Thursday, February 29, 2024

இணையில்லா பேருள்ளம்  - புளியறை தம்பதி 

மரியா சிவானந்தம் 


"திக் திக்" என்று நம்  இதயங்கள் துடித்தன ,அந்த செய்தியைக் கேட்டவுடன் ..

இந்த வாரத்தில்  தென்காசி , செங்கோட்டை அருகே நடந்த அந்த லாரி விபத்தைப் பற்றி தான் சொல்கிறேன் . நம் அனைவரையும் அசர வைத்த  அச்சம்பவம் ஒரு எளிய, வயது முதிர்ந்த தம்பதியரின் வீரம் மிக்கச் செயலை  நாடே வியந்துப் பாராட்டிக் கொண்டு இருக்கிறது , 

திரைப்படத்தில் வரும் காட்சி  போல இருக்கிறது அந்த நிகழ்ச்சி .

நள்ளிரவில் ரயில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விட, அந்த தம்பதியர்  எதிரில் வரும் ரயிலை  நிறுத்தி , ஒரு பெரும் விபத்தைத்  தடுத்து, பல பயணிகளின் உயிரைக் காத்துள்ளனர். சாதுரியம்  மற்றும் அசாத்திய  ,துணிச்சல் கொண்ட அந்த தம்பதியர் தென்காசி மாவட்டம் , செங்கோட்டை வட்டத்தில் இருக்கும்  புளியறை  கிராமத்தில் வசிக்கும்  சண்முகையா , வடக்குத்தி அம்மாள் .  

இனி வடக்குத்தி அம்மாளுடன் ஒரு நேர்க்காணல் 

உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க அம்மா 

"என் பெயர் வடக்குத்தி , என் கணவர் சண்முகையா . நாங்க புளியரை ஊரில், ரயில்வே லைனை ஒட்டி ஒரு சின்ன வீட்டில் வசித்து வருகிறோம். எனக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது . நானும் கணவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். வழக்கமா ரப்பர்  பால் எடுக்கும் வேலைக்குப் போவோம் . வேலை கிடைத்தால்தான் அன்று  எங்களுக்கு சாப்பாடு.வசதியில்லாத குடும்பம் . 

விபத்து நடந்த அந்த இரவில் நீங்கள் வீட்டில் இருந்தீர்களா ? என்ன நடந்தது .

'அன்னிக்கு நாங்க வீட்டில்தான் இருந்தோம். அன்னிக்கு திருவிழாவுக்கு போக இருந்தோம் .மழையாக இருந்ததால் வீட்டில் தான் இருந்தோம். ராத்திரி 12 மணிக்கு டமால் என்று பெரிய சத்தம் கேட்டுச்சு . வீட்டில் இருந்த டார்ச் லைட்டை எடுத்துனு வெளியே ஓடினோம். ரீப்பர்கள் ஏத்தி வந்த ஒரு   லாரி ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந்தது . லாரியில் ட்ரைவர் அடிபட்டு இறந்து கிடந்தார் ,பள்ளத்தில் கிளீனர் தம்பி விழுந்து கிடந்தார் . அதே நேரத்தில் கேரளா போற ட்ரெயின் எதிரில் வந்துக் கொண்டு இருந்தது . கவிழ்ந்த லாரி மேல் மோதினால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும் . இரண்டு பேரும்  ரயிலை நோக்கி ஓடினோம்.

என் வீட்டுக்காரர் டார்ச் லைட்டை ரயில் டிரைவரின் கண்ணை நோக்கி அடித்துக் கொண்டே ஓடினார்..கொஞ்ச நேரத்தில்  வண்டி நின்றது . ஏறக்குறைய எங்க வீடு இருக்கும் பகுதியில் நின்றது. ட்ரெயின் ட்ரைவர் இறங்கி ஓடி வந்தார் . கவிந்துப் போன லாரியைக் காட்டி விவரம் சொன்னோம். அப்பவே எல்லோருக்கும் போன் போட்டு எல்லா ஆபிசர்களையும் வரவச்சார் .நீங்க செய்தது ரொம்ப நல்ல காரியம் என்று எல்லோரும் சொன்னாங்க. லாரியை அப்புறப்படுத்தி ரயில் பாதை சரியாக  காலை ஆறரை மணி ஆனது .

"உண்மையில் நீங்கள் செய்தது மிகப் பெரிய காரியம் , உங்கள் உயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய சாதனை . இதை செய்து முடித்த பின் உங்களுக்கு எப்படி இருந்தது ?

