Friday, May 26, 2023

 கலெக்டர் கனவுகள் 

மரியா சிவானந்தம் 


உலகில்  கல்வியே ஒப்பில்லா செல்வம்.  மனிதன் வாழ்வில் உயர முதல் காரணமாக அமைவது  அவனது  கல்வி. 

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்இசையும் நாட்டும்உறும்கவலொன்(று)
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை

 

என்று நீதிநெறி விளக்கம்  கூறும் விளக்கம்   நாம் அறிவோம்


 இன்றைய சூழலில் மாணவர்  மதிப்பெண்களைத் துரத்துகிறார்கள், மருத்துவமோ, பொறியியலோ படிக்க  பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள் . வாழ்வில் வெற்றி பெற ,சாதனைகளைக் குவிக்க இந்த தொழிற்படிப்புகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. ஆனால் ,தொழிற்படிப்பின் உதவி இன்றி ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசின் ஆட்சிப்பணிகளில் அமர முடியும் ,.அதற்கு குடிமைத் தேர்வுகள் அவசியம் 

 
சென்னையின்  அண்ணாநகர் பகுதிக்கு சென்று  இருக்கீங்களா ?

அங்கு சாலைக்கு சாலை ஐஏஎஸ்  தேர்வுக்கான பயிற்சி மையங்களை நாம் காண முடியும் . அங்குள்ள பூங்காக்களை ஒரு வலம் வந்தால், எல்லா இடங்களிலும்  ஐஏஎஸ்  தேர்வுக்காக தங்களை தயாரிக்கும் இளைஞர்களையும்  காணலாம் . மாலை நேரம் தொடங்கி பார்க் மூடும் நேரம் வரை அவர்கள் நான்கைந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து, குறிப்பேடுகளை வைத்துக் கொண்டு கேள்வி, பதில் எழுப்பியும் விவாதித்துக் கொண்டும் இருப்பது நாம் அன்றாடம் காணும் காட்சி. 

வெவ்வேறு மாவட்டங்கள் ,மாநிலங்களில் இருந்து  சென்னைக்கு வந்து தங்கி, உச்ச பட்ச உழைப்பை   முதலீடாக்கும் இவர்கள் கனவே  ஐஏஎஸ்  தேர்வு என்று அழைக்கப்படும் அரசு குடிமைப் பணிகள் தாம் .  இத்தேர்வில் வென்று அரசின் உயர் பதவிகளில்  அமர்வதே இவர் கனவு, வாழ்க்கை எல்லாம்  . இந்த இலக்கை நோக்கி இவர்கள் பசி, தூக்கம் துறந்து,  இரவு பகலாக பாடுபடுவதை நாம் காண்கிறோம். இவர்களைப் போலவே நாடெங்கும்   பல லட்சக் கணக்கான  இளைஞர்கள் கலெக்டர் கனவுடன் உழைக்கிறார்கள்  .
""
"ஐஏஎஸ்"   அல்லது "இந்திய ஆட்சிப்பணி" என்று நாம்  என்று பொதுவாக அழைத்தாலும்  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSE)  நடத்தும் இந்த தேர்வில் ஆட்சிப் பணி மட்டுமன்றி  பல துறைகளுக்கான   நிர்வாக அலுவர்களைத் தேர்வு செய்யப்படுகிறது. காவல்துறையின் IPS ,அயலுறவு துறைக்கு IFS,வருவாய் துறைக்கான IRS, தபால் துறைக்கான  IPS  போன்ற 21 வகை மத்திய உயர் பணிகளுக்குக்கான தேர்வுகளை இந்த UPSC தேர்வின் வழியாகவே தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். எனவே அரசுப் பதவிகளை அலங்கரிக்க நினைக்கும் படித்த இளைஞர்களின் முதல் சாய்ஸ் குடிமைத் தேர்வுகளே !

இந்த குடிமைத்தேர்வுகள்  மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல்நிலை தேர்வு (Preliminary Examination ), முதன்மை தேர்வு (Main Examination), நேர்முகத்  தேர்வு (Interview) என்று மூன்று மூன்று நிலைகளைக் வெற்றிகரமாக கடந்த பின்பே ஓராண்டு பயிற்சிக்குப் பின்பே பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 

முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) 400 மதிப்பெண்களுக்கு இரண்டு தாள்களாக நடத்தப் படுகிறது . 100 கேள்விகள், இரண்டு மணி நேரம் கொண்ட முதல் தாளில் தினசரி செய்திகள் , பொது அறிவு , அரசியல் நிகழ்வுகள், இந்திய அரசியல் சட்டம், இந்தியாவின் புவியியல்   போன்ற பொது தலைப்புகளில் இருந்து கேள்விகள் தொடுக்கப்படும் .இரண்டாவது தாளில் திறன் அறிவு, தர்க்க ரீதியான அலசல் போன்றவற்றில் இருந்து 80  கேள்விகள் எடுக்கப்படும் .தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பு உண்டு. இந்த இரண்டு தாள்களிலும் 33% எடுப்பவரே மெயின் பரீட்சைக்கு செல்ல முடியும் . 

முதன்மை தேர்வு (Main Examination) அடுத்த கட்ட பரீட்சை ஆகும். அகலமாக , ஆழமாக  தயாரிக்க வேண்டிய தேர்வு இது .மொழி அறிவு, ஆங்கில அறிவு, பொது அறிவு , அரசியல் என்று எல்லா துறைகளிலும் ஒருவரின் ஆழ்ந்த அறிவை சோதிக்கும் இந்த தேர்வு 2025 மதிப்பெண்களுக்கு நட த்தப்படுகிறது.
  • தாள் A  -இந்திய மொழிகளில் ஒன்று - 300 மதிப்பெண்  
  • தாள் -B -ஆங்கிலம் -300 மதிப்பெண்
  • மொழிப் பாடங்களில் பெறும் மதிப்பெண்கள் ரேங்க் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுவதில்லை .ஆயினும் 25% மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்  
தவிர கீழ்க்காணும் ஏழு தேர்வுகள்  நடத்தப்படும் 
  • தாள் 1: கட்டுரைகள் ,மாணவரின் மொழித்திறனையும் , சமூக பிரச்சனைகளில் அவரது  அணுகுமுறை இவற்றை சோதிக்கும் வகையில் கட்டுரையின் தலைப்புக்கள் இருக்கும் 
  • தாள் -2: இந்திய  வரலாறு ,கலாச்சாரம்,உலக  வரலாறு ,புவியியல் .சுதந்திர போராட்டம் , இந்தியாவின் சமூக கட்டமைப்பு , பன்முகத்தன்மை  
  • தாள் -3:இந்திய அரசியல் சட்டம் ,இந்திய அரசியல், இந்தியாவின் அயலுறவு , சமூக நீதி ,இந்திய அரசியல் அமைப்பின் அதிகாரங்கள் .
  • தாள் -4:இந்திய பொருளாதாரம் , சுற்றுச்  சூழல்,பொது பகிர்வு ,நிலைச் சீரமைப்பு சட்டங்கள் ,அறிவியல்,தொழிற்நுட்ப சாதனைகள் , தாராளமயமாக்கல் .எல்லை பாதுகாப்பு அதன் அச்சுறுத்தல்கள் 
  • தாள் -5 மாணவரின் மனநிலை, அணுகுமுறை , நாட்டில் எழும் பிரச்சனைகளுக்கு அவர் கூறும் தீர்வு ,அவரது எண்ணங்களை கருத்துக்களை விரிவாக சோதிக்கும் தாள் இது 
  • தாள் -6 மற்றும் தாள் 7 (optional Subjects)  இரண்டும் மாணவர் தேர்ந்தெடுக்கும் இரண்டு விருப்பப் பாடங்களில் இருந்து அவர்களின் ஆழமான அறிவை சோதிக்கும் அளவில் வினாத்தாள்கள் இருக்கும். 

இந்த  இரண்டு விருப்பப்பாடங்களை UPSC  தந்துள்ள பட்டியலில் இருந்து தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் . விவசாயம், கால்நடை வளர்ப்பு தொடங்கி  பொருளாதாரம் , புவியியல் ,வரலாறு , வேதியியல் ,கட்டடக்கலை , சட்டம் என்று 26 பாடப்பிரிவுகளில் ஏதேனும் இரண்டை ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் . இந்திய மொழி இலக்கியங்களை கூட ஒரு விருப்பதாளாக தேர்ந்து எடுக்கலாம். தமிழ்நாட்டில் முதல் ரேங்க் வாங்கி இருக்கும் சென்னை கொளத்தூரைச்  சேர்ந்த ஏ எஸ் ஜீஜீ அவர்கள் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாக எடுத்து தேர்வு பெற்றார் என்பது மகிழ்ச்சியான செய்தி . 

இந்த ஏழு வினாத்தாள்களும் தலா 250 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது .

இந்த மெயின் தேர்வுகளில் வெற்றி பெற்றவர் நேர்க்காணல் எனப்படும் ஆளுமைத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள் . UPSC வாரிய உறுப்பினர்கள் அடங்கிய  குழு மாணவரின் அறிவுத்திறன் மட்டுமன்றி அவரது ஆளுமைப் பண்புகள், அணுகுமுறை, உணர்வுகள், இன்றைய  சமுதாய சூழலில் அவரது எதிர்வினைகள், இந்திய பொருளாதார வளர்ச்சி  ,மேலாண்மை,  போன்றவற்றில் மாணவர் காட்டும் ஆர்வம்,அவரது பார்வை, அவர் கூறும் தீர்வுகள்  இவற்றைப் பற்றி எல்லாம்  விவாத வடிவில் நடைபெறும் . UPSC பவனில் நடத்தப்படும்  இந்த நேர்க்காணல் மாணவர் இந்திய அரசின்  குடிமைப் பதவிகளை வகிக்க தகுதியானவரா என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது . நேர்க்காணலின் மொத்த மதிப்பெண் 275 .

வெற்றி பெற்ற மாணவர்  அவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை எனப்படும்  ரேங்க் தரப்படுகிறது .அந்த ரேங்கின் அடிப்படையாக வைத்தே IAS , IPS, IFS ,IRS என்று துறைகள் தரப்படுகின்றன .  பொதுப் பிரிவினர் 6 முறை இந்த தேர்வை எழுதலாம் .21 -32 வயது வரை எழுதலாம் . SC, ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது மேல் உச்சவரம்பு தளர்த்தப்படுகிறது .எத்தனை தரம் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சலுகையும் அரசு அளிக்கிறது .

சமீபத்தில் வெளியிடப்பட்ட UPSC முடிவுகளில் 993 பேர்  வெற்றி வாகை சூடி உள்ளனர். தேசிய அளவில் முதல் நான்கு இடங்களைப் பெண்களே  கைப்பற்றி இருக்கிறார்கள். அவர்கள் இஷிதா கிஷோர்  (டில்லி ), கரிமா லோஹியா, உமா ஹாரதி ,ஸ்ம்ரிதி மிஸ்ரா ஆகியோர் ஆவர்  அப்பெண்கள் .சென்ற ஆண்டும் முதல் இடங்களைப் பெண்களே வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தை பொருத்த மட்டில் ஏஎஸ்ஜீஜீ முதல் மாணவராக தரவரிசையில் வருபவர் , தேசிய அளவில் 107 இடத்தை பிடித்துள்ளார். 993 பேர் தேசிய அளவில் தேர்ச்சி பெறும்   போது  தமிழகத்தை சேர்ந்தவர் 42 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றது நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது . 

