Thursday, November 30, 2023

 வாழ்வின் விளிம்பில்  17 நாட்கள் 

மரியா சிவானந்தம் 


"ஹப்பாடா' என்று உலகமே  நிம்மதி பெருமூச்சு விடுகிறது !

பதைபதைக்கும் உள்ளத்துடன், கவலையும் கண்ணீருமாக கடந்த 17 நாட்களாக     சிலக்யாராவின்   சுரங்க வாயிலில்  கண் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மக்களின் வயிற்றில் பால் வார்த்தது போல அங்கு சிக்கி கொண்டிருந்த 41 சுரங்கத் தொழிலாளர்கள் இப்போது  பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள் 

ஒளி தீபங்கள்  சுடர் விடும்   தீபாவளி திருநாளின் அதிகாலை இருளாக விடிந்தது உத்தரகண்டின் உத்தரகாசிக்கு. அந்த இடத்தில்   இருந்து யமுனோத்திரி செல்ல 106 கி.மீ  பயணம் செய்ய வேண்டும் . இந்த தூரத்தை 26 கி.மீ ஆக குறைக்கும் முயற்சியில் திலக்யரா முதல் பர்கோட்   இடையே 4.5கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு இருந்தது. சுரங்கத் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்த போது  அன்று அதிகாலையில்  மண் சரிவு ஏற்பட்டு ,தொழிலாளர் சுரங்கத்தில்  சிக்கி கொண்டனர். 

சுமார்  60 மீட்டர்  தூரத்துக்கு மண் மூடியது. உள்பகுதியில்  1.5 கி.மீ தூரத்துக்கு மண் சரிவு ஏற்படாததால் .தொழிலாளர்கள் அங்கு எவ்வித சேதமும் இன்றி பத்திரமாக இருந்தனர்.  இந்த திடீர் விபத்தில் இந்தியா அதிர்ந்தாலும், மீட்புப் பணிகள் அரசினால் முடுக்கி விடப்பட்டது. உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி  டேராடூனில் இருந்து  பறந்து வந்து சுரங்கவாயிலில்  தன் கேம்ப் அலுவலகத்தை  அமைத்துக் கொண்டார் . தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் பன்னாட்டு  சுரங்க நிபுணர்  குழுக்களும்  மீட்புப் பணியில் ஈடுபட , இதோ 17 நாட்கள் , 408 மணி நேரத்துக்குப் பின் சுரங்கத் தொழிலாளர்கள் எவ்வித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டு உள்ளனர் .

முதலில் ஜேசிபி இயந்திரத்தால் மண் சரிவை அகற்ற முயற்சி செய்யப்பட்டது . தொடர்ந்த மண் சரிவு, அந்த முயற்சியை கை விட செய்தது.  ராட்சத துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மண்குவியலின் பக்கவாட்டில் துளையிட தொடங்கின. கடினமான மலைப் பகுதி என்பதால் இயந்திரங்கள் பழுதாகின . அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் ஓரளவு வெற்றிகரமாக இயங்கி  47 மீட்டர் தூரத்துக்கு இரும்பு குழாய்களைப் பொருத்தியது .  அதன் பின்னர் அதுவும் பழுதானது .

தமிழகத்தின் பரணி ஜியோ டெக் நிறுவனம் 6 அங்குல விட்டம் கொண்ட குழாயை தொழிலாளர்கள் இருந்த இடம் வரைப் பொருத்தி சாதனை செய்தனர் . அதுவரை சிறிய குழாய்கள் வழியாக  உலர் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது , இந்த புதிய குழாய்கள் வழியே சேமித்த உணவு , மருந்து எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு , தொழிலாளர் பாதுகாக்கப்பட்டனர் .