இப்ப நினைத்தாலும் மனசு நடுங்குகிறது ,"நமக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை .ரயிலை நிறுத்தியாக வேண்டும்"  என்று நானும் எங்க வீட்டுக்காரரும் டார்ச் அடித்துக் கொண்டே ஓடினோம். . வீடுகள் இல்லாத பகுதி ,மக்கள் யாருமே இல்லை. ஆனாலும் நாங்க இதை செய்தோம். பல உயிர்களைக் கைப்பற்றிய சந்தோசம் இப்போ இருக்கிறது . அது போதும் .

லாரி ட்ரைவர் மணிகண்டன் , கிளீனர் தம்பி பெருமாளிடம் ," எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை , நீ குதித்து தப்பிச்சு  போ " என்று கத்தி இருக்காரு. .பெருமாள் கீழே குதிச்சதால் ரொம்ப காயம் இல்லாமல் பிழைச்சார். ஆனா , இறந்துப் போன மணிகண்டனை நினைத்து சாப்பிடாம அழுது கொண்டே இருக்கார். அது மனசை அறுக்குது .

முதல்வர் அழைத்து ஐந்து லட்ச ரூபாய் பரிசு தந்துள்ளார் . நிறைய பேர் பாராட்டி இருக்காங்க . இது பற்றி சொல்லுங்க 

"தாசில்தார் வந்து , முதல்வரை நேரில் சந்திக்க கூட்டினு போனார் . பரிசு கொடுக்கும் போது முதல்வர் ,"பெரிய விஷயம் செஞ்சிருக்கீங்க" என்று பாராட்டினார் . இது  நடந்த உடனேயே நிறைய பேர் வராங்க .சால்வை போத்திட்டு ,போட்டோ எடுக்கிறாங்க .எங்க வீடு இருக்கிறதை பார்த்துட்டு நிறைய பேர் உதவி செய்ய முன் வராங்க . இதுவரை எங்களுக்கு முதியோர் பென்சன் , பெண்கள் உரிமைத் தொகை எதுவும் தரப்படவில்லை . இப்போது எங்களுக்கு அதெல்லாம் கிடைக்க கையெழுத்து வாங்கினு போய் இருக்காங்க. செங்கோட்டை  ஆபிசில் எல்லாம் செய்வதாக சொல்லி இருக்காங்க"

அவர்கள் வாழ்வு மேம்பாடு அடைய ,அரசும்  பொது மக்களும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை தந்து நன்றி கூறி  விடை பெற்றோம் .

எளிமையான சொற்களில் தம் சாதனையை அழகாக சொன்னார்கள் அந்த தம்பதியர் .வாழ்வாதரத்துக்கே போராடும் ஏழைக் குடும்பம்தான் . இருப்பினும் சக மனிதரின் உயிரைக் காக்க தம் உயிரை பணயம் வைத்த அந்த பெரிய மனங்களுக்கு ,ஒப்புவமை இவ்வுலகில் இல்லை . மனித நேயம் மட்டும் என்றும் நிலைத்து வாழும். 

முதல்வர் அந்த வீர தம்பதியரை வாழ்த்தும் சொற்கள்தான் எவ்வளவு பொருத்தம் .

"எளியோரின் பேருள்ளத்துக்கு இணை ஏதும்  இல்லை " 







Friday, February 16, 2024

 மூடு விழா காணும் திரையரங்குகள் 

மரியா சிவானந்தம் 


திரையரங்குகள் நம்  வாழ்வில்  பின்னிப் பிணைந்த இடங்கள்..

தன் ஆதர்ச  கதாநாயகனின் திரைப்படத்தை FDFS பார்க்கும் ரசிகருக்கும் சரி, அவ்வப்போது பொழுதுபோக்காக படம் பார்க்க போகும் ரசிகருக்கும் சரி , திரைப்படத்தை ஒரு கலை வடிவமாக  பார்த்து தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் ரசிகருக்கும் சரி, தியேட்டர்கள்  ஒரு முழுமையான பொழுது போக்கு இடமாகவே இருக்கிறது. ஒரு நூறாண்டுக்கும் மேலாக நம் மாநிலத்தின் கலாச்சார அடையாளமாக இருக்கும் இந்த இடங்கள் பல லட்சக்கணக்கான மக்களின் நினைவுகளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக  விளங்குகிறது .