தமிழக மாணவர்கள் மேலும் முயற்சியும் ,பயிற்சியும் பெற்றால் அவர்களால் முடியாதது ஒன்றும் இல்லை . பதினோராம் வகுப்பிலேயே இந்த குடிமைத் தேர்வுகளுக்கான விதையை விதைப்பது நல்லது . தினசரி செய்தித்தாள்களை படித்து உலக நிகழ்வுகள் ,நாட்டு நடப்பு  அறிந்துக் கொள்வதும் ,பொது அறிவை வளர்த்துக் கொள்வதும்  முக்கியம் . சமூகத்தின்  முக்கிய பிரச்சனைகளை அறிவதும், வரலாற்றை, கலாச்சாரத்தை  பற்றிய அறிவும் வேண்டும் . 

அகலமாக மற்றும் ஆழமாக படிக்க வேண்டும் . தினசரி செய்திகளை ஒரு   குறிப்பேட்டில்  எழுதும் வழக்கம் சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் . போட்டித்  தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கையும் ,பொறுமையும் , விடா முயற்சியும் அவசியம்.

கலெக்டர்  மகன் கலெக்டர் ஆவது சிறப்பு என்றால் எலெக்ட்ரிசியன் மகள் கலெக்டர் ஆவது பெருமைக்குரிய செய்தி அல்லவா?   

இந்தியாவின் கடைக்கோடி கிராமத்து மாணவனுக்கும் UPSC தன் கதவுகளைத்  திறந்து வைத்துள்ளது, கலெக்டர் கனவுள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் நுழைந்திடுவீர் ,வெற்றி பெறுவீர் 


 மருத்துவமும்     ,பொறியியலும் படிக்க நம்  மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் . அவை இரண்டு மட்டுமே  முக்கிய படிப்புகளாக நினைத்து சிரமப்பட்டு உழைக்கிறார்கள் . மதிப்பெண்களைத் துரத்தி களைப்படைகிறார்கள் .ஆனால் தொழிற்கல்வி அல்லாத  இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு இருந்தால் ஐஏ எஸ்  படித்து கலெக்டர் ஆகவோ  அல்லது அரசின் முக்கிய துறைகளில் உயர் பதவியோ அடையலாம் 

  1. கதவுகளைத் 
  2. oc
21-32வளர்த்துக் 
sc ,st 37
obc 35
pWD - 10years 
minedu qualifn : Degree 
noof attempts  6 to 9
SC st unlimited 

  1.  Preliminary Examination (Objective type)
  2.  Main Examination 2025 personality test 275
  3. lanuage 300 min 25 marks
  4. Interview
prelims
Paper 1 -200mrks -100 ques2 2 hrs each 
paper 2 -200ks -80 ques

Main 
papaer A -300 maks
paper b 300\

Paper1 to VII -1750 marks
VI and VII -optional  subject 26 subjects -lilterature can be selcted 
online appluy upsconline.nic.in
1to7 papersf or ranking 



Friday, May 12, 2023

 அன்னையர் தினம் -முகங்கள் 

மரியா சிவானந்தம் 



உலகமே அன்னையர் தினத்தை  சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.

அம்மா  உயிரும்  மெய்யும் ,உயிர் மெய்யும் கலந்த சொல். நமக்கு உயிரையும், உடலையும் தந்து பராமரித்து வளர்த்த கண் காணும் தெய்வம் அம்மா. அம்மா,அப்பாவை  விட  நெஞ்சுக்கு நெருக்கமான உறவு வேறில்லை. 

  இந்நாளில் பரிசுப் பொருட்களும், பூச்செண்டுகளும், ஆடை ஆபரணங்களையும் வழங்கி   பிள்ளைகள் தம் அம்மாவின் அன்புக்கு நன்றி கூறுகிறார்கள். தம் அன்னையின் அன்பை நினைவு கூர்ந்து உருகுகிறர்கள். அன்னையர் தினத்தில் மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் தம் அன்னையை  போற்றுகிறார்கள்  . 

 நம் விகடகவி வாசகியர் சிலர் தம் தாயின் நினைவுகளை நம்முடன்  பகிர்ந்துக் கொள்கிறார்கள். அவர்கள் கூறுவதை கேட்கும் போது  முந்தைய தலைமுறை அன்னைகள் எப்படி கருணையுடன், அன்புடன் வாழ்ந்து முடித்தார்கள் என்பது புரிகிறது .தான் பெற்ற பிள்ளைகளை மட்டும் அன்றி , எல்லோரையும் நேசித்து, எல்லோருக்கும் உதவி செய்து ,எல்லோருக்கும் அன்பை வழக்கும் உயர்ந்த குணமும் ,விசாலமான மனதும் கொண்டவரே சென்ற தலைமுறை அம்மாக்கள் .

இனி வாசகியார் கூறுவதைக் கேட்போம்  

சாந்தி பேட்ரிக்    பேசுகிறார் 

"என் அம்மாவின் பெயர் சாந்தா  சூசைநாதன். மாயூரம் வேத நாயகம் பிள்ளை அவர்களின் மகள் வயிற்று பேரனின் மனைவி,  திருமணத்துக்குப் பின் கிறிஸ்துவ  மதம் பின்பற்றும் குடும்பத்தில் வாழ நேர்ந்தததால், தன்னை  அந்த புதிய சூழலுக்குத்  மாற்றிக் கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு இடையே பிள்ளைகளை வளர்த்தார்கள்.   கடவுளுக்கும், மனிதருக்கும் அன்பானவராக ,உண்மையானவராக கடைசி வரை வாழ்ந்தார்கள்.  அம்மா ஒரு பரோபகாரி. யாரேனும் உணவு கேட்டு வந்தால், அடுப்பில் சாதம் வெந்துக் கொண்டிருந்தால், அவசர அவசரமாக வடித்து உணவு  கொடுத்தே அனுப்புவார்கள், தன்னால் இயன்ற உடல் உதவிகளை எப்போதும் செய்வார்கள். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்களது விருந்தோம்பல்  குறைவு படாது .

யாராவது உடலநிலை சரியில்லை என்றால் இவர்கள் ஒன்பது வாரம் உபவாசம் இருந்து ஜெபம் செய்வார்கள் .அவர்கள் நலமானதும் நன்றியறிதலாக மேலும் உபவாச ஜெபம் செய்வார்கள். இறுதி வரை என்னுடனே இருந்து என் குழந்தைகளையும் அன்பாக வளர்த்தார்கள். அவர்களைப் பின்பற்றி நாங்கள் வாழ நினைக்கிறோம்.: என்றார் 


கலா கஜேந்திரன் அவர் அம்மாவைப் பற்றி  சொல்கிறார் 

"என் அம்மா இந்திராணி ஐந்து ஆண்கள், .ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றவர் .அம்மா பெரிதாக படிக்கவில்லை என்றாலும் ,எங்கள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்தார்கள். என் அப்பா ஒரு டாக்டர். அதனால் அம்மாவை டாக்டரம்மா என்றே ஊரில் அழைப்பார்கள் . ஆனால் அம்மாவுக்கு எழுதவும்  படிக்கவும்  தெரியாது. என்னிடம் அம்மா  கையெழுத்து போட அந்த ஐந்து எழுத்துக்களைக் கற்றுக் கொண்டார்கள் ,

 படித்த அம்மா ,படிக்காத அம்மா என்று இல்லை .என் அம்மா ஒரு பல்கலைக் கழகத்துக்கு சமம் . நான்  பிரசவித்த  போது அவர்கள் அழுதது இன்னும் நினைவில்  இருக்கிறது . எனக்காக என் மாமியார் வீட்டில் தன் தள்ளாத வயதிலும் சேவை செய்தார், என் அம்மாவை  கடவுளுக்கும் மேலானவராக  நான் நினைக்கிறேன்" 

கிளாட்வின் தன்  அம்மா ஜூலியட் வாஸ் அவர்களை நினைவு கூறும் போது . " There is no substitute for mother’s love "என்று   தொடங்கி தொடர்ந்தார். "என் அம்மா மிக மிக எளிமையானவர், கடவுள் பக்தி நிறைந்தவர், எல்ல்லோரையும் அன்பு செய்தவர், விருந்தோம்பலில் அவருக்கு யாரும் இணை இல்லை .வீட்டுக்கு வரும் எலெக்ட்ரிசியன், பிளம்பர் என்று யார் என்றாலும் சாப்பாடு போடாமல் அனுப்ப மாட்டார்கள். சமையல் பாரம்பரிய முறையில் அம்மியில் அரைத்து செய்வார் .இறுதி வரை அம்மி , ஆட்டுக்கல் தான் உபயோகித்தார், கோவில்  காரியத்தில் பற்று கொண்டவர். புனித வாரத்தில் சொல்லப்படும் ஜெபங்களும் ,பாடல்களும் அத்துப்படி .எனவே  புனித வாரத்தில் என் அம்மாவின் நினைவு அதிகமாகி விடும் 

எத்தனை வசதியாக இருந்தாலும் உடுத்துவதும் ,அணியும் அணிகலன்களும் எளிமையாகவே இருக்கும்.  எனக்கு பார்த்து பார்த்து எல்லாமே வாங்குவர். சமூகத்தின் மேல் அச்சம்  கொண்டவர், யாரும் தன்னையோ குடும்பத்தவரையோ தவறாக பேசி விட கூடாது என்று சொல்வார். நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியை ஆக வேண்டும் என்று விரும்பினார் . எனக்கு அலுவலக வேலை பிடித்து இருந்தது. ஆனால் நான் தனியார் பள்ளியில் கற்பித்தது மட்டும் அன்றி ஜெர்மன், பிரென்ச் மொழிகளில் சிறந்து விளங்குகிறேன். அம்மாவின் அன்பும் ,ஆசியும் என்னை என்றும்    வழி நடத்தும் " என்றார் 

முகநூலில் பிரபலமான நான் ராஜா மகள் என்று அழைக்கப்படும் தேன்மொழி அண்ணாதுரை  தன் அம்மா கோதை நாயகி பற்றி  கூறுகிறார் :

"  யாராக இருந்தாலும் அவரவர்க்கு அவரவரைப் பெற்ற தாய் தெய்வத்திற்கு ஈடானவர்தான். அந்த வகையில் எங்களுடைய அம்மாவும் எங்களுக்கு தனித்தன்மை வாய்ந்தவர்தான். எங்கள் நால்வரையும் சமுதாயத்தில் சிறந்து விளங்கவும் வளர்க்கவும் அம்மாவுடைய பங்கு மிகவும் அதிகம். தமிழ்நாட்டு பாரம்பரிய பலகாரங்கள் சுவையாக செய்வதில் வல்லவர். அம்மாவுடைய தயாரிப்புகள் மேலைநாடுகளுக்கு விமானத்தில் பயணிக்கும்.  அம்மா எங்களை வளர்த்ததோடு தன்னிடம் பணியாற்றிய தொழிலாளர்களின் குழந்தைகளையும் படிக்க வைத்தார். 

வீடு தேடி வருபவர்கள் மட்டுமல்லாமல் சிறு வியாபாரிகளின் பசியாற்றுவார். அம்மாவுடைய இறுதிச்சடங்கில் இந்துக்கள் கிறிஸ்தவ. பாதிரியார்கள் இஸ்லாமிய பெரியவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தது ஒன்றே அம்மா வாழ்ந்த வாழ்க்கைக்குச் சான்று"என்று முடித்தார் .அம்மாவின் பெயரில் கோதை பதிப்பகம் நடத்துகிறார் தேன்மொழி 

இறுதியில் என் அம்மா திரேசம்மா . 82 வயதிலும் இன்றும் சோர்வும் ,களைப்பும் அறியாதவர் .இரண்டு ஆண்டுகளுக்கு பின் என் கணவர் இறந்த பின், நான் கேன்சரில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆனேன்.என் அம்மா இன்று வரை என் உடன் இருந்து என்னை அந்த நோயில் இருந்து மீள வைத்தவர். அவருடன் என் மகள், பேத்தி ,தங்கைகள் எனக்கு அம்மாவாக இருந்து என்னை மீட்டனர் , 

அம்மா நல்ல படிப்பாளி ,மணியன் ,சிவசங்கரி ,தமிழ்வாணன், பாலகுமாரன் போன்றவர்களின் வாசகி, சிறந்த மனிதாபிமானி. எப்போதும் எல்லோருக்கும் உதவி செய்ய தயங்காதவர் ,தெய்வபக்தி, உழைப்பு  இவை என்றும் அவரது கண்கள் .