இவர்களது மீட்பு  மேலும் தாமதமாகப்படும் என்று கணித்த நேரத்தில் , மலைப் பகுதியில் எலி வளை போல குடைந்து ( Rat Hole Mining ) சிறிய சுரங்கம்  தோண்டுவதில் அனுபவம் உள்ள 24 சுரங்கத் தொழிலாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆகர் இயந்திரம் பொருத்திய இரும்புக்குழாயின்  பாதையில் இந்த தொழிலாளர்கள் மூன்று ,மூன்று பேராக சென்றனர் .ஒருவர் சிறிய இயந்திரத்தால்   சுரங்கத்தைத் தோண்ட , மற்ற இருவர் மண் குவியலை அப்பறப்படுத்தி  , டிராலியில்  நிரப்ப , வெளியில் இருந்த தொழிலாளர் அதை இழுத்து மண்ணை அப்புறப்படுத்தினர். இந்த மூவரும் களைப்புற்ற போது அடுத்த மூவர் உள்ளே சென்று இதே போல தொடர்ந்தனர் .இந்த தொடர் முயற்சியால், 21 மணி நேரத்தில்  13 மீட்டர் நீளத்துக்கு இரும்புக்குழாய்கள் பொருத்தப்பட்டது .

இக்குழாய்கள் வழியாக தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 15 வீரர்கள் தவழ்ந்துச் சென்று , தொழிலாளர்கள் சிக்கி இருந்த இடத்தைச் சென்று அடைந்தனர் . முழு ஆரோக்கியத்துடன் இருந்த வீரர்கள் முதல் முதலாக  வெயியேறினர் .சோர்வாக இருந் தொழிலாளர்கள் ட்ராலியில் படுக்க வைக்கப்பட்டு , கயிற்றில் கட்டி  மீட்கப்பட்டனர் . 41 பேரும் தனி ஆம்புலன்ஸில் 'சைனாலிசார்' அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு  உட்படுத்தப்பட்டனர் .

 திகில் நிறைந்த திருப்பங்கள், பரபரப்பான  ஒரு நீண்ட திரில்லர்  திரைப்படம்  சுபமாக முடிந்த உணர்வு எல்லோருக்கும்  ஏற்படுகிறது . 'வாழ்வா ,சாவா? என்று மன உளைச்சலுக்கும் ,உடல் துன்பத்துக்கும் ஆளான தோழர்கள் மீண்டது  இந்தியரை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தி உள்ளது.  மத்திய , மாநில அரசு மற்றும் பொதுத்துறைகள் முழு மூச்சுடன் செயல்பட்டும். இயந்திரங்களைக் கவனமாக கையாண்டும் மீட்பு பணியை சிறப்புற செய்துள்ளனர். 

இயந்திரங்கள் பயன் படாத நேரத்தில் இயற்கை கை கொடுப்பது போல மனித சக்தி துணை நின்றது .சிறிய உருவம் கொண்ட எலிவளை சுரங்கத் தொழிலாளர்களின்  கூட்டு முயற்சியால் அனைவரும் எவ்வித சேதமும் இன்றி மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்த பி எஸ் என் எல் சிம்மில் சுரங்கத்தில்  கிடைத்த சிக்னல், அவர்களை சுரங்கத்தில் இருந்து வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தர , ஒரு இமாலயச் சாதனையை அந்த 'எலி'ய  தோழர்கள் நடத்திக் காட்டியுள்ளார்கள் . 41 குடும்பங்களில்   விளக்கை அணையாமல் பாதுகாத்தார்கள். 

ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க , அனைவரும் கை கூப்பி நன்றி கூறுகிறோம் .இந்த  சாதனையில் துணை நின்ற அனைவரையும் பாராட்டுகிறோம் .  ஆஸ்திரேலியாவின் சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் , இந்த  'மனிதம் காக்கும் போராட்டத்தில் உறுதுணையாக 11 நாட்கள் சுரங்கவாயிலில் நின்றது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது .அவருக்கும்  அவரைப் போல அங்கு காத்து கிடந்த , மீட்புப்பணியில் துணிவுடன் போராடிய அனைவருக்கும்  பாராட்டுகளும்,  வாழ்த்துக்களும் குவிகின்றன .

இயந்திரங்களும் ,தொழிற்நுட்பங்களும் தோற்றாலும் மனிதம் வெல்லும். 

மனிதம் எந்நாளும் வெல்லும்.  

Saturday, November 25, 2023

  சுகமான குரலென்றால் ....