சென்னை அசோக் நகரின் ஒரு அடையாளமாக விளங்கும் உதயம் திரையரங்கு  இப்போது இடிக்கப்பட இருக்கிறது  என்ற துயரச்  செய்தி  சினிமா ரசிகர்களுக்கு பெரும் சோகத்தைத் தந்துள்ளது.    1981 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த தியேட்டரில் முதல் படமாக ரஜினியின் சிவப்பு மனிதன் திரையிடப்பட்டது. தொடர்ந்து  பல வெற்றிப்படங்கள் இங்கு வெளியாகி உள்ளது. 

உதயம், மினி உதயம்,சூரியன் , சந்திரன் ஆகிய நான்கு தியேட்டர்கள் இங்கு உண்டு. சினிமா ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான, வசதிகள் மிக்க திரை அரங்காக உதயம் தியேட்டர் இருந்து வந்துள்ளது.  இந்த  திரை அரங்கத்தில் நண்பர்களுடன் ஆரவாரமாக பார்த்த நினைவுகளை ,  கடைசி வரிசையின் ஓர இருக்கைகளில் காதலியுடன் படம் பார்த்த அனுபவத்தை , குடும்பத்துடன் குதூகலித்து    படம்  பார்த்த நெகிழ்ச்சியான அனுபவங்களை, மக்கள் பெருமூச்சுடன் இணையத்தில்  பகிர்ந்துக் கொள்கிறார்கள் . 

திரை அரங்குகளை மூடி வரும் இந்த நிகழ்ச்சி, இன்று நேற்றல்ல சில ஆண்டுகளாகவே தமிழக நகரங்களில் தொடங்கி விட்டது .  நம் உணர்வுடன் கலந்த ஒரு இடமாகவே திரை அரங்குகள் இருந்து வந்தன. நம் இளமைக்கால நினைவுகளில் அது ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருந்தது .

கிராமங்களில், நகரத்தின் புறநகர் பகுதிகளில்  டூரிங் டாக்கீஸ்கள் இயங்கி வந்த காலத்தை நம்மில் பலர் மறந்திருக்க மாட்டோம். மாலை ஆனதும்  கேபி சுந்தராம்பாள் அல்லது டிஎம்எஸ்  பாடும் பக்தி பாடல் ஒலிபெருக்கியில்  முழங்க, வயலில் வேலை செய்து களைத்த  ஆண்களும் ,பெண்களும் தம்மை சீர்படுத்திக் கொண்டு டூரிங் டாக்கீஸ் செல்வார்கள் . மணல் குவித்து படம் பார்க்கும்  தரை டிக்கெட் நாலணா என்றால் சேர் ஒரு ரூபாய். இருக்கைகளின் இடம் மட்டுமே மாறுமே தவிர இது அடிப்படையில் சமத்துவம் நிலவும் இடம் 

 இந்த டாக்கீஸ்களில் . எம்ஜியாரின் மதுரை வீரன் சிவாஜியின் பாசமலர், ரவிச்சந்திரனின் காதலிக்க நேரமில்லை", ஜெய்சங்கரின், 'குழந்தையும் தெய்வமும்'  என்று எந்த படமானாலும்  இங்கு ஒரே வித வரவேற்பைப் பெறும். இருப்பினும் 'வாத்தியார்' படத்துக்கு தனி மவுசு உண்டு.  எம்ஜியார் திரையில் தோன்றும் போதே விசில் பறக்கும் .துண்டு லாட்டரி சீட்டுகள் திரையை நோக்கி வீசப்படும் . கற்பூர ஆரத்தி கூட உண்டு .

"டெண்ட் கொட்டகை"கள் காலம் ஒருநாள் முடிவுக்கு வந்தது. அவற்றை மூடியதில்  டி .வி க்கு  பெரும் பங்கு உண்டு. தொடர்ந்து,  சில ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் லாபத்துடன் இயங்கி வந்த பெரிய தியேட்டர்கள் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்கள் ,பெரிய ஹோட்டல்களை கட்டுவதைக் காண்கிறோம். திரைப்படத்தொழில்  நலிவடையாத நிலையில் , திரைப்படங்கள் கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கப்படும் நிலையில் மாற்றம் இல்லாத போது, தியேட்டர்கள் இடிக்கப்பட்டு உருமாற்றம் கொள்கின்றன. 