அம்மாக்களைப் போற்றும் இந்நாளில் அவர்கள் அடிதொழுவோம் .

தாய் உள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் 





Wednesday, May 10, 2023


 

இளைய பாரதத்தினாய் வா வா வா 

மரியா சிவானந்தம் 


குழந்தைகள் இந்த வாழ்க்கை நமக்கு அளித்த  வரப்பிரசாதம். குழந்தைகள் இம்மண்ணில்  இன்னும்  புழங்கி கொண்டிருக்கும் அன்பு, கருணை  பொறுமை போன்ற சொற்களுக்கு, ஏன் வாழ்க்கைக்கே  பொருளாக விளங்குபவர்கள்.  நம் கனவுகளின்  பிறப்பிடம், நம் ஆனந்தத்தின் இருப்பிடம்.  எல்லாம் இழந்த பின்னும்  நமக்கு  அந்த சொர்க்கத்தை மீட்டுத் தருவது ஒரு மழலையின்  முத்தமே.   சோக மேகங்கள் சூழும் போது நம் வானில் மின்னல் கீற்றென ஒளிர்கிறது ஒரு மழலையின் குறுஞ்சிரிப்பு .

"குழந்தைகள் தினம்"   நெருங்கி வருகையில், குழந்தைகளைப் பற்றிய சிந்தனையும், கவலையும்   நம் உள்ளத்தை நிறைக்கிறது. நம்மை மகிழ்விக்கும் குட்டி தேவதைகள் மகிழ்ச்சியோடும், குறும்பும், துள்ளலும் மிக்க இளமைப் பருவத்தை அனுபவிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.  குழந்தைமையைத் தொலைத்து எப்போதும் எதையோ தேடிக் கொண்டோ இருக்கும்  சிறுவர் சிறுமியரை நாம் காண்கையில் நமக்குள் சொல்ல முடியாத வேதனை துளிர்க்கிறது. 

சுற்றும் உலகத்தை  நம் சுட்டு விரலில் கட்டி வைக்கும்  கைப்பேசிகளின் காலம் இது.  கடந்த இருபது வருடங்களில் நமது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கைப்பேசிகள் குழந்தைகளின் சின்ன உலகத்திலும் இப்போது அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கோ.மு,  கோ.பி என்று இன்றைய காலக்கட்டத்தைப் பிரிக்கலாம், கோவிடுக்கு முன்,  கோவிடுக்குப் பின் . இந்த  கோவிட்  காலத்தில் பள்ளிகளை மூடி விட்டு, கைப்பேசி வழியாக ஆன்லைன் வகுப்புகள் நம் வீடுகளில் நுழைந்தன.  அதுவரை அப்பாவும் , அம்மாவும் உபயோகித்த ஸ்மார்ட் போன்கள் பிள்ளைகள் வசம் வந்தன . 

 வகுப்புகள் முடிந்த பின்னும் அந்த போன்கள் குழந்தைகளை ஆட்டிப் படைக்க தொடங்கின. குறைந்த காலத்திலியே அவர்களை அடிமைப்படுத்தின. வீடியோக்கள், கேம்கள் என்று அவர்கள் நேரத்தை ஆக்கிரமித்தன . இந்த எல்லை மீறிய பயன்பாடு அவர்கள் மனநிலையில், சிந்தனையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது . விளைவாக , வீட்டில், வெளியில், பள்ளியில் பதின்ம பருவத்தினரின் நடவடிக்கைகள் அதிர்ச்சியைத் தரும் வண்ணம் இருக்கின்றன .

கோவிட் அலை ஓய  இரண்டு ஆண்டுகள் ஆனது. இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, முறையான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த இரண்டு ஆண்டுகள் குழந்தைகளின் மனநிலை மற்றும் சூழலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆய்வுகளில் அவர் தம் கற்றல் திறன் குறைந்துள்ளதை தெரிவிக்கின்றன.  நீண்ட நாட்களாக தொடர்பு விட்டுப் போன  பள்ளிப் பாடங்கள் மீண்டும் கற்பிக்கப் படுகையில்  அவர்களால் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை. 

இரண்டு வருடம்  வீட்டில் இருந்துக் கொண்டு பொழுதைக் கழித்தவருக்கு, வகுப்பறையில் கவனத்துடன் இருக்க முடியவில்லை. கற்றல் குறைபாடுடன், ஆசிரியர்களிடம்  மரியாதை இன்றி நடந்துக்கொள்வது போன்ற நடத்தைக் கோளாறுகள், கவனச் சிதறல்  என்று  இப்போது மாணவச்  செல்வங்கள்  நிலை தடுமாறி இருப்பதை பார்க்க முடிகிறது . இந்த ஆண்டு +2 தேர்வு முடிவுகள் நல்ல சதவீதமாக இருந்தாலும்,தமிழில் 47000 பேருக்கு மேல் தேர்ச்சி அடையாமல் போனது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலை குறித்து சிந்திக்கையில் நம் நினைவுக்கு வந்தவர் பார்வதிஸ்ரீ, சேலத்தின் அரசுப் பள்ளி ஆசிரியர். தம் மாணவரை பெரிதும் நேசிப்பவர். ஒரு அரசுப்பள்ளியின் கட்டமைப்பை , தனியார் பள்ளியின் கட்டமைப்புக்கும் மேலாக மாற்றிய சாதனையாளர் , 'புதிய தலைமுறையின் சிறந்த ஆசிரியர்'விருது பெற்றவர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். விக்கிப்பிடியா கட்டுரைகளை எழுதும்  எழுத்தாளர் . 

அவரை விகடகவி சார்பில் தொடர்பு கொண்டு கருத்துக்கள் கேட்டோம் .

"கோவிடுக்குப் பின் மாணவரின் கற்றல் திறன் குறைந்துள்ளதா? அதை சரி செய்ய   ஆசிரியர்கள் எவ்விதத்தில் பங்களிக்கிறீர்கள் ?" என்ற வினாவுடன் தொடங்கினோம்.

"நிச்சயமாக  குறைந்துள்ளது .சின்ன வகுப்புகள் ,பெரிய வகுப்புகள் என்று எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் இந்த இரண்டாண்டு இடைவெளி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மொழிப் பாடங்கள் மட்டுமின்றி கணிதம் ,அறிவியல் பாடங்களும் அவர்களுக்கு சிரமமாக உள்ளது .புரிய வைத்துப் படிக்க வைக்க, கற்பிக்கும் ஆசிரியர்கள் முழு முயற்சியும் எடுத்துக் கொண்டு அதற்கான உபகரணங்கள், தயாரிப்புகளுடன் வகுப்புகளுக்கு செல்கிறோம் " என்று பதில் கூறினார் பார்வதிஸ்ரீ 

"மாணவர் தம் மன  நிலையில், நடத்தையில் ஏற்பற்றுள்ள  மாற்றங்களை எப்படி எதிர் கொள்கிறீர்கள் "

" இது ஒரு சவாலாக இருந்தாலும்,  என் நீண்ட  அனுபவம் எனக்கு  கை கொடுக்கிறது. அத்தகைய மாணவரை அடையாளம் கண்டு  அவர்களை மனரீதியாக அணுகி, அவர் குடும்பச்  சூழலை  அறிந்துக் கொண்டு , ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் நெருங்கித்தான் அவர்களை மாற்ற வேண்டி உள்ளது. உடனடியாக பலன் என்று சொல்ல முடியாது .நாளடைவில் அவர்களை சரி செய்து விடுவோம் "


" இந்த ஆண்டுகளில் "ஆல் பாஸ் " செய்து மாணவர்களை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தோம். அதன் தாக்கம் எப்படி இருக்கிறது ?"


"இப்போதும் எட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' இருக்கிறது. மாணவர்களின் வருகைப்பதிவு குறைந்தாலும் இதில் மாற்றமில்லை. இது பல மாணவர்களுக்கு ஒரு பயமற்ற தன்மையை தந்துள்ளது. .பள்ளியை ஒரு அலட்சியமாக பார்க்கும் மனோபாவம் இருக்கிறது. இதை மாற்றி ,அவர்களை பாடங்களை படிக்க வைக்க ஆசிரியர்கள் பெரிதும் உழைக்கிறோம்"

"இல்லம் தேடி கல்வி" என்னும் அரசு திட்டம், இந்த கற்றல் குறைப்பாட்டைக் களையவே அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.இது வெற்றிகரமாக உள்ளதா ?"

"மிக அருமையான திட்டம் இது.  மிகப் பெரிய நிதி ஒதுக்கீடு , சிறந்த உபகரணங்கள், அருமையான பாடத் திட்டம், அதற்குறிய பயிற்சி  இவற்றுடன் தன்னார்வலர்கள் களத்தில் இருக்கிறார்கள்.  ஆனால் இந்த வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் குறைந்துக் கொண்டே போகிறார்கள் .பிள்ளைகளுக்கு பள்ளி பாடங்களில் கவனம் செலுத்தவும், வீட்டுப்பாடங்கள் செய்யவும் நேரம் குறைகிறது. இந்த திட்டத்துக்கான உபகரணங்களை பள்ளிகளில் கொடுத்தால் நாங்கள் அதை சிறப்பாக பயன்படுத்தி , நாம்  விரும்பும் பலன்களை அடைய முடியும் ."எண்ணும், எழுத்தும்" என்ற திட்டத்தையும் இதனோடு சேர்க்கலாம்"

மேலும் தொடர்ந்த பார்வதிஸ்ரீ, "ஆசிரியர்கள் தம் பணியைத் தடையின்றி செய்ய   மாணவர்களும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பினைத் தர வேண்டும். கற்பித்தல் அல்லாத பிற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்றார். 

அருமையான கருத்துக்களை முன் வைத்த பார்வதிஸ்ரீ அவர்களுக்கு விகடகவி சார்பாக நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம் .

மாணவர் உலகம் மேம்பட அரசு பல நல்ல திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. பெற்றோர்களும், மாணவர்களும் தம் பொறுப்பினின்று நழுவாமல் அவற்றைப் பயன்படுத்தினால்  இன்றைய நிலை மாறும் . 

புதிய பாரதம் படைக்கும் பொறுப்பும், சுதந்திரமும் படைக் கலன்களும்  இளைய பாரதத்திடமே இருக்கிறது . அதற்கு வழி செய்ய முன்னெடுக்கும்  அரசும், பள்ளி கல்வித்துறையும், சமூகமும் உடன் நாமும் அவர்களை வரவேற்போம் , பாரதியின் மொழியில் . 


இளைய பார தத்தினாய் வா வா வா 

      எதிரி லாவ லத்தினாய் வா வா வா 

ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும் 

      உதய ஞாயி றொப்பவே வா வா வா 

களையி ழந்த நாட்டிலே முன்போலே 

      களைசி றக்க வந்தனை வா வா வா 

விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல் 

      விழியி னால்வி ளக்குவாய் வா வா வா (பாரதியார்)

 நாளை இங்கு மாற்றம் விளைவிக்க இருக்கும் 

மாணவச்  செல்வங்களுக்கு "குழந்தையர் தின வாழ்த்துக்கள்" 

 



 அகிலம் போற்றும் அகிலன் 

மரியா சிவானந்தம் 


'காவியமா,   நெஞ்சில் ஓவியமா ,

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா ? "  

என்னும் பழைய பாடல் உங்களுக்கு  நினைவிருக்கும்.    அறுபதுகளில் வெளி வந்த  'பாவை விளக்கு'   திரைப்படம்  நம்  நினைவை விட்டு நீங்காத   ஒரு படம் . அழகிய பாடல்களும் , புதிய  கதை அமைப்பும் கொண்ட பாவை விளக்கை  புதினமாக எழுதியவர் எழுத்தாளர்  'அகிலன் '. 