மரியா சிவானந்தம் 


இந்த வாரம் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வாரம் 

தென்னிந்தியாவின் முடிசூடா இசைப் பேரரசி, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு  மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நடந்தது .ஜெயலலிதா இசை மற்றும்  கவின் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் முதல்வரால்,  சுசீலாவுக்கு  இந்த கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.   ஒரு தகுதி மிக்க நபருக்கு இப்பட்டத்தை  அளித்து பல்கலைக்கழகம் தன்னைக் கௌரவப் படுத்திக் கொண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும் .

உலகில் இனிமை  தரும் பொருட்களைப் பட்டியல் இடுகையில், அவை எல்லாவற்றுக்கும் முதன்மையில் நிற்பது சுசீலாவின் குரல். பூந்தேனை விட இனிப்பது,   இளந்தென்றலை விட மென்மையானது.  'சுகமான குரலென்றால் அது சுசீலாவின் குரல் அன்றோ ? "

88 வயதாகும் சுசீலா அம்மாவின் நீண்ட , நெடிய இசைப்பயணத்தில்  அவர் வாங்காத விருது இல்லை .ஐந்து முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது பெற்றவர் .உண்மையில் பின்னணி பாடகியருக்கான விருது ஏற்படுத்தப்பட்டவுடன் முதல் விருதே சுசீலாவுக்கு வழங்கப்பட்டது. கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் ,"எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ " இவரது முதல் பாடல் .ஐம்பதுகளில் தொடங்கிய ஐம்பதாண்டு கடந்து இன்னும்  பெருமை பொங்கும்  பல விருதுகளுடன்  தொடர்கிறது. 17000கும்  மேற்பட்ட பாடல்களால் அவர் கின்னஸில் நுழைந்தார் . தமிழக அரசின் கலைமாமணி விருதும் , இந்திய அரசின் பத்ம பூஷன் விருதும் அவரது திறமைக்கு கிடைத்த பிற அங்கீகாரங்கள் .

வாழ்வின் ரணங்களால் புண்பட்ட மனதிற்கு , இசை போன்ற மருந்து வேறொன்றில்லை . அதிலும் சுசீலாவின் மென்மையான குரல் இரவின் மௌனத்திற்கு இதம் சேர்க்கிறது. யாரும் அறியாமல் நம்  கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கிறது. நம் சந்தோச தருணங்களில்   நம் கைகளைப் பற்றிக் கொள்கிறது. பயணங்களில் துணை வருகிறது. காதல் நினைவுகளைக் மீட்டெடுக்கிறது. மழலையின் தாலாட்டில் தொடங்கி , எல்லா வயதினருக்கும் , எல்லா நிலைகளிலும்  சுசீலாவின் இசையின் தாக்கம் இன்றி வாழ்வு நிறைவதில்லை .

ஆயிரக்கணக்கான பாடல்களில் எதை சொல்ல ? எதை விட ?

டிஎம்எஸ்  உடன் ஆயிரம் டூயட்  பாடல்கள் பாடியவர் சுசீலா .  ஆனால் அவர் கதாநாயகியருக்கு  பாடிய சோலோ பாடல்கள் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும் 

"பொன்னெழில் பூத்தது புது வானில் ,

வெண்பனி தூவும் நிலவே நில் ' என்ற  பாடலில் சரோஜா தேவியின் முக  பாவனையில்  சுசீலாவின் குரல் நடித்தது . "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் " இனிமையும் ,அழகும் நிறைந்த பாடல்.

 சாவித்திரிக்கு குரல் தந்த பாசமலரின் , "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல " பாதகாணிக்கையின்  " அத்தை மகனே போய் வரவா?  போன்ற பாடல்கள் காலத்தின் சுழற்சியில் அழிக்க முடியாதவை .

தேவிகாவுக்கு 'அழகே வா வா, அருகே வா " "ஆயிரம் பெண்மை மலரட்டுமே " போன்ற பாடல்களும், விஜயகுமாரிக்கு, "இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலை கேட்கின்றேன் "மதுரா நகரில் தமிழ் சங்கம் " போன்ற பாடலாலும் தனி அடையாளம் தந்தார் . சௌகார் ஜானகி "நீராடும் வைகையில் நின்றாடும் மீனே" மாலைப் பொழுதின் மயக்கத்திலே " போன்ற பாடல்கள் கே ஆர் விஜயாவுக்கு ."உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல " ... இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே சொல்லும் . ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்னும் நூறாண்டு சென்ற பின்னும் நம் செவிகளில் நிறையும் .

