இளைய பாரதத்தினாய் வா வா வா
மரியா சிவானந்தம்
குழந்தைகள் இந்த வாழ்க்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம். குழந்தைகள் இம்மண்ணில் இன்னும் புழங்கி கொண்டிருக்கும் அன்பு, கருணை பொறுமை போன்ற சொற்களுக்கு, ஏன் வாழ்க்கைக்கே பொருளாக விளங்குபவர்கள். நம் கனவுகளின் பிறப்பிடம், நம் ஆனந்தத்தின் இருப்பிடம். எல்லாம் இழந்த பின்னும் நமக்கு அந்த சொர்க்கத்தை மீட்டுத் தருவது ஒரு மழலையின் முத்தமே. சோக மேகங்கள் சூழும் போது நம் வானில் மின்னல் கீற்றென ஒளிர்கிறது ஒரு மழலையின் குறுஞ்சிரிப்பு .
"குழந்தைகள் தினம்" நெருங்கி வருகையில், குழந்தைகளைப் பற்றிய சிந்தனையும், கவலையும் நம் உள்ளத்தை நிறைக்கிறது. நம்மை மகிழ்விக்கும் குட்டி தேவதைகள் மகிழ்ச்சியோடும், குறும்பும், துள்ளலும் மிக்க இளமைப் பருவத்தை அனுபவிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. குழந்தைமையைத் தொலைத்து எப்போதும் எதையோ தேடிக் கொண்டோ இருக்கும் சிறுவர் சிறுமியரை நாம் காண்கையில் நமக்குள் சொல்ல முடியாத வேதனை துளிர்க்கிறது.
சுற்றும் உலகத்தை நம் சுட்டு விரலில் கட்டி வைக்கும் கைப்பேசிகளின் காலம் இது. கடந்த இருபது வருடங்களில் நமது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கைப்பேசிகள் குழந்தைகளின் சின்ன உலகத்திலும் இப்போது அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோ.மு, கோ.பி என்று இன்றைய காலக்கட்டத்தைப் பிரிக்கலாம், கோவிடுக்கு முன், கோவிடுக்குப் பின் . இந்த கோவிட் காலத்தில் பள்ளிகளை மூடி விட்டு, கைப்பேசி வழியாக ஆன்லைன் வகுப்புகள் நம் வீடுகளில் நுழைந்தன. அதுவரை அப்பாவும் , அம்மாவும் உபயோகித்த ஸ்மார்ட் போன்கள் பிள்ளைகள் வசம் வந்தன .
வகுப்புகள் முடிந்த பின்னும் அந்த போன்கள் குழந்தைகளை ஆட்டிப் படைக்க தொடங்கின. குறைந்த காலத்திலியே அவர்களை அடிமைப்படுத்தின. வீடியோக்கள், கேம்கள் என்று அவர்கள் நேரத்தை ஆக்கிரமித்தன . இந்த எல்லை மீறிய பயன்பாடு அவர்கள் மனநிலையில், சிந்தனையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது . விளைவாக , வீட்டில், வெளியில், பள்ளியில் பதின்ம பருவத்தினரின் நடவடிக்கைகள் அதிர்ச்சியைத் தரும் வண்ணம் இருக்கின்றன .
கோவிட் அலை ஓய இரண்டு ஆண்டுகள் ஆனது. இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, முறையான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த இரண்டு ஆண்டுகள் குழந்தைகளின் மனநிலை மற்றும் சூழலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆய்வுகளில் அவர் தம் கற்றல் திறன் குறைந்துள்ளதை தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக தொடர்பு விட்டுப் போன பள்ளிப் பாடங்கள் மீண்டும் கற்பிக்கப் படுகையில் அவர்களால் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை.
இரண்டு வருடம் வீட்டில் இருந்துக் கொண்டு பொழுதைக் கழித்தவருக்கு, வகுப்பறையில் கவனத்துடன் இருக்க முடியவில்லை. கற்றல் குறைபாடுடன், ஆசிரியர்களிடம் மரியாதை இன்றி நடந்துக்கொள்வது போன்ற நடத்தைக் கோளாறுகள், கவனச் சிதறல் என்று இப்போது மாணவச் செல்வங்கள் நிலை தடுமாறி இருப்பதை பார்க்க முடிகிறது . இந்த ஆண்டு +2 தேர்வு முடிவுகள் நல்ல சதவீதமாக இருந்தாலும்,தமிழில் 47000 பேருக்கு மேல் தேர்ச்சி அடையாமல் போனது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலை குறித்து சிந்திக்கையில் நம் நினைவுக்கு வந்தவர் பார்வதிஸ்ரீ, சேலத்தின் அரசுப் பள்ளி ஆசிரியர். தம் மாணவரை பெரிதும் நேசிப்பவர். ஒரு அரசுப்பள்ளியின் கட்டமைப்பை , தனியார் பள்ளியின் கட்டமைப்புக்கும் மேலாக மாற்றிய சாதனையாளர் , 'புதிய தலைமுறையின் சிறந்த ஆசிரியர்'விருது பெற்றவர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். விக்கிப்பிடியா கட்டுரைகளை எழுதும் எழுத்தாளர் .
அவரை விகடகவி சார்பில் தொடர்பு கொண்டு கருத்துக்கள் கேட்டோம் .