இன்றைய இளம்  தலைமுறையினருக்கு அகிலனைப் பற்றி அறிய வாய்ப்பில்லை. ஐம்பதுகளில் இருக்கும் முதிய தலைமுறையினர் கொண்டாடிய  பெயர்களில் அகிலனின் பெயரும் ஒன்று.  மு.வ, திரு.வி.க, தி.ஜா,  கி.வா.ஜா, கல்கி, நா.பா, புதுமைப்பித்தன்.மௌனி, சுந்தர ராமசாமி, சாண்டில்யன், கு.ப.ரா    போன்ற எழுத்தாளர்கள் கோலோச்சிய காலக் கட்டத்தில் தன் எளிய எழுத்துக்களால் தமிழ் வாசகரைக் கவர்ந்தவர் அகிலன் .

அகிலனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில்  அவரது நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்வதில் 'விகடகவி' இதழ்  பெருமை கொள்கிறது . 

அகிலனின் முழுப் பெயர் பி.வி.அகிலாண்டம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெருங்களூர் என்னும் ஊரைச் சார்ந்தவர்.  இவர் தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை , அகிலனின் சிறுவயதிலேயே மறைந்தார். இவரது அன்னை அமிர்தம்மாளின்  அரவணைப்பில் வளர்ந்து படித்தவர் அகிலன்..ஒரு எழுத்தாளராக அகிலன் மிளிர அமிர்தம்மாளின் பங்களிப்பு  முழுமையாக இருந்தது. 

சுதந்திர போராட்ட காலத்தில், அதில் ஈடுபட்டு  கல்லூரி படிப்பை பாதியில்  விட்ட  அகிலன், சுதந்திரத்துக்குப் ரயில்வே அஞ்சல் துறையில் பணியாற்றினார். பின்னர் வானொலி நிலையத்தில் சேர்ந்து எழுத்துப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். நூற்றுக் கணக்கில்  சிறுகதைகள், தொடர்கதைகள், பயணக்கட்டுரைகள் என தன் எழுத்தினை விரித்துக் கொண்டே போனார். ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர்   போன்ற முன்னணி இதழ்கள் அவரது எழுத்துக்களை வெளியிட்டன.

அகிலனின் எழுத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தொடங்கியது. அதுவரை தமிழர்க்கு எட்டா கனியாக இருந்த ஞான பீட விருது ,முதல் முறையாக  அவரது சித்திரப் பாவை நாவலுக்குக் கிடைத்தது. சாகித்ய அகாடமி விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது என்று அவரது வாயிற் கதவுகளைத் தட்டின . பாவை விளக்கு தவிர, 'கயல்விழி' என்னும் கதை 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' என்ற திரைப்படமாகவும்  எடுக்கப்பட்டது. மற்றொரு சரித்திர நாவலான 'வேங்கையின் மைந்தன்' சிவாஜி கணேசனால் நாடக வடிவம் பெற்று, வெற்றி பெற்றது. புதினங்கள் மட்டுமன்றி,  சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள், சிறுவர் நூல்கள் என்று அகிலன் ஓய்வின்றி எழுதினா. 

அகிலம் போற்றும்  எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை  கொண்டாட, சாகித்ய அகாடமியும், சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து  இந்த மாதம் 3-4 தேதிகளைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடுகளைச் செய்தன. இரண்டு நாட்களாக நடந்துக் கொண்டிருக்கும் கொண்டாட்டங்களில்  முதல் நாள் தொடக்க விழாவில் சாகித்ய அகாடமியின் பொறுப்பு அலுவலர் வரவேற்புரை நடத்த ,தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் திலகவதி,  .சிற்பி .பாலசுப்ரமணியம்,பாரதிபாலன், அகிலனின் மகன் அகிலன் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 அதைத் தொடர்ந்த கருத்தரங்கில் ,'அகிலனின் படைப்புலகம் ' குறித்த கருத்தரங்கு நடை பெற்றது. முதல் அமர்வில் "அகிலன் காட்டும் சமூகம்" என்னும் தலைப்பில் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் ,'அகிலன் படைப்புகளில் பெண்கள் 'என்ற தலைப்பில் எழுத்தாளர் உமா மோகனும் சிறப்புரை ஆற்றினார் .  இரண்டாம் அமர்வின் போது அகிலனின் கட்டுரைகள், பயண இலக்கியங்கள், சிறுகதைகள் பற்றி தமிழ் இலக்கியவாதிகள் விவாதித்தனர்.  

இரண்டாம் நாள் கருத்தரங்கில் அகிலனின் நாவல்கள் விவாதிக்கப்படுகின்றன. இரா. காமராசு, கலாப்ரியா, பழனி பாரதி,  பிருந்தா சாரதி  ஆகிய எழுத்தாளர்கள் புதினங்களை ஆராய்கிறார்கள். நிறைவு விழாவுடன் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுகிறது.

முதல் அமர்வில், அகிலன் படைப்புகளில் பெண்கள் 'என்ற தலைப்பில் பேசிய  எழுத்தாளர் உமா மோகன் அவர்களைத்  தொடர்பு கொண்டு   விழா நிகழ்வுகளைப் பற்றியும் ,பேச்சாளர்கள் ,பேசப்படும் பொருள்,  பார்வையாளர்கள் பற்றியும் கேட்டோம் .

எழுத்தாளர் உமா மோகன் புதுச்சேரி வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளராக பணி புரிபவர் . கவிதை நூல்கள், சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார் .ஆனந்த விகடன் உள்ளிட்ட  இதழ்களில் இவர் படைப்புகள் வெளியாகி உள்ளது .சிறந்த பேச்சாளர்.

இனி உமா மோகனின் குரலில்,

'சாகித்ய அகாடமியும், லயோலா கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த இரண்டு நாள்  விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சிறப்பு பேச்சாளர்கள் மட்டுமில்லாமல், தமிழகத்தின் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள்  என பலர் பங்கு கொண்டுள்ளனர். தாயம்மாள் அறவாணன்,  கிருஷாங்கினி, வானொலி அண்ணா என்.சி. ஜெயப்ரகாசம் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்று கொண்டுள்ளனர் .சாகித்ய அகாடமியின் பொறுப்பாளர்கள் ,லயோலா கல்லூரி பேராசிரியர்கள் தமிழ்த்துறை மாணவர்கள் என்று அரங்கு நிரம்பி வழிகிறது. பேச்சாளர்கள் அகிலனைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள்" 

மேலும் தொடர்ந்து ,

" அகிலனின் படைப்பில் சித்தரிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய உரையில்  நான் என் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டேன். அவர் எழுதிய காலம் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலம் ,அன்றைய சமூகச் சூழலில், அடிமைத்தளையில் இருந்து பெண்கள் தம்மைத்தாமே விடுவித்து எழுச்சி பெற ஆரம்பித்த காலம்,

பால்ய விவாகம் ,பலதார மணம் , கல்வி மறுப்பு ,இளம் விதவைகள் என்று பெண்கள் ஒடுக்கப்பட்ட கொடுமை மிக்க  சூழல் அது .இந்த நெருக்கடிகளில் இருந்து பெண்கள் தம்மை விடுவித்துக் கொண்டு கல்வி பெற்று, நெருப்பில் இருந்து புடம் போட்டவர்களாக உயிர்த்தெழுந்த  பெண்களின் மனநிலையை  தன் பாத்திர படைப்புகளின் வழியாக அகிலன் செவ்வனே பதிவு செய்துள்ளார் . 

"பெண் 'புதினத்தில் வரும் பாத்திரங்களான கதை நாயகி வத்சலா ஆடம்பர பிரியை , பிடிவாதம் குணம் கொண்டவள் ,வத்சலாவின் தோழிகள் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் ஸ்டெல்லா ,தேசத்தை நேசிக்கும் கவிஞனைக் கைப்பிடிக்கும் சுபத்திரா இவர்களைப் பற்றி பேசினேன் .

பின்னர் சிநேகிதி நாவலின் லலிதாவின் பாத்திரப்படைப்பு பற்றி பேசுகையில்  , இளம் வயதில் தன்னை விட வயது முதிர்ந்தவரை மணக்க நேரிட்ட போதும் தன் உள்ள கிடக்கையை மறைத்துக் கொள்ளும் பாத்திரத்தின் நிலையைப் பற்றி பேசினேன் .

அவ்வாறே 'பொன்மலர் 'நாவலில் வரும் டாக்டர் சங்கரி , ராஜேஸ்வரி ஆகியோரின் பாத்திரப்படைப்பின் சிறப்பியல்புகளை பார்வையாளர் முன் வைத்தேன்" எஎன்று முடித்துக் கொண்டார் எழுத்தாளர் உமா மோகன்.

ஒரு முழுமையான உரையை அருகிருந்து கேட்ட உணர்வு வந்தது. 

நன்றி உமா மேடம் 

தமிழ் வளர்க்கும் எழுத்தாளர்கள் தலை முறை தோறும் பிறக்கிறார்கள். சென்ற தலைமுறையில் வசிக்கும் வழக்கம் கொண்டவரில் ,அகிலனைப் படிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் .

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவரது படைப்புகளை நாம்  எடுத்துச் செல்ல  ,இன்னும் பல  நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அவை நிலைத்து  வாழும், தமிழும் தழைக்கும் .


 


பயமா ? பலமா ??

மரியா சிவானந்தம் 


முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும்  பொது உடமை 

ஒப்பில்லாத சமுதாயம் 

உலகுக்கு ஒரு புதுமை  (பாரதியார் )

என்று பாரதி வாழ்த்திப் பாடிய "பாரதச் சமுதாயம்"  நூறாண்டுகளில்  இன்று பலுகிப்  பெருகி  விட்டது.  அன்றைய கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கள் தொகை முப்பது கோடிகள். இன்று 141 கோடி ஆகி விட்டது .  ஆம் , பாரத அன்னைக்கு 141 கோடி முகங்கள். 

இந்த  நவம்பர் 14  ஆம்  தேதி, உலக மக்கள் தொகை நாள் அன்று ஐ.நா சபை   உலக மக்கள் தொகை 800 கோடி அதாவது 8 பில்லியனைத் தாண்டியதை அறிவித்தது. அதன்படி பார்த்தால் இன்று  உலக மக்கள்தொகையில் 17.5%  இந்தியரே. இந்நேரத்தில் மற்றும் ஒரு மிரள வைக்கும் உண்மையை ஐ.நா சபை அறிவித்துள்ளது . இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா சீனாவின் மக்கள் தொகையை முறியடித்து, அடுத்த ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகி விடும் என்னும் புள்ளி விவரத்தை முன் வைக்கிறது .இந்த அதிர வைக்கும் புள்ளி விவரங்கள்  நிஜமாக கூடிய  சாத்தியங்கள் நிறையவே இருக்கிறது .

மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகில் நுழைந்த கொரோனா 'மக்கள் தொகை குறைப்பை 'அமைதியாக நடத்திக் கொண்டிருந்தது. Natural down sizing of population என்றே மக்கள் பயந்தனர். உலக அளவில் பல நாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர்.  அகில உலக அளவில்  66 லட்சத்துக்கு மேல் மக்கள் இறந்தனர் .இங்கிலாந்து  போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாமல் அரசுகள்  திணறின.

 கொரோனாவுக்கு  எதிரான கடுமையான  யுத்தத்தில் இந்திய அரசும் எல்லா படைகளுடன், தளவாடங்களுடன்  போரிட்டது. கொரோனா  இறப்பு விகிதத்தை குறைத்தது. இருப்பினும்  இந்தியாவில் 5.3 லட்சம் பேர் இறந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் மரண பயத்தையும், ஆறாத துயரத்தையும் தந்த பின்பே கொரோனா தன் வீரியத்தைக் குறைத்துக் கொண்டது .

கொரோனாவைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவே. இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம்   69.8 வருடங்கள். இங்கு  ஆயிரம் பேருக்கு 16.42 பிறப்பு விகிதம் என்றால் இறப்பு விகிதம் 9.42  ஆகும் . தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி பிறப்பு விகிதம் 2.2 புள்ளிகளில் இருந்து 2 புள்ளிகளாக குறைந்துள்ளது. இவை  மக்கள் தொகை பெருக்கத்துக்கான காரணம் ஆகும் 

உலக மக்கள் தொகையில் இந்தியா முதலாவது என்று பெருமையை அடையும் காலம் நெருங்கி வருகையில் மக்கள் தொகைப் பெருக்கம்  கொண்டு வரும் சவால்களைப் பற்றி  சிந்திக்க வைக்கிறது. உலக அரங்கில் முதலாவது என்ற பெருமை ஒருபுறம் இருக்க , அந்த பெருமை கொண்டு வரும் சங்கடங்களை நாம் எதிர் கொள்ள வேண்டும். 

இப்போதே  உணவு, வேலை வாய்ப்பு , கல்வி என்று அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசும் , மக்களும் போராட வேண்டிய நிலை  இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் உருவாகும் கூடுதல் ஐந்துக் கோடி ஜனத்தொகைக்கு தகுந்த விதத்தில் உணவு உற்பத்தி பெறுக வேண்டும். உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றால்  அது மக்களின் அடிப்படை தேவையையே பூர்த்தி செய்ய இயலாத நிலைமையில் கொண்டு வந்து விடும். 

உணவைப் போலவே கல்வி,மருத்துவமும் அடிப்படை தேவைகளே. கூடுதல் ஜனத்தொகைக்கு ஏற்ப கல்வி கூடங்கள், மருத்துவ நிலையங்கள் , கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். வானுயர்ந்த உயர் கல்வி நிலையங்கள் ,நவீன மருத்துவமனைகள் நகர்ப்புறங்களில் அமைப்பதைக் காட்டிலும் ,கிராமப் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த  நாடெங்கும்  உள்ள சிறிய மருத்துவமனைகளில்  எல்லா வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் . 

வேலையில்லா திண்டாட்டம் எப்போதுமே நம் நாட்டின் பெரிய சவாலாக இருந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் அது மேலும் அதிகரிக்குமென்று நிபுணர்கள் கணிக்கிறார்கள் .இந்த ஆண்டு இறுதிக்குள் நான்கு சதவீத வேலை வாய்ப்பின்மை 8 சதவீதமாக ஆகி விடும் என்று இந்திய பொருளாதார மேம்பாட்டு கழகம் அடித்துக் கூறுகிறது . வேலை வாய்ப்பில் காலி இடங்களுக்கு ,விண்ணப்பிப்பவர்கள் அதிகமாவார்கள்  .

சென்னையில் துப்பரவு பணியாளர் வேலைக்கு முதுகலை பட்டதாரிகளும் ,பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்த கதைகளை நாம் மறக்கவில்லை . இந்நிலை வரும் ஆண்டுகளில் மேலும் மோசமாகும் .ஏற்கனவே அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து, அரசு வேலை வாய்ப்பு கதவுகளை அரசுகள் அடைத்து வருகின்றன . 

தொழிற்துறை அபிவிருத்தி, புதிய தொழில்களை உருவாக்குதல் கிராமப்புற குறுந்தொழில்கள் வளர்த்தல் இவை பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன .புதிய வரிகளை தீட்டித் தீட்டி , மக்களை  வரிக் குதிரைகளாக்குவதை  நிறுத்தி விட்டு புதிய தொழில் வாய்ப்புகளை  அரசுகள் சிந்திக்க வேண்டும். மத்திய ,மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த திட்டமிடலும் ,நிதி ஒதுக்கிடலும்  தேவை.

 இங்கு விலைவாசி ஏற்கனவே தலை சுற்ற  வைக்கிறது . அதைக் கட்டுக்குள் கொண்டு வரா விட்டால், பெரும் பொருளாதார சீரழிவை எதிர் கொள்ள நேரிடும் . தனி மனித வருமானம்  குறைகையில் அதன் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் அறிவோம்.

ஜனத்தொகைப் பெருக்கம் பல எதிர் மறை சவால்களை நம் முன் வைக்கிறது .நேர்மறை விளைவு ஒன்றுண்டு .அது உழைக்கும் கரங்களின் எண்ணிக்கை பெருக்கமே .மனித வளம் பெருகிய சூழலில் ,அதை சிறந்த முறையில் பயன்படுத்த தவறினால் , பேரிழப்பு நமக்குத்தான். முறையான திட்டமிடல் இல்லை என்றால் மக்களும், சமூகமும் பெரிய பாதிப்புக்குள்ளாவார்கள் .

பல ஆண்டுகளாக உலக அரங்கில் மக்கள் தொகை கணக்கில் முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி விட்டு , இந்திய முதலிடத்தைப் பிடிக்க  முந்துகிறது. இது பல்வேறு பயங்களை மக்கள் மனதில் விதைத்தாலும், முறையான திட்டமிடலும் தொலைநோக்கும் இருந்தால் நாட்டின் மேம்பாட்டுக்கு திட்டங்களைத் தீட்டி ,செய்லபடுத்த வாய்ப்பாக இதைக் கருத வேண்டும் .மக்கள் தொகை பெருக்கத்தை பயத்துடன் அணுகுவதை விட்டு, அதை ஒரு பலமாக நினைக்க வேண்டும். இந்தியாவை  வல்லரசாக்கும் கனவுகள் மெய்ப்பிக்கப்படும் .


இந்திய ஜனத்தொகையில் 67% இளைஞர்களாக இருக்கையில், உழைக்க கூடிய பலம் மிக்க பெரும் படை இங்குள்ளது . உழைக்கும் மக்கள் பெருக வேண்டும் . அரசின் வாய்ப்புகளும் ,மக்களின் ஒத்துழைப்பும் வளர வேண்டும் .அப்போது இந்தியா மக்கள் தொகையில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் முதன்மையான நாடாக உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் , மூவண்ண கொடி பட்டொளி வீசி பறக்க .







 


இனிய இயந்திரா...

மரியா சிவானந்தம் 


பண்டிகை  காலங்கள் தாம்  எத்துணை அழகானவை !

வாழ்க்கைக்கு வண்ணமும், அழகும், அர்த்தமும் தருபவை  திருவிழாக்கள். அவை  வருடம்  முழுவதும்  நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தி, அன்றாட உளைச்சல்களில் இருந்தும், கவலைகளில் இருந்தும்  விடுவிக்கின்றன. "எங்க பாட்டி காலத்து தீபாவளியின் போது...."  என்று நாம் ஆரம்பிக்கும் போதே ஐம்பதாண்டுக்கு முந்திய நினைவுகளில் அமிழ்ந்து, மீண்டும் அந்த நாளில் வாழ எத்தனிக்கிறோம். இந்த பண்டிகைகள் நம் இதயத்தை வருடிக் கொடுத்து,  இதமான மெல்லிய உணர்வுகளை நம்மில் விழித்தெழ செய்கின்றன.

தமக்குரிய திருநாட்களை அந்தந்த மதத்தினர் விமரிசையாக கொண்டாடினாலும், தமிழர் திருநாளாம் பொங்கல் எல்லா மதத்தவரும் கொண்டாடும் பண்டிகையாகவே இருந்து வருகிறது. சர்ச்சுகளில் அந்நாளை "நன்றியின் நாளாக" சிறப்பித்து, சிறப்பு வழிபாடு நடத்தி  பொதுவான பானைகளில் பொங்கல் வைத்து பரிமாறிக் கொள்கிறார்கள்.

பொங்கலை போன்ற மற்றும் ஒரு சர்வமத பண்டிகை ஆயுதபூஜை. நவராத்திரியின் போது பெண்கள் வேறுபாடுகள் மறந்து  கொலுவுக்குச் சென்று பாட்டுப் பாடி, சுண்டலும் மஞ்சள் குங்குமமும் பெற்றுக் கொள்ளும்போது அங்கு சாதியம், மதம் நிறம் இழக்கின்றன.

 வீடுகள் மட்டும் அல்ல, அலுவலகங்கள், வங்கிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள்   எல்லாமே ஆயுத பூஜைக்கு புதிய அலங்காரம் பெறுகின்றன.  ஒவ்வொரு இடமும் தூய்மையாக்கும் பணியில் ஊழியர்கள் சிறிதும் சுணக்கமின்றி செய்வார்கள். ஆயுத பூஜையின் மகத்தான பணியாக இதை எல்லோரும் விரும்பி செய்வார்கள். வங்கிகள், ஹோட்டல்கள், துணிக்கடைகளில் வாசலில் அலங்கரிக்கப்பட்ட  கொலு நம்மை வரவேற்கும் . மாலை நேரத்தில் பூஜை முடித்து   இனிப்பும், சுண்டலும், பொரி கடலையும்  மகிழ்ச்சியுடன் விநியோகிக்கப்படும்.  எல்லா இடங்களிலும் ஓர் ஆனந்த அலை  மௌனமாக பரவுவதை   நாம்  கண்கூடாக தரிசிப்போம் . 

இந்த புதன்கிழமை வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  ஆயுத பூஜை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. விஐடி பல்கலைக்கழகம் வேலூரின் அழகான அடையாளம். ஆசிய அளவில் மிகப்பெரிய மருத்துவமனையான சிஎம்சி மட்டுமே ஒரு காலத்தில் வேலூரின் பெருமைக்குரிய அடையாளமாக இருந்து வந்தது. பின்னாட்களில்  விஐடியும் ,பொற்கோவிலும் வேலூரின் முகவரிகளாக அமைந்து விட்டன . 

முதலில்  சிறிய  அளவில் முன்னாள் மத்திய அமைச்சர்  திரு.ஜி. விசுவநாதன் அவர்களால் துவக்கப்பட்ட வேலூர் என்ஜினீரியங் கல்லூரி (VEC),  குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுள்ளது. பன்னாட்டு மாணவர்களும் பயிலும் பிரும்மாண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 

எல்லாவித பொறியியல் படிப்புகளும், கலையியல் கல்வியும் இங்கு  தரப்படுகிறது. கேம்பஸ்  இன்டர்வியூவில் பன்னாட்டு நிறுவனங்கள்  போட்டி போட்டுக் கொண்டு  இப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருகின்றன.  இந்த பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் சாதனைகளை படைத்து புகழ் பெறுகிறார்கள். பணம் படைத்தவர்களுக்கு மட்டும் கல்வி என்ற நிலைமை இன்றி , வேலூர் மாவட்டத்தின் தகுதி படைத்த ஏழை மாணவர்களுக்கு இலவச பொறியியல் கல்வியை வழங்குகிறார்கள். 

இந்த ஆண்டு ஆயுத பூஜையைக் கொண்டாட நினைத்த இயந்திரவியல் (Mechanical Engineering ) துறையினர் அதைப் புதுமையாக கொண்டாட களத்தில் இறங்கினர் . வழக்கத்துக்கு  மாறாக பூஜையை ரோபோக்களை வைத்து செய்ய விரும்பி, அதற்கான செயலாக்க திட்டங்களை உருவாக்கினர். ஆயுத பூஜையே இயந்திரங்கள், நாம் பயன்படுத்தும்  உபகரணங்களை  பூஜையில் வைத்து இறைவன் அருளை  வேண்டுவது தானே .அந்த இயந்திரங்களையே பூஜை செய்ய பயன்படுத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது.