மனதை மயக்கம் மற்றுமொரு பாடல் .."கங்கைக் கரைத் தோட்டம்,  கன்னிப்  பெண்கள் கூட்டம் ...கண்ணன் நடுவினிலே' என்னும் வானம்பாடி பட பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.  அப்பாடலின் நிரந்தரப் புகழுக்கு காரணம்  கண்ணதாசனின்  வரிகளா, கே.வி.எம்மின் இசையா, அழகான தேவிகாவின் முகபாவங்களா   இல்லை  உயிர் கலந்து பாடிய சுசிலாவின் குரலா என்ற பிரமிப்பு ஒவ்வொரு முறையும் ஏற்படும் . துவக்கத்தில் "ஹஹ் ஹஹ் ஹா'  என்று தொடங்கும்  இடமும் ,  முடிவில் கண்ணா என்று உச்சஸ்தாயில் சென்று மென்மையாக பல்லவியில் முடியும் போது, நாம் காண முடியாத கண்ணனின் பாதத்தில்   நம் உள்ளம் தானாக சென்று  சரண் அடைந்து விடுகிறது . 

ஐம்பதுகளில்  பாட ஆரம்பித்து அறுபதுகளில். எழுபதுகளில்  சுசீலாவுடன் உடன் களத்தில் இருந்த  பின்னணி பாடகியர்  சிலர் . எல் ஆர் .ஈஸ்வரி , எஸ்.ஜானகி , ஏ .பி.கோமளா , ராஜேஸ்வரி , ஜிக்கி என்று இவர்கள் தத்தம் பாணியில் பாடல்களைத் தந்துக் கொண்டு இருக்க, சுசீலாவின் ராஜாங்கம் தனியாகவே  நடந்தது. அவர் ஒரு மகாராணியாக சிம்மாசனத்தில் அமர்ந்து ,  இசையை ஆண்டார்.  "சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா கூ கூ .." என்று எண்பதுகளின் துவக்கத்தில் ஒரு சின்னக்குயில்  பாடிக் கொண்டு வந்த பின்பே, சுசிலா திரைப்பட பாடல்களில் இருந்து, பக்தி பாடல்கள் ,தனிப்பாடல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் .   முழுமையாக இல்லை என்றாலும்  , ஓரளவு ஒய்வு அவருக்கு அதன் பின் தான் வாய்க்கப்பட்டது .


சினிமா இசை என்பது கூட்டு முயற்சியே . பாடல் ஆசிரியர் , இசை அமைப்பாளர் , பாடகர் அனைவரும்  ஒரு பாடலின் வெற்றியில் பங்கெடுத்துக் கொண்டாலும், அப்பாடலுக்கு உயிர் தரும் ரசவாதத்தை நிகழ்த்துவது பாடுபவரே .அவ்விதத்தில் சுசிலா நான்கு தலைமுறைக்கான இசைத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளார் .


மதிப்புறு முனைவர் பட்டம் பெறும் டாக்டர் சுசீலாவுக்கு நம் சார்பில் ஒரு பூங்கொத்து 



Thursday, November 9, 2023

 சேலை வாங்க , சேலத்துக்கு வாங்க !!

மரியா சிவானந்தம் 


தீபாவளி வந்தாச்சு ..! 

பண்டிகை என்றாலே குதூகலம்தான்.  அதிலும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித் தரும் விழா தீபாவளி . மன இடுக்கில் ஈரமாய் கசியும்  நினைவுகளை, மகிழ்வான கணங்களை   பகிர்ந்துக் கொள்ளும்  விழா தீபாவளி.  இனிப்பு, பலகாரம், பட்டாசு, புத்தாடை, உறவினர் நண்பர்களின் வாழ்த்துக்கள்   இவை எல்லாம்  விழாக்கால சந்தோஷத்தை  பலமடங்காய்   நம் உள்ளத்தில் பெருக்கித் தரும் .

