Thursday, January 11, 2024

கல்வி வள்ளல்   பூரணம் அம்மாள்

மரியா சிவானந்தம் 


எல்லா செல்வங்களும் வாய்க்கப் பெற்றவரே கிள்ளித் தர மனமில்லாத காலத்தில் .எளிய பெண் ஒருவர் அள்ளித் தந்திருக்கிறார். மதுரையைச் சேர்ந்த ஆயி என்ற பூரணத்தம்மாள் ஒருவர் கோடிகளில் மதிப்புடைய தன் நிலத்தை அரசுப் பள்ளிக்கு நன்கொடையாக அளித்துள்ளார் .

மதுரை தல்லாகுளம் கனரா வங்கி ஊழியர் நம் பூரணத்தம்மாள் . முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் கணவர் உக்கிரபாண்டியன் மறைவுக்குப் பிறகு , கருணை அடிப்படையில் இவருக்கு வங்கிப் பணி அளிக்கப்பட்டது . கடைநிலை ஊழியராக முப்பதாண்டுகளாக  பணி புரிந்து வரும் பூரணத்தம்மாள்  அவரது ஒரே மகள் ஜனனியை தனியாளாக வளர்த்து பி.காம் வரை படிக்க வைத்தார் . பின்னர் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் .

திருமணமான ஜனனி இரண்டு ஆண்டுகளில் இறந்துப் போனார் .இறக்கும் முன்னர் தன் அம்மாவிடம் ஒரு உறுதியை வாங்கி கொண்டார். ஜனனியின் தாத்தா அவருக்கு விட்டுச் சென்ற ஒன்றரை ஏக்கர் நிலத்தைத் தான் படித்த கொடிக்குளம் நடுத்தரப் பள்ளிக்கு தானமாக கொடுக்கும்படி பூரணத்தம்மாளிடம் உறுதி வாங்கி கொண்டார் .

மகளது மறைவுக்குப் பின்னர் , பூரணத்தம்மாள் அந்த நிலத்தை  கொடிக்குளம் நடுத்தரப் பள்ளிக்கு தானமாக எழுதி , பத்திரப்பதிவு செய்து மாவட்ட கல்வி அலுவலர்.வட்டார கல்வி அலுவலர் முன்னிலையில் முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகா இடம்  ஒப்படைத்தார்சந்தை மதிப்பீட்டின் படி அந்த நிலத்தின் மதிப்பு நான்கு கோடி ரூபாய் .

இவ்வளவு விலை மதிப்புள்ள ஒரு சொத்தை , கல்விக்காக கொடுப்பது சாமானியச் செயல் அல்ல. தன் மகளின் நினைவாக செய்தாலும் , இதைச் செய்ய ஒரு பரந்த  மனம்  வேண்டும். அந்த நிலத்தை விற்று ஒரு அரசி போல பூரணத்தம்மாள் வாழ்ந்திருக்கலாம் . ஆனால் அவர் அதை செய்யவில்லை . 

இந்த கல்வி தானத்தின் மூலம் பூரணத்தம்மாள் மலை போல் உயர்ந்து நிற்கிறார் . அரசு நிலங்களைக் கைப்பற்றி, கல்விக்கூடங்கள் அமைத்து, நன்கொடை என்ற பெயரில் கோடிகளில் பணத்தை கொள்ளை அடிக்கும் 'கல்வித்தந்தைகள்' இடையில் இவர் மிகப்பெரிய கொடையாளி ஆக நிற்கிறார்.  இவரது கொடை தமிழக கல்வி வரலாற்றில் எந்நாளும் பேசப்படும் 

இப்போது நடுத்தரப்பள்ளி ஆன கொடிக்குளம் பள்ளி , மேல் நிலைப் பள்ளியாக உருவாகும் .அப்போது 'ஜனனி'என்ற அந்த வள்ளல் பெயரில் பள்ளி அமைய வேண்டும் .  

விடியலை முன்னெடுக்கும் பூரணத்தம்மாளுக்கு வந்தனம் 

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...