இயந்திரவியல் துறையின் பரிசோதனை சாலை அதற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டு, இரண்டு வித ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டன. ஒரு ரோபோ தீபாராதனை காட்டவும், மற்றொரு ரோபோ பூஜை மணி அடிக்கவும் நிரல் செய்யப்பட்டன. துறைத்தலைவர் தேவேந்திரநாத் ராம்குமாரின் வழிகாட்டுதலில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டன. 

PURSE ( Promotion of University Research and Scientific  Education ) என்னும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதை ஒரு செயல்படுத்தினர். ஆயுத பூஜை அன்று இரண்டு ரோபோக்களும் எவ்வித தடையும் இன்றி அழகாக இயங்கின. பூஜை மந்திரங்களை ஒருவர் சொல்ல அங்கு கூடியிருந்த  மாணவர்களும், விரிவுரையாளர்களும்  நிறைவாக சாமி கும்பிட்டனர்.

1986 இல் சுஜாதா எழுதிய 'என் இனிய இயந்திரா'வையும், ஜூனோவையும் நாம் மறந்திருக்க மாட்டோம் .  2021 ஆம் ஆண்டில் நடைபெறுவதாக எழுதப்பட்ட அக்கதை நிஜமாகி இருப்பது நாம் உணர்கிறோம்.. நாட்டின் பல இடங்களில் ரோபோக்கள் இயங்குகின்றன . பெங்களூரின் கெம்பே கவுடா விமான நிலையத்து கெம்பா, 47 மொழிகள் பேசும் கல்வித்துறை  ஷாலு , போலீஸ் துறையில் உதவும் Robocop என்று பல ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன. ஹோட்டல்களில் உணவு பரிமாறும் ரோபோக்களும் உள்ளன. சுஜாதாவின் தொலைநோக்குப் பார்வை மெய்ப்பிக்கப் பட்டுள்ளது . 

விஐடி மாணவர்களின் பூஜை செய்யும் ரோபோக்கள் ஒரு சாதனை. மாணவர்களே வடிவமைத்து, நிரல் செய்து இயக்கியது வியப்புக்குரியது. மேலும் முயன்றால் வீட்டில் நமக்கு உதவி செய்யும் ரோபோக்களை உருவாக்கலாம். சமைக்கவும், பெருக்கவும், துடைக்கவும் அவசரத்துக்கு இரண்டு அடை ஊற்றிக் கொடுக்கவும் பயிற்சி கொடுத்திடலாம்.  ஐந்து புள்ளி கோலத்தையே அழித்து அழித்துப் போடும் என் போன்றவருக்கு பதினெட்டுப் புள்ளி கோலம் போடும்  ஒரு  ரோபோ இருந்தால் நன்றாக இருக்கும் .

'சாட்டை' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி  வருகிறது. ஒரே நேரத்தில் ஒரு கையில் தீபாராதனை செய்துக்கொண்டு , மறு கையில் பூஜை மணி அடிப்பது ஒரு மனிதனின் மூளையின் வலது,  இடது பாகங்களை ஒரே நேரத்தில்  இயங்க வைக்கும் அருமையான  பயிற்சி என்பது  காட்டப்படுவது நினைவுக்கு வருகிறது .   மனித இயக்கத்துக்கு மாற்று இல்லை என்பது உண்மைதான் .


கடல், நதி, வானம், பறவைகள் என்று இயற்கையில் இறைவன் படைத்த எதை பார்த்தாலும்  நமது உள்ளம் இறைவன்பால் செல்லும். இப்போது மனிதன்  படைத்த படைப்பான ரோபோ பூஜையில்  கலந்துக் கொண்டு  நம்மை  இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. 

இயற்கையாக இருந்தால் என்ன , இயந்திரமாக இருந்தால் என்ன ?

இறுதியில் நாம் சரணடையும்  இடம் அவன் திருவடிகள் தாமே .



 காது குத்திக்க வாங்க  -  முகங்கள்  

மரியா சிவானந்தம் 




தமிழர் கலாச்சாரத்தில் குழந்தை வளர்ப்பில்  பல  வழி முறைகள், சடங்குகள்  பின்பற்றபடுகின்றன. குழந்தை பிறந்ததும் ஒன்பதாம் நாளில் தாய்க்கும், சேய்க்கும் சில சடங்குகள் செய்து தலைக்கு குளிக்க வைத்தலில் தொடங்கி   ஓராண்டு நிறையும் வரை  வரை நிறைய சடங்குகள் இருக்கின்றன.  

 மாதங்கள் நகர நகர  தொட்டில் போடுதல்,  பெயர் சூட்டுதல் , சாதம் ஊட்டுதல் என்ற சம்பிரதாய வழக்கங்கள் உண்டு . குழந்தை குப்புற கவிழும் போதும், சிற்றடி எடுத்து முதலடி வைக்கும் போதும் இறைவனை வேண்டி  சடங்குகள் செய்வதுண்டு. ஆனால் எல்லா மதத்தவரும் செய்யும் முக்கிய  சடங்கு ஓராண்டு நிறைவதற்குள் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவதாகும் .

திருப்பதி, வேளாங்கண்ணி போன்ற பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடும் கோவில்களில் ஒரு நாளில் நூற்றுக்கணக்கில் மொட்டைகள் அடிக்கப்படுகின்றன. பிரார்த்தனை, நேர்ச்சிக்காக மொட்டை அடிப்பவர்களுடன்,   சிறு  குழந்தைகளை மடியில் வைத்து பிறந்த முடி இறக்குவதை பார்க்கிறோம். ஓராண்டுக்குள் முடி இறக்கி காது குத்துவது தமிழ் பாரம்பரியத்தின் அடையாளம். இதில் அவரவர் மத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் மாறுமே தவிர அடிப்படையில்  அறிவியல் சார்ந்த விஷயமாகவே அனைவரும் காண்கிறார்கள்.  

குலதெய்வம் கோவில்கள் குழந்தைகளுக்கு   மொட்டை அடித்து காது குத்தும் போது முக்கியத்துவம்  பெறுகின்றன. அறுபடை வீடுகளிலும் ஏராளமானவர்கள் இதற்காக திரள்கின்றனர் . நல்ல நாட்கள்,  முகூர்த்த நாட்களில் இக்கோயில்களில் உறவினர்களுடன் ஒன்று கூடி இந்த சிறிய விழாக்களை அழகாக நடத்துகிறார்கள். சமீபத்தில் பேரனின் காது குத்து விழாவை திருத்தணியில் குறைந்த உறவினருடன் நடத்தினோம் .

அங்கு ஒரு  பெரிய  மண்டபத்தில் மொழு, மொழுவென்று மொட்டை அடித்து, தலைக்கு  சந்தனம் பூசிக் கொண்டு, மாலையும் கழுத்துமாக,  கண்ணீரும், கம்பலையுமாக குட்டிச் செல்லங்கள் காது குத்திக் கொள்ள மாமன் மடியில் அமர. நடுத்தர  வயதில் ஒரு பெண்மணி ஒரு நொடியில் காது குத்தினார் . வழக்கமாக ஆண் ஆச்சாரிகள்  காது குத்துவதைப் பார்த்துள்ளேன். ஒரு பெண் காது குத்துவதைப் முதல் முதலாக பார்த்த போது, மகிழ்ச்சியும் ,ஆச்சரியமும் ஏற்பட்டது .

"என்னென்னவோ செய்கிறோம், இதை செய்ய மாட்டோமா ?" என்று கேள்வி எழுப்பும் பெண்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்டது.  இருப்பினும் வித்யாசமான இந்த பணியை செய்யும் அவரை அணுகி விகடகவி இதழுக்காக ஒரு சின்ன பேட்டி எடுத்தேன். 

அவர் பெயர் சங்கரி ..இனி சங்கரியுடன் ...



"சொல்லுங்கம்மா, எப்படி இந்த காது குத்தும் வேலையை தேர்ந்து எடுத்தீங்க ?" என்று நேர்க்காணலைத்  தொடங்கினேன்.

" பரம்பரையாகவே இந்தக் கோவிலில் காது குத்தும் வேலையை என் குடும்பத்தவர்கள்தாம் செய்கிறார்கள். அவர்கள் வழி நானும் இதைச் செய்து வருகிறேன்.' என்றார் முகம் முழுக்க சிரிப்புடன் .

"எத்தனை வருடமாக செய்கிறீர்கள்? இந்த அனுபவம்  உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ? ஒருநாளுக்கு எத்தனை காதுகள் குத்துவீர்கள்? எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் ?" என்று கேள்விகள் வைத்தேன் 

"பத்து வருடங்களாக இந்த வேலை செய்கிறேன். இது கோவில் காண்ட்ராக்ட் எடுத்து செய்யும் வேலை .கோவிலில் காது குத்த ஐநூறு ரூபாய் வாங்குவார்கள் (மொட்டை பிரீ தான்..! ) . எனக்கு இங்கு மாத  சம்பளம் தான் . சாதாரண நாட்களில் நிறைய காது குத்துக்கள் இருக்காது,  விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்களில் கூட்டம் நிறைய இருக்கும் .ஓய்வின்றி வரிசையாக காது குத்துவேன்.  நல்ல அனுபவம் இருப்பதால் எனக்கு கடினமாக தெரிவதில்லை " என்றார் சங்கரி .

"குழந்தைகள் வலியில் அழுவார்களே ,அப்போது பதட்டமாக இருக்காதா?  மரத்துக் கொள்ள ஏதும் மருந்து தடவுவீர்களா ?" என்றேன் .

"  ஒரு சிலர் மரத்துக் கொள்ள மருந்து தடவி வைப்பார்கள் . நான் அவர்கள் தரும் தங்க ஊசியில் குத்தி விடுவேன். குழந்தைகள் சற்று நேரம் அழுவார்கள். கொஞ்ச நேரத்தில் சரியாகி விடுவார்கள்" என்றவர் தொடர்ந்து, "சரியான இடம் பார்த்து காது குத்தும் போது புண்ணாகும்  வாய்ப்பு குறைவு. தேங்காய் எண்ணெய் என்று எதுவும் விட வேண்டியதில்லை . அப்படியும் புண் ஏற்பட்டால் செப்டிக் ஊசி போட்டுக் கொள்ளச் சொல்வேன் " என்றார் .

ஏற்கனவே எங்கள் மகள் வழி பேரப் பிள்ளைகளுக்கு "கன்ஷாட்" (GUN SHOT) மூலம் டாக்டரிடம் தான் காது குத்தினோம் .  எனவே கோவிலில் காது குத்தும் டாக்டர்கள் யாரும் இருக்கிறார்களா என்று விசாரித்த போது  "கோவில்களில்  எல்லாம் ஆசாரிகள்தான் காது குத்துவோம். இங்கு நான் மட்டும்தான் ஒரே ஆசாரி " என்று முடித்தார் சங்கரி 

 "புகைப்படம் எடுத்துக் கொள்ளவா ?" என்ற போது புன்னகையடன் போஸ் கொடுத்தார் .  

"செய்யும் தொழிலே தெய்வம்'  என்று அர்ப்பணிப்புடன் தம் பணி  செய்யும் எவரும் வணங்கத் தக்கவர்கள்.  அவ்வகையில் சங்கரி போற்றப்பட வேண்டியவர்.  சுயமரியாதையுடன் தன் சொந்தக்காலில் நிற்க  எவ்வித வேலையும் செய்யும் சங்கரி போன்ற பெண்கள் பெருமைக்கு உரியவர்கள் .

விகடகவி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து விடை பெற்றுக் கொண்டோம் .