சென்னையில் அரை நூற்றாண்டைக் கடந்த பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு , வேறு பிரம்மாண்ட கட்டிடங்கள் அங்கு கட்டப்பட்டு வருகிறது.காமதேனு , கிருஷ்ணவேணி , மினர்வா ,அலங்கார் , பிரபாத், மகாலட்சுமி , கெயிட்டி , வெலிங்டன் ,ராக்சி , சயானி ,மேகலா, கேசினோ ,ராக்கி ,சபையர் ,ஆனந்த் , ராஜகுமாரி  தியேட்டர்   போன்ற சென்னையின்  வாய்ந்த திரை அரங்குகள் இன்று இல்லை இந்த அரங்குகள்  இருந்த இடங்கள் எல்லாம் அந்த அந்த பகுதிகளின் நிலக் குறியீடுகளாக இருந்தன. சமீப காலங்களில் நாகேஷ் தியேட்டர்  விற்கப்பட்டு அங்கு திருமண மண்டபம் எழுந்தது .

ஒரு நூற்றாண்டுக்கு மேல் இயங்கி வந்த  கோவையின் டிலைட் திரையரங்கு இப்போது இடிக்கப்பட இருக்கிறது .1914 ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அரங்கு , தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரை அரங்கு . இன்று கோவை வாசிகள் இந்த அரங்கம் இடிபடுவது கண்டு கண்ணீர் சிந்துகின்றனர் 

.மதுரையின் முதல் திரை அரங்கான இம்பீரியல் அரங்கு வர்த்தக வளாகமாக  மாறி விட்டது .ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டர் 'தங்கம் தியேட்டர் ' இருந்த இடத்தில் இப்போது நிற்பது சென்னை சில்க்ஸ் . மேலும் நடனா ,நாட்டியா நர்த்தனா , சிந்தாமணி போன்ற திரை அரங்குகள் சிதைக்கப்பட்டு, அங்கெல்லாம் வேறு பல வளாகங்கள் எழுந்துள்ளன . இது போலவே ஒவ்வொரு ஊரிலும் புகழ் பெற்ற திரை அரங்குகள் பல இடிக்கப்பட்டு அங்கெல்லாம் ஹோட்டல்கள் ,கோடௌன்கள் , மால்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன . 

வேலூரில் 'பராசக்தி 'படத்தை எடுத்த பெருமாள் முதலியாரின் நேஷனல் தியேட்டர் விற்கப்பட்டு அங்கு ஹோட்டல் வந்துள்ளது . ராஜா ,தாஜ் போன்ற நூறாண்டு வரலாறு கொண்ட தியேட்டர்களும் இன்று இல்லை .

தமிழகத்தின் முக்கிய நகரங்களில்  !இந்த மூடு விழா கதைகள் தொடர்கதையாகி விட்டது .

ஒரு காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு தேவைகளைப் பூர்த்தி செய்த திரை அரங்குகளில், ரசிகர்கள் கூட்டம் குறைந்த போது பராமரிக்கவே பணம் போதாமல் தியேட்டர் உரிமையாளர்கள் இந்த இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டனர் என்பது நிதர்சனம் .முதலில் டிவி , விசிடி என்று வீட்டில்  படம் பார்க்க தொடங்கியதும், இணைய பயன்பாடு அதிகரித்த பின்பு யூட்யூப்  ,   OTT சேனல்களில் படம் பார்க்க தொடங்கியதால் இப்போது தியேட்டர்களில் கூட்டம் குறைந்து வருகிறது . 

மணி அடித்ததும் ,அரங்கில் விளக்குகள்  அணைக்கப்படும் . பெரிய வெள்ளித்திரை ஒளி விட  திரைப்படம் தொடங்கும் . படத்தின் கதையில் ,பாடலில், நடனத்தில் மெய் மறந்து மக்கள் தங்கள் கவலைகளை மறந்து ,தம்மை மறந்து ஆழ்ந்து விடுவார்கள். அந்த மூன்று மணி நேரத்தில் கனவும்,நிஜமும் ,கற்பனையும் கலந்த ஒரு மாய உலகில் உலா வருவார்கள் .அந்த அனுபவத்தை நம் வீட்டு தொலைக்காட்சியில் அனுபவிக்க இயலாது .