ஒரு தீபாவளி முடியும் போதே , மனம் அடுத்த தீபாவளிக்கு  ஏங்க ஆரம்பிக்கும் . குறிப்பாக பெண்களுக்கு மிகப் பிடித்தமான பண்டிகைகளில்  தீபாவளி முதன்மையானது . புதிய, வண்ணமயமான ஆடைகள் தீபாவளியின் போது வாங்கி உடுத்துவது  எல்லா வயது பெண்களுக்கும் பிடித்தமான ஒன்று .

முன்பொரு காலம் இருந்தது .  தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் ஜவுளி எடுத்த காலம் அது. இப்போது அப்படி இல்லை, வருடம் முழுவதும் மக்கள் ஜவுளிக்கடைகளில் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஐந்து சேலை ,பத்து சேலை வைத்திருந்த நம் அம்மாக்கள் போல் இல்லை. இப்போது குறைந்தது  200  சேலை வைத்திருக்கும் தலைமுறை   நம் தலைமுறை  .

"பற்றுக பற்றற்றான் பற்றினை" என்ற குறள் சொன்னாலும் ,எப்பற்றை விடுத்தாலும் , பட்டின் மேல் வைக்கும் பற்று  பெண்களை விட்டு அகலாது.  தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி ,தர்மாவரம்   என பட்டு நெசவு செய்யும்இந்த ஊர்களில்   இன்னும் வீடுகளில் வியாபாரம் நடப்பதை காண்கிறோம். அந்த வீடு கம் கடைகளில் தரையில் பாய் விரித்து, வாடிக்கையாளரை அதில் அமர வைத்து விற்பனை செய்கிறார்கள்  .நம் பெண்கள்  சலிக்காமல் பேரம் பேசி சேலைகள் வாங்குவது ஒரு சுகானுபவம் .

சேலமும் பட்டுக்கு புகழ் பெற்றது . பட்டு நெசவு , கைத்தறிக்கு புகழ்  பெற்ற சேலம் நகரைச் சுற்றி  பல கிராமங்களில் பட்டு நெசவு நடந்து வருகிறது .கைத்தறி மற்றும் பவர் லூம் நெசவுகள் நடைபெறுகிறது. இளம்பிள்ளை, மேச்சேரி, நங்கவல்லி, கொண்டலாம்பட்டி, பஞ்சுகாளிபட்டி, சிந்தாமணியூர்  போன்ற கிராமங்களில் நெய்யப்படும் பட்டுச் சேலைகள் தரமாகவும் ,  நகர் புறத்து மெகா ஷோ ரூம்களில்  குறிக்கப்படும் விலையை விட விலை குறைந்ததாகவும் இருக்கிறது .  இக்கிராமங்களில் தயாரிக்கப்படும் பட்டுச் சேலைகளை முதலில்  வீடுகளிலேயே விற்பனை செய்து வந்தனர் .  இப்போது  ஷோரூம்களும் நிறைய பெருகி வருகிறது.  அதே போல சேலம் ஸ்பெஷல் காட்டன் சேலைகளும் இக்கிராமங்களில் நெய்யப்பட்டு ,விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன 

சேலம்- மேட்டூர் நெடுஞ்சாலையில் உள்ளடங்கி இருக்கும்  சிறு கிராமமான சிந்தாமணியூரில் உள்ள  கோபாலகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸை நாம் பார்த்த போது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. .தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் மக்கள் இங்கு காரில் வந்து பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்வதைப் நேரில் பார்த்த போது  புதிய அனுபவமாக இருந்தது . முகூர்த்த காலங்களில் இங்கு கூடும்  மக்கள் கூட்டம் அசர வைக்கிறது. 

கோபாலகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ்   உரிமையாளர் கனகராஜ் அவர்களை விகடகவி தீபாவளி சிறப்பிதழுக்காக நேர்க்காணல் செய்தோம் . அவர் தன் 'பட்டு' அனுபவங்களை நம்மிடம்  பகிர்ந்துக் கொண்டார் .