தொலைக்காட்சித் தொடர்கள் - ஒரு பார்வை 

மரியா சிவானந்தம் 


இரண்டு  நிகழ்ச்சிகளைப்பற்றி சொல்ல வேண்டும் 

நேற்று காலை உடல் நலிவாக இருந்த என் சினேகிதியின் அம்மாவைக் நலம்  விசாரிக்கச்  சென்று இருந்தேன்.  அம்மாவுக்கு எண்பது வயது. கொஞ்ச காலமாகவே படுக்கையில் தான் இருக்கிறார்கள். முந்திய தினம் அவர்கள் கீழே விழுந்து மயக்கமானதை  தோழி கவலையுடன் விவரித்தார். " மயக்கம் தெளிந்த பின்  அம்மா கேட்டது தான் ஹைலைட்,"ஏண்டி, பாக்கியலட்சுமி  முடிச்சிட்டுதா ? இன்னிக்கு  கதை என்ன ஆச்சு ? " என்றாராம்.

 இரண்டாவது சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது .

வேலூரில் சன் டி .வி யின் "சன் நட்சத்திர கொண்டாட்டம் "  விழா நடத்த இருப்பதாக அந்த தொலைக்காட்சியில் விளம்பரம் வரத் ஆரம்பித்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் என் அம்மாவின் முகத்தில் உற்சாகம் வழியும், ஒரு எதிர்பார்ப்பும் ஏக்கமும்    அவர் குரலில் தென்படும். " சுந்தரி, துளசி, கயல், மீரா, பூமிகா, அர்ஜுன், வருண்,ராஜபாண்டி எல்லாருமே வருவாங்களா?" என்று கேட்டுக் கொண்டே இருந்தாங்க . "வருவாங்கமா "என்று சொல்லி வைத்தேன்.

"சரி, இவ்வளவு ஆவலாக இருக்காங்களே, கொண்டாட்டத்துக்கு அனுப்பி வைப்போம் என்று நினைத்துக் கொண்டேன்." 

அந்த நாளும் வந்தது . 

விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே, என் சகோதர சகோதரிகள் பிள்ளைகள் புடை சூழ அம்மா போனார்கள். ஆனால் அன்று மாலை சரியான மழை வந்து நிகழ்ச்சியே கேன்சல் ஆனது. ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வந்து அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தார்கள். வீட்டுக்கு தினமும் பூ கொண்டு வரும் பெண் தன் இரண்டு சின்ன குழந்தைகளுடன் , மதிய  சாப்பாடு கட்டிக் கொண்டு மழையில் நனைந்து திரும்பி வந்ததாக சொன்னாங்க. 

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும் உண்மை சம்பவங்கள். 

நம் மக்களின் வாழ்வில் சின்னத்திரையின் தொடர் நாடகங்கள் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைக் காட்டவே, இந்த இரண்டு சம்பவங்களை சொன்னேன். 

பலவித டாக் ஷோக்கள் , விளையாட்டுகள் , நேரலை நிகழ்ச்சிகள் என நிகழ்சசிகளில் வெரைட்டி கொடுத்த சின்னத்திரை சானல்கள், இப்போது தங்கள் வியாபாரத்துக்கு இந்த நாடகங்களையே  முழுமையாக நம்ப ஆரம்பித்து பல ஆண்டுகளாகின்றன. முதலில் வீட்டில் இருக்கும் பெண்களை பார்வையாளர் இலக்காக கொண்டு தொடங்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது  குடும்பத்தில் மற்றவரும் பார்க்க ஆரம்பித்துள்ளதும் உண்மைதான்.

 இந்த "சன் நட்சத்திர கொண்டாட்டம்"  ஊர் ஊராக நடத்துகையில் திரளும் கூட்டத்தைப் பார்க்கையில் இந்த என் கருத்து உறுதியாகிறது.  திரைப்பட நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களின் கூட்டம் அளவுக்கு சின்னத்திரை நடிகர்களும்  புகழ் பெற்றுள்ளதை இந்த கொண்டாட்டங்களில் காண்கிறோம்.

லட்சக்கணக்கில் மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இந்த தொடர்கள் இருக்கின்றன. நெட்பிலிக்ஸ், பிரைம் போன்ற  ஓடிடி  நிகழ்ச்சிகள் இப்போது மக்களை பார்த்தாலும், சாதாரண மக்களின் பொழுதுபோக்குக்கு இந்த சீரியல்களையே பார்க்கிறார்கள்.  ஞாயிறு அன்று கூட இப்போது சீரியல் ஒளிபரப்பப்  படுகின்றன.

 குடும்பத்தில் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசுவது குறைந்து விட்டது. சிறியவர்கள் மொபைலில் ஆழ்ந்து விட, மற்றவர்கள் தொலைக்காட்சியில் மூழ்கி விடுகிறார்கள். விருந்தினர் வந்தால் தொலைக்காட்சியை அணைத்து விட்டு பேசும் அடிப்படை நாகரிகமும் மக்கள் தொலைத்து வருகிறார்கள்.

மக்களின்  அரிய நேரத்தை காவு வாங்கும் இந்த சீரியல்கள் குடும்பங்களில்  பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் சிந்தனையில் விஷ விதையை விசிறி விட்டு செல்லும் பணியை இந்த தொடர்கள் செய்கின்றன .

 எல்லா சீரியல்களிலும் மாமியார் , மருமகள் மோதல்கள் உண்டு. ஆனால் இந்த சீரியல்கள் படம்பிடித்து காட்டும் மாமியார்கள் இரண்டுத் தலைமுறைக்கு முந்திய மாமியார்களாக இருக்கிறார்கள்.  பிற்போக்குத்தனமான கொள்கைகள் கடைபிடிக்கும் மாமியார்கள்  மருமகளைக் கடத்துவதில் இருந்து, கருக்கலைப்பு வரை போகிறார்கள். அடியாள்கள், போலீஸ், வழக்கு  இல்லாத தொடரே இல்லை எனலாம். பெண்கள் வில்லத்தனம் கொண்டவர்களாக  சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற பழமைவாத சித்தாந்தத்தை நிரூபிக்க எத்தனிப்பவதாகவே  இந்த  பாத்திரங்கள் படைக்கப்படுகின்றன.  

நிஜத்தில் இப்போதைய மாமியார்கள் படித்தவர்களாக,  மகன் -மருமகள் பேரக்குழந்தைகளின் வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு அவர்களின் மகிழ்ச்சிக்காக விட்டுக் கொடுப்பவர்களாக தம்மை மாற்றிக் கொண்ட சமூக மாற்றத்தை ஏன் தொடர் எழுத்தாளர்கள், இயக்குனர்கள் அறியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.

மாமியார் -மருமகள் உறவைச்  சிக்கலாக்குவது போலவே , பிற உறவு முறைகளையும் சிக்கலாக்கி காட்டுகிறது சின்னத்திரை. அதனால் நம் உறவுகளையே நாம் சந்தேக கண் கொண்டு பார்க்கும் நிலைமைக்கு ஆளாகிறோம் . திருமணம் ஆன பெண்ணை காதலிக்கும் முன்னாள் காதலனும் , திருமணம் ஆன ஆணை தொடர்ந்து காதலித்து, அவரை திருமணத்துக்கு தூண்டும் பெண்ணும் சீரியல்களில் சாதாரணம். இவர்களுக்கு துணை நிற்பது  ஒரு  பெண் என்பது இன்னொரு கொடுமை. 

 "கிட்டாதாயின் வெட்டென மற " என்று அங்கு சொல்ல யாரும் இல்லை. ஒரு தொடரில் ஒரு திருமணமானவரின் முறைப் பெண், அவரது படத்தை முன்வைத்து தனக்குத்தானே தாலி கட்டிக் கொள்ளும் முயற்சி இந்த வாரம் ஒரு தொடரில் பார்த்தேன். திருமணம் கடந்த உறவுகளை நியாயப்படுத்துவது இயல்பாக இருப்பதைப் பார்க்கையில் 'பகீர் ' என்று இருக்கிறது .

ஆணாதிக்க மனோபாவத்தை வளர்க்கத் துடிக்கும்  தொடர்கள், பெண்களை நசுக்கி, அவர்களின் ஆளுமையை கேலிக்குள்ளாக்குகின்றன.  முற்றிலும் எதிர்மறையான கருத்துக்களை சமூகத்தில் பரவ விடும் பணியை இந்த தொடர்கள் செவ்வனே செய்கின்றன.

இவர்கள் கூறும் இறை நம்பிக்கை என்பது பரிகார பூஜைகள், நம்ப இயலாத நேர்ச்சிகள். இந்த சடங்கு சம்பிரதாயங்கள் சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டவையா என்ற கேள்வி எழுகிறது . அன்பே உருவான கடவுளை, பலி கேட்கும், பழி வாங்கும் கடவுளாக சித்தரிக்கிறார்கள் . 

பெண்கள் எங்கோ போய் விட்டார்கள். அவர்கள் இப்போது நிற்கும் உயரமே வேறு. கல்வி, பதவி, சுய சம்பாத்தியம் என்று தன் காலில்  தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களை இன்னும் சதிகார கூட்டமாகவே இந்த தொடர்கள் காட்டுகின்றன. குடும்ப உறவுகளைச் சிதைத்துக் காட்டி, குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன இத்தொடர்கள். நம் ஊரில் பெருகி வரும்  விவாகரத்துக்களே இதற்கு சான்று .

கணவன் - மனைவி  படுக்கையறை காட்சிகள் சினிமாவே தோற்றுப் போகும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் . இவை வீட்டில் பெரியவர்களுடன் , குழந்தைகளுடன் சேர்ந்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. சின்னத்திரைக்கு சென்சார் வைக்க வேண்டும் என்ற மக்கள் குரல் இப்போது நசிந்து விட்டது . 

"There is some soul of goodness in things evil, Would men observingly distill it out"

என்கிறார் சேக்ஸ்பியர்.  நாமும்   பூதக்கண்ணாடி வைத்து தொலைக்காட்சி தொடர்களால் நன்மை ஏதும் தென்படுகிறதா  என்று ஆராய்ந்தால், இவற்றைப் பார்க்கும் பெண்கள் முன்பொரு காலத்தில் வாரப் பத்திரிக்கைகளில் வரும் தொடர் கதைகளை ஆர்வமாக படித்தவர்களாக இருக்கிறார்கள். இத்தகையோரின் பொழுதுபோக்காக சீரியல்கள் இருக்கின்றன. இப்போது வாரப் பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் குறைந்து விட்டது ஒரு புறம் இருக்க, வாரப் பத்திரிக்கைகளே இப்போது குறைந்து விட்டன. அவற்றை வாங்கி வாசிப்பதும் குறைந்து விட்டது . 

சில தொடர்களில் குடும்ப உறவுகளை முறையாய் வளர்த்துக் கொண்டே , தம்  இலக்கை நோக்கி பயணிக்கும் லட்சிய பெண்களை காட்டுகிறார்கள்.  அதிகமாக உணர்ச்சி வசப்படும் பெண்களாக இவர்கள் இருந்தாலும்,  நேர்மறையாக பேசப்படும் வசனங்கள் இத்தொடர்களை உயர்த்தி பிடிக்கின்றன. மேலும் இத்தொடர்களில்  நடிப்பவர்கள், தயாரிப்பாளர்கள் , தொழிற்நுட்ப கலைஞர்கள் என ஆயிரமாயிரம் பேரின் வாழ்க்கை இத்தொடர்களால் நகர்கிறது .

"உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் , டி .வி யை அணைத்து விட்டுப் போங்க ,பார்ப்பவர்கள் பார்க்கட்டும் " என்று ஒரு குரல் கேட்கிறது .சின்னத்திரை என்னும் சக்தி வாய்ந்த ஊடகம்  தமிழர் வாழ்வில் முக்கிய பொழுதுபோக்கு  அம்சமாகி விட்டது. "என் இலையில் நான் விரும்புவதை ,என் நலத்துக்கு ஏற்றதை பரிமாறுங்கள் " என்றுதான் நான் கேட்கிறேன். எதையோ பரிமாறி விட்டு உண்ண கட்டயப்படுத்தும் உங்கள் அதிகாரப் போக்கை   நான் வெறுக்கிறேன். 

