உங்களை உயர்த்தும் உறுதிமொழி !
மரியா சிவானந்தம்
புத்தாண்டு என்றாலே என் நினைவுக்கு வருவது "பிரதிக்கினை " என்னும் வார்த்தைதான்.
சிறுவயதில் கன்னியர்கள் நடத்தும் பள்ளியில் படித்தேன்.கல்லூரியும் கன்னியர்கள் நடத்துவதுதான். எனவே, எல்லா நேரமும் ஒழுங்கு, கட்டுப்பாடு, ஆன்மிகம் மற்றும் கல்வி சார்ந்த படிப்பினைகளால் நம்மைத் துரத்திக் கொண்டே இருப்பார்கள். புத்தாண்டு பிறந்தால், நம்மை 'நல்ல பிரதிக்கினை எடு" என்று துரத்துவார்கள். முதலில் இந்த சொல்லை இளைய தலைமுறையினர் கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். பிரதிக்கினை என்றால் "உறுதிமொழி" அல்லது "தீர்மானம்" என்பதே பொருள் .
அந்த சிறுவயதில் ஆழப்பதிந்த வார்த்தை பிரதிக்கினை அல்லது Resolution , "இந்த புத்தாண்டில் நன்றாக படிப்பேன், பெரியவர்களிடம் கீழ்ப்படிவேன் . தவறாமல் சர்ச்சுக்குப் போவேன்.எல்லோருக்கும் உதவி செய்வேன். நேரத்தை வீணாக்க மாட்டேன், கணக்கு படத்தில் கவனம் செலுத்துவேன் ' என்றெல்லாம் அவரவர் தம் மனப்போக்குக்கு ஏற்ப உறுதி மொழி எடுப்போம். "நல்ல பிள்ளையாக இருப்பேன்" என்பதுதான் பெரும்பாலானோரின் தீர்மானமாக இருந்தது. (நல்ல பிள்ளையாக இருப்பது என்றால் என்ன என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை )
நிற்க, இந்த புத்தாண்டு தீர்மானங்களுக்கு நம் வாழ்க்கையை ஓரளவு மாற்றும் திறன் இருப்பதாகவே நான் கருதுகிறேன் . நம் பலங்களை மேம்படுத்திக் கொள்ளவும் , பலவீனங்களை களைந்து எறியவும் ,நாம் வாழும் முறையைத் திரும்பிப் பார்த்து திருத்திக் கொள்ளவும் இவை உதவுகிறது .
காலம் செல்ல செல்ல, வாழ்க்கை மாறுகிறது. நமது உறுதிமொழிகள் மாறுகிறது .ஆண்டுதோறும் புதிது புதிதாக தீர்மானம் எடுக்கிறோம் .உடல் சார்ந்த, மனம் சார்ந்த, பணி சார்ந்த இலக்குகளை நாம் நிர்ணயித்துக் கொண்டு அவற்றை அடைய நினைக்கிறோம் .
நம் உடல் நலனைப் பேணிப் பாதுகாக்க தினம் உடற்பயிற்சி செய்ய,நடைப் பயிற்சி செய்ய, ஜாக்கிங் செய்ய ,யோகா செய்ய என்று உறுதிமொழி எடுப்பதுண்டு, உடல் எடையைக் குறைக்க , உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க, ஓட்டல் சாப்பாட்டை தவிர்ப்பது என்றும் உறுதிமொழி எடுப்பது வழக்கம், பயணங்கள் மேற்கொள்ளுதல் புகைப் பிடிப்பதை நிறுத்தவும், மதுப்பழக்கத்தை விட்டுத் தொலைக்கவும் உறுதி மொழி எடுப்பவரும் உண்டு .
அதே போல மனவளம் பெருக்க தியானம் செய்தல் , ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ளுதல் , தினப்படி பிரார்த்தனைகளை தவறாமல் செய்வது , புத்தகம் படித்தல், எதிர்மறை சிந்தனைகளை விலக்கி, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவும் உறுதிமொழி எடுப்பது உண்டு. அறம் சார்ந்த செயல்களில் ஈடுபடவும், தன்னால் இயன்ற உதவியைச் செய்யவும் உறுதி எடுப்பதும் நல்லது.
