Thursday, January 11, 2024

 பொங்கல் 

மரியா சிவானந்தம் 

தைமகள் பிறந்து விட்டாள். அவளது  கை பிடித்து தைப் பொங்கல் நம் இல்லம்  தேடி வந்து விட்டது. வாசலில் வண்ணக் கோலம்  பளிச்சிட, மாவிலைத் தோரணங்கள் ஆடிட . கரும்பும், மஞ்சளும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்ளும். சரசரக்கும்  புத்தாடை,  அறுவடை செய்து எடுத்த புத்தரிசி, புதுப்பானை, புது வெல்லம் என்று எல்லாமே புதிதாக இருக்கும்.வாழையும் தென்னையும் செழித்திருக்கும் தோட்டத்தில் கழுத்து மணி அசைய மாடுகள் அலங்காரமாக நிற்கும், நம் இல்லங்கள் மகிழ்ச்சியை சூடிக் கொள்ளூம் அழகான திருவிழா பொங்கல்.  

நாம் கூடி களிக்கும் விழாக்களில் முதன்மையானது பொங்கல். நம் தனித்துவம் மிக்க தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது.அடிப்படையில் விவசாயத்தைத்  தொழிலாக கொண்டதால், உழவைப் போற்றும்  திருநாளாக பொங்கல் கிராமங்களில் மிக விமரிசையாக, பாரம்பரிய வழக்கங்கள் மாறாமல் கொண்டாடப்பட்டு வந்தது

கிராம வீடுகளீல்  கொண்டாடப்படும் பொங்கல் ரம்மியமானது . வெள்ளை அடித்த சுவர்கள், சாணமிட்டு மெழுகிய மண் தரை. செம்மண் எல்லையில் மினுங்கும் வண்ணக்கோலங்கள். பூசணி இலையில் சிரிக்கும் வெண்பொங்கல், அதன் மேல் காய்கறி கூட்டுக் குழம்பு.என அழகும், மணமும், சுவையும் சேர்ந்து அசர வைக்கும்

ஆனால் சமீப  வருடங்களாக, இந்த அழகான விழா தனக்கே உரிய அடையாளங்களைத் தொலைத்து விட்டதைக் காணலாம் .   நகரங்கள் உலக மயமாகையில், கிராமங்கள் நகர மயமாகின்றன. நகரத்தின் தாக்கங்கள் இல்லாத கிராமங்களை இன்று காண்பது அரிது .

 தற்போது நம் கிராமங்களில் கொண்டாடும் பொங்கல் விழாவைப் பற்றி அறிந்துக் கொள்ள குடியாத்தம் அருகில் உள்ள வேப்பனேரி கிராமத்தில் வசிக்கும் ரஞ்சனி சங்கர் அவர்களைச் சந்தித்தோம்.போகி முதற் கொண்டு காணும் பொங்கல் வரை அதே பழமை மாறாமல் கொண்டாடப் படுகிறதா என்று அறிய சென்றோம்.

இவர் பொங்கல் மட்டும் அல்ல , எல்லா பண்டிகைகளையும் அதற்குரிய தனித்துவம் மாறாமல் கொண்டாடும் வழக்கம் கொண்டவர்

“சொல்லுங்க ரஞ்சனி, உங்கள் போகி பண்டிகை இப்போது எப்படி கொண்டாடுகிறார்கள் ?”

“போகிக்கு முன்பு போல காய்ந்த இலைச் சருகுகள், தேவையற்ற பொருட்களை எரிப்பதில்லை.பழைய டயர் ,உதவாத பிலாஸ்டிக் பொருட்களை எரிக்கிறார்கள். எங்கும் கரும்புகையும், நாற்றமும் இருக்கும்”

“பெரும்பொங்கல் அன்று பழைய முறைபடி வாசலில் கற்கள் கொண்டு  அடுப்பு  சுள்ளிகள் கொண்டு,புதுப்பானையில்  மஞ்சள் கட்டி ,புது அரிசி கொண்டு,”பொங்கலோ பொங்கல்” என்று குலவையிட்டு பொங்கல் வைப்பது நடக்கிறதா?”

“ கேஸ் அடுப்பில், குக்கரில்தான் பெரும்பாலும் பொங்கல் வைக்கிறார்கள். ஒரு சிலரே மரபு மாறாமல் பொங்கல் வைக்கிறோம் . வாசலில் போடும் பெரிய வண்ணக் கோலங்கள் மட்டும் இன்னும் மாறாத ஒரே அம்சம்.

“மாட்டுப் பொங்கல் அன்று மாடு விரட்டு நடக்கிறதா?”

கிராமங்களில் இன்று மாடு வளர்ப்பவர்கள் மிகவும் குறைவு. மாடு வைத்திருப்பவர்கள் மாட்டைக் குளிப்பாட்டி அலங்கரித்து மாலை நேரத்தில் வீதிகளில் ஓட்டிக் கொண்டு செல்வார்கள், பூளைப்பூ வாசலில் செருகி வைப்பது வழக்கம்.

காணும் பொங்கல் அன்று மூதாதையருக்கு படையல் போடுவதும், பின்னர் உறவினர்களைக் கண்டு ஆசி பெறும் வழக்கம் இப்போதும் இருக்கிறதா ?

“மூதாதையருக்கு படையல் போடுவது இப்போது இருக்கிறது. ஆனால் சொந்தகாரங்க வீடுகளுக்குச் செல்வது குறைந்து விட்டது. பெரியவர்களின் ஆசிக்காக பிள்ளைகள் சென்றாலும், வாழ்த்துபவர்கள், ”அவர்கள் பொங்கல் காசுக்காக வருகிறார்கள்” என்று நினைக்கிறார்கள். மக்களின் மனோபாவம் மாறி விட்டது . அதனால் குழந்தைகள் தயங்கினாலும் அவர்களின் அத்தை வீடு , சித்தி வீடு  , பாட்டி வீடுகளுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.”

கிராமங்களில் பொங்கல்  நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் ,விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழ்க்கம் .உங்கள் ஊரில் எப்படி?

“முன்பு போல ஒற்றுமையான சூழல் இப்போது இல்லை . நான்கு  தெரு என்றால் , நான்கு வகை ஜாதியினர் வசிக்கிறார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து  கொண்டாடுவது அல்லது கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. அவரவர் அந்த தெருக்களில் நடத்திக் கொள்கிறார்கள். ஊர்த் திருவிழா மட்டுமே ஒன்று சேர்ந்து நடத்துவது``. கிராமங்களில் நிலவிய ஒற்றுமையான சூழலை அழித்ததில் குடிக்கு முக்கிய பங்கு உண்டு. இதற்கு மேல் இதைப் பற்றி பேச முடியாது” என்றார் உண்மையான வருத்தத்துடன்.

ரஞ்சனி சங்கருக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம்.

கால மாற்றத்தில் நம் விழாக்களும் ,அவற்றைக் கொண்டாடும் வழி முறைகளும் மாறி வருகின்றன. பொங்கல் எல்லா மக்களுக்குமான விழா. அதன் நெடிய பாரம்பரியமும், எழிலும் சிதைந்து விடாமல் காப்பது த்மிழரான நம் கடமை.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

 

 

 


No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...