எங்கும் கரும்புகையும், நாற்றமும் இருக்கும்”

“பெரும்பொங்கல் அன்று பழைய முறைபடி வாசலில் கற்கள் கொண்டு  அடுப்பு  சுள்ளிகள் கொண்டு,புதுப்பானையில்  மஞ்சள் கட்டி ,புது அரிசி கொண்டு,”பொங்கலோ பொங்கல்” என்று குலவையிட்டு பொங்கல் வைப்பது நடக்கிறதா?”

“ கேஸ் அடுப்பில், குக்கரில்தான் பெரும்பாலும் பொங்கல் வைக்கிறார்கள். ஒரு சிலரே மரபு மாறாமல் பொங்கல் வைக்கிறோம் . வாசலில் போடும் பெரிய வண்ணக் கோலங்கள் மட்டும் இன்னும் மாறாத ஒரே அம்சம்.

“மாட்டுப் பொங்கல் அன்று மாடு விரட்டு நடக்கிறதா?”

கிராமங்களில் இன்று மாடு வளர்ப்பவர்கள் மிகவும் குறைவு. மாடு வைத்திருப்பவர்கள் மாட்டைக் குளிப்பாட்டி அலங்கரித்து மாலை நேரத்தில் வீதிகளில் ஓட்டிக் கொண்டு செல்வார்கள், பூளைப்பூ வாசலில் செருகி வைப்பது வழக்கம்.

காணும் பொங்கல் அன்று மூதாதையருக்கு படையல் போடுவதும், பின்னர் உறவினர்களைக் கண்டு ஆசி பெறும் வழக்கம் இப்போதும் இருக்கிறதா ?

“மூதாதையருக்கு படையல் போடுவது இப்போது இருக்கிறது. ஆனால் சொந்தகாரங்க வீடுகளுக்குச் செல்வது குறைந்து விட்டது. பெரியவர்களின் ஆசிக்காக பிள்ளைகள் சென்றாலும், வாழ்த்துபவர்கள், ”அவர்கள் பொங்கல் காசுக்காக வருகிறார்கள்” என்று நினைக்கிறார்கள். மக்களின் மனோபாவம் மாறி விட்டது . அதனால் குழந்தைகள் தயங்கினாலும் அவர்களின் அத்தை வீடு , சித்தி வீடு  , பாட்டி வீடுகளுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.”

கிராமங்களில் பொங்கல்  நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் ,விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழ்க்கம் .உங்கள் ஊரில் எப்படி?

“முன்பு போல ஒற்றுமையான சூழல் இப்போது இல்லை . நான்கு  தெரு என்றால் , நான்கு வகை ஜாதியினர் வசிக்கிறார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து  கொண்டாடுவது அல்லது கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. அவரவர் அந்த தெருக்களில் நடத்திக் கொள்கிறார்கள். ஊர்த் திருவிழா மட்டுமே ஒன்று சேர்ந்து நடத்துவது``. கிராமங்களில் நிலவிய ஒற்றுமையான சூழலை அழித்ததில் குடிக்கு முக்கிய பங்கு உண்டு. இதற்கு மேல் இதைப் பற்றி பேச முடியாது” என்றார் உண்மையான வருத்தத்துடன்.

ரஞ்சனி சங்கருக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம்.

கால மாற்றத்தில் நம் விழாக்களும் ,அவற்றைக் கொண்டாடும் வழி முறைகளும் மாறி வருகின்றன. பொங்கல் எல்லா மக்களுக்குமான விழா. அதன் நெடிய பாரம்பரியமும், எழிலும் சிதைந்து விடாமல் காப்பது த்மிழரான நம் கடமை.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

 

 

 


 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...