கதைகள் ,நாடகங்கள்  காலத்தின் கண்ணாடிகள். இன்றைய நாடகத் உண்மை சமூகத்தை பிரதிபலிக்கிறதா ? சமூக அநீதிகளை களைய முன்வருகிறதா? நாம் விரும்பும்  சமூக மாற்றத்தை உங்கள் தொடர்கள் ஏற்படுத்துமா? 

அனைவருமே சிந்திப்போம் !! 




 

 

பெண்களின் வண்ண உலகம் 

மரியா சிவானந்தம் 


"உன்னைக் கண்டு நான் ஆட ,என்னைக் கண்டு நீயாட,

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி" நாம் வாசலருகே வந்து விட்டது. பண்டிகை காலத்துக்குக்கே உரிய பரபரப்பும், வனப்பும் எங்கும் காண முடிகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த திருவிழா காலத்தை மகிழ்ச்சியுடன்  எதிர் பார்த்து  காத்திருக்கின்றனர். வருடம் முழுவதும் நாம் எதிர் கொள்ளும் துன்பங்களை, கடின நேரங்களை  விழாக் காலங்கள் மறக்க வைக்கின்றன, மனதில் புத்துணர்ச்சியையும் வாழ்க்கையில்  புதிய நம்பிக்கையையும் ஊட்டுகின்றன. 

ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் நிரம்பி வழிகின்றன. பிளிப் கார்ட்டும், அமேசானும்  இன்ன பிற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும்  இளைஞர்களைக் கவர்ந்திழுத்து  கோடிகளில் குவிக்கின்றன.  தொலைக்காட்சியைத் திருப்பினால்  தள்ளுபடிகள், பரிசுமழை என்று விளம்பரங்கள் காதைத் துளைக்கின்றன. எத்தனை ஜிஎஸ்டிகள் போட்டால் என்ன,  எதை நாம் வாங்காமல்  விட முடியும்? இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பண்டிகைகள் பெரிதும் பங்களிப்பதை நாம் மறுக்க முடியாது 

பண்டிகைகள்  பெண்களுக்காகவே ஏற்பட்டவை போல,  பெண்களின் பங்களிப்பு இந்நாட்களில் முழுமையாக இருக்கும். அவர்களின் கைவண்ணத்தில் வீடுகள் மிளிரும், அடுக்களைகள் மணக்கும், வாசற்புறங்களில் வண்ணக் கோலங்கள்  பளிச்சிடும், பூஜை அறைகள்  தெய்வீக அழகுடன் மனதைக் கொள்ளை கொள்ளும் .

பெண்கள் தம் வீடுகளை மட்டுமல்ல தம்மையும்  பிரத்தியேகமாக அலங்கரித்துக் கொள்ள முனைப்புடன்  இருப்பார்கள். புது சேலையும், சேலைக்குப் பொருத்தமாக டிசைனர் ஜாக்கெட்டும் உடுத்திக் கொண்டு வீட்டில் மகிழ்ச்சியுடன் வளைய வருவதைக் காண முடியும்.  புதுப்படவையில் செல்ஃபீ  எடுத்து முகநூல், வாட்சப், இன்ஸ்ட்டா கிராமில்  போடுவது  வழக்கமான சங்கதி. 

பெண்கள் எப்போதும்  அந்தந்த காலத்துக்கான பேஷனை பின்பற்றி தம் உடைகளைத் தேர்ந்தெடுத்து மகிழ்கிறார்கள். "Women express themselves in many ways" என்பார்கள். அவற்றுள் ஒன்று அவர் அணியும் உடைகள், குறிப்பாக சேலைகள்.  ஆயிரம் ரூபாய்க்கு சேலை வாங்கி அதற்கு பொருத்தமாக 2000 ரூபாய் செலவு செய்து,  வேலைப்பாடுகள் அமைந்த பிளவுசை தைத்து அணிந்து  தனித்துவம் காட்டுகிறார்கள்.

 எம்பிராய்டரி செய்தது , கற்கள் பதித்தது, கண்ணாடி பதித்தது  என்று அழகழகான வேலைப்பாடுகளுடன் குஞ்சங்கள் ஊசலாட  ட்ரெண்டியாக டிசைனர் பிளவுஸ்களை  தைத்து அணிந்துக் கொள்ள பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். சில ஆண்டுகள் முன்பு வரை கல்யாணத்துக்கு மட்டும் இம்மாதிரி வேலைப்பாடு ஜாக்கெட்டுகளை கல்யாணப் பெண்கள்  தைத்து உடுத்தினர். ஆனால் இப்போது சாதாரணமாக எல்லாரும்,  எல்லா விசேஷங்களுக்கும் இம்மாதிரி பிளவுஸ்களையே தைக்கிறார்கள். 

 குஷ்பு நடத்திய ஜாக்பாட்  நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஜாக்கெட்டுகள் இந்த புதிய  மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அவ்வாறே ஜோதிகா பல படங்களில்  எம்ப்ராய்டரி சேலைகளை அணிந்து அவற்றின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினார் .

பெண்களுக்கென டிசைனர் பிளவுஸ் உலகில் தனக்கென ஒரு இடம்  பதித்துக் கொண்டிருக்கும் திருமதி. ரேவதி பாஸ்கரை தீபாவளி சிறப்பிதழுக்காக நேர்க்காணல் செய்தோம் . 

அதற்கு முன் அவரைப் பற்றி .. 

ரேவதி பாஸ்கர் வேலூரில் பொற்கோவிலுக்கு செல்லும் வழியில் 'ரேபாஸ்' என்ற பெயரில் டிசைனர் பிளவுஸ்கள், குழந்தைகளுக்கான ஆடைகள்  தைக்கும் நிறுவனத்தை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடத்தி வரும் தொழிலதிபர். பொறியியலும், கணினியும் பயின்றவர். குடும்பச்சூழல் காரணமாக கல்வி சார்ந்த வேலைக்குச் செல்ல இயலவில்லை. 

 முதலில்  சிறிய அளவில் வீட்டிலேயே சேலைகள் விற்கத் தொடங்கினர். தையல், எம்ப்ராயடரி வகுப்புகள் சேர்ந்து, பயிற்சிகள் பெற்று  ஜாக்கெட்டுகள் தைக்கும் டெய்லரிங் யூனிட் ஆரம்பிக்க, இவரது கைவண்ணம் மற்றும் வேலைப்பாடுகளின் தரம்  பார்த்து வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இன்று 'ரேபாஸ்' பெண்கள் பெருமையுடன் உச்சரிக்கும் பெயரானது. கணவர் பாஸ்கர் காவல் துறை அதிகாரி.  பவித்ரா , அம்ரிதா என்னும் இரு இளம் தேவதைகளின் அன்பான அம்மா ரேவதி  .

இனி ஓவர் டு ரேவதி ..

" ரேபாஸ் பற்றி சொல்லுங்கள்,மேடம் " என்றோம் 

"எங்க வீட்டின் மேல் மாடியில் 1800 சதுர அடி பரப்பில் அமைத்துள்ளோம். 7 எம்ப்ராய்டரி செய்பவர்கள், இரண்டு தையற் கலைஞர்கள், உதவியாளர்கள்   வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக வரும் பெண் வாடிக்கையாளர்களே  அதிகம் . நான் அதிக விளம்பரம் செய்வதில்லை. எங்கள் வேலைப்பாடுகளே வாய் வழி விளம்பரம் "  என்கிறார் ரேவதி .

"என்னென்ன விதமான வேலைப்பாடுகள் செய்கிறீர்கள்? எவ்வளவு பணம் நிர்ணயிக்கிறீர்கள்? என்ற போது விரிவாக பதில்  கூறினார். "ஆரி எனப்படும் நூல் வேலை முதல் , கண்ணாடி வேலை , ஜர்தோசி, குந்தன்,ஜெர்கான்,  ஸ்வரோஸ்கி  போன்ற கல் வேலைகள் எல்லாமே செய்து தருகிறோம்.  தாம் உடுத்தும் ஜாக்கெட்டுகள் 'ரிச்' ஆக, எடுப்பாக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களைத் திருப்தி படுத்த முழுமையாய் உழைக்கிறோம். எல்லாமே கைத்திறனைக் காட்டும் கை வேலைகள் தாம்.  உபயோகிக்கும் பொருட்கள் , வேலைப்பாடு,  அதை   செய்ய எடுக்கும் நேரம் இவற்றுக்கு தக்கவாறு தையற் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த பட்சம்  ஆயிரம் ரூபாயில்  ஆரம்பிக்கிறது. விசேடங்களுக்கு 12000 -13000  வரை கூலி தந்து தைத்துக் கொள்பவரும் உண்டு " என்றார் .

இவ்வளவு விலை கொடுத்து தைக்கும் இந்த ஜாக்கெட்டுகளை எப்படி பத்திரமாக பாதுகாப்பது ? என்ற கேள்விக்கு  'மடித்து வைக்கும் போது வேலைப்பாடுகள் உட்புறமாக  மடித்து ஒரு துணி கவரில்  வைக்க வேண்டும். அழுக்கானால் பேபி ஷாம்பு போன்ற மென்மையான பொருளில் அலசி, நிழலில் உலர்த்த வேண்டும். கைக்கு அடியில் வியர்க்கும் போது அந்த இடம் மட்டும்  வெளுத்துப் போகும். அப்போது ஸ்வெட் பேட் (Sweat pad) அணிந்து கொள்ளலாம், இப்படி செய்தால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்  " என்கிறார் . 

உடல் பருமனானால், மீண்டும் இந்த ஜாக்கெட்டுகளைப் பிரித்து பெரிதாக்கலாமாம், அதற்கு  ஏற்றவாறு நேர் தையல்கள் போடப்படுகிறது என்று கூடுதல் தகவல் தந்தார்.  புதிதாக கம்ப்யூட்டரைஸ்ட் எம்ப்ராய்டரி  செய்யும் வேலை  'ரேபாசில்' தொடங்கப்பட உள்ளது. டிசைனை   ப்ரோகிராம் எழுதி தந்து விட்டால், அக்கருவி தானே துணியில் எம்ப்ராயடரி  செய்து விடும். சூப்பர் இல்லே !

தான் தொடங்கி நடத்தும் பணியைப் பற்றிய உயர்வான எண்ணமும், பெருமிதமும் கொண்டு பேசுகிறார் ரேவதி. அரசர் காலத்து வேலைப்பாடுகள் தொடங்கி எம்ப்ராய்டரியின் சரித்திரத்தைப் பற்றி விரிவாக விவாதிக்கிறார். நட்டம் ஏற்படாத தொழில், ரிடையர் ஆக வேண்டி இருக்காத துறை  என்றும் உயர்வாக பேசுகிறார். தொழிலாளர்களை மரியாதையுடனும், அனுசரணையுடனும்  நடத்துவது பற்றி அவர் கூறும் கருத்துக்கள்  சிறந்த மேலாண்மைக்கு உதாரணம். 

அவரது சிரித்த முகமும், இனிமையான பேச்சும் வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற விதத்தில் தைத்துத் தருவதும்  எந்நேரத்திலும், எதற்காகவும்  விட்டுக் கொடுக்காத தரமும்  ரேவதியின் வெற்றியின் ரகசியம்   என்பது  அவருடன் பேசும் போது நமக்குப் புரிகிறது .

தன் வெற்றிக்குப் பின்னால் தன் கணவர் இருப்பதை மறக்காமல் குறிப்பிடும் ரேவதி  'ரேபாஸ்' நிறுவனத்தின் முன்னேற்றம் பற்றி நிறைய கனவுகள் வைத்திருக்கிறார்.  

பெண்களுக்கென நீங்கள்  படைக்கும் வண்ண உலகில் சாதிக்க வாழ்த்துக்கள்  மேடம் . 

வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் . 



 


 


 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...