நம் சுக துக்கங்களில் பங்கு கொண்டு  நம் உணர்வுகளை உள்  வாங்கும் நிலமாக  இருந்த திரை அரங்குகள் புது வடிவம் பெற வேண்டும்.இப்போது இயங்கும் திரை அரங்குகள்  இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு நம் மக்களுக்கு தரமான பொழுது போக்கைத் தர வேண்டும் /




Wednesday, February 7, 2024

 அரசுப்பள்ளியில் ஒரு நாள் 

மரியா சிவானந்தம் 


அரசுப்  பள்ளிகளின் செயல்பாடுகளை நான் வழக்கமாக கூர்ந்து கவனிப்பேன். குறிப்பாக முகநூலில் உள்ள நண்பர்கள் அங்கு  தலைமை ஆசிரியராகவோ , ஆசிரியராகவோ பணி செய்யும் போது அவர்களது பதிவுகளைக் கவனமாக படிப்பேன் . அர்ப்பணிப்பும் கடமை உணர்வும் கொண்ட நல்ல நண்பர்கள் பலர் அரசுப் பள்ளிகளில் தங்கள் உழைப்பைத் தந்து அவற்றை மேம்படுத்தி வருகிறார்கள் . சிறுசிறு உதவிகளை அவர்கள் கேட்காமலேயே செய்வேன் .  

 ஓச்சேரி அருகில் உள்ள மேலபுலம்  கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியராக இருந்த தி.பரமேசுவரி இங்கு வியக்கத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளார் .மிகவும் பின்தங்கி இருந்த பள்ளியின் கட்டமைப்புகளை சீரமைத்துள்ளார். சுற்றுச்சுவர் கட்டி, பள்ளிக்கு வர்ணம் அடித்து , நூல்நிலையம் அமைத்து ,ஸ்மார்ட் வகுப்புகள் என்று அப்பள்ளிக்கு ஒரு புதுப் பிறப்பைத் தந்துள்ளார் . சிலம்பம், கைவேலை கற்றுத்தருதல், மூலிகைத் தோட்டம், கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைத்தல்  என்று குழந்தைகளின் திறமையை வளர்த்து வருகிறார். இவை அனைத்தையும் அவர் நண்பர்களின் உதவிகளுடன் சாதித்து இருக்கிறார் .

இவரது ஒரே  கவலை , மாணவர்களின் ஆங்கில அறிவைப் பற்றியதாக இருந்தது .அரசுப் பள்ளி மாணவர்கள் தடுமாறும் இடம் அது. நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி நிலையங்களில் சேரும் போது பிற மாணவர்களுடன் சரியான விதத்தில் உரையாட முடியாமல், வகுப்புகளைப் பின் தொடர முடியாமல்  தாழ்வு மனப்பான்மையில் தவிக்க வைக்கிறது அவர்களது ஆங்கிலம் . அச்சமயத்தில் அவருக்கு நான் தொடர்பு கொண்டு  , அம்மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த  உதவி செய்வதாக உறுதி தந்தேன்.

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு zoom வழி ஆங்கில மேம்பாட்டு வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தேன். கடந்த ஓராண்டாக, வாரம் இருமுறை  ஆங்கில இலக்கணம், மொழிப்  பயிற்சி , ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி அளித்து வருகிறேன்.  பவர் பாயிண்டில் வகுப்பைத் தயாரித்து, படங்களுடன் கற்பிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலம் ,தமிழ் இரண்டு மொழிகளின் இலக்கணங்களை ஒப்பிட்டு ,தமிழ் கலந்தே எளிமையாக பாடம் நடத்துகிறேன்.  மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் வகுப்பில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்  . 

அப்போது நான் அறிந்த விஷயம் , கிராமப்புற மாணவர்களுக்கு வீட்டில் ஆங்கில பயிற்சி பெற செய்தித்தாளோ, ஆங்கில புத்தகங்களோ  இல்லை.  அவர்களிடம் குறைந்த பட்சம் ஒரு ஆங்கில அகராதியாவது இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது ..ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வாங்கித்தர வேண்டும் என்று முடிவு செய்தேன்.

வீட்டில் இதைப்பற்றி பேசிக் கொண்டு இருக்கையில் ,  ஐந்தாம் வகுப்பு படிக்கும் என் பேத்தி ரியா தன் மண் உண்டியலை உடைத்து ரூபாய் நோட்டுகளும் ,காசுகளுமாக  கை நிறைய அள்ளித் தந்தாள் .எண்ணிப் பார்த்ததில் இரண்டாயிரத்துக்கு கொஞ்சம் குறைந்தது .ஒரு பாக்கெட் டிக்ஷனரி அளவு வாங்கித் தர முடியும் என்று தோன்றியது . பரமேசுவரி மேடமுடன் இது பற்றி பேசிய போது ,"கொஞ்சம் பொறுங்க , பள்ளியில் உள்ள 617 மாணவர்களுக்கும் வாங்கித் தர நாம் முயற்சி செய்யலாம்" என்று சொன்னார்கள் .