"என் பாட்டி மல்லக்காள் காலத்தில் இருந்தே, எங்கள் வீட்டில் தறி நெசவு செய்து வந்தோம் . என் தந்தை கோவிந்தராஜ் கர்நாடகா ,கேரளா போன்ற மாநிலங்களில் எங்கள் சேலைகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வார் . 1960 முதல்  விற்பனை துவங்கி நடத்தி வருகிறோம் .அடுத்த தலைமுறையாக ,நானும் என் சகோதரர்களும் உற்பத்தி மற்றும் விற்பனையைக் கவனித்துக் கொள்கிறோம்" என்று துவக்கினார் .

"என்னென்ன ரகங்களில் சேலைகள் இருக்கின்றன ,என்ன விலையில் இருக்கிறது ?

எங்களிடம் ரூ 375 முதல் அறுபதாயிரம் ரூபாய் வரை சேலைகள் இருக்கின்றன. பட்டு சேலையில் சாப்ட் சில்க், ரா சில்க், செமி சில்க், டிசைனர் சேலைகள் , திருமண பட்டுப் புடவைகள் என பல ரகங்கள் உள்ளன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் தரமான ஆடைகளை ,குறைந்த விலையில் தருகிறோம் . பருத்தி சேலைகள் , சில்க் காட்டன் சேலைகளும் உண்டு 

இந்த துணிவகைகள்  உங்கள் தறியிலேயே உருவானவையா ?

சேலத்தைச் சுற்றியுள்ள  20 கிராமங்களில் உள்ள தறிகளில் பட்டு நெசவு  செய்கிறார்கள்.  நெய்யும் கூலி கொடுத்து  வாங்குவதும், ஒப்பந்த அடிப்படையில்  நெய்து வாங்குவதும் உண்டு, எங்கள் தறியில் உருவான துணிகளுடன் இவற்றையும் விற்பனை செய்கிறோம் .  ஒரு திருமணத்துக்கு வேண்டிய பட்டுப்புடவைகள், கூறைப் புடவைகள் கிப்ட் சேலைகள் , ரிசப்ஷன் சேலைகள் எல்லாமே இங்கு உண்டு. ஆண்களுக்கான பட்டு வேட்டி, பட்டுச்  சட்டைகளில்   ராம்ராஜ் , உதயம்  பிராண்டுகள் விற்பனை செய்கிறோம் .

உங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

தரம், விலை இவற்றின் அடிப்படையில் தமிழகமெங்கும் எங்களுக்கு  வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் பலர்  திருமணம்  போன்ற வைபவங்களுக்கு எங்களைத் தேடி வருகிறார்கள். தவிர சென்னை  தருமபுரி , கரூர் போன்ற இடங்களில் இருந்து வழக்கமான வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உண்டு. தவிர நாங்கள் எப்போதும்  மொத்த விலைக்கே  விற்பனை செய்வதால் , பல சில்லறை வியாபாரிகள் இங்கு வாங்கிச் சென்று விற்று லாபம் பெறுகிறார்கள் .  பெரிய கடைகளுக்கும் இங்கிருந்து அனுப்புவது உண்டு. ஆன்லைனிலும் விற்பனை செய்கிறோம்  " என்று முடித்துக் கொண்டார் 

சிந்தாமனையூரில் சிறிதும் ,பெரிதுமாக 50 கடைகள் உள்ளன . பல கடைகள்  பல ஆண்டுகளாக வீடுகளில் இயங்குகின்றன. விளம்பரத்துக்காக கோடி கணக்கில் செலவிடும் கார்ப்பரேட் 'துணிக்கடல்'கள் இடையில், விளம்பரமே இல்லாமல் அல்லது வாய் மொழி  விளம்பரத்தை மட்டுமே வைத்து  விற்பனையில்  ஈடுபட்டு வருகிறார்கள் .  சிந்தாமணியூர், இளம்பிள்ளை மற்றும் பிற  கிராமங்கள் நெசவை நம்பியே  வாழ்கின்றன.

கிராமமக்களின் வாழ்வாதாரமும், கிராமப் பொருளாதாரமும் நெசவுத்  தொழிலை நம்பியே இருக்கின்றன.  பட்டு நூல் விலை உயர்வு ,நெய்யும் கூலி , போக்குவரத்து செலவு , பராமரிப்பு செலவு என்று எல்லாமே விலை கூடியுள்ள இந்த கால கட்டத்தில்  இத்தொழிலைத் தொய்வின்றி இவர்கள் நடத்துவது கடினமே .