"கோவிடுக்குப் பின் மாணவரின் கற்றல் திறன் குறைந்துள்ளதா? அதை சரி செய்ய ஆசிரியர்கள் எவ்விதத்தில் பங்களிக்கிறீர்கள் ?" என்ற வினாவுடன் தொடங்கினோம்.
"நிச்சயமாக குறைந்துள்ளது .சின்ன வகுப்புகள் ,பெரிய வகுப்புகள் என்று எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் இந்த இரண்டாண்டு இடைவெளி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மொழிப் பாடங்கள் மட்டுமின்றி கணிதம் ,அறிவியல் பாடங்களும் அவர்களுக்கு சிரமமாக உள்ளது .புரிய வைத்துப் படிக்க வைக்க, கற்பிக்கும் ஆசிரியர்கள் முழு முயற்சியும் எடுத்துக் கொண்டு அதற்கான உபகரணங்கள், தயாரிப்புகளுடன் வகுப்புகளுக்கு செல்கிறோம் " என்று பதில் கூறினார் பார்வதிஸ்ரீ
"மாணவர் தம் மன நிலையில், நடத்தையில் ஏற்பற்றுள்ள மாற்றங்களை எப்படி எதிர் கொள்கிறீர்கள் "
" இது ஒரு சவாலாக இருந்தாலும், என் நீண்ட அனுபவம் எனக்கு கை கொடுக்கிறது. அத்தகைய மாணவரை அடையாளம் கண்டு அவர்களை மனரீதியாக அணுகி, அவர் குடும்பச் சூழலை அறிந்துக் கொண்டு , ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் நெருங்கித்தான் அவர்களை மாற்ற வேண்டி உள்ளது. உடனடியாக பலன் என்று சொல்ல முடியாது .நாளடைவில் அவர்களை சரி செய்து விடுவோம் "
" இந்த ஆண்டுகளில் "ஆல் பாஸ் " செய்து மாணவர்களை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தோம். அதன் தாக்கம் எப்படி இருக்கிறது ?"
"இப்போதும் எட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' இருக்கிறது. மாணவர்களின் வருகைப்பதிவு குறைந்தாலும் இதில் மாற்றமில்லை. இது பல மாணவர்களுக்கு ஒரு பயமற்ற தன்மையை தந்துள்ளது. .பள்ளியை ஒரு அலட்சியமாக பார்க்கும் மனோபாவம் இருக்கிறது. இதை மாற்றி ,அவர்களை பாடங்களை படிக்க வைக்க ஆசிரியர்கள் பெரிதும் உழைக்கிறோம்"
"இல்லம் தேடி கல்வி" என்னும் அரசு திட்டம், இந்த கற்றல் குறைப்பாட்டைக் களையவே அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.இது வெற்றிகரமாக உள்ளதா ?"
"மிக அருமையான திட்டம் இது. மிகப் பெரிய நிதி ஒதுக்கீடு , சிறந்த உபகரணங்கள், அருமையான பாடத் திட்டம், அதற்குறிய பயிற்சி இவற்றுடன் தன்னார்வலர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆனால் இந்த வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் குறைந்துக் கொண்டே போகிறார்கள் .பிள்ளைகளுக்கு பள்ளி பாடங்களில் கவனம் செலுத்தவும், வீட்டுப்பாடங்கள் செய்யவும் நேரம் குறைகிறது. இந்த திட்டத்துக்கான உபகரணங்களை பள்ளிகளில் கொடுத்தால் நாங்கள் அதை சிறப்பாக பயன்படுத்தி , நாம் விரும்பும் பலன்களை அடைய முடியும் ."எண்ணும், எழுத்தும்" என்ற திட்டத்தையும் இதனோடு சேர்க்கலாம்"
மேலும் தொடர்ந்த பார்வதிஸ்ரீ, "ஆசிரியர்கள் தம் பணியைத் தடையின்றி செய்ய மாணவர்களும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பினைத் தர வேண்டும். கற்பித்தல் அல்லாத பிற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.
அருமையான கருத்துக்களை முன் வைத்த பார்வதிஸ்ரீ அவர்களுக்கு விகடகவி சார்பாக நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம் .
மாணவர் உலகம் மேம்பட அரசு பல நல்ல திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. பெற்றோர்களும், மாணவர்களும் தம் பொறுப்பினின்று நழுவாமல் அவற்றைப் பயன்படுத்தினால் இன்றைய நிலை மாறும் .
புதிய பாரதம் படைக்கும் பொறுப்பும், சுதந்திரமும் படைக் கலன்களும் இளைய பாரதத்திடமே இருக்கிறது . அதற்கு வழி செய்ய முன்னெடுக்கும் அரசும், பள்ளி கல்வித்துறையும், சமூகமும் உடன் நாமும் அவர்களை வரவேற்போம் , பாரதியின் மொழியில் .
இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரி லாவ லத்தினாய் வா வா வா
ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
களைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல்
விழியி னால்வி ளக்குவாய் வா வா வா (பாரதியார்)
நாளை இங்கு மாற்றம் விளைவிக்க இருக்கும்
மாணவச் செல்வங்களுக்கு "குழந்தையர் தின வாழ்த்துக்கள்"
No comments:
Post a Comment