முகநூலில்  இது பற்றி உதவி கேட்டு நான்  கோரிக்கை வைத்தேன். முகநூலில் ராஜா மகள் என்று அழைக்கப்படும் கோதை பதிப்பக உரிமையாளர் உதவிக்கு வந்தார் . நன்கொடை கேட்டு அவரும் திரு சரவணகுமார் தனிப்பதிவுகளில் கோரிக்கை வைக்க , நண்பர்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று அனுப்பி வைத்தனர் . சென்னை புத்தக விழாவில் இருந்த தேன்மொழி , சுரா பதிப்பகத்தில் பேரம் பேசி 30% தள்ளுபடியில் நூல்கள் வாங்க பேசி வைத்தார் .ஒரு நண்பர் ரூ 12,600 அனுப்பி வைத்தார் .அத்துடன் மொத்த பணமும் சேர்ந்து விட்டது . 620 புத்தகங்களை வாங்கியது மட்டுமில்லாமல் அதை பள்ளி வரை கொண்டு சேர்க்கவும்  உதவியது தேன்மொழியின் பரந்த மனம் .

இந்த மாதம் ஆறாம் தேதி பள்ளியில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துக்  கொண்டு தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் அந்த அகராதிகளை வழங்கினோம். மாணவர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அத்துடன் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தோம் .ஆங்கில ஆசிரியர்களை சந்தித்து, குழந்தைகளின் ஆங்கில அறிவை மேம்படுத்த அவர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகளைப் பற்றி விவாதித்தோம் . 

ஆங்கிலத்தில் புலமை பெற தேவையான  Listening , Speaking ,Reading , Writing என்னும் நான்கு  வழிகளையும் எப்படி செம்மைப்படுத்திக் கொள்வது என்பது பற்றி மாணவர்களிடம் உரையாடினேன். ஆங்கில அகராதி ஒரு சிறு நூல்தான் .ஆனால் அதை ஆர்வமாக படித்தால் ஒரு வாழ்க்கையே மாற்றக்கூடிய நூல் . ஆங்கில அறிவு அவர்களை பல உயரங்களைத் தொட வைக்கும் என்பதையும் புரிய வைத்தோம் . என் அலுவலக தோழி சாந்தி அன்பரசும் மாணவர்களிடையே  நல்ல கருத்துக்களை முன்வைத்தார் .

அடிப்படையில் நான் ஆசிரியை அல்லள். ஆனால் கற்பிக்கும் ஆர்வத்துடன் இந்த ஓய்வு காலத்தில் என்னால் ஆன சிறு பணியைச் செய்து வருகிறேன் .  மாணவர்களது  உற்சாகம், ஆர்வம்  ஆனந்தம் எல்லாம் நாம் அனுபவித்து அறிய வேண்டிய சுகம் .  இது போன்ற நிகழ்ச்சிகளில் அவர்களுடன் நேரம் செலவிடும் போது நாம் நிறைய கற்கிறோம். அது நூல்வழி நாம் பெறும் அனுபவங்களை விட மேலானது .

சமூகத்தில் இருந்து நாம் நிறைய பெற்றுக் கொண்டுள்ளோம் . இந்த சமுதாயத்துக்கு நாம் திருப்பி செய்ய கடன் பட்டவர்களாக இருக்கிறோம் .அதற்கான சிறு முயற்சியே இந்த உதவி. நீங்களும் அருகில் உள்ள அரசு பள்ளிகள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு உதவ வாய்ப்பு வந்தால் அதைத் தவற விடாதீர்கள் .  

நமது நேரம், திறமை ,பொருள் போன்றவற்றை இந்த சமுதாயத்துக்காக செலவிட   ஓர் உந்து சக்தியாக  இந்நிகழ்ச்சி இருக்கவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்  ,தவிர வேறொன்றும் இல்லை .

நாளைய தலைமுறையை உயர்த்த நாமும் பங்களிப்போம் .

Friday, February 2, 2024

 சாகச நினைவுகள் - சர்க்கஸ்

மரியா சிவானந்தம் 


சென்ற ஞாயிறு அன்று ஒரு வித்தியாசமான  நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம் .