தீபாவளி மட்டுமல்ல   வாய்ப்பிருக்கும் போதெல்லாம்  இந்த நெசவாளர்களுக்கு  ஆதரவு  தர வேண்டியது அவசியம்.  








Friday, November 3, 2023

 மனித உழைப்பு என்னும் மகா சக்தி 

மரியா சிவானந்தம் 



மனிதனின் முழு முதல் அடையாளம் உழைப்பு .

உழைப்பின் வழியாகவே மனித இனம், நாம்  இன்று அனுபவிக்கும்  உன்னத நிலையை  அடைந்துள்ளது. 

காடு களைந்தோம் - நல்ல
கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம் 

வீடுகள் கண்டோம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.(பாரதிதாசன் )

என்று பாரதிதாசன் சொல்வது போல , காடு  களைந்து , கழனி திருத்தி  நாடுகளாக்கியது மனித உழைப்பே. கற்காலம் முதல் இக்காலம் வரை, மனித உழைப்பில் விளைந்ததுவே மனுக்குலத்தின் உயர்வு .

காலம் செல்ல செல்ல அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும்  தொழிற்சாலைகளை உருவாக்கின. புதிய தொழிற்களங்களில் தொழிலாளிகள் கசக்கி பிழியப்பட்டனர். தினமும் 16 மணி வேலை நேரம்.செய்த தொழிலாளிகள் முறையான உணவு, ஓய்வு எதுவும் இன்றி   உடல்நலம் தொலைத்து அவதிக்கு உள்ளானார்கள் .உழைக்கும் வர்க்கம் அடிமைகளாக நடத்தப்பட்ட காலம் அது .  

அப்போது தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொது உடமை இயக்கம் தொடங்கப்பட்டு "உலகத்  தொழிலாளர்களே  ஒன்றுபடுங்கள்" என்ற அறைக்கூவல் விடுத்தார் கார்ல் மார்க்ஸ் . 1889 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில்  தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோஷத்தை எழுப்பினார். எத்திசையும் எதிரொலித்த அந்த கோஷத்தின் தாக்கம் இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி வேலை நேரம் ,வார ஓய்வு, உணவு இடைவேளை, இரவு ஷிப்டில் சலுகைகள்    எல்லாம்  பல ஆண்டு போராட்டங்களின் விளைவு .

இப்போது உலகமயமாக்களின் தாக்கத்தால் ,உழைப்பாளரின் வேளை நேரம் அதிகரித்து இருக்கிறது .ஐடி துறையில் தினம் பத்து மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை  வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். மருத்துவர்கள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை பார்க்கிறார்கள் .  சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு தினம் 12  மணி நேரம்,வாரம் மூன்று நாள் விடுப்பு   என்ற மசோதாவை  தாக்கல் செய்தது.வெளி நாட்டில் இருந்து முதலீடு செய்பவர்களுக்கு, நம் வேலை நேரம்  பொருந்த வேண்டும் என்ற கருத்தில் சொன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னாலும் , அதை நம் சூழலுக்கு ஏற்க முடியாது .

இந்நிலையில் சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனர்  ஒரு பேட்டியில் இந்திய இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கருத்து சொல்லி இருக்கிறார். இந்தியா சைனாவைப் போல முன்னேறிய நாடாக மாற வேண்டுமானால் , இந்திய இளைஞர்கள் 70 மணி நேரம் கடினமாக உழைக்க வேண்டும் என்பது அவர் கருத்து . 