புதிதாக கற்றுக் கொள்ள ஆர்வம் இருப்பவர்கள்,தம் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வணிகத்தில் புதிய உயரத்தைத் தொட வேண்டும் என்று நினைப்பவர்கள் புதிய மைல் கற்களை அடைய திட்டமிடுவர் .தாம் சாதிக்க நினைப்பதை ஒரு டைரியில் பதிவு செய்து , தம் முயற்சிகளை அத்துடன் ஒப்பீடு செய்து வருவார்கள் . கணினி காலத்தில் எல்லாவற்றையும் சிஸ்டம் பார்த்துக் கொள்கிறது , என்றாலும் அவ்வப்போது நம் வளர்ச்சியை பார்த்துக் கொள்ளலாம் .
ஏகப்பட்ட உறுதிமொழிகள் எடுத்து விட்டு,எதையும் கடைபிடிக்க முடியாமல் போவதுண்டு .வருட முடிவில் நினத்துப் பார்த்தால் என்ன உறுதிமொழி எடுத்துக் கொண்டோம் என்பதே நினைவில் இருக்காது. வருட துவக்கத்தில் இருந்ததற்கும் , வருட முடிவில் இருப்பதற்கும் எவ்வித வேறுபாடும் இருக்காது.துவங்கிய இடத்திலேயே நாம் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும் .
.பதிலாக , குறிப்பான ஒன்று அல்லது இரண்டு உறுதி மொழியை எடுப்பது நல்லது . அது யதார்த்தமாக இருப்பது முக்கியம் . அந்த உறுதியை நிறைவேற்ற ஒரு திட்டம் வகுக்க வேண்டும் . அதற்காக நம்மையே வருத்துக் கொள்ளாமல்,இலகுவாக இருக்க வேண்டும். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாம் எந்த அளவில் அதைக் கடைபிடிக்கிறோம் என்று சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் .
"உதாரணமாக சிக்கனமாக இருந்து சேமிக்க பழகுவேன் "என்ற தீர்மானம் எடுத்திருப்பவர் , தன் ஒவ்வொரு செலவையும் எழுதுகிற வழக்கத்தைக் கொள்ள வேண்டும் .தினமும் அல்லது வாரம் ஒருமுறையேனும் அந்த செலவுகளைப் பார்த்து ,எது அவசியமான செலவு எது தேவை இல்லாதது என்று பரிசீலனை செய்துப் பார்த்தாலே பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
நம் உறுதிமொழியைக் கடைபிடித்து வரும் போது நாம் அதில் முன்னேற்றம் காணும் போது நம்மை நாமே பாராட்டிக் கொள்ளவோ, சிறியதாக நமக்கு நாமே பரிசளித்துக் கொள்ளவோ தயங்க கூடாது .
மனிதன் எப்போதும் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டியவன். புதிது புதிதாக கற்றுக் கொள்ளவும் ,தான் அறிந்ததை பிறருக்கு கற்பிக்கவும் வல்லவன் .தன் குடும்பத்தில் இருந்துக் கொண்டே தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் உயர்த்தும் ஆற்றலைப் பெற்றவன் . நாள் இயல்புகளை வளர்த்துக் கொள்ளவும் , நல்ல பாதைகளை வகுக்கவும் வரம் பெற்றவன் .
புலரும் புத்தாண்டில் நீங்கள் எடுக்கும் உறுதிமொழி உங்களை உயர்த்தட்டும் .
உங்கள் சாளரங்களைத் திறந்துப் பாருங்கள் ,
உங்கள் கரத்தின் வழி தன்னை உயர்த்திக் கொள்ள காத்திருக்கிறது, இந்த உலகு 1
அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2024ல் ,அன்பு வாழ்த்துக்கள் .