"Thrilling Thillanaa, A Circus carnival ' என்று விளம்பரப்படுத்தப்பட்ட  அந்த   பேனரை பார்த்ததும், "சர்க்கஸா , இப்போ ஏது  சர்க்கஸ் ?எங்கேயும் சர்க்கஸ் நடத்துற மாதிரியே தெரியலயே?" என்ற ஆச்சர்யத்துடன்  அந்த நிகழ்ச்சிக்கு  டிக்கட் புக் செய்தோம் .   பொழுதுபோக்கு  வசதிகள் குறைந்த சேலம் நகரில்  அந்த நிகழ்ச்சிக்கு கூட்டம் அலை மோதியது.

உண்மையில் அது ஒரு மேஜிக் ஷோ . இரண்டு மேஜிக் நிபுணர்கள் (தொலைக்காட்சி புகழ்?) அற்புதமாக மேஜிக் செய்தார்கள். தொடர்ந்து கோமாளி வேடமிட்ட இருவர்  வேடிக்கை காட்டி  சாகசம் செய்து சிரிப்பு மூட்டினர். சீன இசை முழங்க, ஒரு சிங்கம் வந்தது .உண்மையில் அது இரண்டு ஆண்கள் . மஞ்சள் நிறத்தில் துணியால் தைக்கப்பட்ட சிங்க உடையைப் போட்டுக் கொண்டு வளைய வந்தனர் .

குழந்தைகள் மிகவும் ரசித்து சிரித்தனர் . விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு ஒரே ஆர்ப்பாட்டம் செய்தனர் .  அந்த நிகழ்ச்சிக்கு 'மேஜிக் ஷோ 'என்றே பெயர் வைத்திருக்கலாம் . சர்க்கஸ் என்று ஏன் பெயர் வைக்க வேண்டும் என்று மனதில்  ஓடிக் கொண்டே இருந்தது .நிஜ சர்க்கஸை இந்தக்காலத்து குழந்தை பார்க்க வாய்ப்பில்லையே என்ற ஆதங்கம் எழுந்தது .

இளமையில் சர்க்கஸ் பார்த்த நினைவுகள் மனதில் எழுந்தன. இப்போது மிருகவதை என்று தடை செய்யப்பட்ட அந்நாளைய சர்க்கஸில் நூற்றுக்கு மேற்பட்ட மிருகங்கள் அதே எண்ணிக்கையில் சர்க்கஸ் கலைஞர்கள் பங்கு  பெறும் மாபெரும் நிகழ்வாக அல்லவா இருந்தது? 

சர்க்கஸ் கூடாரம் ஒரு சிறிய கிராமம் அளவுக்கு இருக்கும். கூடாரம் அடிக்க தொடங்கும் போதே  ஊர்மக்களை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். சர்க்கஸ் நாற்பது நாட்கள் நடக்கும். சர்க்கஸ் நடக்கும் இரவுகளில்  கூடார உச்சியில்  மேல் இருந்து சக்தி வாய்ந்த சுழல் விளக்கு(Beam light) ஒன்று பொருத்தப்பட்டு அதன் வெளிச்சம் சில மைல்களுக்கு தெரியும் .அதைப் பார்த்து மக்கள் மிக அருகில் சர்க்கஸ் நடப்பதை அறிந்துக் கொள்வர் .

சர்க்கஸின் பிரம்மாண்டம்  அதில் உள்ள மிருகங்களை வைத்தே அறியப்படும். விலங்குகள்    செய்யும் சாகசங்களை வைத்தே விளம்பரப்படுத்தப்படும் . சிங்கம், புலி யானைகள் ,சிறுத்தை ,கரடி போன்ற வனவிலங்குகள் பழக்கப்படுத்தப்பட்டு சாகசங்கள் நடத்தும். குதிரைகள், குரங்குகள், பறவைகள்  என்று மற்றொரு படையும்  உண்டு .விலங்குகள் கார் ஓட்டும் ,ஜீப் ஓட்டும் ,

சிங்கங்களை டிரில் மாஸ்டர், சாட்டையைச்  சுழற்றி அணிவகுத்து நிற்க வைப்பார். புலியை சின்ன ஸ்டுலில் நிற்க வைப்பார்   அதன் வாயில் தலையை விட்டு வெளியில்  எடுப்பார். கரடி சைக்கிள் ஓட்டும். குதிரைகள்  அற்புதமாக நடனமாடும்  பறவைகள் அணிவகுக்கும் . சின்ன சைக்கிளை ஓட்டும். யானைகள் சிறு பிள்ளைகளைப் போல பழக்கி வேடிக்கை காட்டுவார்கள்.ஒரே பைக்கில் இருபத்தைந்து பேர் தொங்கி கொண்டு போவார்கள் .