முன்னேறிய பல நாடுகளில் வேலை நேரம் மிக குறைவு. குறைந்த பட்சமாக ஜெர்மனியில் வாரத்துக்கு  28 மணி நேரம் மட்டுமே செய்கிறரர்கள் . எல்லா நாடுகளிலும் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் வார விடுமுறையாக்கப்பட்டு, மக்கள் வார  இறுதியைக் கொண்டாடி தீர்க்கிறார்கள். இரண்டு நாள் ஓய்வு, மனதுக்குப்  புத்துணர்ச்சியைத் தருகிறது.    ஐந்து நாள் வேலையையும் நான்கு நாட்களாகவோ , மூன்று நாட்களாகவோ குறைக்கும் எண்ணம் மற்ற நாடுகளில் இருக்கிறது.  இது ஒரு சாராரின் கருத்து 

.  70 மணி நேரம் அல்லது தினம் 12 மணி நேர வேலை என்பது மீண்டும் இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய நிலையில் தொழிலாளர்களை கூட்டி செல்லும் நிலையாகும் .   கார்ப்பரேட் முதலாளிகளின் குரலாக இருக்கும் இந்த யோசனையால்  இதுவரை போராடி பெற்ற சலுகைகள் இழக்க வேண்டி இருக்கும் என்பது ஒரு சாராரின் கருத்து .

இந்தியா போன்ற மனிதவளம் பெருகிய நாட்டில் 70 மணி நேர வேலை இரண்டு பேருக்கு பிரித்துத் தரலாம். அந்த அளவுக்கு இங்கு வேலை இல்லாதவர்கள் இருக்கிறார்கள்.  தனியார் நிறுவனங்களில்  வேலை செய்யும் அளவுக்கு மற்ற துறை   ஊழியர்களின் செயல்பாடு இருப்பதில்லை. அவர்களுக்கு ஊக்கம் தந்து  பணி  செய்ய வைத்தால் உற்பத்தி திறன் பெருகும். நம் நாட்டில் லஞ்சமும் , ஊழலும்  நல்ல பணிகள் பலவற்றுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது .அவற்றை களைந்தாலே இங்கு தொழில் வளம் பெருகும் , அரசு வருவாயும் தனிநபர் வருவாயும் பெருகும். 

மனிதன் வேலை செய்யும் இயந்திரம்  மட்டுமல்ல. அவன்  உடலும், மனமும்  உள்ள  சமூக பிரஜை. உடலுக்கு ஓய்வும் ,மனதிற்கு அமைதி கொண்ட பணிச்சூழலும் அவனது தேவைகள். பொருளாதார காரணங்களைத் தாண்டி , அவன் மனதுக்கு உவப்பானதாக ஒரு பணிச்சூழல் அமைய வேண்டும் .அவனது குடும்பத்திற்கு அவன் நேரம் ஒதுக்க வேண்டும்  . 70 மணி நேர வேலை என்றால் இவை எதுவும் சாத்தியமில்லை .  

நம் நாட்டில் முறை  சாரா தொழிலாளர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் . அவர்கள் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை ஓய்வின்றி உழைக்கிறார்கள் .எத்தனை தொழிலாளர் நலச்  சட்டங்கள் இருந்தாலும் ,எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலை உயருவதில்லை என்பது நிஜம் . 

 வேலை நேரத்தைக் கூட்டினால் மட்டுமே உற்பத்தி பெருகும் என்பது நிரூபிக்கப்படாத  உண்மை. பணிச்சுமையும், களைப்பும், சலிப்பும் கொண்ட ஊழியரால் எவ்வாறு நிறுவனம் விரும்பும்   பங்களிப்பைத் தர முடியும்?  பெண்கள் இன்று சரிபாதியாக, அல்லது ஆண்களை விட அதிகமாக வேலைக்குச் செல்கிறார்கள். 12 மணிநேர வேலைக்குச் செல்லும் பெண் எத்தனை மணிக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகளை முடித்து விட்டு பணிக்கு செல்ல முடியும்? இன்னும் இந்த வேலைகளை  பெண்களுக்கான மட்டுமான வேலைகளாக அல்லவா நம் சமூகம் நிர்ணயித்துள்ளது ?

There is no substitute for hard work என்பது மறுக்க முடியாத உண்மை. அனைவரும் ஒன்றுபட்டு  உழைத்தால் மட்டுமே இலக்குகளை அடைய முடியும் என்பதில் மாற்று கருத்தில்லை . 

வேலை நேரத்தை அதிகரிப்பது மட்டுமே அதற்கு தீர்வாகாது . 

.


 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...