சர்க்கஸ் கலைஞர்களின் திறமை  மலைக்க வைக்கும் . இது  உடலா, வில்லா என்று வியக்குமாறு  பெண் கலைஞர்கள் கம்பி வளையங்களில் உடலை நுழைத்து  வித்தை காட்டுவார்கள். கம்பி மேல் நடப்பார்கள்.  ஆண் கலைஞர்கள் நெருப்பு வளையத்தில் நுழைந்து வெளியில் வருவார்கள் .உடலில் தீப்பந்தத்தைத் தேய்த்துக் கொள்வார்கள் . வாயில் இருந்து நெருப்பு வர வைப்பார்கள். ஒரு மெகா சைஸ்  இரும்பு கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் வீரர்  "சர் சர் என்று"  மோட்டார் பைக் ஓட்டும் நிகழ்ச்சியும் தவறாமல் நடக்கும்.

பார் விளையாட்டு கூடாரத்தின் உத்தரத்தில்  நடக்கும் விளையாட்டு. இரும்பு பார்களில் ஆண்களும்,பெண்களும் தொங்கிக் கொண்டும் , ஒரு மூலையில் இருந்து அடுத்த மூலைக்குப் பறந்து கொண்டும் நடத்தும் வீர விளையாட்டு . கரணம் தப்பினால் மரணம் போல இருக்கும்.பறக்கும் பாவை திரைப்படத்தில் எம்ஜியார் ,சரோஜாதேவி அந்த பார் விளையாட்டை ஆடுவதைக் காணலாம். குலமகள் ராதை படத்தில் "இரவுக்கு ஆயிரம் கண்கள் "பாடலிலும் இதைக் காட்டுவார்கள் . சர்க்கஸ் கலையை அடிப்படையாக கொண்டு எடுக்கப் பட்ட மற்றும் ஒரு வெற்றிப்படம் கமலின் "அபூர்வ சகோதரர்கள் ". பல திரைப்படங்களின் க்ளைமாக்ஸ் சர்க்கஸில் நடக்கும்.

சக கலைஞர்களுடன், மிருகங்களுடன் விதவிதமான சாகசங்களை நடத்துவார்கள்.வீர விளையாட்டுகள் செய்ய வசதியான  வண்ண வண்ண  குட்டை ஆடை,,  பிரகாசமான  விளக்கொளியில் ஔிரும் பளீர் மேக்கப்  உடன் ஷோ முழுவதும் குறையாத எனர்ஜியுடன் இருப்பார்கள் சர்க்கஸ் கலைஞர்கள் . அவர்கள் வயது ஏற ஏற ,உடலில் தெம்பு குறைய , ஓரங் கட்டப்படுவார்கள் .தவறி விழுந்து அடிபட்டால் அவர்கள் வாழ்வே அஸ்தமித்து விடும் 

சாகசங்களும், வீரதீர செயல்களும், வேடிக்கை வினோதங்களும் நிறைந்த சர்க்கஸ் ஒரு முழுமையான பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. குள்ள மனிதர்கள் கோமாளிகளாக உடை அணிந்து குழந்தைகளை மகிழ்ச்சியில்  ஆழ்த்துவார்கள். அந்த மகிழ்ச்சியை  பெரியவர்களும் வயது வேறுபாடு இன்றி அனுபவிப்பார்கள் .இசை வெள்ளமும் ,ஒளி வெள்ளமும் நிறைந்த  அந்த அரங்குகள் மனிதரும் ,மிருகமும் உயிரும் உடலுமாக ஒன்றிணைந்து நடத்திய சாகசங்களை உயிரோட்டத்துடன் நடத்திக் காட்டின.  

தொழிற்நுட்பம் வளராத அந்த காலத்தில்,    அந்த பெரிய அரங்கின்  கேலரியில் அமர்ந்து கண் இமைக்க மறந்து ,மெய் சிலிர்க்க  சர்க்கஸ் பார்த்த , சாகச நினைவுகளில் மூழ்கும் போது, மீண்டும் சிறுமியாகிறேன் நான் . 

எந்த ஊரிலாவது சர்க்கஸ் வந்தால் சொல்லுங்களேன் .

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...